SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உழவனாக வந்த ஒளி மழுவாளன்

2020-09-21@ 10:45:01

உலகிலுள்ள தொழில்களில் மிக உயர்ந்தது உணவளிக்க வகை செய்யும் உழவுத் தொழிலாகும். உலகம் உணவளிக்கும் உழவுத் தொழிலின் செழிப்பினால்தான் இயங்குகிறது என்பதைத் திருவள்ளுவப் பெருந்தகை,சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை - என்றும், உழுபவர்களை உலகத்திற்கு அச்சாணி என்பதை,உழுவார் உலகத்திற்கு ஆணி அஃது ஆற்றாதுஎழுவரை எல்லாம் பொறுத்து- என்று போற்றுகிறார்,

எல்லாம் வல்ல சிவபெருமான் உலகைக் காக்கும் தொழிலான உழவைப் போற்றும் வகையில் தானே உழவனாய்த் தோன்றி மண் மீது வந்து ஏரோட்டி, நாற்று நட்டு, களை எடுத்து நீர் பாய்ச்சி, கதிர் அறுத்து, நெற்மணிகளை அட்டி உணவு தானியங்களைக் கோட்டைகளில் சேமித்து வைக்கும் வரை உள்ள அனைத்துப் பணிகளையும் செய்துள்ளான். தேவியும் அவனுடன் உழத்தியாகத் தோன்றி, பண்ணை வேலைகளைச் செய்கிறாள்.

அவன் பணியோ தானியக் கோட்டைகளை அமைப்பதுடன் முடிகிறது. அவளோ உணவு சமைக்கும் அன்னையாகவும் அனைவருக்கும் உணவூட்டி மகிழ்விக்கும் அன்னபூரணியாகவும் விளங்குகிறாள். சிவபெருமான் உழவனாகவும், உமாதேவியார் உழத்தியாகவும்  தோன்றும் கோலம் காட்சி கொடுத்த நாயகர் என்று அழைக்கப்படுகிறது. இதில் அவருடைய இடபமும் இடம் பெறுகின்றது.

இடபம் பயிர்த் தொழிலுக்குத் தோழனாக இருப்பதை இது உணர்த்துகிறது. அவர் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதன் அடையாளமாகக் காலை சுவஸ்திகமாக வைத்துள்ளார். ஒயிலாக ஒரு கரத்தை இடபத்தின் மீது ஊன்றி மறுகையை இடையின் மீது வைத்துள்ளார். பயிர்த்தொழிலில் நெடு நேரம் குனிந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். நிமிர்ந்ததும் வலி போக இடுப்பில் கை வைப்பர். அதை கருத்தில் கொண்டே சிற்பி இவரை அமைத்துள்ளான். காணற்கரிய ஒப்பற்ற இவ்வடிவம் இப்போது தஞ்சை அருங்காட்சியகத்தில் உள்ளது.

சிவபெருமான் பல தலங்களில் உழவனாகக் காட்சியளித்ததைப் புராணங்களில் காண்கிறோம். குறிப்பாகச் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு மறைந்திருந்து திருவிளையாடல் புரியக் கருதிய சிவபெருமானும், தேவியும் வயலுக்குச்சென்று அங்குள்ளவர்களுடன் சேர்ந்து வயல் வேலைகளை மேற்கொண்டனர். சுந்தரர் பல தலங்களை வணங்கி மகிழ்ந்து கோவையின் (கோயம்புத்தூர்) ஒரு பகுதியாக விளங்கும் பேரூருக்குச் சென்றார்.

அங்கே இருக்கும் பட்டீச்சர ஆலயத்திற்குள் சென்றார். சிவபெருமானையும், உமாதேவியையும் அங்கு காணவில்லை. நந்தியிடம் அவர்கள் எங்கே என்று கேட்டார். நந்தி தேவர் பதில் கூறாமல் தலையைத் திருப்பிப் பார்த்தார். சுந்தரர் அதைக் குறிப்பால் உணர்ந்து அவர் பார்த்த திசையின் வழியே சென்றார். அங்கு வயலில் சிவபெருமான் உழவராக மண் வெட்டிப் பிடித்து நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க, உமாதேவியார் அருகிலுள்ள வேறு வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்தாள்.

அவர்களை அறிந்து கொண்ட சுந்தரர் மகிழ்ந்தார். பெருமானை நோக்கி,நட்ட குறை போதும், நடாக் குறை நாளை பார்க்கலாம் என்றார். சிவபெருமான்  வயலை விட்டு வெறியே வந்தார். தேவியும் அவரைத் தொடர்ந்து வந்தார். அங்குள்ள வெள்ளியம்பலத்தில் பெருமான் நடனக் காட்சியை அருளினார்.சுந்தரருக்கு இறைவன் உழவனாக வந்து அருள் செய்த கோலத்தை நினைவூட்டும் வகையில் பேரூரில் பெருமானைக் கேதாரீ சுவரர் என்ற பெயரில் ஆலயத்திற்கு முன்னுள்ள பட்டி மேடையின் மீது இடம் பெற்றுள்ள  சிறிய ஆலயத்தில் அமைத்துள்ளனர். சிவபெருமான் மண்வெட்டியுடனும், அம்பிகை நாற்றுக் கட்டுடனும் நிற்கின்றனர். இதேபோன்று உலாத்திருமேனியும் உள்ளது.

நாற்று நடவுத் திருவிழா என்ற பெயரில் இந்த ஐதீகம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. உழவனாகவும், உழத்தியாகவும் விளங்கும் பெருமானை இடபதேவர் என்ற பெயரில் வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் காண்கிறோம். இதில் பெருமான் சடையை வட்டணையாக முடிந்துள்ளார். அதன் உச்சியில் சிகாமணி உள்ளது.வலதுகரத்தைக் காளையின் முதுகில் ஊன்றி, இடதுகையை ஒயிலாக இடையில் வைத்துக்கொண்டுள்ளார். அருகில் தேவி நிற்கிறாள். கல்வெட்டுகள் இவரை இடப தேவர் என்று குறித்துள்ளன.

தொகுப்பு: பூசை. ச. அருணவசந்தன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

 • vietnam22

  வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்