SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண் கடவுளர் நால்வர்

2020-09-23@ 09:42:50

வேளாண்மை சிறப்பு ஒரு நாட்டின் பண்பாட்டின் சிறப்பைக் காட்டும் அறிகுறி ஆகும். வேளாண்மை சிறந்திருக்கும் நாடுகளில் கலை, அறிவியல், பண்பாட்டு ஒழுக்க விதிகள், உணவு, உடை, இருப்பிடம்,  கைவினைத்  தொழில்கள், சமயம், வழிபாடு, கலை இலக்கியம் விழா கொண்டாட்டங்கள்  என அனைத்தும் சிறப்பாக இருக்கும். தமிழகத்தில் வேளாண்மை சிறந்து காணப்படும் நிலப்பகுதியை மருதம் என்று அழைத்தனர். இது நன்னீர் வேளாண் நிலங்களைக் கொண்டதாகும் தொல்காப்பியர் இதனை தீம்புனல் உலகம் என்றார். இந்நிலத்தின் தெய்வம் வேந்தன் எனப்பட்டான். வேளாண்மை என்பது நிலம், நீர் ஆகியவற்றை முதலாகக் கொண்டது. நன்னிலம் என்பது ஆற்று  நீர்ப் பாசனம் உள்ள இடத்தைக் குறிக்கும். இதனை நஞ்சை பூமி என்பர். புஞ்சை என்பது மழை நீரை எதிர்பார்த்திருக்கும் வானம் பார்த்த பூமி.  இங்கு வேளாண்மையுடன் ஆடு மாடு மேய்க்கும் தொழிலும் நடைபெறும். இதனை காடும் காடு சேர்ந்த நிலங்களும் என்றார் தொல்காப்பியர்.

வேளாண்மைக்கு இன்றியமையாத் தேவைகளான விதை நெல், நீர், உழுபடை கருவிகள் ஆகியனவாகும். இவை ஒவ்வொன்றிற்கும் வேளாண் குடியினர் தனித்தனி தெய்வங்கள் வைத்து வணங்கினர். விதைநெல் வீரியம் கொண்டு வளர வேண்டுமென இந்திரனை வணங்கினர். இந்திரன் என்பவன் ஆண் முதன்மை சமுதாயத்தின் முழு முதற் கடவுள் ஆவான். இந்திரனே இந்திரிய தானம் செய்பவன். அதனால் அவனது உலகம் தேவலோகம் என்றும் அங்கு அவனால் இந்திரிய தானம் பெறப்பட்ட அறுபதினாயிரம் பெண்கள் அப்சரஸ்கள் வாழ்ந்ததாகவும் அவனை உயர்த்தி புராணங்கள் வளர்ந்தன. வித்து, இந்திரியம் என்ற சொற்கள் ஆண் முதன்மை சமுதாயத்தின் தாரக மந்திரங்கள் ஆகும். தாய்த் தெய்வ வழிபாட்டுக்கு அடுத்துத் தோன்றிய இச்சமுதாயம் மனித உற்பத்தியில் ஆணின் பங்கை உணர்ந்து அதனையே முக்கியத்துவப்படுத்தியது.  

வேளாண் மக்கள் முதன்முதலில் நிலத்தில் இறங்கி ஏர் உழும் நன்னாளை நாள் ஏர் பூட்டுதல், பொன் ஏர்  பூட்டுதல் என்று அழைத்து  
இந்திரனை வழிபட்டுத் தொடங்குவதுண்டு. இதனை இந்திர விழா என்றே குறிப்பிடுகின்றனர். தமிழர் பொது வழிபாட்டிலிருந்து இந்திரனை அகலிகை கதை சொல்லி விலக்கி வைத்த பிறகும் நாற்று முடியை ‘இந்திர முடி’ என்று தான் அழைகின்றனர். வேளாண் குடி மகளிர் நாற்று முடியை வைத்து கும்மி கொட்டி துதிப் பாடல் பாடும்போது

ஓரானை ஊர்தி மருமகனும்
உற்ற துணை நமக்குண்டு பெண்டுகாள்
குறிப்புடனே நகரிசரையும்
அறம்வளர் தேவியையும்  
மலரடி சென்னி வைத்து  வணங்குவோம்
- என்ற வரிகள் ஓரானை ஊர்ந்து வரும்
இந்திரனையும் அறம் போதித்த அன்னையையும் குறிக்கின்றது.

பலருக்கு இந்திரனுக்கும் வேளாண்மைக்கும் என்ன தொடர்பு என்று தெரியாத நிலையிலும் அவன் பெயரால் நடக்கும் சடங்குகளும் வழிபாடுகளும் தொடர்கின்றன. நாற்று நடுதல் நிகழ்ச்சியை இந்திர விழா என்று வழங்குவர். ராஜபாளையத்தில் வெண்குடை விழா இந்திரன் படம் வரைந்த கொடியை ஏற்றிக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு வழிபடு கடவுள் ஐயனார். இந்திரன் வணங்கிய தெய்வமே ஐயனார் என்ற கருத்தும் இங்கு நிலவுகிறது.  

