SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிர்ஷ்டதேவதை அவதரிப்பாள்

2020-06-10@ 09:42:12

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

?என் மகளுக்கு அடிக்கடி உடல்நலமில்லாமல் போகிறது. நரம்பு சம்பந்தமான வலி, கை கால் வலி, நெஞ்சு எரிச்சல், அஜீரணக் கோளாறு என்று சொல்கிறாள். 7 டாக்டர்களிடம் காண்பித்தாகி விட்டது. ஒன்றும் சரியாகவில்லை. தற்போது கர்ப்ப்பையை ஆப்ரேஷன் செய்து எடுத்துவிட வேண்டும் என்கிறார்கள். எங்களுக்கு பயமாக உள்ளது. ஆப்ரேஷன் செய்யலாமா?
- கஸ்தூரி,  திருவாரூர்.

உங்கள் மகளின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் உடல்நிலையைப் பற்றிச் சொல்லும் ஆறாம் வீடு என்பது கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பது தெரிகிறது. விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கிறார். சத்ரு, ரோக, ருண ஸ்தானம் ஆகிய ஆறாம் வீட்டில் சூரியன், புதன், சுக்கிரன், சனி ஆகிய நான்கு கிரகங்களின் இணைவு அவரது உடல்நிலையில் அவ்வப்போது ஏதேனும் ஒரு பிரச்னையைத் தந்து கொண்டிருக்கிறது. லக்னாதிபதி குருவும் நீசம் பெற்றிருக்கிறார்.

அதோடு ஜென்ம லக்கினத்தில் ராகுவின் அமர்வும் மனதளவில் பயத்தினைத் தந்து கொண்டிருக்கிறது. அவருடைய ஜாதகக் கணிதத்தின்படி தற்போது கேது தசையில் சந்திர புக்தி நடந்து கொண்டிருக்கிறது. கர்பப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுவதில் எந்தவிதமான தவறும் உண்டாகாது. ஆனால் அறுவை சிகிச்சை செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தால் அதனை 14.06.2020 - ற்குள் செய்துவிடுவது நல்லது. அதன்பின்பு நேரம் அத்தனை உசிதமாக இல்லை என்பதால் ஆப்ரேஷனை அதற்கு முன் செய்துவிடுதல் நலம்.

நாற்பத்தியேழு வயதாகும் உங்கள் மகள் இனி வரும் காலங்களில் ஏதேனும் ஒரு பிரச்னையால் உடல்நிலையில் சற்று சிரமத்தை அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார் என்பதால் மனதளவில் அவரை உற்சாகமாக இருக்கச் செய்வது அவசியமாகிறது. சதா கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் அவரை சுறுசுறுப்பாக இயங்கச் சொல்லுங்கள்.

வீட்டு வளாகத்தில் வேப்பமரம், எலுமிச்சை மரம், துளசிச்செடி முதலானவற்றை வளர்த்து வரச் சொல்லுங்கள். அவ்வப்போது எலுமிச்சை இலைகளை கசக்கி முகர்வதும், துளசி இலைகள் இரண்டினை வாயில் போட்டு மெல்வதும் அவரது உடல்நிலையில் நல்லதொரு முன்னேற்றத்தினைத் தரும். வெள்ளிக்கிழமை தோறும் ராகு கால பூஜை செய்து துர்கையம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டு வரச் சொல்லுங்கள். நோய் எதிர்ப்புச் சக்தி பெருகுவதோடு தீர்க்காயுளுடன் உங்கள் மகள் வாழ்வார் என்பதையே அவரது ஜாதகம் சொல்கிறது.

?என் மகன் படித்து நல்ல வேலையில் இருக்கிறான். எவ்வளவு முயன்றும் திருமணத்திற்கு பெண் அமையமாட்டேன் என்கிறது. 30 வயதாகியும் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. திருமணம் எப்போது நடக்கும்? பெண் எப்படி அமைவாள்? விரைவில் திருமணம் நடக்க வழி
சொல்லுங்கள்.
- ரவிச்சந்திரராவ், திருச்சி.


உங்கள் மகன் ஜாதகத்தில் களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் பாவகம் சுத்தமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஏழாம் பாவகத்திற்கு அதிபதி செவ்வாய் எட்டாம் வீட்டில் மறைவதால் பெண் இருக்கும் இடம் கண்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டிருக்கிறது. அதோடு களத்ர ஸ்தான அதிபதி செவ்வாய் வக்ர கதியிலும் அமர்ந்திருப்பதால் திருமணம் தடைபட்டுக் கொண்டிருக்கிறது.

அவரது ஜாதகத்தை பாம்பு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிதம் செய்து பார்த்ததில் ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, துலா லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பதும் அவரது ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து கொண்டிருப்பதும் தெளிவாகிறது. சுக்கிரன் ஜென்ம லக்னத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் சுக்கிர தசை முடிவடைவதற்கு முன்னால் திருமணம் செய்துவிட வேண்டியது அவசியமாகிறது. தற்போது நடந்து வரும் புதன் புக்தியின் காலம் அதற்கு துணை புரிவதால் வருகின்ற 29.05.2021 ற்குள் மகனின் திருமணத்தை நடத்திவிடுவீர்கள். தெற்கு திசையில் இருந்து பெண் அமைவார்.

