SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருக்குறளில் கை!

2020-09-30@ 12:09:03

குறளின் குரல்-129

திருக்குறளில் கை என்ற உறுப்பு பல குறள்களில் பொருளைச் செழுமைப்படுத்தும் வகையில் பொருத்தமாக இடம்பெற்றுள்ளது. ஓலைச்சுவடியில் எழுத்தாணியால் திருக்குறளை எழுதக் கைகொடுத்ததால் கைமீது வள்ளுவருக்கு அதிக நேசம் வந்ததோ? சின்னஞ்சிறு குழந்தைகளின் கரம், சீற்றத்தால் நிலத்தில் அறைபவன் கரம், யானையை எதிர்த்து வீரத்தோடு வேல் பிடித்தவன் கரம், பொருள் சேர்ப்பதற்காக ஓயாது உழைக்கும் உழைப்பாளியின் கரம், ஆடை நெகிழ்ந்தவனுக்கு ஓடோடிவந்து உதவும் கரம் என வள்ளுவர் தாம் சொல்லவந்த கருத்தைச் சொல்லும்போது போற்றும் கரங்கள் பலதரப்பட்டவை.

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
(குறள் எண் 64)

தத்தமது குழந்தைகள் தங்களின் சின்னஞ்சிறு கையால் பிசைந்த உணவு அமிர்தத்தை விடவும் இனியதாகும்.

அஃகாமை செல்வத்திற்கு கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
(குறள் எண் 178)


ஒருவனுடைய செல்வம் குறையாமல் இருப்பதற்கு வழி என்னவென்றால், அவன் மற்றவர் பொருளைக் கவர நினைக்காமல் இருப்பதேயாகும்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

(குறள் எண் 260)

உயிர்களைக் கொல்லாதவனும் புலால் உண்பதை மறுத்தவனும் எவனோ அவனை எல்லா உயிர்களும்
கைகூப்பித் தொழும்.

இது பொதுவாகச் சொல்லப்படும் உரை. ஆனால் ஆடு, கோழி முதலிய உயிர்களே மாமிச உணவாகின்றன. அவற்றிற்குக் கையே இல்லாதபோது அவை கைகூப்பித் தொழும் என்பது எப்படிப் பொருந்தும் என்ற கேள்வியை எழுப்புகிறார் திருக்குறளுக்கு ஆய்வுரை காணும் அறிஞர் திருச்சி ராமமூர்த்தி. 'கொல்லான் புலாலைக் கைகூப்பி மறுத்தானை எல்லா உயிரும் தொழும்.' என்பதாகக் கொண்டு புலாலை மறுப்பவர்கள் அது உயிர்க்கொலை என்பதால் கைகூப்பி மறுக்கிறார்கள் என்பதாகப் பொருள் கொள்வது பொருந்தும் என்கிறார் அவர்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
(குறள் எண் 307)

கோபம் கொள்வதென்பது, தன் ஆற்றலை உணர்த்தும் தன்மை என்று நினைப்பவன் அழிவது, நிலத்தில் ஓங்கி அறைந்தவன் கை தப்பாமல் பட்டு நொறுங்குவது போலாகும்.

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
(குறள் எண் 371)

ஒருவனுக்குப் பொருள் சேர்வதற்குக் காரணமான ஊழ்வினையால் முயற்சி தோன்றும். பொருள் அழிவதற்குக் காரணமான ஊழ்வினை தோன்றினால் அவனுக்குச் சோம்பல் தோன்றிவிடும்.

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
(குறள் எண் 593)

ஊக்கத்தை உறுதியாகக் கைக்கொண்டவர் செல்வத்தை இழந்தாலும் இழந்துவிட்டோம் என்று மனம் தளர்ந்து கலங்க மாட்டார்கள்.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
(குறள் எண் 774)


கையில் இருந்த வேலை யானை மீது எறிந்து மேலும் எறிய வேலைத் தேடிய வீரன், தன்னுடைய மார்பில் தைத்துநின்ற பகைவனின் வேலைப் பறித்து மேல்வரும் யானை மீது எறிந்து நகைப்பான்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
(குறள் எண் 788)

