SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெற்கதிரை காத்த குழலி அம்மன்

2020-06-30@ 11:08:06

செய்துங்கநல்லூர், தூத்துக்குடி

செய்துங்கநல்லூர் கிராமத்தில் பெரும் நிலக்கிழார் சுந்தரமூர்த்தி அய்யர். இவரிடம் பலபேர் பணியாளர்களாக வேலைப்பார்த்து வந்தனர். இருப்பினும் விவசாய நிலங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த பக்கத்து கிராமமான வேலங்காடு என்ற ஊரைச்சேர்ந்த பெரியமாடன், மாடத்தி தம்பதியினர்தான் நம்பிக்கைக்கு உரியவர்களாக திகழ்ந்தனர். இவர்கள் வயல் வேலை மட்டுமன்றி, வீட்டில் உள்ள கால்நடைகளையும் பராமரித்து வந்தனர்.

அய்யர் வீடு தான் அவர்களுக்கு உலகம். அந்தளவு விசுவாசத்துடன் அவர்கள் வேலைப்பார்த்து வந்தனர். ஒரு முறை தை மாதம் அறுவடை செய்ய வேண்டியது, நாள் தள்ளிப்போனது. காரணம் அப்போது வயல் நடுவும் பருவம் தள்ளியே இருந்ததால் அறுவடையும் காலம் தள்ளிப்போனது. மாசி மாதம் முதல் நாளன்று, அய்யர், பெரிய மாடனை அழைத்தார்.

‘‘ஏலே, பெரிய மாடன், அடுத்த வாரம் பௌர்ணமி வருது, நிறைஞ்ச நாள் அன்னைக்கு நாம அறுவடை வச்சுக்கலாம், முதல்ல குளத்து மேட்டு வயலிலே அறுவடையை ஆரம்பிக்கணும், என்ன, நான் சொல்றது விளங்குதாலே, அப்புறம் மாடத்திகிட்ட, கட்டுசுமக்க ஆட்களை தயார் பண்ணிவைக்க சொல்லு,’’ என்றார்.பெரியமாடன் ‘‘சரிங்க சாமி,’’ என்றதும், அய்யர் மேலும் தொடர்ந்தார்.

‘‘எல்லாம் தடாபுடல்ண்ணு இருக்கணும். அறுவடைக்கு முந்தைய நாள் பிள்ளையாருக்கு தேங்காய் பழம் உடைச்சு பூஜை வைக்கணும், நீ கதிர் அறுவா கொண்டு வந்து சேரு, என்று கூற, ‘‘வந்திடுறேன் சாமி.. ’’என்று கூறிய படி விடைபெற்றான் பெரிய மாடன். மதியம் உணவு உண்ட பின் கட்டிலில் இருந்து வெற்றிலையை மென்றவர், அப்படியே தூங்கிவிட்டார். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு உள்ளே வந்த மாடத்தி, கட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெரிய மாடனை எழுப்பினாள்.

‘‘ஏனுங்க, என்னாச்சு உடம்புக்கு, வயக்காட்டுல ஜோலி எவ்வளவு கிடக்கு, ஒரு கலயம் கஞ்சிய குடிச்சுப்புட்டு, ராசாவாட்டம் மத்தியான நேரம் கட்டிலில கிடந்து உறங்குறீங்களாங்கும்.’’ என்று பேசிய மாடத்தியிடம்  பதிலுரைத்தார் பெரிய மாடன், ‘‘மாடத்தி, நேத்திக்கி ராத்திரி, காட்டுப்பன்றி தொல்லை தாங்க முடியல, பனியில அத விரட்டி, தூக்கமும் போச்சு, குளிரும், காய்ச்சலும் வந்து சேர்ந்துச்சு, இப்ப, தலை தூக்கி இருக்க முடியல, என்றதும், ‘‘அதான் பார்த்தான் சும்மா படுக்கமாட்டேளே, சரி, பொறுங்க கசாயம் காய்ச்சி தாரேன்’’ என்று கூறிக்கொண்டு கசாய
ம் காய்ச்சினாள் மாடத்தி.

அந்தி கருக்கல் நேரம் வயல் காவலுக்கு புறப்பட்ட பெரியமாடனை தடுத்தாள், மாடத்தி, ‘‘ உங்க கூட, இன்னிக்கு, நானும் காவலுக்கு வாரேன், வயக்காட்டு குடிசையில ஒத்தையில கிடந்து, உங்களுக்கு ஏதாச்சும் ஒண்ணுண்ணா, என்ன பன்றது, அதனால நானும் வாரேன். ‘’
‘‘ராத்திரி நேரம், வயக்காவலுக்கு நீ எதுக்கு புள்ள, வூட்டுல பிள்ளங்க கூட படுத்து தூங்கு.’’

