SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் மற்றும் கருப்பு இப்படியாக திலகம் இடுகிறார்களே, இது மாதிரி நெற்றியில் இட்டுக் கொள்ளலாமா?

2020-09-29@ 17:55:10

தெளிவு பெறுஓம்

?நெற்றியில் குங்குமம், விபூதி, சந்தனம் மற்றும் கருப்பு இப்படியாக திலகம் இடுகிறார்களே, இது மாதிரி நெற்றியில் இட்டுக் கொள்ளலாமா?
 - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.


இட்டுக்கொள்ளலாம். முதலில் நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வதற்கான காரணத்தை அறிந்துகொள்வோம். நமது உடலில் வாமநாடி, பார்சுவ நாடி என்று உண்டு. வடகலை, பிங்கலை என்று பிரிப்பார்கள். இவை இரண்டும் இணைகின்ற பகுதி சுஷூம்னா நாடி, அதுவே நம் நெற்றிப் பகுதி. அங்கே நெற்றிக்கண் என்பதுவும் உண்டு. அந்த நெற்றிக்கண்ணைத் திறக்கின்ற சக்தி பரமேஸ்வரனுக்கு மாத்திரமே உண்டு. வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், மூன்றாவது கண்ணான நெற்றிக்கண் என்பது அக்னி என்கின்ற நெருப்பு. நம் உடம்பில் உள்ள அக்னியின் உச்சபட்ச சக்தி நெற்றிப்பொட்டில் வந்து குவியும் என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். ஆக நெருப்பு அல்லது உஷ்ணத்தினால் உண்டாகும் கோபத்தினைத் தணிப்பதற்காக நெற்றியில் நிமிர்ந்த நிலையில் இருக்கும் கண் போன்ற வடிவினில் திலகத்தினை இட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

நெற்றியில் திலகம் அணிந்திருப்பவர்களைக் காணும்போது அவர்களிடம் ஒரு விதமான மென்மையை உணர இயலும். அதே மனிதர்கள் நெற்றியில் திலகம் இல்லாமல் காட்சிதரும்போது நம் மனதில் ஒருவித தயக்கம் உருவாவது இயற்கை. உதாரணத்திற்கு ஒரு கடைக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டிருக்கும் முதலாளி நம்மை எளிதில் ஈர்க்கிறார். நெற்றியில் ஒன்றும் இல்லாதவரைக் காணும்போது இவர் மிகுந்த கோபக்காரரோ என்ற எண்ணம் நமக்கு உண்டாகிறது அல்லவா.. இந்தத் திலகம் என்பது ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு ஒரு விதமாகவும் நிர்ணயம் செய்தார்கள்.

ஆண்களைப் பொறுத்த வரை அவர்கள் எந்த சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திலகம் நிர்ணயம் செய்தது. சிலர், வெண்மை அல்லது வெளிர்நிற சந்தனத்தினால் ஆன திலகத்தினையும், சிலர்,  சிகப்பு நிறத்தினால் ஆன திலகத்தினையும் இட்டுக் கொண்டார்கள். அந்தக் காலத்தில் போருக்குச் செல்வதற்கு முன்னால் அவர்களது மனைவிமார்கள் தங்கள் ரத்தத்தினாலோ அல்லது ஆரத்தி கலந்து செந்நிறத்தினால் ஆன திலகத்தினையோ ஆண்களின் நெற்றியில் இட்டு போருக்கு அனுப்பினார்கள்.

அக்காலத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டோர்  மஞ்சள் நிறத்தினால் ஆன திலகத்தினையும் நெற்றியில் வைத்துக் கொண்டார்கள்.  பெண்களைப் பொறுத்தவரை எல்லோருமே மஞ்சளும், படிகாரம் எனப்படும் சுண்ணாம்பும் கலந்து அதில் கிடைக்கும் செந்நிறத்தினால் ஆன குங்குமத்தை திலகமாக இட்டுக்கொண்டார்கள். முன்பெல்லாம் மாதவிலக்கு, குழந்தைப் பிறப்பினால் உண்டாகும் தீட்டுக் காலங்களில் மட்டும் கருப்பு நிற திலகத்தினை இட்டுக் கொண்டார்கள்.

எளிதில் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் கருப்பு நிற திலகத்தினை நெற்றியில் கொண்டிருக்கும் ஆண்கள் அல்லது பெண்கள் ஆகியோரிடமிருந்து மற்றவர்கள் விலகி இருந்தார்கள். இங்கு தீண்டாமை என்ற வார்த்தைக்கு இடமில்லை.  விலகி இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்ததன் பொருள் என்னவென்றால் பரஸ்பரம் ஒருவருக்கொருவரை எந்த விதமான நோய்க்கிருமிகளும் தாக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தானே அன்றி தீண்டாமை என்ற பொருளில் அல்ல.

