SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவநிதியைக் காக்கும் நரசிம்மர்

2020-10-01@ 10:45:28

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-35

திருக்கோளூர் - நெல்லை

திருநெல்வேலி திருக்கோளூரில் அமைந்துள்ளது வைத்தமாநிதி பெருமாள் கோயில். இது நவதிருப்பதி கோயில்களில் எட்டாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 57-வது திவ்ய தேசமாகவும் அமைந்துள்ளது.நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. தல தீர்த்தங்களாக குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம் போன்றவை திகழ (தாமிரபரணி) தல விமானமாக கர விமானம் திகழ்கிறது. மணவாள மாமுனிகளால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்.

இவ்வூர் மதுரகவியாழ்வார் பிறந்த தலமாகும். இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் இருக்கும், சோழ நாட்டு வைணவத் திருத்தலமான திரு ஆதனூரில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மட்டுமே காணப்படுகிறார். இக்கோயிலில் மூலவராக வைத்தமாநிதி பெருமாளும், அவரின் வலதுபுறத்தில் குமுதவல்லியும், இடதுபுறம் கோளூர் வல்லித்தாயாரும் அருள்கிறார்கள். இங்கு பெருமாள் சயன கோலத்தில் வீற்றிருக்கிறார்.

குபேரன், மதுரகவி ஆழ்வார் போன்றவர்களுக்கு பிரத்யட்சமாக காட்சி தந்து அருள் செய்தவர். ஒன்பது வகையான நவ நிதியங்களுக்கும், எண்ணிலடங்கா பெரும் செல்வத்துக்கும் அதிபதியாக திகழ்பவன் குபேரன். அவன் அழகாபுரி என்ற இடத்தில் தனது இருப்பிடத்தை அமைத்து வாழ்ந்து வந்தான். குபேரன் சிறந்த சிவ பக்தன் ஆவான். ஒரு சமயம் மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் சென்றான். அந்த அழகிய பொழுதில் சிவனும் பார்வதியும் குபேரனுக்கு ஒரு சேரக் காட்சி தந்தனர். மிகுந்த பக்திப் பெருக்குடன் சிவனைக் காணச் சென்ற குபேரன், தன் தாய் போன்ற பார்வதி தேவியை தீய எண்ணத்துடன் நோக்கினான்.

அச்செயலால் மனம் வெறுப்புற்ற பார்வதி தேவி, குபேரன் மீது கடும் கோபம் கொண்டாள். உடன் ஒரு கண்ணை இழக்கவும், அருவருப்பான உருவத்தைப்பெறவும், நவநிதியம் முழுவதையும் இழக்கவும் சாபம் இட்டாள். சாபம் பலித்தது. பொறுப்பாளனை இழந்த நவ நிதியங்களும், தாம் தஞ்சம் அடைவதற்கான இடம் தேடின. தன் பக்தர்களுக்கு மரக்காலால் செல்வங்களை வாரி வழங்குபவனும், பொருனை நதிக்கரையில் சயனக் கோலத்தில் துயில் கொள்பவனுமான திருமாலைத் துதித்தன.

காக்கும் கடவுளான நாராயணன் அந்நிதியங்களுக்கு புகலிடம் தந்து, அவற்றை அரவணைத்து பள்ளி கொண்டான். நிதிகளைத் தன் பக்கத்தில் வைத்து பாதுகாப்பளித்து அதன் மீது சயனம் கொண்டதால், வைத்த மா நிதியின் மீது சயனம் கொண்டதால் ‘வைத்த மாநிதிப் பெருமாள்’ என்ற பெயர் பெற்றார். நிட்சயபவித்ரன் என்றாலும் அதே பொருளாகும். நிதியங்கள் எல்லாம் இங்கு வந்து தீர்த்தத்தில் மூழ்கி தங்களைத் தூய்மைப் படுத்திக்கொண்டதால், இங்குள்ள தீர்த்தத்திற்கு ‘நிதித் தீர்த்தம்’ என்று பெயர் வழங்கப்படலாயிற்று.

குபேரன் பரமசிவனின் பாதத்தில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். சிவனோ, பார்வதியிடம் கேட்கச் சொன்னார். உமையவளிடம் தான் செய்த பாவத்தை மன்னிக்குமாறு வேண்டினான். உமையாளோ இட்ட சாபம், என்னால் மீளப்பெற முடியாது. தாமிரபரணி நதிக்கரையில் தர்ம பிசுனத்தலத்தில், உன் நவ நிதியங்களும் திருமாலிடம் தஞ்சம் அடைந்துள்ளன. திருமாலும் அதன் மீது சயனித்துள்ளார். நீயும் அத்தலம் சென்று இறைவனை வேண்ட உன் செல்வம் திரும்பக் கிடைக்கும்’ என்றாள் அன்னை பார்வதி.

திருக்கோளூர் வந்த குபேரன் வைத்தமாநிதிப் பெருமாள் குறித்து கடும் தவம் மேற்கொண்டான். ஒரு மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் குபேரனுக்கு பெருமாள் காட்சி கொடுத்தார்.‘நீ நிதியங்களுக்குப் பொறுப்பாளனாக இருந்தாய். உன் குரூர எண்ணத்தால் அவை உன்னை விட்டு நீங்கின. முழு செல்வமும் உடனே உன்னிடம் தர இயலாது. தரும் செல்வம் கொண்டு பணிகளைத் தொடர்ந்து வா. நீ யார், யாருக்கு இந்த செல்வங்கள் சென்று சேர வேண்டுமென்று விரும்புகின்றாயோ, அவர்களிடம் நானே நேரில் சேர்ப்பேன்’ என்றார்.


