SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீரடி சாய்பாபாவின் 3 நாள் சமாதி நிலை..!

2020-05-21@ 10:36:20

சீரடி சாய்பாபாவுடன் தொடக்கக் காலத்தில் இருந்து இணைந்திருந்த பக்தர்களில் முதன்மையானவர் மகல்சாபதி. பாபாவுக்கு சந்தனம் பூசி, பூக்கள், நைவேத்தியம் படைத்து பூஜிக்கும் முறையை கொண்டு வந்தவர் இவர்தான். சாய் பாபாவுடன் அருகில் படுத்துத் தூங்கும் புண்ணியம் பெற்ற சிறப்பும் இவருக்கு உண்டு.சாய்பா பாவுடனான அவரது தொடர்பு 50 ஆண்டுகள் நீடித்தது. சாய்பாபாவின் ஆசியைத் தவிர வேறு எந்த பிரதிபலனையும் மகல்சாபதி எதிர்பார்த்தே இல்லை. பரம ஏழ்மை நிலமைக்குத் தள்ளப்பட்ட சமயங்களில் கூட பாபாவிடம் இருந்து மகல்சாபதி விலகவில்லை. பாபாவையே நம்பி பொறுமையாக, தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்தார்.

அவரது இந்த தன்னிகரற்ற குணம் சாய்பாபாவை மிகவும் ஈர்த்தது. “அவன் என்னுடையவன்” என்று மகல்சாபதியை அடிக்கடி பாபா புகழ்ந்து செல்வார். அது மட்டுமின்றி மிக முக்கிய விஷயங்களில் சாய்பாபா மற்ற எவரையும் நம்புவதை விட மகல்சாபதியையே பெரிதும் நம்பினார்.அதனால்தான் பாபா 1886-ம் ஆண்டு இந்த உலகமே வியக்கும் வகையில் 3 நாட்கள் சமாதி நிலைக்கு சென்று, மீண்டும் உயிர் பெற்று எழுந்த சாதனையை செய்த போது, அதற்கு மகல்சாபதியை மட்டுமே உதவிக்கு வைத்துக் கொண்டார். அந்த காலக் கட்டத்தில் சாய்பாபா மிகவும் ஆஸ்துமாவால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். அவருக்கு மகல்சாபதி பணி விடைகள் செய்தார்.

மார்கழி மாதம் பவுர்ணமி தினத்தன்று மகல்சபாபதியை சாய்பாபா அழைத்தார். புன்னகைத் ததும்ப பேசத் தொடங்கினார்….நான் அல்லாவைக் காண மேல் உலகம் செல்லப் போகிறேன். அப்படி செல்வதால் என்னை பாதித்துள்ள கடுமையான ஆஸ்துமாவும் விலகி விடும்.எனவே நான் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் இந்த உடலை விட்டு தங்கி இருப்பேன். இந்த 3 நாட்களும் என் உடலை நீ மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். நான் திரும்பி வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்.ஒரு வேளை, நான் 3 நாட்கள் கழித்து உயிர் பெறாவிட்டால் மசூதிக்கு அருகில் உள்ள திறந்தவெளியில் எனது உடலைப் புதைத்து விட்டு, அதன் மேல் இரண்டு கொடிகளை அடையாளமாக நட்டு விடு” என்றார்.

பாபா இவ்வாறு கூறியதைக் கேட்டதும் மகல்சாபதி அதிர்ச்சி அடைந்தார். கண்ணீர் விட்டார். என்றாலும் பாபா உத்தரவை மீற முடியுமா?
பாபா உடலை 3 நாட்கள் பத்திரமாக பாதுகாத்துக் கொள்வதாக வாக்களித்தார். அன்றிரவு சுமார் 10 மணிக்கு பாபா கண் மூடி தியானத்தில் அமர்ந்தார்.
அடுத்த வினாடி மகல்சாபதி தொடை மீது தலை சாய்த்த பாபா தன் உடலில் இருந்து ஆத்மாவை பிரித்திருந்தார். அவரது மூச்சுத்துடிப்பு நின்று போய் இருந்தது.அவர் உடல் கிடந்த விதம், அவர் உடம்பில் இருந்து, உயிர் முழுமையாக அகன்று விட்டதை உறுதிப்படுத்தியது. பாபா முழுமையான சமாதி நிலையை எட்டி இருந்தார்.