உறவு முறையில் அமைவதற்கு வாய்ப்பு இல்லை. செவ்வாய் தோறும் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் மகனின் திருமணம் நல்லபடியாக நிச்சயம் ஆனவுடன் வயலூர் முருகனுக்கு சந்தனக்காப்பு உற்சவம் செய்வதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். திரை விலகி மணமகள் இருக்கும் இடம் விரைவில் கண்களுக்குத் தெரிய வரும். செவ்வாயின் வக்கிர சஞ்சாரத்தால் தடைபட்டு வரும் திருமணம் முருகப்பெருமானின் திருவருளால் நல்லபடியாக நடந்தேறும்.

?தங்கள் ஆலோசனையின் பேரில் என் மகளின் திருமணம் கடந்த பிப்ரவரி மாதத்தில் குலதெய்வம் கோயிலில் இனிதே நடைபெற்றது. மாப்பிள்ளையின் ஜாதகத்தில் ஐந்திற்கு உடைய செவ்வாய் ஆறில் சந்திரன் சாரம் பெற்று அமர்ந்திருப்பதும், குரு - கேதுவின் இணைவும் புத்ர தோஷத்தைத் தருமா? சுக்கிரன் சூரியனுடன் அஸ்தமனம் பெறுவது சயன தோஷமா? இருப்பின் இதற்கான பரிகாரம் என்ன?
- பாலாஜி, ஈரோடு.


தங்கள் மகளின் திருமணம் நல்லபடியாக நடந்தேறியது என்பதை அறிந்து அளவற்ற மகிழ்ச்சி. அவருக்கு எங்களது உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்த கையோடு அடுத்த சந்தேகம் உங்கள் மனதில் உருவாகியிருக்கிறது. மாப்பிள்ளையின் ஜாதகத்தில் ஐந்தாம் பாவகத்திற்கு அதிபதி ஆறில் அமர்ந்திருப்பதால் புத்திர தோஷம் உண்டா என்ற ஐயப்பாடு உங்களுக்குத் தோன்றியிருப்பதில் வியப்பேதும் இல்லை. இருந்தாலும் ஆறாம் வீடு மறைவு ஸ்தானம் என்ற விதியை மட்டும் வைத்துக்கொண்டு புத்ர தோஷம் என்ற முடிவிற்கு வந்துவிடக் கூடாது. அதே போல குரு - கேதுவின் இணைவு குழந்தை பாக்கியத்தை தடை செய்யும் என்றும் சொல்லக் கூடாது.

நீங்கள் உங்கள் கடிதத்தில் செவ்வாய் ஆறாம் வீட்டில் சந்திரனின் சாரம் பெற்று அமர்ந்திருக்கிறார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த சந்திரன் எந்த பாவகத்தில் அமர்ந்திருக்கிறாரோ அந்த வீடுதான் முழுமையான பலனை ஜாதகருக்குத் தரும். மாப்பிள்ளையின் ஜாதகத்தில் சந்திரன் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும், ஒன்பதாம் பாவகம் என்பது பரம்பரையைப் பற்றிச் சொல்லும் என்பதாலும், பாக்ய ஸ்தானம் என்றும், பூர்வ புண்ய ஸ்தானம் என்றும் அழைக்கப்படுவதாலும் நிச்சயமாக குழந்தை பாக்கியம் என்பது உண்டு.

அதிலும் அவரது பரம்பரை வாசத்தோடு அழகான குழந்தையாக பிறக்கும். சந்திரன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரனின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதாலும், அந்த சுக்கிரன் அஸ்தமனம் பெற்றாலும் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதாலும் அழகான பெண் குழந்தையை விரைவில் பெற்றெடுப்பார்கள். அதோடு புத்திர ஸ்தான அதிபதி செவ்வாயும் ரிஷப ராசியில் அதாவது சுக்கிரனின் வீட்டில் சஞ்சரிப்பதால் பெரும்பாலும் பெண் குழந்தையாகவும், அதிர்ஷ்ட தேவதையாகவும் அந்தக் குழந்தை அவதரிப்பாள். வீணான சந்தேகங்களை தவிர்த்துவிட்டு மகாலட்சுமியின் அம்சத்தில் பிறக்கவுள்ள பேத்தியை கொஞ்சுவதற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

?என் மைத்துனர் மகனின் ஜாதகம் அனுப்பியுள்ளேன். கடந்த 10 வருடமாக பெண் தேடி வருகிறோம். அவனது தாயாருக்கு பராலிஸிஸ் அட்டாக் வந்து வீட்டில் படுத்திருக்கிறார். என் மைத்துனர் மனம் வெறுத்துப்போய் உள்ளார். நல்ல சம்பளம், ஒரே பையனாக இருந்தும் திருமணம் ஆகவில்லை. நல்ல வழி காட்டுங்கள்.
- ருக்மணி, சென்னை.


