SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறைவர் செம்பாகத்து இருந்தவளே…

2020-09-30@ 12:03:22

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம்-63

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்பு சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.
- பாடல் எண் - 43


ஒரு சமயம் அபிராமி பட்டரின் பங்காளிகள் தங்களுக்கான சொத்தை தனித்தனியே பிரித்து எடுத்துக் கொள்ள முடிவு செய்தனர். அது அவரவர் விரும்பிய படி அமையாமையால் வாய் வார்த்தை முற்றி கை கலப்பில் முடிந்தது.அபிராமி பட்டருக்கு இந்த செயல் மனக்கவலையை ஏற்படுத்தியது. அன்று அதே கவலையுடன் வீட்டில் அமர்ந்திருந்தார். அதே சமயம் பட்டரின் மனைவி தனக்கு தெரிந்தவர் இல்லத்தில் வெற்றிலை பாக்கு வைத்து புதுப்புடவை கொடுத்ததாகக் கூறி அந்தப் புடவையை பட்டரிடம் காண்பித்தாள்.

அந்த புடவையை பார்த்ததும் அது அபிராமி அம்மனுக்கு மிகவும் பொருத்தமாகவும் அவள் நிறத்திற்கு மிக அழகாகவும் எடுப்பாகவும் இருக்கும் என்று நினைத்து அதை தன் மனைவியிடம் அபிராமிக்கு கொடுக்கும் படி கேட்டார். ஆனால் அவர் மனைவியோ தனக்கு ஒருவர் வைத்து கொடுத்த புடவையை மற்றவருக்கு கொடுக்கக் கூடாது என்று கூறி பட்டரிடம் தர மறுத்து விட்டாள்.

இதை நினைத்துக்கொண்டே இரவில் தூக்கமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து குளித்து கோயிலுக்கு புறப்பட்டார். அன்று அம்மன் சந்நதிக்கு ஒரு அந்தணர் வந்தார். தான் காசிக்கு யாத்திரை செல்வதாகவும், தன் யாத்திரை தடையின்றி அமையும் பொருட்டு அம்மனுக்கு ஒரு புடவை நெய்து சாத்தும்படி அதற்கான தொகையை கொடுத்து விட்டு சென்றார். [இன்றைக்கு உள்ளது போல் அன்றைக்கு துணிக் கடைகள் அதிகம் இல்லை பட்டுப் புடவை வேண்டுமாயின் முன்னரே நெசவாளரிடம் ஆர்டர் கொடுத்து புடவையை நெய்ய வேண்டும். பட்டருக்கு ஒருபுறம் மகிழ்ச்சி தான். நினைத்தது போலவே அம்மனுக்கு புடவை கிடைத்து விட்டது.

ஒரு புறம் வருத்தம் இறைவி தனக்கு வேண்டியதை மட்டும் உடனே செய்து கொள்கிறாள். ஆனால் தன்னுடைய பிரச்னையை (சொத்து தகராறைப்) பற்றி அவளுக்கு எந்த எண்ணமும் இல்லை, அவள் நினைத்தால் எந்த சண்டையும் இல்லாமல் அமைதியான முறையில் முடித்து விடலாம். ஆனால் அதைப் பற்றி அவள் நினைக்க மறுக்கிறாள் என்று ஆலயத்தில் அதைப் பற்றி நினைத்துக் கொண்டே பூஜையை முடித்து வீடு திரும்பினார். அங்கு தன் வீட்டிற்கு வந்திருந்த உறவினரின் பெண் குழந்தை கையில் அரிவாளுடன் ஓடி வந்தாள். குழந்தையின் கையில் அரிவாளைக் கண்டதும் பதறிப் போனார் பட்டர்.

மேலே பட்டு ஏதாவது ஆகிவிடுமோ என்று அவளிடம் அதை வாங்க முயற்சி செய்தார். ஏன்டீ குழந்தே இவ்ளோ பெரிய அரிவாளை எதுக்குடீ எடுத்துண்டு வர்றே என்னன்ட குடுடீ என்றார். நான் அந்த புல்லை வெட்டப் போறேன். உங்கிட்ட தரமாட்டேன் என்றாள் சிறுமி, தன் மழலை மொழியில். புல்லைப் புடுங்க அரிவாள் எதுக்குடீ நானே அதை வெட்டித் தர்றேன் என்று கூறி அவளிடம் அந்த அரிவாளை வாங்கி பத்திரமாக பரண்மேல்  வைத்தார்.

