SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அப்பரடிகளும் ஆளுடைப்பிள்ளையும்...

2020-10-01@ 10:34:22

சமயம் வளர்த்த நாயன்மார்கள்-5

நாயன்மார்களின் சரிதத்திற்குள் புகும்முன்பு முக்கியமான இரு நாயன்மார்களின் இதயப்பூர்வமான நட்பு ஒன்றை வெளிப்படுத்தும் சம்பவத்தை பார்ப்போம் வாருங்கள். ஏனெனில், சைவ சமயத்தை எப்படியெல்லாம் வளர்த்தெடுத்தனர் என்பதற்கு இந்நிகழ்வு முக்கியச் சான்றாகும்.

ஆளுடைப்பிள்ளை எனும் திருஞானசம்பந்தர் அடியார் குழாமுடம் வைகைக் கரையோரம் சைவத்தை செழிக்கச் செய்ய ஆவல் கொண்டார். சமணர்கள் சரி பாதியாய் சைவர்களை மாற்றிவிட்டனரே எனக் கவலை கொண்டார். மதுரைச் சாக்கியர்கள் செருக்கோடு ஞானக் குழந்தையிடம் வாதிட, குழந்தை பெரிய பண்டிதனாக தன் எதிர்வாதத்தை முன்வைக்க, வாதத்தின் வெம்மை தாங்காத சமணக் கூட்டம் சிவநெறிச் செல்வரின் திருப்பாதத்தில் வீழ்ந்து பரவியது. சைவப் பெருஞ்சுடர் விண்ணுயர தகதகத்து கொழுந்து விட்டெறிய, சொக்கனின் பேரருள் மக்களின் மனத்தில் மணம் பரப்பியது. வைகறையில் சைவம் பெரும் பெருக்கோடு சுழித்துக் கொண்டு ஓடியது. ஞான சம்பந்தர் நதியின் வேகத்தோடு சைவம் தழைக்க தஞ்சை நோக்கி நகர்ந்தார்.

ஞானக் குழந்தை சம்பந்தர் அந்த அழகான முத்துச்சிவிகையில் அமர ஞான சூரியனின் ஒளியால் அது இன்னும் வெண்மையாக ஒளிர்ந்தது. திருநெல்வாயில் அரத்துறைநாதர் அருளிய சிவிகையை சீரடியார்கள் குழாம் போட்டியிட்டுக் கொண்டு சுமந்தது. சம்பந்தரைச் சுமந்ததால் அவர்கள் வல்வினைகளின் சுமைகள் குறைந்தன. சீரடியார் கூட்டம் பிள்ளையின் பதிகத்தை பாட தென்றலாக ஈசனருள் எல்லோரையும் அணைத்தது. பண்ணோடு சேர்ந்து சிவிகையின் மணிகள் ஒலிக்க அது நாவுக்கரசரின் அகச்செவியில் எதிரொலித்துத் திரும்பியது.

ஞானத் தபோதனரான நாவுக்கரசரை எப்போது தரிசிப்பேன் என எண்ணம் பூத்துக் கிளர்ந்தது. சிவிகையை பூந்துருத்திக்கு திருப்புங்கள் என்றார். கூட்டம் எங்கே என்று புரியாமல் விழிக்க திருப்பூந்துருத்தி என அழுத்தமாய்ச் இன்னொரு முறை சொல்ல அவர்கள் உடல் ஏனோ சிலிர்த்துப் போட்டது. சம்பந்தர் மென்மையாய் புன்முறுவலித்தார். எல்லோருக்குள்ளும் ஞானப்பூ மொட்டுவிட்டு மலர பூந்துருத்தியை நோக்கி வண்டுக் கூட்டம் தெள்ளமுதம் பருகப் பறந்தது.

அப்பரடிகளோ கயிலை மகாதேவனைக் காண வேண்டி உற்ற நோய் உற்று உருண்டும், புரண்டும், ஊர்ந்தும் உணர்வற்றுப் போனார். இறையருள் ஐயாறப்பரிடம் சேர்க்க திருவையாற்றுத் தடாகத்தில் மூழ்கி எழ ஐயாறப்பர் கயிலையை கண்ணுக்குள் நிறுத்தினார். கண்ணாரக் கண்டவர் திருவையாறுக்கு அருகே பொய்யிலியார் எனும் நாமத்தோடு திகழும் திருப்பூந்துருத்தியில் எழுந்தருளினார். ஞாயிறும், திங்களும் தோயும் திருமடம் அமைத்து மதி தவழும் சோலையமைத்தும் உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார்.

சிவக் கொழுந்தான சம்பந்தர் பெருஞ் ஜோதியாக வளர்வது அறிந்த அப்பரின் உள்ளம் கிளர்ந்தது. பிள்ளையின் மேதமையும், ஞான விலாசத்தை நன்கறிந்த செவியுற்றிருந்த நாவுக்கரசர் சம்பந்தரையே சிந்திக்கலானார். சிவமும், சம்பந்தமும் ஒன்றல்லவா என்று பார்ப்போரிடத்திலெல்லாம் கண்களில் ஆனந்தபாஷ்பம் பொங்கக் கூறலானார். ஆளுடையாரின் அடிபரவி அள்ளி அணைத்து சிரசில் சூடுவது எந்நாளோ என நெக்குருகிப் பேசி கண்மூட, குளிர் தென்றல் எழில்சூழ் மலர் வனத்தை வருடியபடி அப்பரடிகளின் தோள் தொட்டு நகர்ந்தது. சட்டென்று வெண்ணீற்றின் மணம் அவ்விடத்தைச் சூழ்ந்தது.