ஆடை நெகிழ்ந்தவனுடைய கை தன்னையும் அறியாமல் விரைந்துசென்று அந்த ஆடையை இறுக்கிப் பிடிப்பதுபோல, துன்பம் வரும்போது தாமாகவே விரைந்துசென்று அந்தத் துன்பத்தை நீக்குவதே நட்பாகும்.`கைத்தல நிறைகனி அப்பமொ டவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர் கற்பகம் எனவினை கடிதேகும்' என்பது, முருகப் பெருமானையே தம் பாடல்களில் துதித்துவந்த அருணகிரிநாதர், விநாயகப் பெருமானைப் பற்றி எழுதிய திருப்புகழ். விநாயகரின் கைத்தலத்தில் நிறைந்திருக்கும் கனி என்று அருணகிரியார் எந்தக் கனியைச் சொல்கிறார்?

தந்தைதாய் ஆன சிவனையும் பார்வதியையும் சுற்றிவந்து விநாயகர் போட்டியில் வென்ற ஞானக் கனி தானா அவர் கையில் இருப்பது? செக்கச் சிவந்த உள்ளங்கைக்குத் தாமரைப் பூவை உவமையாக்குகிறார்கள் கவிஞர்கள். கைக்குத் தாமரையை உவமையாக்கிய பல பாடல்கள் பழைய இலக்கியங்களில் உள்ளன. கரகமலம், கைத்தாமரை என்றெல்லாம் வரும் சொற்றொடர்கள் இடைக்கால இலக்கியத்தில் நிறைய உண்டு. ஆன்மிக நெறியில் கடவுளரின் வலக்கரத்திற்கு ஒரு மகத்துவம் இருக்கிறது. `யாமிருக்க பயமேன்?' என்று முருகப் பெருமான் அடியவர்களை வலக்கரத்தின் மூலம் ஆசீர்வாதம் செய்துதான் ரட்சிக்கிறான். எல்லாத் தெய்வங்களும் தேவதைகளும் வலக்கரத்தாலேயே ஆசி வழங்குவதைச் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் காணலாம். 'அபயஹஸ்தம்' என்றே கடவுளரின் வலக்கரம் அழைக்கப்படுகிறது.

கையின் மகத்துவம் அதிகம் என்பதால்தான் தெய்வங்கள் பொதுவாக நான்கு கைகள் உடையவர்களாய்ச் சித்தரிக்கப்படுகிறார்கள். கலைமகள், அலைமகள், மலைமகள் என்ற முப்பெருந்தேவியரும் நான்கு கரங்களை உடையவர்கள். ஆறுமுகம் கொண்ட அறுமுகனாய் முருகன் காட்சி தருகிறான். ஆறு முகம் கொண்டவனை வேறு சிந்தனை இன்றி `ஒருமுகமாய்ப் பிரார்த்தனை செய்தால் அவன் பன்னிரண்டு கரங்களாலும் வேண்டியதை வாரி வாரித் தருவான்.

' தெய்வங்களுக்கு முகங்களும் கரங்களும் எண்ணிக்கையில் மாறுபட்டாலும் எல்லாத் தெய்வங்களுக்கும் கால்கள் மட்டும் இரண்டுதான்! ஒரு திருடனை அவன் திருட்டுச் செயல் செய்யும்போதே பிடித்துவிட்டால் கையும் களவுமாகப் பிடித்ததாகச் சொல்கிறோம். உலகப் புகழ்பெற்ற ஒரு தெய்வீகச் சிறுவன் திருடனாக இருந்தான். பார்ப்பவர் மனங் களையெல்லாம் கொள்ளையடித்தான் அந்த நீல நிறத்து பாலகன். கூடவே ஆயர்பாடியில் உள்ள அத்தனை பேர் இல்லத்திலும் புகுந்து வெண்ணெயைக் களவாடினான்.

