SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

2020-09-29@ 11:24:21

கோதுமை ரவா கேசரி - அன்னவரம் சத்யநாராயணப்பெருமாள்.

ஆந்திர மாநிலம் பிட்டாபுரத்திலிருந்து 32 கி.மீ. தூரத்தில் உள்ளது வீர வெங்கட சத்திய நாராயண ஸ்வாமி கோயில் உள்ள அன்னவரம்.  இவ்வாலயத்தில்  ஹரி, ஹரன், அயன் எனும் மும்மூர்த்தியரும் திருவருட்பாலிப்பது சிறப்பம்சமாகும். அதனால் இத்தல ஆண்டவன் ஹரி ஹர ஹிரண்யகர்ப்ப த்ரிமூர்த்யாத்மகா எனும் சிறப்புப் பெயரும் உண்டு. ஆந்திராவில் திருப்பதிக்கு அடுத்தபடியாக மிகப் பெருமையும், சிறப்பும், செல்வவளமும் பெற்ற ஆலயமாக இத்தலம் திகழ்கிறது. முற்காலத்தில் இந்த ஊரில் 24 மணி நேரமும் தங்குதடையின்றி அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இதற்கு அன்னவரம் என பெயர் ஏற்பட்டதாகவும், இங்கு திருவருட்பாலிக்கும் சத்யநாராயணர் அன்ன வரம் அதாவது தன்னை வணங்கியவரின் விருப்பமான வரங்களைத் தருவதாலும் அன்னாவரம் என இத்திருத்தலம் பெயர்பெற்றது.

இத்திருத்தல புராணம் ஸ்காந்தபுராணத்தின் ரேவா காண்டத்தில் காணப்படுகிறது. திருமால் உறையும் இம்மலை ரத்னகிரி என வழங்கப்படுகிறது. இம்மலையை மேருமலையின் மகனாக புராணம் உரைக்கிறது. மேருமலையும் அதன் மனைவி மேனகையும் வரம் பெற்று திருமாலின் திருவருளால்  ரத்னாகர், பத்ரா எனும் இரு மகன்களைப் பெற்றனர். பத்ரா திருமாலை நோக்கித் தவம் செய்து பத்ராசலம் எனும் மலையாகி திருமாலின் அவதாரமாகிய ராமபிரானைத் தாங்கிப் புகழ்பெற்றது.

ரத்னாகர் மலையும் திருமாலை நோக்கித் தவம் செய்து அவரையே தன்னிடத்தில் வந்து நித்யவாசம் செய்ய வேண்டும் எனும் வரத்தைக் கேட்க அதன்படி திருமால் வீரவேங்கட சத்யநாராயணஸ்வாமி எனும் திருப்பெயரில் இங்கு நிலை கொண்டார் என்கிறது தலபுராணம்.ரத்னாகர்மலை ரத்னகிரி என பெயர் பெற்றது. இம்மலையைத் தொட்டவாறு புண்ணிய பம்பா சரோவர் ஆறு ஓடுகிறது.

இத்தலத்தில் திருமால் ஆலயம் எழும்பிய வரலாற்றையும் அறிவோம். ஏரங்கி பிரகாசம் எனும் அந்தணரின் கனவில் வந்த நாராயணர் தன் விக்ரகம் இந்த மலையில் வழிபாடின்றி இருப்பதாகவும், அதனைக்கண்டுபிடித்து ஆலயம் எழுப்பும்படியும் ஆணையிட்டார். அவரும் ஊர்மக்களிடம் நடந்ததைச் சொல்ல அனைவரும் திருமாலைத் தேடிக் கண்டுபிடித்து இம்மலையில் சிறிய ஆலயம் அமைத்து 1891ம் ஆண்டு வழிபட ஆரம்பித்தனர்.1934ம் ஆண்டு ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட்டு சற்று பெரிய ஆலயமானது. 2012ம் ஆண்டு சிற்ப சாஸ்திரம் மற்றும் ஆகம விதிகளின்படி ரதம் போன்ற தற்போதைய ஆலய அமைப்பு பக்தகோடிகளின் பெருமுயற்சியால் உருவானது.

ரத்னகிரி என்ற சிறிய குன்றின்மேல் நான்கு புறங்களிலும் சக்கரங்களைக் கொண்டு ரத வடிவில் அழகான வெள்ளை நிற கோபுரங்களைக் கொண்ட ஆலயத்தை அடைய சில படிகளைக் கடக்க வேண்டும். இங்கு திருவருட்பாலிக்கும் சத்யநாராயணர் 13 அடி உயரத்தில் உருளை வடிவில் வித்தியாசமாக தரிசனமளிக்கிறார். மேலும், கீழுமாக இரு தளங்களைக் கொண்ட கருவறையில் ஸ்ரீசத்யநாராயணபீடம் என வழங்கப்படும் கீழ்ப்பகுதியில் பிரம்ம வடிவில் காட்சி தரும் இறைவனின் நான்கு புறங்களிலும் ஆராதனை மூர்த்திகளாக விநாயகர், சூரியன், ஈசன், அம்பிகையின் திருவுருவங்கள் அமைந்துள்ளன.