‘‘ முடியாது, இன்னும் இரண்டு நாளிலே அறுவடை இருக்கு, பயிற, காட்டு விலங்குகிட்டயிருந்தும், கள்ளனுங்க கிட்டயிருந்தும் நாம காப்பாத்துனும். அய்யரு சாமி, நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காக, நாம உசரா நினைக்கிறது. அந்த நம்பிக்கையும், அவங்களுக்கு காட்டுற விசுவாசுமும்தேன், அவகளுக்காக, நம்ம உசுரு, போனாலும் அது பெரும தான, அதனால நானும் வருவேன் என்று கண்டிப்புடன் கூறிய மாடத்தி, சூடுபடுத்திய தண்ணீர் நிரப்பிய தூக்கு பாத்திரமும், 2 கோணி பைகளையும் கையில் எடுத்துக்கொண்டு, தனது கணவன் வைத்திருந்த வேல்கம்பை வாங்கிக்கொண்டு, வீச்சருவா ஒன்றை கணவனிடத்தில் கொடுத்து, இப்போ வாங்க போகலாம்’’ என்று கூறினாள்.

நடை பயின்றனர், இருவரும் வயல்காட்டை நோக்கி. வயல் காட்டில் உள்ள குடிலில் கட்டிலில் பெரிய மாடனும், அதன் அருகே தரையில் மாடத்தியும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் மாடத்தி...ஏம்மா, மாடத்தி என்று குரல் கேட்டது. திடுக்கிட்டு பார்த்தார் மாடத்தி. தூரத்தில் அய்யர் நிற்பது போலவும், பொழுது விடிந்து வருவது போலவும் தெரிந்தது. உடனே எழுந்த மாடத்தி கையில் வேல் கம்பை எடுத்துக்கொண்டு அவ்விடம்சென்று பார்த்தாள். அங்கே அய்யர் இல்லை.

‘‘சாமி, வந்தது மாதிரி இருந்திச்சே, ஓ. சொப்பனம் கண்டுயிருக்கேன். சரி.’’ என்றபடி, தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு குடிலை நோக்கி வரும் போது, கதிரறுக்கும் சத்தம் கேட்டது. யாரது இந்த நட்ட நடு ஜாமத்துல, இங்க வந்து கதிரறுக்கிறது என்று பார்க்கிறாள். வயலுக்குள் நடு வரப்பில் இருந்து, அதே ஊரைச் சேர்ந்த பலவேசமும், செல்லையாவும் கதிரை மட்டும் மேலோட்டமாக அறுத்துக் கொண்டிருந்தனர். அதைப்பார்த்த மாடத்தி, உடனே வேகமாக குடிலுக்கு திரும்பினாள். வந்த வேகத்தில் கணவரை எழுப்ப முயற்சிக்கிறாள். அவளுக்கு பலவாறு சிந்தனைகள் தோன்றியது, தனது கணவர் உடம்பு சரியில்லாம படுத்துக்கிறாரு, அவர போய் எழுப்பிகிட்டு எதுக்கு, நாம போய் அய்யர் சாமிகிட்ட சொல்லிடுவோம் என்று எண்ணி தனது தலைமுடியை முடித்து கொண்டை இடுகிறாள்.

எழும்போதே புத்தி தடுமாறுகிறது. அய்யர்கிட்ட சொன்னா, 2 பேரையும் பஞ்சாயத்து நிக்கவப்பாங்க, நஷ்ட ஈடு கேப்பாங்க 4 பொம்பள பிள்ளைய பெத்துவச்சிருக்கான் பலவேசம். அதனால நாமளே 2 சத்தத்தை போட்டு, கண்டிச்சி அனுப்பி வைப்போம் என்று முடிவு எடுத்துக்கொண்டு, வயல் வரப்புக்குள் சென்றாள். வரப்புக்கு முன் காலெடுத்து வைக்கும் போது, ஒருவர் தள்ளிவிடுவது போல் இருக்க, வயலுக்குள் விழுந்தாள் மாடத்தி, என்ன நம்மள யாரு தள்ளிவிடுறது. என்று எழுந்து மீண்டும் நடந்தாள் வேகம் கொண்டு, யாரு.. வயல்ல என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க, அண்ணேன் பலவேசம், திரும்பி பார்க்காம போயிடுங்க, இல்லேண்ணா, நான் ரெம்ப பொல்லாதவளாயிடுவேன் என்று சத்தம் போட்டவாறு நடந்து கொண்டே அவர்கள் பக்கம் சென்றாள். அப்போது செல்லையன் சொன்னான்.