இந்த நிலையில் பாபா இறந்து விட்டார் என்று சீரடி கிராமம் முழுவதும் காட்டுத் தீ போல தகவல் பரவியது. சாய்பாபா மீது மிகுந்த பற்றுதல் கொண்டவர்களும் கிராம மக்களும் மசூதிக்கு ஓடி வந்தனர்.பாபாவின் உடலைப் பார்த்து “மகான் போய் விட்டார்” என்று தத்யா என்பவர் கதறித் துடித்தார். மறுநாள் காலை சீரடி அருகில் ஊர்களிலும் “பாபா இறந்து விட்டார்” என்ற தகவல் பரவியது.நூற்றுக்கணக்கான மக்கள் சீரடிக்கு படையெடுத்தனர். பாபா உடலை கடைசியாக ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்று மக்கள் கூட்டம் முண்டியடித்தது.இதற்கிடையே சீரடி கிராமத்து முன்சீப் பாத்தே என்பவர் அங்கு வந்தார். என்ன காரணத்தினாலோ சாய்பாபாவை முன்சீப் பாத்தேக்கு பிடிக்காமல் இருந்தது. பாபாவை அவர் எதிரி போல கருதினார்.

“பாபா இறந்து விட்டார்” என்று மற்றவர்கள் பேசுவதை முன்சீப் பாத்தே ஏளனம் செய்தார். “பாபாவை நீங்கள் கடவுள் என்றும், மகான் என்றும் சொல்கிறீர்கள்? அப்படியானால் ஏன் அவர் தனக்கு வந்த சாவைத் தள்ளிப் போடவில்லை? இப்போது திடீரென மரணம் அடைவதற்கு அவருக்கு என்ன அவசியம் வந்தது?” என்றார்.முன்சீப் பாத்தே இவ்வாறு சொன்னதை சீரடியில் உள்ள சிலரும் ஆதரித்தனர். இதனால் துணிச்சல் அடைந்த பாத்தே அடுத்தக்கட்ட தடாலடியில் ஈடுபட தொடங்கினார்.“சீரடியிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் பிளேக் நோய் பரவியுள்ளது. இந்த நேரத்தில் பாபா உடம்பை ஒரு நாளைக்கு மேல் வைத்திருக்க கூடாது! எனவே அவர் உடலை புதைத்து விடலாம்” என்றார்.

முன்சீப் பாத்தேயின் இந்த நடவடிக்கைக்கு சீரடியில் உள்ள சிலர் ஒத்து ஊதினார்கள். ஆனால் மகல்சாபதி அவர்களது கோரிக்கையை ஏற்கவில்லை.
சீரடி ஊர் மக்களிடம் மகல்சாபதி கண்ணீர் மல்க ஒரு வேண்டுகோளை வைத்தார்.“பாபா ஆத்ம சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறார். மூன்று நாட்கள் கழித்து திரும்பி வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். எனவே 3 நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்றார்அவர் சொல்வதை கேட்டதும் சீரடி மக்களில் 99 சதவீதம் பேர் மகல்சாபதிக்கு ஆதரவாக மனம் மாறினார்கள். என்றாலும் கிராம முன்சீப் பாத்தே தனது ஆட்களை அழைத்து வந்து பாபா உடலை அங்கிருந்து அகற்ற முயன்றார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மகல்சாபதி, “பாபா 3 நாட்கள் கெடு விதித்திருக்கிறார். அதுவரை அவர் உடலை இங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது. 3 நாட்களில் பாபா மீண்டும் உயிர்த்தெழாவிட்டால் பாபாவின் உடலை அடக்கம் செய்ய நான் சம்மதிக்கிறேன்” என்றார்.

