SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள் : மாயங்கள் செய்யும் புதன்

2020-08-21@ 13:14:51

ஏழாம் வீட்டில் சனிபகவான் இருப்பது பெரும்பாலும் நல்ல அமைப்பு இல்லை எனச் சொல்லலாம். அந்தந்த லக்னத்தைப் பொறுத்த பலன்கள் சாதக பாதகமாக அமையும். அதே நேரத்தில் சனி பகவானுக்கு இந்த ஏழாம் இடம். அதிக பலத்தைத் தரும் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றது. பெண்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் திருமணத்தில் தடைகள், தாமதங்கள், குழப்பங்கள் இருக்கும். வயோதிகமான தோற்றம் இருக்கும். இரண்டாம் தாரமாக செல்லக் கூடிய அமைப்பு உண்டு. எந்த முடிவுகள் எடுப்பதிலும் குழப்பம் அடைவார்கள் அடிக்கடி எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள். எதையாவது நினைத்து குழப்பம் அடைவதுடன் மற்றவர்களையும் குழப்புவார்கள். முகத்தில் எப்போதும் இனம் புரியாத கவலை நிறைந்த தன்மை இருக்கும். எதையுமே ஒரு சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள்.

நண்பர்கள், தோழிகள் என்ற நிலையில் எல்லோருடன் ஒத்துப் போகமாட்டார்கள் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வரும். கூட்டுத் தொழில் இவர்களுக்கு சரிப்பட்டு வராது. வேறு கிரக பார்வை பலம் இருந்தால் ஓரளவு வண்டி ஓடும். மறதி, சோர்வு, தனிமை, படபடப்பு, சுயபச்சாதாபம் என கலவையான குணாதிசயங்கள் இருக்கும் இதன் காரணமாக இல்லற வாழ்க்கை நிறை குறைகளுடன் அமையும். கணவன், மனைவி இருவரின் விருப்பங்கள், ஆசைகள் எல்லாம் முரண்பட்டதாகவே இருக்கும். சாதாரணமான ஒரு சுவை, நிறத்தில் கூட ஒத்துப் போகாத ரசனை இருக்கும். தயக்கம், தாழ்வு மனப்பான்மை அதிகம் உடையவர்கள்

தாம்பத்தியம், உடல் உறவு என்பது ரசனை இல்லாமல் இருக்கும். உடல் உறவு நாட்டம், காம இச்சை திருப்திகரமாக அமையாது. இதன் காரணமாக கருத்து வேறுபாடுகள், மன முறிவு, உடல் தளர்ச்சி, இடைவெளி, பிரிந்து வாழ்வது, விவாகரத்து போன்ற சூழ்நிலைகள் உண்டாகும்.ஒரு சிலருக்கு பொது தொண்டில் ஆர்வம், சேவை மனப்பான்மை இருக்கும். அடிக்கடி வாகன விபத்துக்கள், கை, கால் களில் அடிபடுவது போன்றவை ஏற்படும். தாயாருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கும், தாயைப் பிரிந்து இருக்க வேண்டியகட்டாயம் ஏற்படும். தாய் வழி உறவுகளால் பிரச்னை, வழக்குகளை சந்திக்க வேண்டி வரும். பூர்வீக சொத்து சம்மந்தமாக பிரச்னைகள் வரலாம். அடிக்கடி வழக்கு, கோர்ட்டு என்று அலைவார்கள். வாழ்க்கையில் எந்த வகையிலாவது நீதிமன்ற தொடர்பு ஏற்பட்டு விடும். ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு, விந்து பிரச்னை, மூலம், பௌத்திரம், ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். அடிக்கடி பயணங்கள் இருக்கும், பயணத் திட்டங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். பொருட்கள் தொலைந்து போகும். அதனால் பயணத்தின் போது கவனம் தேவை. இடம் மாற்றம் அடிக்கடி இருக்கும். வீட்டை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில், குடும்பத்தில் பற்றற்ற நிலையே இருக்கும்.

