SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறைவன் நமக்கு பலம் தருகிறார்

2020-09-07@ 11:00:23

ஆவியின் கனி  - 11

என் கிருபை உனக்குப் போதும்: பலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும். (2கொரி. 12:9). அமெரிக்கா தேசத்தில் 1983ஆம் ஆண்டு ஜெசிகா காக்ஸ் என்ற ஒரு சிறுமி  பிறந்தாள். துரதிர்ஷ்டவசமாக இரண்டு கைகளும் ஊனமான நிலையில் அவள்  பிறந்திருந்தாள். என்றாலும், அவள் வளர்ந்து வந்த நாட்களில் தன் கைகளால்  செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் கால்களால் செய்யப் பழகினாள். ஆண்டவரையே தனது  பெலனாகக் கொண்டாள். கால்களால் அழகாக எழுதினாள். சிறந்த முறையில் கார்  ஓட்டினாள். கால்களால் நீச்சலடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாள்.  எல்லாவற்றிற்கும் மேலாக விமானம் ஓட்டு வதற்கு விரும்பினாள்.

தான்  விரும்பின படியே விமானம் ஓட்டுவதற்கும் பழகினாள். விமானியாகப் பணி செய்ய  விரும்பிய ஜெசிகா காக்ஸ்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டது. அவள் சிறந்த முறையில்  விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றிருந்தாலும், அவளது உடல் பலவீனத்தைக்  கருத்தில் கொண்டு எந்த நிறுவனமும் அவளுக்கு வேலை வழங்க முன்வரவில்லை.  மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு நிறுவனம் அவளுக்கு பணிவாய்ப்பை  வழங்கியது. ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்: அவர் என் கால்களை மான்  கால்களைப் போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்(ஆபகூக்  3:19) என்று வேத வசனம் கூறுகிறபடி, தனது நம்பிக்கையை ஆண்டவர் மீது வைத்து  விமானத்தை ஓட்டத்தொடங்கினாள்.

என்ன ஆச்சரியம்! தன்னுடைய முதல் பயணத்திலேயே  மிகவும் திறமையாக விமானத்தை ஓட்டினதுமல்லாமல், ஆகாயத்தில் பல சாகசங்களையும்  புரிந்து அனைவரையும் பிரமிக்கச் செய்தாள். கால்களால் விமானம் ஓட்டியதற்காக  கின்னஸ் உலக சாதனையும் புரிந்தாள். அன்புக்குரியவர்களே! ஒருவேளை  நீங்களும், உங்களிடத்தில் காணப்படுகின்ற ஏதேனும் பலவீனங்களை நினைத்து  கலங்குகிறீர்களா? கலங்காதீர்கள், வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல்வேறு  பாடுகள், துன்பங்கள் போன்றவற்றால் சோர்ந்து போனீர்களா? சோர்ந்து  போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப்  பெருகப்பண்ணுகிறார் (ஏசாயா 40: 29) என்று திருமறை கூறுகிறது. எனவே  சோர்ந்துபோகாதீர்கள்.

திருத்தூதுவர் பவுல் ஒரு முறை தனது சரீர  பெலவீனம் நீங்கும்படி கடவுளிடத்தில் வேண்டிக்கொண்டார். அதற்கு கடவுள், உன்  பலவீனத்திலே என் பெலன் பூரணமாய் விளங்கும் (2கொரி 12:9) என்று கூறி அவரைப்  பெலப்படுத்தினார். திருத்தூதுவர் பவுலைப் பெலப்படுத்தின ஆண்டவர் உங்களையும்  நிச்சயமாகப் பெலப்படுத்துவார். ஆகவே உங்களிடத்தில் காணப்படுகின்ற  பலவீனங்களைக் குறித்து கவலைப்படாதீர்கள்! கடவுளின் திருமுன்னிலையில்  உங்களுடைய பலவீனங்களைக் குறித்து கூறி, உங்களுடைய பலவீனங்கள் நீங்கும்படி  வேண்டிக் கொள்ளுங்கள்.

கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் புதுபெலன்  அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் (ஏசா. 40: 31)  என்ற திருமறை வசனத்தின்படி கடவுள் உங்களுக்குப் கழுகுக்கு நிகரான புதிய  பெலனைத் தந்து, உங்களை ஆசீர்வதிப்பார். ஆண்டவரையே முழுமனதுடன்  நம்பி, அவரையே உங்கள் பெலனாக சார்ந்து கொள்ளுங்கள்: ஆண்டவரே என் பெலன் என  அறிக்கைப் பண்ணுங்கள்: அப்பொழுது ஆண்டவர் உங்களைப் பெலப்படுத்தி, உயரமான  ஸ்தலங்களிலே உங்களை நடக்கப்பண்ணுவார். இறைவன்தாமே உங்கள் அனைவரையும்  ஆசீர்வதிப்பாராக!

-Rt.Rev.Dr.S.E.C. தேவசகாயம்,
பேராயர், தூத்துக்குடி
நாசரேத் திருமண்டலம்.

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்