தற்போது நாம் கடைபிடித்து வரும் சோஷியல் டிஸ்டன்சிங் என்ற வார்த்தையைத்தான் அப்போதே சொல்லி வைத்தார்கள். குவாரன்டைன் என்ற தனிமைப்படுத்துதலை செயல்படுத்தினார்கள். ஆக மொத்தத்தில் நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வது என்பது இயற்கையாக நமது உடலில் உண்டாகும் உஷ்ணத்தினால் வெளிப்படும் கோபத்தினைத் தணிப்பதற்காகவே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

?ஜோதிடர்கள் சொல்கின்ற நவகிரகங்கள் பற்றிய கருத்து உண்மை இல்லை என்றும், விஞ்ஞான ரீதியாக பார்த்தால் சூரியன் ஒரு கிரகமே இல்லை, அது ஒரே இடத்தில் நிற்கின்ற விண்மீன் என்றும் ஒரு சில அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதேபோல் சந்திரன் என்பது பூமியின் துணைக்கோள், ராகு - கேது என்று கிரகங்களே கிடையாது, மொத்தத்தில் ஜோதிடத்தை நம்ப வேண்டியதில்லை என்றும் வாதிடுகிறார்கள். உங்கள் கருத்து..?
 - வெங்கட்ராமன், சென்னை.


ஜோதிடம் என்பது ஒரு பிரிவு. அறிவியல் என்பது மற்றொரு பிரிவு. இரு பிரிவுகளும் தங்களுக்கு உரிய அடிப்படை விதிகளின்படி செயல்படுகின்றன. ஜோதிடம் என்ற அறிவியலை பழமைவாதம் என்று புறம் தள்ளிவிட முடியாது. நாம் வாழுகின்ற இந்த பூமியானது தட்டை வடிவம் உடையது என்று 16ம் நூற்றாண்டின் இறுதி வரை ஐரோப்பிய நாடுகளால் நம்பப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே உலகம் உருண்டை என்று அறுதியிட்டுச் சொன்னது நமது வேதாங்க ஜோதிடம்தான். இதை யாராலும் மறுக்க முடியாது.

நவீன உபகரணங்களின் துணையுடன் செவ்வாயின் நிறம் சிகப்பு, வியாழன் என்ற கோள் மஞ்சள் வடிவில் காட்சியளிக்கிறது என்று விஞ்ஞானிகள் சொல்வதை நமது மகரிஷிகளும், வானவியல் சாஸ்திரம் அறிந்தவர்களும் வெறும் கண்களால் பார்த்தே ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிவிட்டார்கள். வராகமிகிரர், ஆரியபட்டர், காளிதாசர் போன்றோர் பல்வேறு வானவியல் சாஸ்திர நூல்களைப் படைத்துவிட்டுச் சென்றிருக்கிர்கள். பண்டைய காலத்து ஜோதிட நூல்களில் ராகு மற்றும் கேது ஆகிய இருவரைப் பற்றிய குறிப்புகள் எங்கும் காணப்படவில்லை.

ஜோதிட வரலாற்றில் ராகு மற்றும் கேது ஆகிய இருவரும் பிற்காலத்தில்தான் இணைந்தனர். அது வரை உண்மைக் கோள்கள் என நாம் வார நாட்களாகக் கொண்டிருக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய எழுவர் மட்டுமே இடம் பிடித்தனர். கிரஹணங்களைப் பற்றிய ஆராய்ச்சியினைத் தொடர்ந்து ராகு மற்றும் கேது ஆகிய இரு புள்ளிகள் இருப்பதைக் கண்டறிந்தனர். ஆக அதுவரை எழுதப்பட்டு வந்த ஜாதகங்களில் ஏழு கிரஹங்கள் மட்டுமே இடம் பிடித்தன.

அதன் பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக ராகு மற்றும் கேது ஆகிய இருவரும் பின்னாட்களில் வந்து சேர்ந்தனர். அதே போன்று ஒவ்வொரு கிரஹத்திற்கும் இயற்கையாகவே துணை கோள்கள் உண்டு என்பதையும் கண்டறிந்தார்கள். நேச்சுரல் சாட்டிலைட்ஸ் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். சூரியனுக்கு காலன், சந்திரனுக்கு பரிவேடன், செவ்வாய்க்கு மிருத்யு, புதனுக்கு அர்த்தப் பிரகணனன், குருவுக்கு எமகண்டன், சுக்கிரனுக்கு இந்திர தனுசு, சனிக்கு குளிகன், ராகுவுக்கு தூமன், கேதுவுக்கு தூமகேது ஆகிய உபகிரகங்கள் இருப்பதாக ஒரு கருத்து உண்டு. இந்த உபகிரகங்கள் கூட ஒரு மனிதனின் ஜாதகத்தில் தங்கள் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்று ஒரு சில ஜோதிட நூல்கள் உரைக்கின்றன.