ஒருவர் ஜாதகத்தில் புதன் உயர்ந்த உச்ச பலத்துடன் இருக்கிறார் என்றால் அது அவர்களின் நடை, உடை, பாவனை மற்றும் செயல்பாடுகளில் வெளிப்பட்டுவிடும். அமைதியும், ஆழ்ந்த சிந்தனையும், சூழ்நிலைகளை உணர்வதும். இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவதும். எதையும் கிரகித்து உள்வாங்கி உணர்வதும் புதனின் அருட் கொடையாகும். புதன் ஒரு மாய கிரகம், அந்த விந்தைகள், வித்தைகளை யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது. எந்தச் சூழ்நிலையிலும் சற்றும் மனம் தளராது, தன் நிலை இழ
க்காமல் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்று கணக்குப்போட்டு காய் நகர்த்துவார்கள் புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம். இவர்கள் பம்மி பதுங்குவது போல் தெரிந்தாலும் பக்குவமாக காய் நகர்த்தி சிக்கல்களின் முடிச்சை அவிழ்க்கும் திறன் பெற்றவர்கள். ஆகையால் தான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற ஜோதிட சொற்றொடர் ஏற்பட்டது. அதாவது ஜாதகத்தில் பொன்னவன் என்று அழைக்கப்படும் குரு பலமாக இருந்து, குரு பார்வை யோகமாக இருந்தாலும் புத்தி தாதா என்று அழைக்கப்படும் புதன் அதீத பலத்துடன் இருந்தால் தான் கல்வி, வித்தை, புத்தி சாதுர்யம்சிறப்பாக அமையும்.

சொந்த பிரச்னை, குடும்ப பிரச்னை, பொதுப் பிரச்னை, அரசியல் பிரச்னை, நாட்டுப் பிரச்னை, பஞ்சாயத்து போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்களை எல்லாம் எப்படி எதிர் கொண்டு கையாள வேண்டுமோ அப்படி எதிர் கொண்டு புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றியின் இலக்கை எளிதாக அடைவார்கள். இவர்களின் எண்ணங்கள், செயல்கள் நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்வது மிகவும் கடினம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆனால் இவர்களின் முகபாவனைகளில் இருந்து எதையும் தெரிந்து கொள்ள முடியாது. இடத்திற்குத் தக்கவாறு, நேரத்திற்குத் தக்கவாறு தங்களை தயார் படுத்திக்கொள்வார்கள். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்வார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி எதிரில் இருப்பவர்களின் எண்ண, மன ஓட்டத்தை மிகச் சரியாக கணித்து விடுவார்கள்.

எடுத்தேன், கவிழ்த்தேன், உடைத்தேன் என்ற செயல்பாடுகள் இவர்களிடம் இருக்காது, முதிர்ச்சி அடைந்த செயல்பாட்டின் வடிவம் இவர்கள்தான் என்றால் அது மிகையாகாது. இயற்கையாகவே அனுபவ ஞானம் இவர்களிடம் அபரிமிதமாக இருக்கும். அனுபவம் தருவதை அறிவு தருவது கிடையாது. இவர்களை அனுபவ சுரங்கம் என்று சொல்லலாம். காரணம் இவர்களின் நினைவாற்றல் அளப்பரியது. கண் பார்த்தால் கை செய்யும் என்று சொல்வார்கள் அந்தளவிற்கு இவர்களிடம் வித்தை இருக்கும். பிறர் உதவி, துணை இன்றி எதையும் தாமாகவே கற்றுத் தெரிந்து கொள்வார்கள். சமாதானமாகப் பேசி ஒரு காரியத்தை கன கச்சிதமாக முடிப்பதில் வல்லவர்கள்.
அறிவு, புத்தியை வைத்துத்தான் எல்லா விஷயங்களும் இயங்குகின்றது. மூளை, நரம்பு மண்டலங்களின் செயலாற்றல் இல்லாமல் மனிதனால் எதுவும் செய்ய முடியாது.

புதன் அருள் பெற்றவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளில் பாடங்களை சட்டென்று புரிந்து கொண்டு அதிக சிரமம் இல்லாமல் மதிப்பெண்கள் பெற்று முதலாவதாக தேர்ச்சி அடைவார்கள். இப்படிப் பட்டவர்களை கற்பூர புத்தி என்று சொல்வார்கள். ஆட்சி, அதிகாரம், தொழில், வியாபாரம், கலைத்துறை, பேச்சு, எழுத்து, சொல்லாற்றல் என எல்லாவற்றிலும் புதனின் சாகசம் இருக்கும். புதனுக்கு கணக்கன் என்ற பெயர் உண்டு. எந்த ஒரு விஷயத்திற்கும். கணித அறிவு தேவை. கணக்காளர்கள், பொருளாதார நிபுணர்கள், ஆடிட்டர்கள் எல்லாம் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். வழக்கறிஞர்கள், வாய்மூலம் பேசி தொழில் செய்பவர்கள் கம்ப்யூட்டர் துறை, காவல் துறை, புலனாய்வுத்துறை, உளவுத்துறை, நுண்ணறிவுப் பிரிவு போன்றவற்றில் சிறந்து விளங்க புதனின் பலம் அவசியமாகும்.

புதன் ஆதிக்கம், அம்சத்தில் பிறந்தவர்களை அவரவர்கள் ஜாதக அமைப்பை வைத்துத் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் பொதுவாக சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். மிதுன ராசி, மிதுன லக்னம், கன்னி ராசி, கன்னி லக்னம், புதன் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை, ரேவதி. மற்றும் பிறந்த தேதி 5,14,23 ஆகியவற்றில் பிறந்தவர்கள் எல்லாம் புதனின் அம்சம் உள்ளவர்கள். இன்னும் சில நுணுக்கமான அமைப்புக்கள் உள்ளன. அதை அந்தந்த ஜாதக அமைப்பு கிரக பார்வை, ஆட்சி, உச்சம், வர்கோத்தமம் போன்ற அமைப்புக்களை வைத்து முடிவு செய்ய வேண்டும்.

சுக்கிரன், ராகு கேதுவுடன் சேர்ந்து இருப்பது நல்லதல்ல. ஜாதகருக்கு தீய பழக்க வழக்கங்கள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இல்லற வாழ்க்கையில் இன்பம் இருக்காது. அடிக்கடி மனக்கசப்பு, பிரிவு, பிரச்னைகள், கோர்ட், வழக்குகள், பஞ்சாயத்து, ஜீவனாம்சம் என நிம்மதியற்ற தன்மை இருக்கும். இயல், இசை, நாடகம், கலைத்துறையில் பிரபலம் அடையும் யோகம் உண்டு.எந்த ஒரு ஜாதகத்திலும் சுக்கிரன், புதன், சந்திரன். சம்பந்தம் ஏற்பட்டு இருந்தால் எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். திரு மணத்திற்கு பிறகு நல்ல ராஜ யோக வாழ்க்கை அமையும். காதல் திருமணத்திற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏதாவது ஒரு வகையில் மிகப் பிரபலமடைவார்கள். ஜாதகத்தில் எந்த வகையிலாவது சனி, புதன் சேர்ந்து இருப்பதால் அந்தந்த ஜாதக லக்னம், கிரக அமைப்பின் படி பலா பலன்கள் இருக்கும். பொதுவாக இந்த இரண்டு கிரகங்களும் ஏதாவது ஒருவகையில் சம்பந்தப்படும் போது உடல் சம்மந்தமான பிரச்னைகள் ஏற்பட்டுவிடுகிறது. சாஸ்திரத்தில் இந்த இரண்டு கிரகங்களையும் நபும்ச கிரகங்கள் என்று அழைக்கிறார்கள். அதாவது மூன்றாம் பாலின கிரகங்கள். சனி ஆண் மனம் கொண்ட மூன்றாம் பாலின கிரகம், புதன் பெண் மனம் கொண்ட மூன்றாம் பாலின கிரகம்.

இந்த இரண்டு கிரகங்களில் எந்த கிரகத்தின் பலம் அதிகமாக இருக்கிறதோ அதற்கேற்ப ஜாதகரின் நடை, பாவனை அமையும். இவர்களிடம் கூச்ச சுபாவம் மிகுந்து காணப்படும், எந்த விஷயத்திலும் ஒரு தயக்கம் காட்டுவார்கள். ஆண்களாக இருந்தால் ஆண்மைக் குறைவு உண்டாகும். மனதில் இனம் புரியாத பயம் இவர்களை ஆட்டிப்படைக்கும். நரம்புத்தளர்ச்சி, வலிப்பு நோய்கள் மூலம் அவதிப்படுவார்கள். தன்னம்பிக்கை குறைந்து இருக்கும். மறதி சோர்வு, சலிப்பு, சுய பச்சாதாபம் மேலோங்கி இருக்கும்.பெண்களாக இருந்தால் பெண்மைக் குறைவு உண்டாகும். அடிக்கடி உணர்ச்சி வசப்படுவார்கள், சந்தேக புத்தி இருக்கும். பயம், பீதி, மன சஞ்சலம் இருக்கும். பல விதமான எண்ணங்கள் அலைமோதும். தன்னை மறந்த நிலையில் தனக்குத்தானே பேசிக் கொள்வார்கள். இயலாமை காரணமாக பொறாமை குணம் ஏற்படும். தாம்பத்யத்தில் எதிர்பார்ப்புகள் சரியாக கிடைக்காத போது ஏமாற்றம் அடைவார்கள். அதனால் கணவன், மனைவிக்கிடையே மனக்கசப்புகள், இடைவெளி ஏற்படும்.

பொதுவாக மூன்றாம் பாலினத்தன்மை இருக்கும் சிலருக்கு மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை காரணமாக அதிக பாதிப்பு இருக்காது. இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் நரம்பு மண்டலம், சிந்தனை சக்தி, செயல் திறன், ஆளுமைத்திறன்பாதிக்கப்படும். ஒருவர் ஜாதக கட்டத்தில் சுக்கிரன், செவ்வாய் சேர்ந்து இருக்கும் அமைப்பு. பல சங்கடங்களை ஏற்படுத்தும். ஒவ்வொரு லக்னத்தையும் பொறுத்து குறைவாகவும், அதிகமாகவும் இருக்கும். இந்த இரண்டு கிரகங்களும் பாலுணர்ச்சியை தூண்டக் கூடியவையாகும். அதனால் இவர்களுக்கு காம சுகம் மிகுந்து காணப்படும். உடல் இச்சையில் அதிக நாட்டம் இருக்கும். இவர்கள் மிக வரைவில் தன் நிலை இழந்து விடுவார்கள். அற்ப சுகத்திற்காக எந்த கீழ் நிலைக்கும் இறங்கி வரத்தயங்க மாட்டார்கள். அற்ப சிநேகிதம் பிராண சங்கடம் என்று சொல்வார்கள். அதற்கேற்ப சில அவமானங்களை சந்திப்பார்கள். லக்னாதிபதி, சந்திரன். பலமாக அமைந்து இருந்தால் மேற்படி உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வார்கள்.

எப்படி இருந்தாலும் இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவிக்குள் மனக்குறைகள் உண்டாகும். ஆகையால் இக்குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய திருமணப் பொருத்தம் பார்க்கும்போது இரண்டு ஜாதகத்திலும் சுக்கிரன், செவ்வாய் இருவரின் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து தீர்மானிப்பது மிகவும் முக்கியமாகும். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளில் இருந்தால் வியாழ வட்டம், என்றும் குரு வளையம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு சமூகத்தில் உயர்ந்தஅந்தஸ்தை ஏற்படுத்தும். நிதி, நீதித்துறையில் பணியாற்றும் யோகத்தை தரும். ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். கோயில் திருப்பணிகளை முன்னின்று நடத்தும் பாக்கியம் கிடைக்கும். அரசியலில் உயர் உச்சபதவிகளை அடைவார்கள். பூர்வ புண்ணிய பலத்திற்கு ஏற்ப நாடாளும் யோகம் உண்டு.

சந்திரனுக்கு நான்குக் குடையவன் கேதுவுடன் சேர்ந்தாலும் அல்லது கேதுவுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் அந்த அமைப்பு தெய்வாம்சம் பொருந்திய அமைப்பாகும். இவர்கள் வாக்கு பலிதமும், கைராசி மிக்கவர்களாவார்கள். இவர்களுக்கு இயற்கை யிலேயே உள்ளுணர்வு, சில அமானுஷ்ய
சக்திகள் இருக்கும். மந்திரம், தந்திரம், யந்திரம், ஞான மார்க்கம், யோகம் சித்திக்கும். இவர்களின் சொல்லிற்கு மந்திர சக்தி இருக்கும். இவர்களால் தொடங்கி வைக்கப் படும் நல்ல விஷயங்கள் நவ நவமாக பல்கி பெருகும்.

ஜோதிட முரசு
மிதுனம் செல்வம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்