SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயூரநாதர் ஈந்த மயிலோனே

2020-10-01@ 10:42:03

அருணகிரி உலா-105

அருணகிரியாரின் சேத்திரக் கோவைப்பாடலில் ஐந்தாவதாக் குறிப்பிடப்பட்டுள்ள தலம் ‘கொன்றை வேணியர் மாயூரம்’  இது இன்றைய மயிலாடுதுறையாகும். சிதம்பரம்  கும்பகோணம் சாலையிலுள்ள திருத்தலம். ஸ்காந்தம் முதலான மஹாபுராணங்களிலும் சிவரகசியத்திலும், துலாகாவேரி மகாத்மியத்திலும் இத்தலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

தட்சன் மகளாக அவதரித்ததால் வந்த திருநாமமான ‘தாட்சாயணி’ என்பதை அவன்பால் உள்ள கோபத்தினால் இறைவனை அம்பிகை பூஜித்ததால் இத்தலம் மயில் ஆடு முறை என்று பெயர் பெற்றது. (சம்பந்தப் பெருமான் காலத்தில் மயிலாடுதுறை என்றே அழைக்கப்பட்ட இத்தலத்தின் பெயர் மாயூரம் என்று பிற்காலத்தில் மருவியது. தற்போது மீண்டும் மயிலாடுதுறை என்றே அரசு ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது)

‘‘தணி ஆர் மதி செஞ்சடையான்தன்
அணி ஆர்ந்தவருக்கு அருள், என்றும்
பிணி ஆயின தீர்த்து அருள் செய்யும்
மணியான், மயிலாடுதுறையே.’’
- சம்பந்தர்.


அன்னையின் தவத்தை மெச்சிய இறைவன் ஆண் மயிலாகத் தோன்றித் தாண்டவமாடி அநுக்ரஹம் செய்ததால் இறைவன் கௌரிதாண்டவேஸ்வரர் என்றும் மயூரநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.மயிலாடுதுறைத் திருப்புகழில் அருணகிரிநாதர் இத்தலத்தை ரத்னச் சிகண்டியூர் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘‘எமதும லத்தைக் களைந்து பாடென
அருளஅ தற்குப் புகழ்ந்து பாடிய
இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ...... முருகோனே
எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய
பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய
இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ...... பெருமாளே.’’

(எனது மும்மலங்களையும் அறுத்துத் தொலைத்து ‘பாடுவாயாக’ என நீ எனக்குத் திருவருள் பாலிக்க, அதன்படி அடியேன் உன்னைப் புகழ்ந்து பாடிய கவிகளை மெச்சிப் பிரியப்பட்டு உயரிய பேற்றினை எனக்கருளிய முருகனே! அழகிய சங்குகள் நிரம்பத் தவழ்ந்து உலாவுகின்ற காவிரியின் தெற்குக் கரையில் விளங்கும் ஒப்பற்ற, ரத்மையமான மயில் ஆடு துறையில் வீற்றிருக்கும் பெருமாளே!)

வருடந்தோறும் ஐப்பசி மாதம் ஒவ்வொரு நாளும் மயூரநாதர் அபயாம்பிகையுடன் காவேரிக்கு எழுந்தருளுகிறார். இம்மாதம் 30 தினங்களும் இங்கு நீராட நாடெங்கிலுமிருந்து மக்கள் வருகின்றனர். முடவன் ஒருவன் தன் ஊரிலிருந்து தவழ்ந்தபடி இங்கு வந்து சேருவதற்குள் ஐப்பசி மாதம் முடிந்து விட்டது. அதனால் மனம் நொந்து இறைவனை வேண்டி முறையிட்ட போது ‘‘கார்த்திகை முதல் நாளும் நாம் இங்கிருப்போம் நீ அன்றும் நீராடலாம்’’ என்று கூறியருளினார். எனவே இந்நாள் ‘முடவன் முழுக்கு’ எனப்படுகிறது. அன்றும் பக்தர்கள் காவிரியில் நீராடிப் புனிதம் பெறுகின்றனர். மிகவும் பயந்து தன்னைச் சரணடைந்த ஒரு மயிலுக்கு அபயமளித்துப் பாதுகாத்ததால் அம்பிகை அபயப்பிரதாம்பிகை, அபயாம்பிகை, அஞ்சல் நாயகி என்ற திருநாமங்களால் அழைக்கப்படுகிறாள்.