சிஷ்யர் ஒருவர் மூச்சிறைக்க ஓடிவந்து அடியார்களோடு சம்பந்தப் பெருமான் பூந்துருத்தியைக் காண வருகிறார் என்றார். நாவுக்கரசரின் அகம் இன்னும் குழைந்துக் குளிர்ந்தது. ஞானக் குழந்தை தவழ்ந்து வருவதற்குள் நாம் சென்று எதிர் கொள்வோம் வாருங்கள் என்றார். அங்கம் முழுதும் திருநீறுபூசி, கண்டத்தில் ருத்திராட்சம் அணிந்து, நாமணக்க நாதனின் நாமம் நமசிவாயத்தை சொல்ல விண் அதிர்ந்தது. பூந்துருந்தியை பொய்யிலியார் தம்மருளால் அணைந்தார்.

வெகுதொலைவே முத்துச் சிவிகை அசைவதும், மணிகளின் ஓசை காற்றினில் கசிந்து வருவதையும் கண்ட பூந்துருத்தி சிவனடியார்கள் சிலிர்த்துப் போனார்கள். இன்னும் விரைவாக நடந்து அருகேயுள்ள வெள்ளாம்பிரம்பூருக்குச் சென்றார். சம்பந்தரும் அவ்வூர் ஈசனை வணங்கிவிட்டு ஊர் எல்லையைத் தொட எதிரே அப்பரடிகளின் அடியார்கள் இரு கைகளையும் சிரசுக்கு மேலே உயர்த்தி ‘மகாதேவா... மகாதேவா’ என்று பிளிறினார்கள். சம்பந்த மூர்த்திகள் சிவிகையின் சீலையை உயர்த்தி முகம் மலரச் சிரித்தார்.

கூட்டத்தின் அகம் நிறைந்தது. தன்னை மறந்து சிவிகையை நோக்கி நடந்த கூட்டம் நாவுக்கரசரை மறந்தேபோனது. அப்பரடிகளும் இதுதான் சமயமென்று கருதி அடியார்களுக்குள் சிறியோராய் தம்மை மாற்றிக் கொண்டார். சிவிகையை சுமக்கும் ஒருவரின் தோள் தொட்டு மெல்ல விலக்கினார். சந்தனத்தில் செய்திருந்த அந்தப் பல்லக்கில் முத்தும், மாணிக்கமும் மாறிமாறி ஒளிர்ந்தன. அவ்வொளியில் சம்பந்தர் இன்னும் அழகராய் தெரிந்தார். அப்பரடிகள் தாழ்வாய் இருக்கும் இவ்வுடம்பு பெரியோனாய் விளங்கும் குழந்தை எழுந்தருளும் சிவிகையை எப்படிச் சுமக்கும் எனக் கவலையுற்றவராய் தடுமாட்டத்தோடு பல்லக்கினடியில் வந்து சேர்ந்தார்.

அடியார்கள் சுற்றிலும் சூழ தம்முகம் வெளியே தெரியாதவராக முத்துச்சிவிகையை சுமக்கும் ஒருவரின் தோள் தொட்டார். அவர் முன்னே நகர திருநெல்வாயில் நாயகனை மனதில் நினைந்து சிவிகையை தம் தோளில் ஏற்றார். திருநாவுக்கரசரின் திருவுள்ளம் களிப்புற்றது. கண்களில் கங்கையாக நீர் பொங்கி வழிய அவர் அகத்தில் தில்லைக்கூத்தன் ஆனந்தத் தாண்டவஞ் செய்தார். கூடியிருந்தோர் ஈசனின் உருவை உள்ளத்தில் இருத்தி, நாதனின் நாமச்சாரலில் நனைந்தபடியே நடந்தனர். பல்லக்கு கடலில் மிதக்கும் பாய் மரமாக நகர்ந்தது.

திருவாலம்பொழில் நெருங்கியதும் ஞானக் குழந்தை சீலையை விலக்கி வெளியே பார்த்தது. அப்பர் சுவாமிகள் எந்த இடத்தில் இருக்கிறார் என்று மனதில் நினைவெழ, தன் அமுத வாயைத் திறந்து அப்பர் எங்குற்றார் என சற்றே ஆச்சரியத்தோடு அருகிலிருப்போரிடம் வினவினார். எம்பெருமானே இவ்வடியேனை விசாரிக்கிறாரே என்றெண்ணி உருக்கமுற்று தம் சிரசை சற்றே வெளியே நீட்டி அண்ணாந்து அண்ணாரை பார்த்து ‘’தேவரீருடைய அடியேனாகிய யான் உம் அடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு பெற்று இங்குற்றேன்’’ எனச் சொல்லி முடிக்கும் முன்பு, சீர்காழி தந்த சீர்பிள்ளை சம்பந்தர் சட்டென்று தாவி மண்ணில் இறங்கினார்.