இது குறித்த ஆராய்ச்சியும் ஒரு புறம் நடந்துகொண்டிருக்கிறது. ராசிச் சக்கரம், நவாம்சம் போன்று உபகிரக ஸ்புடம் என்று தனியாக ஒரு கட்டத்தினைக் குறிப்பிடுபவர்களும் உண்டு. நவகிரஹங்கள் மட்டுமே நம்மை ஆளுகின்றன என்று எண்ணாமல் இதுபோன்ற துணைக் கோள்களின் தாக்கமும் நமது வாழ்வினில் இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் குளிகன், மாந்தி போன்ற கோள்கள் ஜாதகக் கட்டத்தில் குறிக்கப்படுகின்றன. இது மட்டுமின்றி தற்கால அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆன யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரஹங்களையும் ஜாதகத்தில் குறித்து அதற்குரிய பலன்களையும் தற்போது கணிக்கத் துவங்கிவிட்டனர்.

நவீன கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றவாறு ஜோதிட அறிவியலும் வளர்ந்து வருகிறது. இதனை ஜோதிடத்தின் வளர்ச்சியாகத்தான் காணவேண்டுமே தவிர, அதில் குறை காண இயலாது.சூரியன் ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்மீன் என்பது நமது மகரிஷிகளுக்கும் தெரியும். அதேபோல சந்திரன் என்பது நாம் வாழுகின்ற இந்த பூமியின் துணைக்கோள் என்பதையும் அறிந்தே இருந்தார்கள். ஆனால், அவற்றை கிரகங்கள் என்ற பெயரில் அழைத்தார்கள். தாங்கள் வாழுகின்ற இந்தப் பூமியின் மீது உண்மைக்கோள்கள் ஆன ஏழு கிரகங்களின் தாக்கம் செயல்படுகிறது என்ற உண்மையையும் கண்டறிந்தார்கள். அதனால்தான் வார நாட்களுக்கு ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்று கிரகங்களின் பெயர்களையே சூட்டினார்கள்.

ஆங்கிலத்தில் கூட என்றுதானே அமைத்திருக்கிறார்கள். இதனை விஞ்ஞானிகளால் மறுக்க முடியுமா? சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்றில் காஸ்மிக் கதிர்கள் பற்றிய வியப்பூட்டும் தகவல் ஒன்று வெளியானது. பூமியின் தென்துருவமான அண்டார்டிகாவில் இந்த காஸ்மிக் கதிர்களைப் பற்றி ஆய்வு செய்து வருகின்ற விஞ்ஞானிகள் குழு ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். பூமிக்குத் தென்திசையிலுள்ள வானத்தில், கப்பலின் பாய்மரம் போன்ற வடிவில் அமைந்துள்ள வெலா என்ற நட்சத்திரக் கூட்டத்தின் அருகில் இருந்து பிரபஞ்சக் கதிர்கள் என்று அழைக்கப்படுகின்ற இந்த காஸ்மிக் கதிர்கள் வருகின்றன.

இவை, பூமியின் வானிலை மாற்றத்தில் மேகமூட்டத்தை திசை திருப்புவது, காற்றில் மின்னூட்டத்தை ஏற்படுத்தும் இடி, மின்னல்களை உருவாக்குவது போன்ற மிக முக்கியமான செயல்களில் ஈடுபடுகின்றன என்று கூறும் விஞ்ஞானிகள் மேலும் தொடர்கிறார்கள்.... இவற்றில் உள்ள நியூட்ரினோ கதிர்கள் நிறை அதாவது எடையும், மின்னூட்டமும் இல்லாதவை என்பதால் பூமியில் உள்ள பாறைகள், உலோகங்கள், மனிதர்கள் என அனைத்தின் மீதும் ஊடுருவிச் செல்கின்றன, இதனால் மனிதனின் மீது உண்டாகும் தாக்கம் என்ன என்பதைப் பற்றி ஆராய்ந்து வருவதாகவும் கூறுகிறார்கள்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் பல லட்சக்கணக்கான மைல்கள் தூரத்தில் இருந்து வெளிப்படும் பிரபஞ்சக் கதிர்கள் மனிதனின் மீதும், பூமியின் தட்ப வெப்பசூழ்நிலையின் மீதும் தனது தாக்கத்தினை வெளிப்படுத்த முடியும் என்றால் அதைவிட நமக்கு அருகில் இருக்கும் நவகிரகங்களில் இருந்து வெளிப்படும் கதிர்களின் தாக்கம் மனிதனை ஏன் பாதிக்காது?  பூமியிலிருந்து மிகத்தொலைவில் இருக்கும் கோள்கள் எவ்வாறு மனிதனை இயக்க முடியும், குருவும், சனியும் எவ்வாறு நன்மை தீமைகளை செய்ய முடியும் என்றெல்லாம் வினா எழுப்பி வந்த சிலருக்கு சரியான பதில் தரும் வகையில் இன்றைய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சி முடிவானது அமைந்திருக்கின்றது என்றே கூறலாம்.