திருமால் தந்த பொறுப்பையும், பொருளையும் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் இருப்பிடம் திரும்பினான் குபேரன். அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து இல்லாமல், எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வகையில் அவற்றைலட்சுமிதேவியிடம் பொறுப்பாக ஒப்படைத்தான். குபேரனும், தர்ம குப்தனும் மீண்டும் தங்கள் செல்வங்களைப் பெற்றது போல், மக்களும் தாங்கள் இழந்த செல்வத்தைப் பெறுவதற்கு, மாசி மாதம் சுக்லபட்ச துவாதசியில் வந்து குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதி பெருமாளை வழிபாடுசெய்கின்றனர்.

இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், தானியங்கள் அளக்கும் அளவு மரக்காலைத் தன் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்த்து அடுத்து செய்ய வேண்டியதை பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வூர் மதுரகவி ஆழ்வாரின் அவதாரத் தலம் ஆகும். கோயிலுக்குள் நுழைந்ததும் கொடி மரம், அடுத்து பலிபீடம் ஆகியவற்றுடன் மகா மண்டபம், முன் மண்டபம், அர்த்தமண்டபம் அமைந்துள்ளன.

பெருமாளின் தலைக்கு அடியில் நாழியும், அவரின் இடது உள்ளங்கை விண்ணை நோக்கியும், வலது கை பூமியை நோக்கியும் உள்ள கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோயில் கிழக்கு பார்த்த திசையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சுவாதி நட்சத்திரத்தன்று குளித்து, பெருமாளை முழுமனதுடன் வேண்டினால் இழந்த சொத்துக்கள், தோஷ நிவர்த்திகள் விலகும் என்பது ஐதீகம். இந்த நட்சத்திர நாளில்தான் குபேரன் திருப்பதிக்கு கடன் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

அனைத்து மாதங்களிலும் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நீராஞ்சனம் எனும் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கானது அரிசி, தேங்காய் மற்றும் நெய் ஆகிய 3-ம் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறாக 3 வாரம் தொடர்ந்து ஏற்றினால் வேண்டிய வரங்கள் கிடைப்பதால் அனைத்து பக்தர்களும் அதனை திரளாக செய்துவருகின்றனர்.

மூலவரான வைத்தமாநிதியின் கோயிலுக்கு பின்புறம் யோக நரசிம்மர் அமர்ந்து அருட்பாலிக்கிறார். வழக்கமாக சிவன் கோயிலில் மட்டுமே பிரதோஷம் நடைபெறும். ஆனால் எங்குமில்லாத வகையில் இந்த கோயிலில் யோக நரசிம்மருக்கு நீராஞ்சன விளக்கு ஏற்றப்பட்டு பிரதோஷ பூஜை நடைபெறும். மேலும் மூலவருக்கு திருமஞ்சனமும் நடைபெறும்.

புரட்டாசி சனிக்கிழமையில் வைத்தமாநிதி பெருமாளுக்கு சிறப்பு நைவேத்தியங்கள் மற்றும் சிறப்பு அலங்காரத்துடன் ஆராதனைகள் நடைபெறும்.

சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரக தலங்களுக்கு ஒப்பாக பாண்டிய நாட்டு நவதிருப்பதிகள் நவகிரக தலங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவகிரகங்களுக்கு என தனியே சந்நதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

1. சூரியன் : வைகுண்டம்
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
3. செவ்வாய் : திருக்கோளுர்
4. புதன் : திருப்புளியங்குடி
5. குரு : ஆழ்வார்திருநகரி
6. சுக்கிரன் : தென்திருப்பேரை
7. சனி : பெருங்குளம்
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி (தொலவில்லிமங்கலம்)
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி

மேலும் புரட்டாசி மாதத்தில் வரும்5 சனிக்கிழமைகளிலும் கருடசேவை நடை பெறுவதுதான் மிகவும் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. வைத்தமாநிதி பெருமாளுக்கு ஆவணி மாதம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.நவத்திருப்பதி தலங்களில் ஒன்றான இந்த வைத்தமாநிதி பெருமாள் தலத்தில் தெப்பக்குளம் என்பது கிடையாது.

ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்ஸவத்தின் போது வைத்தமாநிதி பெருமாளை ஊஞ்சலில் அமர்த்தி தாலாட்டு மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பதிகத்தை பக்தர்கள் பாடுவார்கள். ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் பவித்ர உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவம்7 நாட்கள் நடைபெறும். கார்த்திகை மாதம் சொக்கப்பனை விழா நடைபெறுகிறது.

தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.
திருநெல்வேலி- திருச்செந்தூர் மெயின் ரோட்டில் திருநெல்வேலியிலிருந்து 37-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ள பால்குளத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் நடந்தால் திருக்கோளூர் ஊரை அடையலாம்.

(தரிசனம் தொடரும்)

தொகுப்பு: ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

 • vietnam22

  வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்