SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதன்முதல் நரசிம்மர் தலம்

2020-09-30@ 12:12:12

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-33

திருக்கோஷ்டியூர்

மூலவர் செளம்ய நாராயணராகவும், தாயார் திருமாமகளாகவும் தல தீர்த்தங்களாக மகாமக தீர்த்தம், தேவபுஷ்கரணியைக் கொண்டு திருவருட்பாலிக்கும் திருத்தலம் திருக்கோஷ்டியூர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுள் ஒன்று.உலக மக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் திருமந்திரம் விளைந்த திவ்ய தேசம் என்ற பெருமை இத்தலத்திற்குண்டு.

கோயிலினுள் நுழைந்ததுமே இடப்பக்கத்தில் ஸ்ரீராமானு ஜரும், திருக்கோஷ்டியூர் நம்பிகளும் (இவருடன் இவரது திருவாராதன மூர்த்தியான ஸ்ரீ ராமன் -சீதை-லட்சுமணன்-அனுமனும்) தனித்தனி சந்நதிகளில் காட்சி தருகின்றனர். மயன் என்ற அசுரத் தச்சனும், தென்பகுதியை விஸ்வகர்மா என்ற தேவதச்சனும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். ‘ஓம்’, ‘நமோ’, ‘நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.

விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் செளம்யநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என திருமால் நான்கு நிலைகளில் அருள்கிறார். திருமாமகள் தாயாருக்கு தனிச்சந்நதி இருக்கிறது. இவளுக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு.

அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது  இருவரும் இருப்பது வித்தியாசமான தரிசனம். பிராகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது. நான்முகனிடம் வரம் பெற்ற இரண்யன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து துன்புறுத்தினான். கலங்கிய தேவர்கள் தங்களைக் காக்கும்படி திருமாலிடம் முறையிட்டனர். அவர், இரண்யனை வதம் செய்வது குறித்து ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனாலும் பயந்த முனிவர்கள் இரண்யன் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசிக்க வேண்டும் என்றனர். திருமாலும் அவர்களது கோரிக்கையை ஏற்றார்.

இதனிடையே இத்தலத்தில் கதம்ப மகரிஷி, திருமாலின் தரிசனம் வேண்டி கடுந்தவமிருந்தார். அவர் தான் தவமிருக்குமிடத்தில், எவ்வித தொந்தரவும் இருக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தார். எனவே, தேவர்களுடன் ஆலோசனை செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்தார், திருமால். அப்போது நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழிக்கப் போவதாக கூறினார் திருமால். அதனால் அகமகிழ்ந்த தேவர்களும், கதம்ப மகரிஷியும் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை அப்போதே தங்களுக்கு காட்டும்படி வேண்டினர், எனவே, அவதாரம் எடுப்பதற்கு முன்பே இங்கு நரசிம்ம கோலம் காட்டியருளினார். இதனால் மகிழ்ந்த கதம்ப மகரிஷியும், தேவர்களும் அவரது பிறதிருக் கோலங்களையும் காட்டியருளும்படி வேண்டினர்.

சுவாமியும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என நான்கு திருக்கோலங்களை காட்டியருளியதோடு, இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் ‘திருக்கோட்டியூர்’ என்றும் பெயர் பெற்றது.இத்தலத்தில் திருவருட்பாலிக்கும் பெருமாள் பேரழகு கொண்டவர் என்பதால் செளம்ய நாராயணர் என்பது திருநாமம். பொதுவாக ஆலயங்களில் உற்சவ விக்ரகங்களை பஞ்சலோகத்தால் அமைப்பர். ஆனால், தூய்மையான வெள்ளியால் ஆன விக்ரகம் இங்குள்ளது.

இதை தேவலோக இந்திரனே தந்ததாக ஐதீகம். திருமால் இரண்யனை வதம் செய்யும்வரையில், இத்தலத்தில் தங்கியிருந்த இந்திரன், தான் தேவலோகத்தில் பூஜித்த செளம்ய நாராயணரை, கதம்ப மகரிஷிக்கு கொடுத்தார். இந்த மூர்த்தியே இக்கோயில் உற்சவராக இருக்கிறார். இவரது பெயராலே, இத்தலமும் அழைக்கப்படுகிறது. பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தலம் இது. இப்பெருமாளை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என்று போற்றுகிறார்.கோயிலுக்குள் நுழையும்போது பலிபீடம், துவஜஸ்தம்பத்தைப் பார்க்கும் நாம், பின்னால் நந்தியையும் காணும்போது மெல்லிய வியப்பு மேலிடுவதைத் தவிர்க்க முடியாது. ஆமாம், இங்கே ஒரு சிவ சந்நதியும் இருக்கிறது. இந்தத் தலத்தில் இரண்ய வதம் பற்றிய திட்டத்தைத் தீட்டும்போது ஈசனும் அதில் பங்கேற்றதன் சாட்சி! இவரை ‘சரபேஸ்வர லிங்கம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.

