SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறைவன் நம்மோடு இருக்கிறார்

2020-09-02@ 11:29:46

ஆவியின் கனி -10

இதோ உலகத்தின் முடிவு பரியந்தம். சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன். (மத்தேயு 28 : 20) ஒரு தேசத்தை ஆட்சி செய்த ராஜா, தனது பிறந்த நாளை முன்னிட்டு, அந்நாட்டின் சிறைகளிலிருந்த, திருந்திய கைதிகளில் பத்துபேரை விடுதலை செய்யவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அந்த பத்து பேருக்கும் அவர்களின் சொந்தக்காரர்கள் யாரேனும் ஒருவர் முன்வந்து, பரிந்துரை செய்யவேண்டும் என்பதை நிபந்தனையாகக் கூறினார். அவர்களில் ஒன்பது பேருடைய சொந்தக்காரர்கள், நாங்கள் இவர்களுக்காகப் பரிந்துரை செய்கிறோம் எனக்கூறி, அவர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், ஒருவன் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தான். ராஜா அவனைப் பார்த்து, உன் உறவினர்கள் யாரும் வரவில்லையா? என்று கேட்டார்.

அதற்கு அவன், ஆம்! சொந்தம் என்று சொல்லிக் கொள்ளவும், எனக்காகப் பரிந்துரை செய்யவும், எனக்கென்று ஒருவருமில்லை என்று கண்ணீர் மல்கக் கூறினான். அப்பொழுது ராஜா, மிகுந்த பாசத்துடன் தனது கரங்களை அவனது தோளின்மேல் வைத்து, கலங்காதே, இனிமேல் நானே உனக்கு சொந்தக்காரன், உனக்காக நானே பரிந்துரை செய்கிறேன் என்று கூறி அவனை விடுவித்தார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயர்களிலே ஒன்று இம்மானுவேல் என்பதாகும். இம்மானுவேல் என்பதற்கு கடவுள் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாகும். அந்த சிறைக் கைதி தனக்கு யாருமே இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்தான். ஆனால் அந்நாட்டு ராஜா நான் உன்னோடு இருக்கிறேன் எனக்கூறி அவனைத் தைரியப்படுத்தினார்.

அன்புக்குரியவர்களே! நமது வாழ்விலும், எப்போதும் நம்மோடிருக்கும் ராஜா ஒருவர் உண்டு, அவர்தான் இயேசு ராஜா, சர்வ உலகையும் படைத்து, நித்திய காலமாக ஆட்சிசெய்யும் ராஜா. அவர் நம்மைப் பார்த்து; இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்று கூறுகிறார். எனவே நாமும் கலங்காதிருப்போமாக! தன் சகோதரனிடமிருந்து உயிர்பிழைப்பதற்காக, பயத்தோடும், நடுக்கத்தோடும் சொந்த ஊரைவிட்டுச் சென்ற யாக்கோபு வழியிலே சோர்ந்து போய், கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின் கீழ் வைத்து படுத்து உறங்கினார். அப்பொழுது இறைவன் அவருக்கு தரிசனமாகி,
நான் உன்னோட இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்: நான் உனக்குச் சொன்னதை செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை (ஆதியாகமம் 28 : 15) என்று கூறி அவரைத் திடப்படுத்தினார்.

மேலும், தாம் கூறியபடி, இறைவன் யாக்கோபோடுகூட இருந்து அவரை அற்புதமாக வழி நடத்தினார். யாக்கோபு என்னும் இறையடியவரோடு கூட இருந்து, அவரது பிரயாணங்களை ஆசீர்வதித்த ஆண்டவர் நம்மோடும் இருக்கிறார்: நம்மோடும் வருகிறார். எனவே, ஒவ்வொரு நாளும் வெளியிடங் களுக்கு நாம் செல்வதற்குமுன்பு, இம்மானுவேலரே! என்னோடுகூட வாரும் என்று இறைவனிடத்தில் ஜெபித்து, பயணத்தைத் தொடங்குவோமாக !  இம்மானுவேலராகிய இறைவன் நம்மோடும் வந்து நம்மை ஆசீர்வதிப்பார். வாழ்வில் பல்வேறு பிரச்னைகள், துன்பங்கள், ஆபத்துகள் நேரிடும்போதும், நாம் மனம் சோர்ந்துபோக வேண்டாம். ஏனெனில், உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் (எரேமியா 1: 8) என்று இறைவன் கூறுகிறார்.

எனவே, நமது வாழ்வில் ஏற்படும் எல்லாப் போராட்டங்களிலும், ஆபத்தான சூழலிலும் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கைப் போராட்டத்தில் ஜெயம்பெற்று முன்னேறுவோமாக! அன்புக்குரியவர்களே! இறைவன் நம்மோடிருக்க வேண்டுமெனில், நாம் நமது இதயத்தில் அவருக்கு இடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு நமது உள்ளத்தில் நாம் அவருக்கு இடம் கொடுத்து வாழ்ந்தால் அவரும் நம்மோடுகூட இருப்பார்: நம்மை வழிநடத்துவார். இறைவன்தாமே நமது வாழ்க்கைப் பயணத்திலும், வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற அனைத்து போராட்டங்களிலும், வாழ்வின் கடைசி வரையிலும் நம்மோடுகூட இருந்து நம்மை ஆசீர்வதிப்பாராக!

Rt.Rev.Dr.S.E.C. தேவசகாயம் பேராயர், தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம்

மேலும் செய்திகள்

Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்