SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெற்றோர் மகிழ்ச்சியே இறைவனின் மகிழ்ச்சி

2020-09-14@ 11:03:09

“இறைத்தூதர் அவர்களே... அறப்போருக்குச் செல்லும் அரசுப் படையில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று துடிப்புடன் வந்து நின்றார் ஓர் இளைஞர். அந்த இளைஞரை ஏற இறங்கப் பார்த்தார் இறைத்தூதர். மீசை இப்போதுதான் அரும்புவிடத் தொடங்கியிருந்தது. விடலைப் பருவம் தாண்டாத வயது.
“உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?” என்று கேட்டார் நபிகளார்.
“ஆம். இருவருமே இறையருளால் உயிருடன் இருக்கிறார்கள்” என்றார் அந்த இளைஞர்.
“அப்படியானால் நீ சென்று உன் பெற்றோருக்குப் பணிவிடை செய்” என்று அறிவுறுத்தி அனுப்பிவைத்தார் அண்ணல் நபிகளார். இன்னோர் இளைஞருக்கு ராணுவத்தில் சேர எல்லாத் தகுதிகளும் இருந்தன. அவரும் நபிகளாரிடம் வந்து தம்மை அறப்போர்ப் படையில் சேர்த்துக்கொள்ளும்படி வேண்டினார்.
“உன் பெற்றோரிடம் அனுமதி வாங்கினாயா?” என்று கேட்டார் இறைத்தூதர் அவர்கள்.
“இல்லை” என்றார் அந்த இளைஞர்.
“உன்னை உன் தாய் எப்படி அனுப்பி வைத்தார்?” என்று நபிகளார் கேட்க, “அவர் அழுதுகொண்டே இருந்தார். தாயின் அழுகையைப் பொருட்படுத்தாமல் நான் வந்துவிட்டேன்” என்றார் அந்த இளைஞர்.
“உடனே இங்கிருந்து செல். அழுத நிலையில் விட்டுவந்த உன் தாயை சிரிக்க வை. பெற்றோரின் மகிழ்ச்சியில்தான் இறைவனின் மகிழ்ச்சி உள்ளது” என்றார் நபிகளார்.
ஒரு முறை இறைத்தூதரிடம் ஒரு மனிதர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தாய் - தந்தை இருவரில் நான் யாருக்கு முன்னுரிமை
தரவேண்டும்?”என்று கேட்டார்.

“உன் தாய்க்கு” என்றார் நபிகளார். இது போல் மூன்று தடவை அந்த மனிதர் கேட்ட போதும் மூன்று தடவையும் “உன் தாய்க்குத்தான் முன்னுரிமை தரவேண்டும்” என்று கூறினார் நபிகளார். நான்காவது தடவையாகக் கேட்டபோது “உன் தந்தைக்கு” என்றார். இந்த நபிமொழிக்கு மார்க்க அறிஞர்கள் விளக்கம் அளிக்கும்போது, தந்தையைவிட தாய்க்கு மூன்று மடங்கு உரிமை அதிகம் உண்டு என்கிறார்கள். நபித்தோழர் ஒருவர் மரணப் படுக்கையில் இருந்தார். உயிர் பிரியும் நேரம். அவருடைய உறவினர்கள் அவருக்குக் ‘கலிமா’வைச் சொல்லிக் கொடுக்க முயல்கின்றனர். ஆனால் அவருடைய வாயிலிருந்து கலிமா வெளிப்படவில்லை. (கலிமா என்பது ‘இறைவன் ஒருவனே’ எனும் சத்தியப் பிரமாணம். உயிர் பிரியும்போது கலிமா சொல்வது மிகப்பெரும் புண்ணியச் செயல் ஆகும்)

தகவல் நபிகளாரிடம் சொல்லப்படுகிறது. நபிகளார் விரைந்து வந்து மரணப் படுக்கையில் இருக்கும் தோழரைப் பார்க்கிறார். அவருக்கு நிலைமை புரிந்துவிடுகிறது.
தோழரின் தாயை அழைத்துவரச் சொல்கிறார். அந்தத் தாய் வந்ததும், “அம்மா... உங்கள் மகன் மீது நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா? அப்படிக் கோபம் ஏதேனும் இருந்தால் அவரை மன்னித்துவிடுங்கள். அவருடைய உயிர் நிம்மதியாகப் பிரியட்டும்” என்கிறார். ஆனால் அந்தத் தாய் தன் மகன் மீது ஏதோ காரணத்தினால் மனவருத்தத்திலும் கோபத்திலும் இருந்தார். ஆகவே மகனை மன்னிக்க மறுத்துவிடுகிறார். உடனே நபிகளார், உறவினர்களை அழைத்துத் தீக்குண்டம் ஒன்றைத் தயார் செய்யும்படியும், அதில் அந்த மகனைப் போடும்படியும் சொல்கிறார்.

இதைக் கேட்டதும் அந்தத் தாய் துடிக்கிறார். “இறைத்தூதர் அவர்களே, நான் என் மகனை மன்னித்துவிட்டேன். மன்னித்துவிட்டேன். அவன் நரகம் சென்றுவிடக் கூடாது” என்று கதறினார்.“மகனை மன்னித்தேன்” என்று அந்தத் தாய் கூறிய மறு விநாடி மரணப் படுக்கையில் இருந்த மகனின் வாய் திருக் கலிமாவை மொழிந்தது. ஏக இறைவனைப் புகழ்ந்த நிலையில் அவருடைய உயிர்ப் பறவை நிம்மதியாகப் பறந்தது. பெற்றோரை ஒரு சுமையாகக் கருதி, அவர்களை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே தள்ளும் செய்திகளை நாளிதழ்களில் படிக்கிறோம். அவர்களுக்கெல்லாம் இந்த நிகழ்வு ஒரு படிப்பினை. பெற்றோரைத் துன்புறுத்தினால் நரகம் நிச்சயம்.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்