உடனே முன்சீப் பாத்தே, “பிரிந்த உயிர் எப்படி அய்யா மீண்டும் உடலுக்குள் புகும்?” என்று கிண்டல் செய்தார். ஆனால் கிராம மக்களில் பெரும்பாலனவர்கள் 3 நாட்கள் காத்திருக்கலாம் என்று கூறியதை ஏற்றுக் கொண்டார்.என்றாலும் அவரது குறுக்குப் புத்தி போகவில்லை. அகமத் நகரில் இருந்து ஒரு டாக்டரை அழைத்து வந்தார். சாய்பாபா உடலை பரிசோதித்து பார்த்து விட்டு, அவர் இறந்து விட்டார் என்று அந்த டாக்டர் சான்றிதழ் அளித்தார்.

ஆனால் மகல்சாபதி மட்டும் நம்பிக்கையை இழக்கவில்லை. பாபா மீண்டும் உயிர் பெற்று வருவார் என்று அவர் மிக மிக உறுதியோடு, நம்பிக்கையோடு இருந்தார். அந்த 3 நாட்களும் சாய்பாபா உடல் அருகிலேயே மகல்சாபதி அமர்ந்திருந்தார். மூன்று நாட்கள் முடிந்து நான்காவது நாள் பிறந்தது.அதிகாலை 3 மணி இருக்கும். பாபா உடல் அசையத் தொடங்கியது. அவர் சுவாசம் விட தொடங்கினார். அடி வயிறு அசைய ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் அவர் தம் கண்களை திறந்து பார்த்தார்.

இதனைக் கண்ட மகல்சாபதியும் அவரது நண்பர்களும் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தனர். “ஸ்ரீ சாய்நாத் மகராஜ் கீ ஜெய்” என்ற கோஷம் சீரடியைக் குலுங்கச் செய்தது.பிறகு சீரடி கிராமத்து மக்களும், அதிகாரிகளும், சாய் பாபாவிடம், “3 நாட்கள் உடலை சமாதி நிலையில் வைத்து விட்டு எங்கு சென்றீர்கள்” என்று கேட்டனர்.அதற்கு சாய்பாபா, “நான் அல்லாவை காண மேல் உலகம் சென்றிருந்தேன். அதன் பிறகு வைகுண்டம் சென்று ஹரியை தரிசனம் செய்தேன். இன்னும் இவ்வூலகில் நான் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன. எனவேதான் அவதாரம் எடுத்து அதே உடலுக்குள் புகுந்து இருக்கிறேன்” என்றார்.

அடுத்த வினாடி சீரடி கிராம மக்கள் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதை கண்ட கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு அவமானமாகி விட்டது. அவர்கள் கூனிக்குறுகிப் போனார்கள்.அடுத்த வினாடி அவர்கள், பாபாவிடம் மன்னிப்பு கேட்டனர். பாத்தேயும் பாபா காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்த நிகழ்வு மூலம் நமது “ஆன்மாவே பரம்பொருள்” என்ற உண்மையை பாபா உலகம் முழுவதும் உணர செய்தார். ஆன்மா நிலையானது, அழியாதது என்பதை பாபா நடத்திக் காட்டினார்.

இதை கண்ட பாபா பக்தர்கள், “பரம்பொருளாகிய சாய் பாபாவே, அண்ட பேரண்டங்களிலும் இடைவெளி இல்லாமல் வியாபித்திருக்கிறார் என்று நம்பினார்கள். பாபாவின் மரணம் ஒரு புறத்தோற்றமேத் தவிர அவர் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறார் என்றனர்.இந்த உண்மையை, இப்போதும் பாபாவை முழு நம்பிக்கையுடன் ஏற்று வணங்குபவர்கள் உணர்கிறார்கள். இதே போன்று சீரடி மக்கள் அடிக்கடி பிராணிகள் வடிவிலும் சாய்பாபாவை கண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaiheavy29

  வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

 • carbomb28

  ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்