இவற்றையெல்லாம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆராய்ந்துதான் நமது முன்னோர்களும், வானவியல் அறிஞர்களும், சித்த புருஷர்களும் நவகிரஹங்கள் மனிதனின் மீதும், பூமியின் இயற்கையான தட்பவெப்ப நிலையின் மீதும் தங்கள் ஆதிக்கத்தினை செலுத்துகின்றன என்ற தகவலையும் கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள். ஜோதிடமும் ஒரு வகையான அறிவியல்தான். ஆனால் அது நவீன உபகரணங்களின் துணையுடன் உருவானது அல்ல. மெய்ஞானத்தின் மூலமாக எழுதி வைக்கப்பட்ட அறிவியல். இந்த மெய்ஞானம் தந்த அறிவியல் பொக்கிஷமான ஜோதிடத்தை இன்றைய நவீனகால விஞ்ஞானிகளும் தங்களின் ஆராயச்சிகளின் மூலம் ஏற்றுக் கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

?அஷ்டத்ரவ்யம் என்றால் என்ன? அதனை தயாரிப்பது எப்படி?
 - நடராஜன், தஞ்சாவூர்.


கணபதி ஹோமம் செய்யும்போது அதில் கொடுக்கப்படும் ஆஹூதிகளில் ஒன்றுதான் இந்த அஷ்டத்ரவ்யம் என்பது. அக்னியின் மூலமாக விநாயகப் பெருமானுக்கு நாம் கொடுக்கும் அவிர்பாகம் என்று வைத்துக் கொள்ளலாம். கணபதி ஹோமத்திற்கு மிகவும் விசேஷமானது இந்த அஷ்டத்ரவ்யம் என்கிறார்கள் சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள். மோதகம், அவல், பொரி, சத்துமாவு, கரும்புத்துண்டு, தேங்காய்பத்தை, எள்ளு, வாழைப்பழம் ஆகியவையே இந்த எட்டு திரவியங்கள்.

இவற்றை எவ்வாறு ஹோமம் செய்ய வேண்டும் என்பதை பின்வரும் விதி தீர்மானிக்கிறது. “மோதகா: அகண்டிதா: க்ராஸமிதா: ப்ருதுக லாஜஸக்தவோ முஷ்டிபரிமிதா: இக்ஷூகண்டா: பர்வமிதா: நாரிகேலம் அஷ்டதா கண்டிதம் திலா: சுலுகமாத்ரா: கதலீபலம் அல்பம் சேதகண்டிதம் ப்ருது சேத்யதாருசி கண்டிதம்  அமாஷாம் ப்ரதக் ப்ருதகாஹூதய: என்ற விதி அஷ்டத்ரவ்யத்தினைக் கொண்டு எவ்வாறு ஹோமம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறது.

அதாவது மோதகம் முழுவதாகவும் விழுங்கக் கூடிய அளவிலும், அவல், பொரி, சத்துமாவு ஆகியவை கைப்பிடி அளவிலும், கரும்புத்துண்டு கனுவளவிலும், தேங்காய் எட்டுத்துண்டாகவும், எள்ளு சுருக்கிய உள்ளங்கை அளவிலும், வாழைப்பழம் சிறியதாக இருந்தால் முழுவதாகவும், பெரியதாக இருந்தால் துண்டாகவும் எடுத்துக்கொண்டு இந்த திரவியங்களை தேன், பால், நெய் ஆகியவற்றுடன் கலந்து தனித்தனியாக ஹோமம் செய்ய வேண்டும் என்று இந்த சாஸ்திர விதியானது அஷ்டத்ரவ்யம் கொண்டு ஹோமம் செய்யும் முறையை தெளிவாக விளக்குகிறது. ஹோமம் செய்த மிச்சத்தை ஒன்றாகக் கலந்து கணபதியின் பிரசாதமாக ஸ்வீகரிப்பதால் நம் உடல் ஆரோக்கியம் பெறும்.