நல்ல சம்பளம், ஒரே பையன் என்பது மட்டும் சிறப்பு தகுதியாக ஆகிவிடாது. தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், வாரத்தின் இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் ஊர் சுற்றுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். உங்கள் குடும்பத்தில் இவர் மட்டும் தனிமரமாக நிற்பதாகவும் எழுதியுள்ளீர்கள். அவரவர் கர்ம வினையை அவரவர் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்? நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனி எட்டாம் வீட்டில் செவ்வாயுடன் இணைந்துள்ளார். மேலும் களத்ர ஸ்தான அதிபதி சந்திரன் ராகுவின் சாரம் பெற்று ஆறாம் வீட்டில் அமர்ந்துள்ளார்.

திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மகர லக்கினத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகிய ஒன்பதாம் வீட்டில் ராகுவின் அமர்வு விதிப்பயனை அழுத்தம் திருத்தமாக உணர்த்துகிறது. குரு - சுக்கிரன் ஆகிய சுபகிரஹங்களும் ஆறாம் வீட்டில் இணைந்துள்ளனர். இவருக்கான திருமண யோகம் என்பது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னமேயே கடைசி வாய்ப்பாக வந்து சென்றிருக்கிறது.

வலிய வந்த வாய்ப்பினை என்ன காரணத்திற்காக தட்டிக் கழித்தீர்கள் என்பது உங்கள் குடும்பத்திற்கு மட்டுமே தெரிந்த உண்மை. இனி வரும் தசாபுக்தியின் காலத்தில் அவரது திருமணம் நடைபெறுவது என்பது இறைசக்தியின் கரங்களில்தான் உள்ளது. ஹனுமான் சாலிஸா படிப்பதும், ஆஞ்சநேயருக்கு மாலை சாற்றி வழிபடுவதும் இவரது நடவடிக்கைகளில் ஸ்திரத் தன்மையை உண்டாக்குமே தவிர, திருமணத்திற்கான வாய்ப்பினை உண்டாக்காது.

குலதெய்வ ஆராதனையை வலுவாகச் செய்து வரச் சொல்லுங்கள். குலதெய்வ வழிபாட்டினை சிரத்தையாக மேற்கொண்டு வந்தாலே இதுபோன்ற குறைகளைத் தீர்க்க இயலும் என்பதே முன்னோர்கள் நமக்குச் சொல்லிவிட்டுச் சென்ற உண்மை. 42வது வயது முடிவுறும் தருவாயில் உள்ள உங்கள் மைத்துனருக்கு குலதெய்வம்தான் வழிகாட்ட வேண்டும் என்பதையே அவரது ஜாதகம் உணர்த்துகிறது.

?வெளியூரில் இருந்து பெருநகரத்திற்கு இடம் பெயர்ந்த எனக்கு தொழில் தற்போது நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. தொழிலை மேலும் அபிவிருத்தி செய்ய ஆசைப்படுகிறேன். அவ்வாறு முதலீட்டினை அதிகரித்து புதிய முயற்சிகளில் ஈடுபடலாமா? அல்லது இருப்பதே போதுமென்று இருந்துவிடலாமா? சொத்து சேர்க்கை என்பது எவ்வாறு உள்ளது என்பதையும் அறிய ஆசைப்படுகிறேன்.
- பிச்சைபெருமாள், சென்னை.


சிறு வயதில் இருந்து நீங்கள் சந்தித்து வந்த அனுபவம் தற்போது உங்களை தொழில்முறையில் உயர்த்திப் பிடித்திருக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப தொழிலை அபிவிருத்தி செய்ய ஆசைப்படுவதில் தவறில்லை. பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்கினத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது நடந்து வரும் நேரம் நன்றாகவே உள்ளது. உங்கள் எண்ணத்தின்படி தொழிலை சற்று நவீனப்படுத்தி கொள்ளுங்கள். கணினி மயமாக்குதல், குளிர்சாதன வசதி, கார்டு பேமெண்ட் என உங்கள் தொழிலை இந்த காலத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதும் நல்லதே.

அதே நேரத்தில் அதிகப்படியான கிளைகள், வெளியூரில் தொழிலை அமைத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். நீங்கள் தற்போது செய்து வரும் அதே இடத்திலேயே தொழிலை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் ஜாதகப்படி தற்போது நடந்து வரும் கேது தசையின் காலம் தொழில்முறையில் முன்னேற்றம் காண நல்லபடியாக துணை செய்கிறது. சொத்து சேர்க்கை என்பதை இன்னமும் நான்கு ஆண்டுகள் கழித்துப் பார்த்துக் கொள்ளலாம். அதாவது சுக்கிர தசையின் காலத்தில் புதிய சொத்து வாங்க முயற்சிக்கலாம். அதுவரை நீங்கள் செய்யும் தொழிலில் மட்டும் கவனத்தை செலுத்தி வாருங்கள். 2024ம் ஆண்டின் முதற்பாதியில் துவங்க உள்ள சுக்கிர தசையின் காலம் உங்கள் வாழ்வின் பொற்காலமாக அமையும்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

தொகுப்பு: சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்