திருவதிகைத் தேவர் வீரட்டானர் ஆட்கொண்ட சிங்கமல்லவா இவர். எம்மைச் சுமந்து தான் பாக்கியமுற்றதாக கூறிக் கொள்ளும் இவர் திருவடியை தாம் ஏந்திக்கொள்ளுதல்லவா முறை என பதை பதைப்படைந்தார். தலைதாழ்த்தி நாவரசரை நோக்கி ஓடினார். அதற்குள் அப்பரடிகள் சம்பந்த மூர்த்திகள் பணியும் முன்பே மான்குட்டியைப்போல் துள்ளி ஆளுடைப்பிள்ளையின் அடிபரவினார்.

திருத்தொண்டக் கூட்டம் கைகளிரண்டையும் மேலுயர்த்தி இதென்ன திருக்காட்சி என வியந்து அவ்விரு அடியார்களைச் சுற்றிலும் வட்டமாக வளைந்து பூமியில் வீழ்ந்து வணங்கியது. வெண்ணீற்று நாயகர்கள் மலர்ந்த தாமரையாக நின்றருள, எண்புறமும் விரிந்த இதழ்களாக சீரடியார்கள் தண்டனிட ஒருகணம் ஆலம்பொழில் கயிலாபுரியாக மாறியது.

திருவாலம்பொழில் ஈசனைப் பாடி திருப்பூந்துருத்தியை வந்தடைந்தனர். அய்யன் அப்பரடிகளின் உழவாரத் தொண்டு செய்து சிவந்திருந்த அத்தலத்தை தம் காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர் கோயில் கோபுரத்தின் புறத்தே நின்று வழிபடலானார். திருநந்தியார் ஈசனை மறைத்தருளுவதால், விலக்கியருள விநயமாக ஞானப் பிள்ளை காண வேண்டினார், அப்பர். ஆச்சரியமாக நந்திதேவர் புஷ்பவனேஸ்வரர் எனும் பொய்யிலியார் பளீரென்று நகர்ந்து காட்சி தர பேரொளியொன்று பூந்துருத்தியை அடைத்து நின்றது.

வெள்ளமுதாக யாவரையும் நிறைத்து உள்ளுக்குள் ஒடுங்கியது. பேரருள் பெருமழையில் நின்ற கூட்டம் மெல்ல நகர்ந்தது. சம்பந்தப் பெருமான் அப்பரடிகளின் திருமடத்திற்கு எழுந்தருளினார். அவர் அன்பாற் பொங்கிய இன்னமுதத்தை இட்டு சம்பந்தக் குழந்தையின் வயிறு நிறைந்ததா என உறுதி கொண்டார். சில நாட்கள் அங்கேயே தங்கி ஈசனின் மகாத்மியத்தை பகிர்ந்து கொள்ளலானார்.

ஞான சம்பந்தரும் பாண்டியத்தில் சைவம் வளர்ந்து விபூதியின் மணம் பெருகி மாந்தர் தம் திருமேனிகளில் பூசிப் பூரிப்படைவதைத் தெரிவிக்க, அப்பர் குழந்தையாக குதூகலித்தார். பாண்டிய மன்னனின் மார்புக் கூன், முதுகுக் கூன் நிமிர்ந்ததைக் கூற வாகீசர் வியப்படைந்தார். குணவதி பட்டமகிஷி மங்கையர்க்கரசியாரின் சிவபக்தியை மெச்சிப்பேசி, குலச்சிறைநாயனாரின் பெருமையைக் கூற நாவரசர் மட்டிலாது மகிழ்ச்சியடைந்தார்.

ஈரடியார்களும் புஷ்பவனநாதரை முக்காலமும் வணங்கினர். பிறிதொரு நாளில் பூந்துருத்தி விட்டு வேறொரு தலம் நோக்கி தாம் அழைக்கப்படுவதை அப்பரடிகளிடம் கூற அப்பர் சம்பந்தருடன் பூந்துருத்தியின் எல்லைவரை சென்று கண்களில் நீர் மல்க விடை கொடுத்தார். வையம் முழுதும் ஞானம் வளர்க்கச் செல்லும் குழந்தையையும், அவரைத் தாங்கும் சிவிகையும் வெகுதூரம் நகர்ந்து புள்ளியாக மறையும் வரை பார்த்திருந்துவிட்டு திருமடம் நோக்கி நடந்தார் திருநாவுக்கரசர்.

இத்தலத்தில் நிகழ்ந்த மாபெரும் நெகிழ்ச்சிக்குரிய விஷயம் இது. அதனாலேயே தமிழகத்தில் திருப்பூந்துருத்தி உபசாரம் என்ற பழமொழியை உதாரணம் காட்டிப் பேசுவர். இந்த திருத்தலம் தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருப்பூந்துருத்திக்குச் செல்லுங்கள். திருப்பம் ஏற்படும் பாருங்கள்.

தொகுப்பு: கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

 • vietnam22

  வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்