?தம்பதியராக நிற்கும்போது கணவனுக்கு வலது புறம் மனைவி இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அர்த்தநாரீஸ்வரர் வடிவினில் பரமேஸ்வரனுக்கு இடதுபுறத்தில்தான் பார்வதி இடம்பிடித்திருக்கிறார். ஏன் இந்த மாறுபாடு?
 - கிருஷ்ணமூர்த்தி, கோவை.


கணவனுக்கு வலதுபுறம் மனைவி இருக்க வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள சம்பிரதாய முறை. தமிழகம் தாண்டி வடக்கில் சென்றுவிட்டாலே இந்த சம்பிரதாயம் மாறிவிடும். தமிழகத்தில் கூட புதுச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளிலும், தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் சிவபெருமானை முன் உதாரணமாகக் கொண்டு கணவனுக்கு இடதுபுறத்தில்தான் மனைவி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோரும் உண்டு. நம் தமிழ் திரைப்படங்களில் கூட ஒரு சில திரைப்படங்களில் ஆணுக்கு இடதுபுறம் பெண்ணை அமரவைத்து தாலி கட்டும் காட்சிகளை வைத்திருப்பார்கள்.

இது அவரவர் சம்பிரதாயத்திற்கு உட்பட்டது. மனிதர்களில் ஆணுக்கு வலது பாகத்தில்தான் சக்தி அதிகம், பெண்ணுக்கு இடது பாகத்தில்தான் சக்தி அதிகமாக இருக்கும் என்றும், ஆணின் நாடி வலதுபுறமாக சுழலும் என்றும் பெண்ணின் நாடி இடதுபுறமாக சுழலும் என்றும் சொல்வார்கள். ஆணின் உடலில் வலப்பக்கத்தில் இதயம் அமைந்திருக்கும் என்றும், பெண்ணின் உடலில் இடதுபுறத்தில் இதயம் அமைந்திருக்கும் என்றும் சொல்வார்கள். அதனால்தான் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் கூட ஆணுக்கு வலது கரத்தையும், பெண்ணிற்கு இடது கரத்தையும் கொண்டு கைரேகை பார்த்து பலன் சொல்வார்கள். ஆணின் சக்தி என்பது வலதுபுறத்தில்தான் இருக்கும் என்பதால் நம் ஊர் பெரியவர்கள் ஆணுக்கு வலதுபுறத்தில் பெண் இருக்க வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள்.

பரமேஸ்வரனைப் பொறுத்த வரை வலதுபுறத்தில் ஏற்கெனவே சக்தி என்பது நிறைந்திருப்பதால் வலுக்குறைந்த இடதுபாகத்தினை சக்தி தேவிக்கு அளித்தால் அந்தபாகமும் சக்தி நிறைந்த பாகமாய் உருவாகி ஆணும், பெண்ணும் சரிசமம் என்ற நிலை உருவாகிவிடும் என்பதால் அவர் தனது உடலின் இடதுபாகத்தினை உமையம்மைக்குத் தந்ததாக ஆன்மிகவாதிகள் விளக்கம் தருவார்கள். கணவனுக்கு எந்த புறத்தில் மனைவி இருக்க வேண்டும் என்பது அவரவர் சம்பிரதாயத்திற்கு ஏற்ப மாறுபடும். இந்த சம்பிரதாயத்தை தவறு என்று சொல்ல முடியாது. எப்புறத்தில் இருந்தாலும் மனைவிக்கு உரிய மரியாதை என்பது எள்ளளவும் குறையக் கூடாது என்பதே இதற்குள் அடங்கியிருக்கும் சூட்சுமம் என்பதைப் புரிந்துகொண்டால் போதும். வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • BIPIN RAWAT

  முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

 • BlackBox_Helicopter_Coonoor

  குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி கண்டெடுப்பு

 • MK Stalin_Wellington_Army officials_helicopter_crash

  வெலிங்டனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராணுவ அதிகாரிகள் விளக்கம்

 • Vaikunda Ekadasi

  பூலோக வைகுண்டத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 6ம் திருநாள்.

 • burundi-fire-8

  புரூண்டி நாட்டில் சிறையில் பயங்கர தீ விபத்து: 38 கைதிகள் தீயில் கருதி உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்