சில நாள் கழித்து ஆயுத பூஜை வந்தது. ஆயுத பூஜையில்் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிபடுவது வழக்கம். அதற்காக பட்டரின் மனைவி அரிவாளைத் தேடினார். அப்போது  பட்டர் அது பரண் மேல் உள்ளது என்றார். பரண்மேல் இருந்த அரிவாளை அம்மையார் பூஜையில் எடுத்து வைத்தார். அதே வேலையில் சொத்து பாகப்பிரிவினை தொடர்பாக சமாதானம் செய்ய ஒருவர் வந்தார்.

அப்பொழுது பட்டர் பூஜை செய்து கொண்டிருந்தார், பூஜையை முழுவதுமாய் முடித்து விட்டு வந்தவரை வரவேற்றார். வந்தவர் பட்டர் விரும்பிய படியே ஒரு தீர்வைத் தந்தார். சொத்து பிரச்னையும் வெட்டு குத்து இல்லாமல் சுமுகமாக தீர்ந்தது. அபிராமி பட்டர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அப்பொழுது அந்த குழந்தை ஒரு அறையிலிருந்து வந்தாள். நா ரொம்ப கோபமாய் இருக்கேன் எனக்கு ஒரு டம்ளர் பால் குடு என்றாள்.

பட்டர் வேகமாக ஓடிச் சென்று பால் கொண்டு வந்து கொடுத்தார். (அவருக்கு தெரியும் உபாசனை நெறியில் பால் கொடுப்பது என்பது சமாதானத்தை குறிக்கும்) பெண்களை உமையமையாகவே கருதும் அவருக்கு சிறுமியின் கோபத்தை உமையம்மையின் கோபமாகவே கருதி கலங்கினார்.
யார் என்ன தவறு செய்தார்கள்? ஏன் இவ்வளவு கோபம் கொள்கின்றாய் ? ஏதேனும் பெரிய ஆபத்து நிகழப் போகிறதா ?
அப்படி ஆபத்து வருமாயின் நீதான் காத்து அருள்புரிய வேண்டுமம்மா. சிறு குழந்தைகள் தவறு செய்வது இயல்பு தானே!
‘‘மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே ’’- 45 நின்னை நினைக்கவைப்பதும், தன்னை விளங்க வைப்பதும், கருதவைப்பதும் நீதானே என்று மனதிற்குள் அபிராமியை நினைத்தார். பட்டரின் குழப்பத்தைப் பார்த்த அந்த சிறுமி மெல்ல சிரித்தபடியே சென்று விட்டாள்.

 இனி பாடலுக்குள் நுழைவோம். பொதுவாக உமையம்மையை ஐந்து வகையில் அடையாளம் வைத்து வழிபடுவர். 1. உருவம், 2. அருவம் (யந்திரம்), 3. அருஉருவம் (உமையம்மையின் உருவத்துடன் யந்திரம் வைத்து வழிபடுவது,4. மானுடர்களையே கடவுளாக வைத்து வழிபடுவது (உதாரணமாக சுவாசினி, கன்யா பூஜை), 5. ஆயுதங்களை உமையம்மையின் திருஉருவாகக் கொண்டு வழிபடுவது.அபிராமி பட்டர் தனது காலத்தில் நிகழ்ந்து வந்த இந்த ஆயுத வழிபாட்டையே (ஆயுதத்தை உமையம்மையாக கருதி வழிபடுவது) இப்பாடலின் மூலம் விளக்க முயல்கின்றார்.

அதனாலேயே பாசாங்குசை, பஞ்சபாணி என்று ஆயுதத்தை முதன்மைப்படுத்தி உமையம்மையை அடையாளப்படுத்துகின்றார். உமைம்மையின் வடிவம் மற்றும் வைத்திருக்கும் ஆயுதத்தைப் பொருத்து வழிபாட்டு பலன் மாறி அமையும். பொதுவாக ஆயுதங்களைப் பத்து என்ற எண்ணிக்கையில் வைத்து தனித் தனி ஆயுதமாகவும் வழிபடுவர். இது இன்றளவும் கும்பாபிஷேகம், கிராம தேவதை வழிபாடு போன்றவற்றில் நடைமுறைப்படுத்தப்படுவதைக் காணலாம். உதாரணமாக கும்பாபிஷேகத்திற்கு என்று அமைக்கப்பட்ட யாக சாலையில் தச ஆயுத வழிபாடு என்று ஆயுதங்களை கிழக்கு முதலான பத்து திசைகளிலும் காவல் செய்யும் பொருட்டும், ஏவல் செய்யும் பொருட்டும்  அத்திப் பலகையில் அந்தந்தந்த தேவதைக்குரிய ஆயுதங்களை மட்டும் படமாக வரைந்து வழிபடுவார்கள்.

திருவிழாக்காலங்களில் சைவ ஆலயங்களில் பலி தேவர் என்ற ஆயுத உருவையே கடவுளாக கருதி வழிபடுவர். அது போல் தமிழர்களின் தொல் வழிபாட்டு முறையில் ஆயுதங்களை மட்டுமே கடவுள்களாக கொண்டு வழிபடும் வழக்கத்தை சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் கூட காணலாம். மேலும் மிகவும் தொன்மையான சங்க காலத்திலும் ‘‘வாட் செலவிடுதல்’’ என்ற ஆயுத வழிபாட்டில் கொற்றவை என்ற துர்கை வழிபடப்பட்டதை அறிய முடிகிறது. திருக்கடையூரில் மார்க்கண்டேய முனி கீழக் கோயில் என்று அழைக்கப்படும் கோபுர வாயிலில் ஆயுத வடிவிலேயே வழிபடப்படுகின்றார். ஆயுத பூஜை என்ற சக்தி வழிபாடு ( ஆயுதம் வழிபாடு) நவராத்திரியில் கொண்டாடப்படுவது நாம் அறிந்த ஒன்றே. இவ்வாறு ஆயுதத்தை உமையம்மையாக கருதி வழிபடுவது பத்து விதமான பயன் பாட்டை தரும்.

1). போரில் வெற்றி,  2. காரிய தடை நீக்கம், 3. விரும்பிய பலன் அளிக்கும், 4. பாவத்தை அழிக்கும், 5. வியாதியை அழிக்கும், 6. உறவினர் உட்பூசம் நீக்கும், 7. இன்பத்தைப் பெருக்கும், 8. பாதுகாக்கும், 9. வழிநடத்தும், 10. முக்தி கொடுக்கும் உமையம்மை வழிபாட்டில் ஆயுதத்தை உருவமாக வைத்து எப்படி வழிபடுவது என்பதை இனிக் காண்போம்.

பாடல் வரியும் அது உணர்த்தும் ஆயுதமும். ‘‘பரி’’ என்ற சொல்லிற்கு துடுப்பு காழ்தல் என்ன பொருள்.‘‘காழ்தல்’’என்றால் தோண்டுதல் என்ற பொருளில் ஆகு பெயராகி ஆயுதத்தை குறித்தது. ‘‘காழி’’ சீர்காழியில் இறைவர் உலக உயிர்களை காக்க தோணியாகவும், உமையம்மை துடுப்பாகவும் அழிவிலிருந்து மூழ்காமல் காத்தனர். தோணியப்பர், தோணிபுரம் என்ற சீர்காழியின் பெயரில் இருந்து இதை நன்கு அறியலாம். உமையம்மையோ தோணியைச் செலுத்தும் துடுப்பாக இருக்கின்றாள்.

துடுப்பு வடிவில் உமையம்மையை வழிபாடு செய்வதனால் வறுமை, கடன், துன்பம், வழக்கு இவைகளில் இருந்து விடுவிப்பாள், கடத்துவிப்பாள். இதையே பால் அழும் பிள்ளைக்கு நல்கின- 9 என்பதனால் அறியலாம்.கடத்துவிப்பவள் என்ற பொருளையே வேதம் ‘‘சுதர சிதர சேநம;’’என்று குறிப்பிடுவதனாலும் உணரலாம்.‘‘புர’’ என்ற சொல்லிற்கு உடல் என்பது பொருள். ததீசி முனிவர் என்பவர் மிகப் பெரிய தவசியாவார். இவர் இந்திரன் மீது மிக அன்புடையவர். ஒரு சமயம் இந்திரனின் ஆயுதத்தால் அழிவில்லை என்று வரம் வாங்கிய விருத்திரா சூரனை அழிக்க இயலாமல் பெரிதும் வருந்தினார்.

அச்சமயம் ததீசியானவர் தனது முதுகுத் தண்டையே ஆயுதமாக வழங்கி அவனை அழிக்குமாறு தன் உயிர் நீத்து உடல் தந்தார்.அந்த ஆயுதமே இந்திரனின் கையில் விளங்கும் ‘‘வஜ்ராயுதம்’’என்பதாகும். உபாசனை நெறியில் இதை தேகாயுதம் என்று கூறுவார்கள். அதையே உடலை குறிப்பிடுகின்றார். ‘‘புர’’ என்ற சொல்லால் இப்பாடலில் குறிப்பிடுகின்றார். இந்த வஜ்ராயுத வடிவத்தில் உமையம்மையை வழிபட்டால் காரிய வெற்றி மற்றும் போரிலே வெற்றியடையலாம்.

‘‘சித்தியும் சித்தி தரும் தெய்வமும்’’ - 29
என்பதனால் உணரலாம்.
‘‘சீர்’’- என்ற சொல்லிற்கு தொடர்ந்த சப்தம் (இறைச்சல்) என்று பொருள்.சங்கை காதில் வைத்து பார்த்தால் கடல் ஓரத்து இறைச்சல் ஒலி கேட்கும். அதனால் சங்கை சீர் என்ற சொல்லால் குறிப்பிட்டார்.சங்கானது பொங்கு சங்கு, மங்கு சங்கு, மரணச் சங்கு என மூன்று வகையில் பயன் படுத்தப்படுகிறது.

பிறப்பைக் குறிப்பதற்கு பொங்கு சங்கும். திருமணத்தைக் குறிப்பதற்கு மங்கள சங்கும் (மங்கு சங்கு என்று மறுவி விட்டது) மனிதன் இறந்த போது ஊதப்படும் சங்கு மரணச் சங்கு என்று சடங்குகளில் பயன்படுத்தப்படுகிறது.  சங்கில் பால் ஊட்டுவதும், சங்கு ஒலியால் அறிவிப்பது, மங்கள அழைப்பு விடுத்தல், யுத்தத் துவக்கத்தை அறிவித்தல் இவையெல்லாம் பண்டைய வழக்கங்களாகும்.

ஆகமத்தில் குறிப்பிட்டுள்ள சங்கு திரவியம் என்ற அறுபத்து நான்கு வகையான பொருட்களைப் பொடித்து சங்கில் தீர்த்தம் விட்டுக் கரைத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்வர். இது திருக்கடையூரில் மிக சிறப்பு. இப்படி வழிபாடு செய்வதனால் வியாதி நீக்கமும் ஆரோக்கியமும் வரும் இதையே அபிராமி பட்டர். வருண சங்கலை -- 21 என்று குறிப்பிட்டுள்ளார். அடி  என்ற சொல்லிற்கு பன்னிரெண்டு அங்குலத்தை குறிக்கும் ஒரு நீட்டல் அளவு என்பது பொருள். இதை மாணதண்டம் என்று சிற்ப சாத்திரம் குறிப்பிடுகின்றது.இது மயன் என்ற சிற்பியினிடத்திலும் ஆயுதமாயிருக்கும். சிற்பிகள் கோயில் நன்கு அமைய இந்த மானதண்டத்தை வைத்து பூசையிடுவார்கள். சதாசிவமானவர் மாணதண்டத்தை கையில் கொண்டவராயிருப்பது என்பது அனைத்து உயிர்களைப் பற்றிய முழு அறிவை பெற்றவர் என்பதை அறிவுறுத்தும் தத்துவமாக விளங்குகின்றது.