கண்ணனைக் கையில் வெண்ணெயோடு கையும் களவுமாய்ப் பிடித்துவிட்டாள் ஒரு கோபிகை. 'இப்போது என்ன சமாதானம் சொல்லப் போகிறாய்?' எனச் சிரித்துக்கொண்டே வினவினாள் அவள். உறியில் பானையில் வெள்ளையாக ஏதோ இருந்தது. அது என் காணாமல் போன கன்றுக்குட்டியாக இருக்குமோ என்று கையைவிட்டுத் தேடிப் பார்த்தேன். அவ்வளவுதான்!' என்று முகத்தை ஒன்றும் தெரியாத அப்பாவிபோல் வைத்துக் கொண்டு சமாதானம் சொன்னானாம் கண்ணன்! கண்ணனின் பால லீலை களில் ஒன்றாக இது சொல்லப்படுகிறது.பஸ்மாசுரன் தன் கையைத் தன் தலையில் தானே வைக்குமாறு செய்து மோகினி அவதாரமெடுத்த திருமால் அவனை அழித்த புராணம் அனைவரும் அறிந்தது....

துறவியர் வரலாறுகளிலும் கை பற்றிய வியக்க வைக்கும் அபூர்வச் செய்திகள் உண்டு. ஆதிசங்கரர் அமருகன் என்ற மன்னன் உடலில் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததாக அவர் சரித்திரம் சொல்கிறது. அப்போது ஆதிசங்கரரின் உடலை விரோதிகள் எரித்துவிட முயன்றார்கள். அதைத் தம் ஞான திருஷ்டியால் அறிந்த சங்கரர் தன் உடலில் தன் ஆன்மாவைச் செலுத்திப் பழைய உடலுக்கே திரும்பி விட்டார்.ஆனால் என்ன சங்கடம்! அவரது வலக் கரம் அதற்குள் எரிந்துவிட்டது. அடியவர்கள் அவருக்கு வலக்கரம் இல்லாதது கண்டு கண்ணீர் பெருக்கினார்கள். அவர்களின் துயர்துடைக்க வேண்டி 'லட்சுமி நரசிம்ம மமதேஹி கராவலம்பம்' லட்சுமி நரசிம்மா! எனக்குக் கைகொடுப்பாய்!' என்ற வரிகள் அமையப் பெற்ற லட்சுமி நரசிம்மத் தோத்திரத்தைப் பாடினார் சங்கரர். அவர் புதிய கையைப் பெற்றார்.

அவரது வாழ்க்கைச் சம்பவத்திற்கு ஏற்றபடி 'லட்சுமி நரசிம்மா கைகொடுப்பாய்' என்ற வரி பொருள் தருவதோடு, பக்தர்கள் பாராயணம் செய்யும்போது `எப்போதும் வாழ்வில் கைகொடுப்பாய்' என்றும் அதே வரி பொருள் தருவதுதான் அந்த ஸ்லோகத்தின் பெருமை....

சதாசிவப் பிரம்மேந்திரர் திக்கையே அம்பரமாக (ஆடையாக) அணிந்த நிர்வாணத் துறவி. ஒரு முகமதிய மன்னனின் அந்தப்புரத்தில் தியான நிலையில் அவர் நடந்துசென்ற போது சீற்றம் கொண்ட மன்னன் அவர் வலக்கரத்தை வாளால் வெட்டிவிட்டான்.அதைப் பொருட்படுத்தாமல் தியானத்தில் ஆழ்ந்தவாறே தொடர்ந்து நடந்தார் பிரம்மேந்திரர். அதுகண்ட மன்னன் அச்ச மடைந்தான். ஓடோடிச் சென்று அவர் பாதங்களில் விழுந்து அவரை உலுக்கி அவர் தியான நிலையைக் கலைத்துத் தன்னை மன்னிக்க வேண்டினான்.

சிரித்தவாறே தன் கையைத் தன் தோள்பட்டையில் வைத்துப் பொருத்திக் கொண்டார் பிரம்மேந்திரர். என்ன ஆச்சரியம்! கை மறுபடி ஒட்டிக்கொண்டது. ஒட்டிக்கொண்ட கரத்தாலேயே அவனை ஆசீர் வதித்துவிட்டு மேலும் தொடர்ந்து நடந்து சென்றாராம் பிரம்மேந்திரர். கை பற்றி அவர் வாழ்க்கை தரும் செய்தி இது.....உற்ற நண்பர் ஒருவர் இல்லாதபோது ஒரு கை ஒடிந்தாற் போல் உள்ளது என்றே அந்த நண்பரின் இழப்பு குறிப்பிடப்படுகிறது. 'அவன் என் நெருங்கிய நண்பன். அவன் எனது வலதுகரம் என்று சொல்லும் வழக்கமும் இருக்கிறது. ஒரு செயல் செய்துமுடிக்க இயலாதவனைக் கையாலாகாதவன் என்கிறோம். செயலைச் செய்து சாதனைகள் புரியக் கைதான் பிரதானம் என்பது இதிலிருந்து புலப்படுகிறது.