தனிச் சந்நதிக்கு முன்னால் ஈசனைப் பார்த்தபடி நந்தி அமர்ந்திருக்க, சந்நதிக்குள் சிறு உருவில் இந்த லிங்கம் அருட்பாலித்துக் கொண்டிருக்கிறது. இவருக்கு முன்னால், சந்நதிக்குள் வேல் தாங்கிய முருகன், சனகாதி முனிவர்கள், நாகர் சிலைகளும் தரிசனமளிக்கின்றன. அடுத்து, சக்கரத்தாழ்வார் தரிசனம் நல்குகிறார்.சுற்றுப் பக்கத்தில் ருக்மிணி-சத்யபாமா சமேத நர்த்தன கிருஷ்ணன் அழகே வடிவாய் காட்சியளிக்கிறார்.

இந்த திவ்ய தேசத்தில் எம்பெருமான் நின்றும், கிடந்தும், அமர்ந்தும், நடந்தும் தனது பலவகை திவ்ய சொரூபங்களைக் காட்டி நம்மை மகிழ்விக்கிறார். இந்த நர்த்தன கிருஷ்ணன் உருவம் நடந்த திருக்கோலத்தைக் காட்டுகிறது.மேலே சில படிகள் ஏறிச் சென்றால் பெருமாள் சயன கோலத்தில் அற்புத வடிவில் தரிசனம் அளிக்கிறார். இவரது கருவறைக்குள் தேவர்கள் நிறைந்திருக்கிறார்கள். வழக்கம்போல ஸ்ரீதேவி-பூதேவி பிரதானமாக அங்கம் வகிக்க, வழக்கம்போல இல்லாமல் பிரம்மா இடம் பெற்றிருக்கிறார். பிரம்மாவுடன் அவரது பத்தினிகளான சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி மூவரும் உடன் அமைந்திருக்கிறார்கள்! இம்மூவரும் வீணாகானம் இசைத்து திருமாலை மகிழ்விக்கிறார்கள்.

இந்தத் தலத்தில் பெருமாள் உறையக் காரணமாக இருந்த கதம்ப மகரிஷியும் இருக்கிறார். அருகில் சந்தான கிருஷ்ணர் தொட்டிலில் இருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்று பெயர். மழலை பாக்கியம் இல்லாதவர்கள் இவருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால், விரைவில் அவர்களுக்கு மழலை வரம் கிடைப்பதாக நம்பிக்கை. பெருமாளின் திருவடியருகே அடங்கிப்போன மது-கைடப அரக்கர்கள், தேவேந்திரன், காசி மகாராஜா மற்றும் சந்திரனின் பேரனான அதாவது புதனின் மகனான புரூரவ சக்கரவர்த்தி என்று ஒரு திருமாலடியார் பெருங்கூட்டமே காட்சி தருகிறது. இவ்வாறு தேவர்கள் நடுவே தோன்றியமையால் ‘ஸ்தித நாராயணன்’ என்றும் திருமால் பெயர் கொள்கிறார்.

பாற்கடல் காட்சிபோல இங்கும் ஆதிசேஷன்மேல் பள்ளிகொண்டதால், ‘உரக மெல்லணையான்’. உரகம் என்றால் பாம்பு. மெல்லணை என்பது அதன் மிருதுவான உடல் படுக்கை. உரக மெல்லணையான் கொலுவீற்றிருக்கும் கருவறை விமானம், அஷ்டாங்க விமானம் எனப்படுகிறது. 108 திவ்ய தேசங்களிலேயே இங்கும், அருகே, மதுரையைச் சேர்ந்த திருக்கூடல் தலத்திலும்தான் இத்தகைய, ஆகம விதிகளுக்குட்பட்ட அஷ்டாங்க விமானத்தைக் காண முடியும்! அடுத்து, இரண்டாவது தளத்தில் பெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியுடன் நின்ற நாராயணனாக சேவை சாதிக்கிறார். மூன்றாவதான பரமபதநாதன் கொலுவிருக்கும் தளத்திற்கு செல்ல குறுகலாக மேலேறும் படிகள் உள்ளன. ஒரு கட்டத்தில் மேல் விதானம் தலையில் இடிக்க, சற்றே குனிந்து, உடலைக் குறுக்கிக் கொண்டுதான் போக முடியும்.

கோபுரத்தின் இந்த உச்சியிலிருந்துதான் ராமானுஜர் உலகோர் அனைவரும் உய்வடைய அஷ்டாக்ஷர (எட்டெழுத்து)  மந்திரத்தையும், அதன் பொருளையும், அதன் பலனையும் பகிரங்கமாக அறிவித்தார். ஊரைப் பார்த்தவண்ணம் அவரது திருவுருவச்சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த கோபுர உச்சியிலிருந்து பார்த்தால் திருக்கோஷ்டியூர் நம்பிகளும், ராமானுஜரும் வாழ்ந்த வீடுகள் அமைந்திருந்த பகுதியைக் காணலாம். இந்த வீடு ‘கல்திருமாளிகை’ என்றழைக்கப்படுகிறது. நம்பியின் வம்சாவழியினர் இன்னமும் இவ்வூரில் வாழ்ந்து வருகிறார்கள். கீழிறங்கி வந்தால் தாயார் திருமாமகள் நாச்சியாரை தரிசனம் செய்யலாம். மாசி மாத தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள், திருவீதியுலா ஆகியன நடைபெறும்.மதுரையிலிருந்து 62 கி.மீ. தொலைவிலுள்ள திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் திருக்கோஷ்டியூர் அமைந்துள்ளது.

(தரிசனம் தொடரும்)

தொகுப்பு: பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

  • vietnam22

    வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்