ஸ்ரீ மகா த்ரிபத் வைகுண்ட நாராயண யந்திரம் எனும் சக்திவாய்ந்தவிசேஷ யந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது. இது ஜன தன ஆகர்ஷண யந்திரம் என்பதினாலேயே இத்திருத்தலத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது எனக் கூறப்படுகிறது. தன்னை நாடி தரிசிப்பவர்களின் ஆசைகளையும், வேண்டுதல்களையும் வரமாகத் தரும் ஸ்ரீசத்யநாராயணரின் பேரருள் உலகளாவியது.

மேல்நிலையில் ஸ்ரீசத்ய நாராயணரின் வலதுபுறம் லிங்க வடிவில் ஈசனும், இடதுபுறம் அனந்தலக்ஷ்மி தாயாரும் திருவருட்பாலிக்கின்றனர். தங்கக்கவசத்தில் பளபளவென ஜொலிக்கும் சத்யநாராயணரை மனம் குவிய அகம் கரைய தரிசிக்கலாம். இங்கு சத்யநாராயணவிரத பூஜை செய்வது சிறப்பு. இப்பூஜைக்கு காலை 6 மணி முதல் மாலை 6 வரை உரிய கட்டணத்துடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆலய வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அனைவரும் வரிசையாக அமரவைக்கப்பட்டு பூஜைக்கான சாமன்களைத் தந்து சங்கல்பம் செய்து வைத்து ஸ்வாமிக்கு முன்பு பட்டர்கள் சத்யநாராயணபூஜையை செய்து வைக்கிறார்கள். கடைசியில் தீபாராதனை முடித்து கதை படித்து விரதத்தை பூர்த்தி செய்கின்றார்கள். சத்யநாராயணருக்கு விசேஷமான இத்தலத்தில் இந்த விரத பூஜை செய்வதால் திருமண பாக்கியம், பிள்ளைப்பேறு, விரும்பிய வேலை இவற்றுடன் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.

ஆலயம் மிக சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஏகாதசியன்றும், மே மாதம் நடைபெறும் ஸ்வாமியின் திருக்கல்யாண 6 நாட்களும் ஆலயம் விழாக்கோலம் கொள்கிறது. ஸ்வாமியின் திருக்கல்யாண நாளில் இத்தலத்திற்கு வந்து திருமணம் செய்பவர்கள் கூட்டமும் அதிகமாக இருக்குமாம். மேலும், நவராத்திரி, தெப்போற்சவம், தீபோற்சவம் போன்றவற்றுடன் சிவபெருமானுக்கான உற்சவங்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.  இக்கோயிலின் அழகும் சாந்நித்யமும் தரிசிப்போரின் மனம் குளிர வைக்கும்.  இந்த கோயிலின் உள்ளேயே சூரிய கடிகாரம் உள்ளது.  அது இந்திய நேரத்தை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. அன்னாவரம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் விசாகப்பட்டினத்திலிருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தல கோதுமை ரவா கேசரி பிரசாதம் பெயர் பெற்றது.

கோதுமை ரவா கேசரி

என்னென்ன தேவை?

கோதுமை ரவா     -  1/2 கிலோ
பால்         - 2 லிட்டர்
தண்ணீர்         - 1 லிட்டர்
வெல்லம்          -  1 கிலோ
ஏலக்காய்த் தூள்     -  2 தேக்கரண்டி
நெய்         - 1/2 கிலோ
முந்திரி பருப்பு     -  200 கிராம்
காய்ந்த திராட்சை     - 100 கிராம்
பச்சைக்கற்பூரம்     - சிறிதளவு

எப்படி செய்கிறார்கள்?

அடுப்பில்  கடாயை வைத்து நெய் ஊற்றி  அதில் கோதுமை ரவா சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கிறார்கள்.. பின் அதில் பால் அடுத்து தண்ணீர் கலந்து கிளறி  நன்கு வைத்து வேக விடுகிறார்கள். பின்னர் வெல்லத்தை கெட்டிப்பாகு காய்ச்சி அதில் சேர்த்துக் கிளறி சில நிமிடங்களுக்கு பிறகு பச்சைக் கற்பூரம் கலந்து கெட்டியாக வரும் வரை கிளறுகிறார்கள்..  பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்த திராட்சை, முந்திரி போட்டு வறுத்து கேசரியுடன் சேர்த்து கலக்கிறார்கள். கோதுமை ரவா கேசரி பிரசாதம் தயார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ambedkar

  சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

 • AIADMK

  பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

 • animal-snake-6

  சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

 • trichy 06

  திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

 • sandart-18----

  ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்