பலவேசம், மாடத்தி நம்மள காட்டி கொடுத்துவிடுவா, விடிஞ்சதும் நம்ம மானம் கப்பல ஏறிரும். அதனால..., உடனே பலவேசம் கேட்டான். சொல்லு செல்லையா, என்னது அதனால... செல்லையன் தொடர்ந்தான் அவ கதையை முடிச்சிடுவோம். இருவரும் தங்கள் கையிலிருந்த கதிரறுக்கும் அரிவாளால் மாடத்தியின் கழுத்தை அறுத்தனர். கழுத்தை வயலுக்குள்ளும், உடலை வாய்க்காலிலும் போட்டு விட்டு, அறுத்த கதிர்களை அள்ளிச் சென்றனர்.மறுநாள் காலை செய்துங்கநல்லூரைச் சேர்ந்த மேகலிங்கமூப்பனார் வந்து வரப்புகளில் கோரப்புல் அறுத்துக்கொண்டிருந்தார். அவரது மனைவி வடிவு, தனது கணவருக்கு சாப்பாடு கட்டிக்கொண்டு கோரப்புல் அறுப்பதற்கு சிறிது நேரத்திற்கு பின் அங்கு வருகிறாள்.

இருவரும் அய்யர் வயக்காட்டில் வரப்பில் கோரப்புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது, புல்களின் இடையே கிடந்த மாடத்தியின் தலையிலுள்ள முடி, இவரது கையில் சிக்க, அதையும் அறுத்து விடுகிறார். அப்போது பயங்கரமான குலவை சத்தம் கேட்கிறது. இருவரும் திடுக்கிட்டனர். அவர்களுக்குள் ஒரு விதமான பயம் தோன்றியது. அப்போது சற்று தூரத்தில் பார்த்தனர் அங்கே மாடத்தியின் தலை கிடந்தது. உடனே பயந்து போன இருவரும் அறுத்த புல்லை கூட எடுக்காமல் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். வந்த நேரம் முதல் வாந்தி, பேதி எடுத்து மூப்பனார் படுத்த படுக்கையானார். அவரது மனைவி வடிவுக்கும் காய்ச்சல் அடித்து சாப்பாடு இறங்காமல் அவதி பட்டு வந்தார்.

அக்கம் பக்கத்தினர் அறிவுறுத்தலின் பேரில் சீவலப்பேரி ஊருக்கு குறி கேட்க செல்கின்றனர். அங்கு சன்னியாசி கோனார். அவர்களுக்கு குறி சொல்கிறார். நீங்கள் கண்டு அஞ்சிய அந்த தலை, மாடத்தியின் தலை என்றவர் தொடர்ந்து, மாடத்தியின் பிறப்பை கூறி, அவள் கொலை செய்யப்பட்டதை கூறுகிறார். பின்னர் அவளுக்கு கோயில் எழுப்பி வழிபட்டு வாருங்கள்.

நோய்கள் அகன்று, உங்கள் வாழ்வில் குறைகள் நீங்கி, நிறைகள் பெருகும் என்று கூறுகிறார். அதனையேற்று அவர்கள் ஊருக்கு வருகின்றனர். அவர்களது சொந்த பந்தங்கள் என 5 குடும்ப காரர்கள் இணைந்து மாடத்தி அம்மனுக்கு கோயில் கட்டுகின்றனர். குலவை சத்தம் எழுப்பியதால் குலவை அம்மன் என்று அழைத்து வந்தனர். அது பின்னர் குழலி அம்மன் என்று மருவியது.

குழலி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விழாவின் போது பல்வேறு விதமான இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டாலும், பூஜையின் போது மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படாமல் பெண்கள் குலவை சத்தம் எழுப்ப, பூஜை நடக்கிறது. இதை அம்மனும் விரும்புவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குறையோடு சென்று அம்மன் சந்நதியில் கண்ணீர் விட்டு அழுதால் நிச்சயம், அந்த குறைகள் அகன்று, நிறைகள் பெருகும் என்கின்றனர்.

அம்மனின் பக்தர்கள். இது மட்டுமல்லாமல் விவசாயம் செழிப்புற அம்மனை வேண்டி வழிபாடு நடத்துகின்றனர். வயல் அறுவடையானது முதல் நெற்கதிர்களை குழலி அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்கின்றனர். இந்த கோயில் நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள செய்துங்கநல்லூரில் இருக்கிறது.

செய்தி:  சு.இளம் கலைமாறன்

படங்கள்: முத்தாலங்குறிச்சி காமராசு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்