திருமணத்தில் கரம் பற்றுதல் ஒரு முக்கியமான சடங்கு. அதனால்தான் 'அவளை அவன் கைப்பிடித்தான்' என்கிறோம். 'கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான்' என்று கண்ணனைக் காதலித்த ஆண்டாள் அவ்விதம் கனவுகண்டதும் அதனால்தான்.எழுத்து, நடனம், தையல், நெசவு போன்றவற்றைக் 'கைவந்த கலை' என்று சொல்லலாம். ஏனென்றால் அந்தக் கலைகளில் கைக்கு முக்கியப் பங்கிருக்கிறது. ஆனால் கையின் பெருமை காரணமாக, எந்தக் கலையில் ஒருவர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவரை கைவந்த கலைஞர் என்கிறோம்! சிறந்த சொற்பொழிவாளரைப் பற்றிச் சொல்லும்போது கூட 'பேச்சு அவருக்குக் கைவந்த கலையாகி விட்டது' என்கிறோம்.

அது சரிதானா? உண்மையில் அது வாய்வந்த கலை அல்லவா!யாழோ குழலோ மத்தளமோ எந்த இசைக்கருவியானாலும் அதை இசைக்கக் கை தேவைப்படுகிறது. இசையைப் பாராட்டுபவர்களும் இசைக்கு உதவிய கைக்கு மரியாதை தருவதுபோல் கைதட்டிப் பாராட்டுகிறார்கள்! படைக்கருவிகள் எதுவானாலும் அதைப் பயன்படுத்தக் கையே துணைசெய்கிறது. வாள், வேல், வில் உள்ளிட்டபழைய படைக் கருவிகளானாலும் சரி, வெடிகுண்டு, துப்பாக்கி முதலிய புதிய படைக் கருவிகளானாலும் சரி கையால்தான் அதை இயக்க வேண்டியுள்ளது. படைக்கருவிகளைச் சரியாக இயக்கத் தெரிந்தவர்களுக்கு வெற்றி கைமேல் பலனாகக் கிடைத்துவிடுகிறது....

திரைப்படங் களிலும் கைக்குப் பஞ்சமில்லை. 'கைகொடுத்த தெய்வம்' என்றே ஒரு படம் வந்திருக்கிறது. கை பல திரைக்கவிஞர்களுக்குப் பாட்டெழுதக் கைகொடுத்திருக்கிறது.ஜீவனாம்சம் திரைப்படத்தில் வாலி எழுதி டி.எம்.எஸ்., பி.சுசீலா பாடியுள்ள 'அஹ்ஹஹ்ஹோ கை கை மலர்க்கை அம்மம்மோய் கைமேல் கை வை, இன்று ஒருகை தழுவும் மறுகை அந்த இருகை இணைந்தால் வாழ்க்கை, சலங்கை குலுங்க நடக்கும் சிலையழகை சொந்தம் கொண்டு அணைக்கும் மன்னன் மணிக்கை ' என வளரும் வாலியின் பாடல் ஏராளமான கைகள் வரும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

நாடோடி மன்னன் திரைப்படத்தில், டி.எம். செளந்தரராஜன், பி.சுசீலா குரலில் ஒலிக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 'காடு வெளைஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும்தானே மிச்சம்' என்ற புகழ்பெற்ற பாடலும் உழைப்பாளிகளின் கையைப் பற்றிப் பேசுகிறது. கையை மையமாகக் கொண்டு பல அரிய அறக் கருத்துகளைச் சொன்ன வள்ளுவருக்கு நாம் எப்படி மரியாதை செய்வது? வேறு எப்படி? அவரது படத்தையும் சிலையையும் பார்க்கும்போது கைகூப்பித் தொழுவதன் மூலம்தான்!

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்