SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடி புண்ணியத்தையும் தேடித்தரும் சுந்தர காண்டத்தை ராமநவமியன்று உச்சரியுங்கள்

2020-04-01@ 16:50:55

கம்பராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் 6 காண்டங்கள் இருக்க, இதில் சுந்தரகாண்டத்திற்க்கு மட்டும் எதற்காக இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? ஏனென்றால், சுந்தரகாண்டத்தில் முழுக்க முழுக்க ஹனுமனின் லீலைகளைப் பற்றித் தான் சொல்லப்பட்டிருக்கிறது. ராமாயணத்தில் பெரிய திருப்பம் வருவதற்கு காரணமாக இருந்தவர் ஹனுமன் தான். ