எந்த கோயில்? என்ன பிரசாதம்?
2020-09-30@ 11:30:52

திருவாரூர் - தியாகராஜர் கோயில் - தூதுவளை கீரை - பாகற்காய் கூட்டு
இறைவர் வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார் (மூலட்டானம்-பூங்கோவில்) தியாகராஜர் என்றும் இறைவி - அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்என்றும் தல மரமாக பாதிரிமரத்தைக் கொண்டும் திருவருட்பாலிக்கும் தலம் திருவாரூர். இங்கு தல தீர்த்தங்களாக கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம் போன்றவை உள்ளன.
திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.
கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி. எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம். இத்தலம் ‘‘பிறக்க முத்தி திருவாரூர்” என்று புகழப்படும் சிறப்பினது.. இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர் தேர் அழகு. ஏழு கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். கீழ்க்கோபுரம் 118 அடி உயரம் கொண்டது; இத்தலம் வீதிப் பிராகாரங்களையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களைக் கொண்டுள்ளது.
கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடையத் தலம். இத்தலம் மொத்தம் நான்கு தீர்த்தங்களைக் கொண்டது; 1. கமலாலயம் - இது 5-வேலிப் பரப்புடையது; தேவதீர்த்தம் எனப்படுகிறது. 2. சங்கு தீர்த்தம் - இது ஆயிரங்கால் மண்டபத்தின் அருகிலுள்ளது; அமுததீர்த்தம் என்றும் பெயர். 3. கயா தீர்த்தம் - இது ஊருக்கு அப்பால் கேக்கரை என்று வழங்கும் இடத்தில் உள்ளது. 4. வாணி தீர்த்தம் - (சரஸ்வதி தீர்த்தம்) மேற்குப் பெரிய பிராகாரத்தில் சித்திரசபை மண்டபத்திற்கு எதிரில் உள்ளது.மேற்கண்ட தீர்த்தங்கள் தவிர ‘‘செங்கழுநீர்ஓடை” எனப்படும் நீரோடை கோயிலுக்கு அப்பால் 1-கி.மீ. தொலைவில் உள்ளது.
இத்தலத்திறைவர் வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி என்று இன்னும் பலப்பல திருநாமங்களில் சிறப்பிக்கப்படுகிறார். 1. ஆடுதண்டு - மணித்தண்டு, 2. கொடி - தியாகக்கொடி, 3. ஆசனம் - இரத்தின சிம்மாசனம், 4. மாலை - செங்கழுநீர்மாலை, 5. வாள் - வீரகண்டயம், 6. நடனம் - அஜபா நடனம், 7. யானை - ஐராவணம், 8. மலை - அரதன சிருங்கம், 9. முரசு - பஞ்சமுக வாத்தியம், 10. நாதஸ்வரம் - பாரி, 11. மத்தளம் - சுத்தமத்தளம், 12. குதிரை - வேதம், 13. நாடு - சோழநாடு, 14. ஊர் - திருவாரூர், 15. ஆறு - காவிரி, 16. பண் - பதினெண்வகைப்பண் என்பன இவையாவும் இத்தலத்துப் பெருமானுக்குரிய அங்கப்பொருட்களாகும். தியாகேசப் பெருமான் ராஜாதி ராஜர் ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டு கணங்கள் சூழ வருமாம்.
‘‘இம்மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்” என்று முதுகுன்றத்தீசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் தலம்.சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம். பரவை நாச்சியார் வாழ்ந்த பதி. சுந்தரர் இழந்த இரண்டாவது கண்ணை பெற்ற பதி. சுந்தரர், ‘‘திருத்தொண்டத் தொகை”யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கேயுரியது. இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.
கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் ‘‘பிரமநந்தி” எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது. திருவாரூர் தியாகராசருக்கு மிகவும் பிடித்த திருவமுது(நைவேத்தியம்) எது தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
சோமாசி மாற நாயனார் வேதியர். சிவனடியார்களுக்கு அமுதூட்டும் அன்பர். இவர் மிகப் பெரிய வேள்வி ஒன்றை செய்ய எண்ணம் கொண்டார். அந்த வேள்வியில் ஈசனார் நேரடியாக அக்னி முகமாய் அல்லாமல் அவிர்பாகம் கொண்டருள வேண்டும் என்று ஆவலுற்று தியாகராசரை தோழராகப் பெற்ற சுந்தரரிடம் உதவி கேட்டு திருவாரூர் பரவையார் மாளிகைக்கு வந்தார். சுந்தரரை கண்டார். தொழுதார். நட்பு மலர்ந்தது.
சுந்தரருக்கு மிகவும் பிடித்த தூதுவளை கீரை நித்தம் அடியார் எடுத்து வருவதும்,பரவையார் இல்லத்தில் ஆய்ந்து கொண்டே பேசிக் கொண்டிருப்பதும் வழக்கம். தினம் சோமாசி மாறர் ஆய்ந்த கீரையை மட்டும் தியாகராசருக்கு நிவேதனம் செய்வதையும் கணவர் ஆய்ந்த கீரையை ஒதுக்கி விடுவதையும் கவனித்து கவலையுற்று அடியார் பரவையாரிடம் காரணம் யாதென்று கேட்டார்.
அதற்கு அடக்கமே உருவான பரவையார் ஓ அதுவா அவர்(சுந்தரர்) ஆயும் போதே கீரை சுவாமிக்கு அர்ப்பணம் ஆகிவிடும். எனவே மீண்டும் நிவேதனம் செய்யக் கூடாது என்றார்.அதாவது சோமாசி மாறர் கீரை ஆயும் போது முட்கள் குத்தும் என்பதால் அதன் மீது கவனம் கொள்வார். ஆனால், சுந்தரர் பெருமானோ கீரை ஆயும் போதே சிவார்ப்பணம் என்று கூறிக் கொண்டே ஆய்வாராம். அதனால் அப்போதே இறைவனுக்கு நைவேத்தியம் ஆகி விடும்.
சுந்தரர் பெருமான் கையாண்ட தூதுவளை கீரையும், பாகற்காய் கூட்டும் தான் தியாகராசருக்கு மிகவும் பிடித்த திருவமுதாய் இன்றும் உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிலிருந்து பஸ் வசதி உள்ளது.
ந.பரணிகுமார்
மேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!