SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெபிக்கிறவன் ஜெயிக்கிறான்

2020-09-21@ 10:06:48

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக (யோவான். 14.27) ஒரு பள்ளிக்கூடத்தில் அமைதி என்ற தலைப்பின் கீழ் ஓவியப்போட்டி ஒன்று நடைபெற்றது. பல மாணவர்கள் கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவிற்கு மிகவும் தத்ரூபமாய் ஓவியங்களை வரைந்திருந்தனர். ஒரு மாணவன், மலைச் சரிவுகளுக்கிடையே நீரோட்டத்தின் மத்தியில் ஒரு சிறு படகு எந்தவொரு சலனமும் இல்லாமல் செல்வதைப்போல ஓவியம் வரைந்திருந்தான். வேறு ஒரு மாணவன், வானில் புறாக்கள் பயமின்றி பறப்பதை ஓவியமாக வரைந்திருந்தான். மற்றொரு மாணவன், உழவன் தன் வயல்வெளியை உழுவது போல வரைந்திருந்தான். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது
கற்பனைகளுக்கேற்ப பற்பல வண்ணங்களில் ஓவியங்களை வரைந்திருந்தனர்.

ஆனால், இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, ஒரு ஓவியம் முதல் பரிசை வென்றது. அவ்வோவியத்தில் இடம் பெற்றவை என்ன தெரியுமா? பேரிரைச்சலோடு விழும் அருவி, சிறுவர்களின் ஆரவாரம், சிலர் துணி துவைக்கும் சத்தம் இவற்றிற்கு மத்தியில் ஒரு வளைந்த மரத்தின் பொந்தில் சிறிய பறவை ஒன்று கண்மூடி மகிழ்வுடன் தூங்கிக் கொண்டிருந்தது. இதுதான் உண்மையான அமைதியென்று அப்படம் விளக்கி முதல் பரிசைத் தட்டிச் சென்றது. ஆம்! நமது வாழ்வில் பல்வேறு பிரச்னைகள் நம்மைச் சூழ்ந்திருந்தாலும், அப்பிரச்னைகளுக்கு மத்தியில், ஆண்டவரின் அன்புக்கரங்களில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். அதுதான் உண்மையான சமாதானம் ஆகும்.

எனவே தான் தாவீது ராஜா சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே நீர் ஒருவரே என்னை சுகமாய் தங்கப்பண்ணுகிறீர் (சங்.4:8) என்று, தனது வாழ்வின் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியிலும் தான் பெற்றுக்கொண்ட தெய்வீக சமாதானத்தைக் குறித்து கூறுகிறார். இத்தகு தெய்வீக சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறை என்ன? என்பதையும் திருமறை கூறுகிறது. நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து, உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குக் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலிப்பியர் 4 : 6,7).

ஆம்! பல்வேறு பிரச்னைகளின் வழியாக நாம் செல்கையில், கடவுளின் பாதத்தில் முழங்கால்படியிட்டு, நமது பாடுகளையும், நாம் சந்திக்கின்ற பிரச்னைகளையும், கடவுளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்பொழுது கடவுள், நம்மை கனிவோடு கண்ணோக்குவார். நமது உள்ளத்தின் பாரங்களை நீக்கி, அமைதியையும், ஆறுதலையும் நமக்குத் தருவார். எனவே தான், அவர் உங்களை விசாரிக்கிறவரான படியால், உங்கள் கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் (1பே.5:7) என்று திருத்தூதுவர் பேதுரு கூறுகிறார். ஆகவே அன்பார்ந்தோரே! நீங்கள் ஒன்றையும் குறித்து கலங்காமல், உங்கள் மனதில் உள்ள பாரங்களையெல்லாம், பரமபிதாவின் பாதத்தில் பணிவோடு இறக்கி வையுங்கள். பாசத்தோடு அவர் உங்களை விசாரிப்பார். மேலும், உங்களுடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும், நிறைவான சமாதானத்தைத் தருவார். கடவுள்தாமே சமாதானம் நிறைந்த நல்வாழ்வைத் தந்து நம்மை ஆசீர்வதிப்பாராக.

தொகுப்பு: Rev. Dr. S.E.C. தேவசகாயம்
பேராயர், தூத்துக்குடி
நாசரேத் திருமண்டலம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்