கோவை அருகே பேரூர் பட்டிசுவரம் கோயிலில் நடைபெற்ற இந்திர விழா பின்னர் சைவ சமய எழுச்சியின் காரணமாக சிவன் பங்கேற்கும் விழாவாக மாற்றம் பெற்றது. அங்கு ஆனி மாதம் 12 முதல் 23 வரை பத்து நாட்கள் நடைபெறும் இந்திர விழாவில் சிவனும் பார்வதியும் வயலில் இறங்கி உழவன், உழத்தியாக உருமாறி வேளாண் பணிகளை செய்கின்றனர். இப்பணிகளில் அவர்களுடன் அவர்களின் பிள்ளைகளும் சிவ கணங்களும் சேர்ந்து கழனியில் இறங்கி பங்கு பெறுவதாக ஐதீகம். கோயிலுக்கு ஐயனின் அருளைப் பெற வந்த சுந்தரர் அங்கு ஒருவரும் இல்லாததால் வயலுக்கு வந்து அம்மையப்பரிடம் ஆசி பெற்றுச் சென்றதாக தலபுராணம் உரைக்கிறது.

சிவனும் பார்வதியும் காப்பு கட்டி கோயிலை விட்டு கிளம்பும் முன்பு இந்திரனுக்கும் மாலை அணிவித்து பூசைகள் நடைபெறும். பத்தாம் நாள் முழு நிலவன்று ஆனி உத்திரத்தன்று  நடராசர் பூசையுடன் விழா நிறைவுறும். பங்குனி சித்திரை முழு நிலவு நாட்களில் இந்திர விழா நடைபெற்றதற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியத்தில் ஏராளம் உண்டு. இவ்விழாவும் முழு நிலா நாள் அன்றே நிறைவு  பெறுகிறது. இதுவே ஆரம்பத்தில் இவ்வழிபாடு இந்திரனுக்கு நடந்ததற்கு நற்சான்றாகும். ஆக விதை இடுதல், நாற்று நடுதல் ஆகிய வேளாண் பணிகளுக்குரிய வழிபடு தெய்வம் இந்திரன் ஆவான்.

உழு படை கருவிகள்

மருத நிலத்தில் வேளாண்மை முக்கிய தொழிலாக இருந்தாலும் அதனைச் சார்ந்து வேறு பல தொழில்களும் நடந்தன. அவற்றில் சில, தோலால் கமலை செய்தல், இரும்பினால் கொழு முனை செய்தல், மரத்தைக் கொண்டு கலப்பை, நுகத்தடி, வண்டிச் சக்கரம் செய்தல், ஏரியில் கரையைச் செப்பனிட்டு காவல் செய்பவர், கலுங்கு மடையை திறப்பவர் என பல தோழிகள் வேளாண்மை சார்ந்து விளங்கின.

கலப்பை என்பது முக்கிய உழவுக் கருவியாக உள்ளது. வேளாண் பொறியியல் மற்றும் நிற மேலாண்மை துறையில் தமிழர்கள் நிகரற்ற ஆடல் பெற்று உலகுக்கு முன்னோடியாக இருந்தற்கு திருச்சி கல்லணை, சென்னை வீராணம் ஏரி, ராமநாதபுரம் கண்மாய் போன்றன தகுந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். கலப்பையை கையில் வைத்திருக்கும் பலராமன் வேளாண் கடவுளாக ஒரு காலத்தில் சிறப்பாக வழிபடப்பட்டார். பழனி முருகன் மீது பாடப்பட்ட வையாபுரி பள்ளு என்ற நுலில் பலராமன் ஆசி பெற்றுச் சென்றார் என்று பாடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் பலராமன் வழிபாடு இருந்ததற்கு சான்று உள்ளது.

ஐயனார்

ஏரிக்கொரு ஐயனாரும் ஊருக்கொரு பிடாரியும் என்பதைப்போல வேளாண் மக்கள் குடியிருக்கும் ஊர்களில் ஏரி காக்கும் காவல் தெய்வமாக ஐயனார் கோயில் ஒன்று கண்டிப்பாகக் காணப்படும். மழைநீர்த் தேக்கத்துக்கு வழங்கப்படும் பெயர்களான கயம், வாவி, தடாகம், பொய்கை, குளம், குட்டை, ஏரி, கிடங்கு, மடு,  மதகு மடை ஆகியன தமிழ் வேளாண் குடியினரின் மழை நீர் சேகரிப்புக்கான சான்றுகள் ஆகும். மருத நிலத்துத் தலைவனான வேந்தன் தனது வேளாண்குடி மக்களுக்கு நீர்த்தேக்கம் அமைத்து தருவது அவனது இன்றியமையா கடமையாகக் கருதப்பட்டது. அவ்வாறு செய்யாதவனை மன்னன் என்று மக்கள் கொள்ளார்.