திருக்கடையூரைப் பொறுத்தவரை எமனை காலால் உதைத்ததனால் எமனது ஆயுதமான தண்டம் பறிக்கப்பட்டது. பிறகு அவன் தன் செய்த தவற்றிற்காக வருந்தி தண்டீஸ்வரரை வணங்கி (சென்னையில் வேளச்சேரி) தண்டத்தைப் பெற்று, இழந்த பதவியை மீண்டும் பெற்றார். இந்த தண்டத்தை வைத்து உமையம்மையை வழிபட்டால் இழந்த பதவி, சிறந்த ஆளுமை திறனை பெறலாம் என்கிறது சக்தி வழிபாட்டு நூல். ‘‘குரம்பை அடுத்து ஆவிவெங் கூற்றுக்கு இட்ட வரம்பை 49 என்பதனால் தண்டத்தை கையிலே வைத்திருக்க கூடிய கூற்றுவனை குறிப்பிடுகின்றார். பாசம்  பாசமானது நான்கு வகையாக பிரித்து வணங்கப்படுகிறது.

கால பாசம் - காலனை வென்றதனால் திருக்கடவூரில் கால சம்ஹார மூர்த்தி அவன் ஆயுதமான பாசத்தை கையில் ஏந்தியுள்ளார் (எமன் கையில் வைத்திருப்பது)நாக பாசம் - தீர்த்தங்களுக்கெல்லாம் தலைவனாகிய வருணனின் கையில் இருப்பது நாக பாசம்.

ராக பாசம் என்பது ஆசையை தூண்டுவது இதை ஸஹஸ்ரநாமம் ராக ஸ்வரூப பாஸாட்யாயை என்கிறது. இறைவியானவள் உயிர்களோடு தனு என்கிற  உடலையும், கரணம் என்கிற உள்ளத்தையும், புவனம் என்ற புர உலகையும், இணைத்து கட்டுகின்ற கயிறே பாசம் எனப்படுகிறது.தனு, கரண,புவனம் என்ற மூன்றும் கயிற்றால் (பாசத்தால்) கட்டப்பட்டால் தான் உயிர்களால் போகத்தை அனுபவிக்க இயலும்.

பொதுவாக ஐம்புலன்களுக்கும் இன்பம் தரக்கூடிய செயலே போகம் எனப்படும். அதை பெறும் பொருட்டு உமையம்மையை  பாச வடிவிலே அமைத்து வழிபாடு செய்வது சாக்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதை ஆயுத பூஜை என்று குறிப்பிடுவர் ‘‘பாசாங்குசமும் கரும்பு வில்லும்’’ (நூற் பயன்) என்பதனால் அறியலாம்.

பசு பாசம் :  சிவபெருமான் வைத்திருப்பது, உயிர்களின் நலன் பொருட்டு கட்டுவது. கால சம்ஹார மூர்த்தியானவர் இறப்பை தவிர்த்த தனால் பிறப்பையும் இதுவும் ஒன்று. கால சம்ஹார சந்நதியுள்ளும் அதற்கு நேர் வெளியிலும் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பாப ஹரேஸ்வரர், புண்ணியவர்தனர் என்று பெயர். இந்த சிவலிங்க மூர்த்தி இரண்டுமே உயிர்களுக்கு இரு மலத்தை கட்டுவதால் பிறப்பையும், அவிழ்ப்பதால் இறப்பையும் செய்கிறார்.

அங்குசம் துலாக் கோலின் மேற் பகுதியில் கொக்கியோடு கூடிய கருவி இஃதாகும். இது துறட்டியென்றும் சொல்லப்படும். யானையை அடக்குவதற்கு யானைப்பாகன் உபயோகிக்கும் ஆயுதம். விநாயகர் கையிலிருக்கும் ஆயுதங்களில் இதுவும் ஒன்று.இது வயப்படாத பொருளை வளைத்து வயப்படுத்தும் ஆயுதம், இதனைக் கடவுள் கைகளில் தாங்கி உயிர்களின் சித்தமலமாகிய ஆணவத்தை அடக்கி இறுதியில் உயிர்களை தன்வயப்படுத்துதலை உணர்த்துகிறது.