எட்டு வீரட்டத்தலங்களுள், காலசம்ஹார தலமாகிய திருக்கடவூரும், தட்சயாகத் தலமாகிய திருப்பறியலூரும், கஜசம்ஹாரத் தலமாகிய வழுவூரும், தாமதகன சேத்திரமாகிய திருக்குறுக்கையும் மயிலாடுதுறையின் எல்லைக்குள் இருப்பதாக தல புராணங்கள் கூறுகின்றன, மயூரநாதரை வழி பெற்று சப்தமாதர்கள் தனித்தனியே பூசித்துத் தவம் செய்த ஏழு தலங்களும் அருகே உள்ளன. மயிலாடுதுறையைத் தரிசிக்க வந்த சம்பந்தப் பெருமானுக்குக் காவேரிப் பிரவாகத்தை. வடியச் செய்து துறையைக் காட்டி அருளியதால் கிழக்கேயுள்ள திருவளநகரில் ‘துறைகாட்டும் வள்ளல்’ எனப் பெயர் பெற்றார் மயூரநாதர். உத்தர மாயூரத்தில் தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளிச் சின் முத்திரை காட்சி நின்றதால் கை காட்டும் வள்ளல் எனவும் இறைவன் பெயர் பெற்றார். தெற்கே பெருஞ்சேரியில் வாக்குக் காட்டும் வள்ளல் (வாகீசர்) மேற்கே மூவலூரில் வழி காட்டும் வள்ளல் (மார்கசகாயர்) எனவும் பெயர் பெற்று விளங்குகிறார்.

(ஆதாரம் = மாயூரப்புராணம் மாயூர வள்ளல் நாற்றிசை வள்ளலாகிய படலம். செய்தி உ, வே, சா அவர்களின் ‘திருத்தலங்கள் வரலாறு)
சேத்திரக் கோவையில் அடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது ‘அம் பெறு சிவகாடி’ ‘அம்’ என்பது கங்கையைக் குறிப்பதாகக் கொண்டு இது வடக்கேயுள்ள மிகப்புராதனமான காசி வாரணாசியைக் குறிப்பதாகவே கூறுவர் உரையாசிரியர்கள்.

மேற்கு நோக்கிப் பாயும் கங்கை நதியின் கரையில் அமைந்துள்ள காசி, இந்துக்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசித்து முன்னோர்க்கான திதிகளைச் செய்து வரவேண்டிய ஒரு திருத்தலமாகும். காசி விசாலாட்சியும், சுயம்பு வான விசுவநாதரும், அன்னபூரணியும் நாடெங்கிலுமுள்ள பக்தர்களைத் தம்பால் ஈர்க்கின்றனர். முத்தித் தலங்கள் ஏழுள் காசியும் அடக்கம். இதன் எல்லைக்குள் இறந்தோரை உமையம்மை தனது உத்தரியத்தினால் வீசி இளைப்பாற்ற, சிவபெருமான் வலச்செவியுள் பிரணவப் பொருளை உபதேசிப்பார் என்பர்.

‘‘உருவராதென்று தன் எல்லை வட்டத்தினுள்
உற்றிருந்தே இறந்தோர்க்கு
உத்தரியத்தினால் உமை இளைப்பாற்றவே
உம்பர் கோன் விசுவபதி வந்து
ஒரு வலச் செவியினுள் தாரகப் பிரமத்தை
உபதேசமாயருளியும் ஓரெட்டு வடிவு தரு காசி நகர்
- சேத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்.
காசியில் அருணகிரி நாதர் பாடிய ஒரு
பாடலைப் பார்ப்போம்.
‘‘தார ணிக்கதி பாவி யாய்வெகு
சூது மெத்திய மூட னாய்மன
சாத னைக்கள வாணி யாயுறு ...... மதிமோக

தாப மிக்குள வீண னாய்பொரு
வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
தாமு யச்செயு மேது தேடிய ...... நினைவாகிப்
பூர ணச்சிவ ஞான காவிய
மோது தற்புணர் வான நேயர்கள்
பூசு மெய்த்திரு நீறி டாஇரு ...... வினையேனைப்
பூசி மெய்ப்பத மான சேவடி
காண வைத்தருள் ஞான மாகிய
போத கத்தினை யேயு மாறருள் ...... புரிவாயே’’


இந்த உலகிலேயே பெரும் பாவியாகவும், திருட்டு புத்தியை உடையவனாகவும், முட்டாளாகவும் விளங்கும் நான் விலை மாதர்களின் வலையில் வீழ்ந்து விட்டதன் காரணமாக, ஓதும் அடியார்களுக்கு இசுபர சுகம் நல்கும் வேதாகமங்களையும், தேவாரம் முதலான திருமுறைகளையும் பாராயணம் செய்யும் அன்பர்கள் பயபக்தியுடன் தரித்துக் கொள்ளும் விபூதியைப் பூசுவதில்லை. எனவே இருவினைகளால் இடர் படும். அடியேனை விபூதியைப் பூசவைத்து, பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வைக்கும் பத முக்தியைத் தரும் உனது திருவடிகளைத் தரிசனம் செய்ய வைத்து, அதன் மூலம் திரு
வருள் மயமான ஞானம் எனும் அனுபவ அறிவு எனக்குக் கிட்டும்படி அருள்புரிவாயாக.