அடுபோர்ச் செழிய, இகழாது வல்லே
நிலன்நெறி மருங்கில் நீர்நிலை பெருகத்]
தட்டோர் அம்மா; இவன் தட்டோரே
தள்ளாதோர் இவன் தள்ளாதோரே
 - என்று குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடினர்.  

கரிகாலன் ஒன்றாம் நூற்றாண்டில் கட்டிய கல்லணை 18௦௦ அடி நீளமும் 4௦ அடி அகலமும் கொண்டது. பல மன்னர்கள் தமிழகத்தில் வேளாண்மை சிறக்க ஏரிகள் அமைத்தனர். மதுரைக்கு அருகில் உள்ள ஊர்களில் ஏரி காத்த ஐயனார், மாட்டை காத்த ஐயனார், அருஞ்சுனை காத்த ஐயனார் என்று மக்கள் இவரை அவர் காவல் செய்யும் நீர்நிலையின் பெயரால் அழைத்தனர். ஐயனார் சேகரிக்கப்பட்ட நீருக்குரிய காவல் தெய்வம் ஆவார். கிராமம் தோறும் கோயில்கள் உண்டு அவை பெரும்பாலும் கண்மாய், குளம் மற்றும் ஏரிக் கரைகளில் எழுப்பப்பட்டுள்ளன.

மாரியம்மன்

இந்திரன் இடி மற்றும் மழைக்குரிய கடவுள் எனக் கருதப்பட்டாலும் அக்கருத்து  வட நாட்டில்தான் பிரபலமாகியுள்ளது. தமிழகத்தில் மழைக்குரிய கடவுள் மாரியம்மன். மாரி என்றால் மழை. அவள் வழமை கோட்பாடு சார்ந்த தெய்வம் ஆவாள் அவளுக்கு ஆடி, பங்குனி மாதத்தில் விழா எடுக்கப்படும். வேளாண் பணிகள் முடிந்த நிலையிலும் [பங்குனி] தொடங்கும் நிலையிலும் [ஆடி]  வணங்கப்படுவாள். வளமைச் சடங்கான [FERTILITY ritual]  முளைப்பாரி எடுத்தல் மாரியம்மனுக்குரிய முக்கிய வழிபாட்டுச் சடங்காகும்.

பயறு விதைகளை மண்ணில் பூசி அதன் மீது தண்ணீர் தெளித்து ஒரு வாரம் இருட்டறையில் வைத்து வளர விடுவர். அந்த விதைகள் பொன்னிறமாக வளர்ந்திருந்தால் அந்த ஆண்டு நல்ல மழை பொழியும் என்று ஊகிக்கலாம். வெளிர் பச்சையாக இருந்தால் மழை குறைவு என அறியலாம். மாரியம்மனுக்கு சிறப்பு பூசைகள் செய்தால் அவள் மனம் குளிர்ந்து மழை பெய்விப்பாள் என்பது சமய நம்பிக்கை.

ஜேம்ஸ் ஃபிரேசர் என்பவர் மக்களின் ஆதி சமய நம்பிக்கை போலச் செய்தல் சடங்கு [ IMITATIVE RITUAL] என்றார். முளைப்பாலிகை எடுப்பதும் ஒரு போலச் செய்தல் சடங்கே ஆகும். பயறு பச்சை நன்றாக  விளைய வேண்டும் என்று ஆசைப்படுவோர் ஒரு முன்னோடி ஆய்வாக [AS A PILOT STUDY]  இச்சடங்கைச் செய்கின்றனர். இதன் விளைவைக் கண்டு மழையின் அளவைக் கண்டு கொள்கின்றனர். மழை பெய்யவில்லை என்றால் வெப்பம் அதிகரித்து மக்களுக்கு புட்டம்மை, பாலம்மை, பொன்னுக்கு வீங்கி, கண் வலி, அக்கி, மணல் வாரி போன்ற வெப்ப நோய்களின் தாக்குதல் ஏற்படும். இதனால் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்தும் மாவிளக்கு எடுத்தும் கூழ்காய்ச்சி ஊற்றியும் தீச்சட்டி எடுத்தும் வணங்குகின்றனர்.  

ஆக வேளாண்மை தொழில் தொடர்பாக விதைநெல் [இந்திரன்], மழை [மாரியம்மன்], ஏரி காத்தல் [ஐயனார்], உழவு கருவி [பலராமன்] என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கடவுள் வழிபாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மக்கள் தாம் ஆசைப்படுவது நடக்க வேண்டும் என்பதற்காக அதையே கடவுளிடம் செய்து காட்டி இது வேண்டும் என்று கேட்கின்றனர். இந்திர வழிபாட்டில் கடவுளரே வந்து நாற்று நடுவதாக செய்து காட்டுதலும் மாரியம்மன் வழிபாட்டில் முளைப்பாரி எடுத்தலும்  தொல்சமய முறைகளில் [PRIMITIVE RELIGIOUS PRACTICES] பின்பற்றப்பட்ட ஒரு போலச் செய்தல் சடங்கேயாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்