இந்த வடிவத்தில் உமையம்மையை தியானம் செய்தால் எதிரியையும், எதிரியால் ஏற்படும் துன்பத்தை நீக்கிக் கொள்ள முடியும் என்கிறது சாக்த வழிபாடு.பஞ்ச பாணம்  -பஞ்சபாணம் என்பது அபிராமி அந்தாதியை பொறுத்தவரை மன்மதனின் வில்லாகிற கரும்பு, அவனுடைய அம்பாகிற மலர்கனை இவைகளையே குறிக்கும்.தாமரை (அரவிந்தம்) அசோகமலர் (அசோகம்) மாம்பூ (சூதம்) அல்லி (நீ லோத்பலம்) மல்லிகை (நவமல்லிகா) என்ற ஐந்து மலர்களையும் கொத்தாக உமையம்மையாளவள் கையில் தாங்கி காட்சியளிக்கிறார். மனவடிவில் இருக்கும் கரும்புவில் கண்டு, கேட்டு, நுகர்ந்து ருசித்து, தொட்டு என்ற ஐந்து செயல்களின் வழியாக இன்பத்தை அளிப்பவள் உமையம்மை.

‘‘மநோ ரூபேக்ஷூ கோதண்டா பஞ்ச தன்மாத்ர ஸாயகா’’ என்பதனால் அறியலாம். இந்த மலர் கொத்துக்களை இணைத்து அதில் உமையம்மையை வழிபாடு செய்தால் மகிழ்ச்சியை அருள்வாள் என்கிறது சாக்த தந்திரம்.இன்சொல் திரிபுர சுந்தரி - குலாச்சாரம் என்ற ரகசிய சக்தி வழிபாட்டு முறையில் உடுக்கை என்கின்ற ஆயுதத்தை குறிக்கும். அபிராமி பட்டர் இதை மறைமுகமாக குறிப்பிடுகின்றார். வழிபாடு முறையையோ, செயலையோ, காலத்தையோ யாரும் அறியா வண்ணம் செய்யும் ரகசிய வழிபாடாகும்.

உமையம்மையை கலாச்சார முறையில் அதிலிருந்து வௌிப்படும் ஒலியைக் கொண்டு உமையம்மையிடத்து கடந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் பற்றி விடை அறிந்து கொள்வார்கள். அதற்கு பயன்படும் கருவியே இந்த உடுக்கை. இவர்கள் உடுக்கையிலேயே உமையம்மையை வழிபடுவார்கள். அப்படி உடுக்கையின் வழியாக பேசுகிற உமையம்மையை தான் ‘‘இன் சொல் திரிபுர சுந்தரி’’ 43 என்கிறார் பட்டர்.

சிந்துர மேனியள்

தமிழர்கள் பயன்படுத்தும் குங்குமத்தைப் போன்று வடமாநிலத்தில் உள்ளவர்கள் நெற்றியில் அணிந்து கொள்ளும் சிவந்த நிறமுடையமையை சிந்தூர் என்பர். அந்த நிறத்தில் உடலைக் கொண்டவள் உமையம்மை என்பது ஒரு பொருள்.   பண்டைய காலத்தில் மந்திர ஜால வித்தை செய்பவர்கள் உமையம்மையை வணங்கி பிறர் கண்ணுக்கு தெரியாமல் இருத்தல், ஒரு பொருளை வேறு ஒரு பொருளாக தோன்றச் செய்வது போன்ற வித்தைகளை செய்வதற்கு பயன்படுத்துவர்.

தாந்தீரத்தில் மந்திரத்தை சில பொருள்களில்  உச்சரித்து அதை உபாசகன் அணிந்து கொள்வது வழக்கம். இம்முறையில் மந்திரிக்கப்பட்ட சிந்தூரத்தை உபாசகன் தான் தரித்துக் கொள்வதன் மூலம் தன்னை சுற்றி உள்ளோரை தன் வயப்படுத்தி, அவர்களின் உண்மை இயல்பை மறைத்து தன் காரியத்தை சாதித்துக் கொள்வர். இந்த மந்திரிக்கப்பட்ட சிந்தூரத்தை தரிக்கும் வரை சுற்றியுள்ளோர்கள் தன் வசப்படுவார்கள். சிந்தூரம் கலைந்து போனால் அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள். இதற்கு அதிதேவதையைத் தான் சிந்துரமேனியள் என்பர்.

( தொடரும்)

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

  • vietnam22

    வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்