ஆளுடைப் பிள்ளையாரின் திருநீற்றுப் பதிகம் நமக்கு இங்கு நினைவுக்கு வருகிறது.

‘‘பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான்
திருநீறே.’’


கங்கைக் கரையில் கேதார் காட்டில் (படித்துறை) அமைந்துள்ள குமாரசாமி மடத்தில் முருகன் திருவுருவைக் காணலாம். 17ஆம் நூற்றாண்டில் குமரகுருபரர் தமக்குப் பரிசாகக் கிட்டிய பொருள்களைத் தம் குரு நாதரிடம் சமர்ப்பிக்கச் சென்றார். அவர் அதை ஏற்க மறுத்ததோடு அப்பொருளின் உதவியால் காசி நகரில் சைவம் தழைக்க ஒரு மடம் அமைக்கும்படி ஆணையிட்டார்.

அதன்படி காசி நகர் சென்றடைந்தார் குமரகுருபரர். மடம் அமைக்க நிலம் வேண்டி முகலாய பாதுஷாவிடம் சென்ற போது, அவருடன் பேச மொழி ஒரு தடங்கலாக இருந்தது. வாக்தேவியைத் துதித்து ‘சகல கலா வல்லி மாலை’ எனும் நூலை இயற்றினார் குமர குருபரர். தேவியின் அருளால் பாதுஷாவிடம் ஹிந்துஸ்தானி மொழியில் பேசி கேதார் காட்டில் மடம் அமைத்து கேதாரேஸ்வரரை அங்கு ஸ்தாபித்தார். அழகான முருகன் சிலை ஒன்றும் அங்கு உளது. இன்று அங்கு அருணகிரிநாதரின் காசித் திருப்புகழ் ஒன்று சல வைக்கல் வெட்டாகப் பதிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நால்வரின் சிலைகளும் பிற்காலத்தில் நிறுவப்பட்டுள்ளன. மடத்தில் பொறித்து வைத்துள்ள திருப்புகழ் பின் வருமாறு:

‘‘வேழ முண்ட விளாகனி ...... யதுபோல
மேனி கொண்டு வியாபக ...... மயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி
நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே
மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற
வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா
காள கண்ட னுமாபதி ...... தருபாலா
காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.’’


‘‘வேழும் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட விளாம்பழம் போல, உள்ளிருக்கும் சத்து அற்ற மேனியை அடைந்து, வெங்காம சமுத்திரத்தில் மூழ்கி அறிவின்மையில் சிறந்து மூடர்கள் போல் நாள்தோறும் நானும் வாட்டமுறாதபடி அருள் புரிவாயாக.முன்பு எண்ணாயிரம் சமணக் குருமார்கள் கழுவிலேறி மாளும்படி அனல்  புனல் வாதங்களில் அவரை வென்ற சிகாமணியே ! மயில் வீரனே !  விடமுண்ட கண்டனும், உமை கணவனும் ஆகிய சிவபிரான் தந்த குழந்தையே!  கங்கை நதிக் கரையில் உள்ள காசித்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !’’

மற்றொரு காசித் திருப்புகழில்
‘‘கங்கைச் சடைமுடி யோனிட மேவிய
தங்கப் பவளொளி பால்மதி போல்முக
கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி ...... யருள்பாலா
கந்துப் பரிமயில் வாகன மீதிரு
கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ்
கங்கைப் பதிநதி காசியில் மேவிய ......
பெருமாளே.’’
(கங்கையை ஜடையில் புனைந்துள்ள சிவனாரின் இடப்பாகத்தில் பொருந்தி உள்ளவரும், பொன் போலவும், பவளம் போலவும் நிறம் உள்ளவளும், சந்திரன் போன்ற வெண்ணிற வதனம் கொண்டவளும், இருண்ட கூந்தல் உடையவளும் ஆகிய தேவியின் குமரனே!

பாய்ந்து செல்லும் குதிரை போன்ற மயில் வாகனத்தின் மீது, இரு தனபாரங்களுடைய வள்ளியுடன் ஆசையுடன் வீற்றிருக்கின்ற, கங்கை நதிக்கரையில் உள்ள பதியான காசியில் விளங்கும் பெருமாளே) தனிக்கோயிலில் அன்னபூரணி வீற்றிருக்கிறாள். கைகளில் தங்கத்தாலான அன்னபாத்திரமும் அகப்பையும் கொண்டு வீற்றிருக்கும் இத்தேவியை வணங்குவோம்.

(உலா தொடரும்)

தொகுப்பு: சித்ரா மூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

 • vietnam22

  வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்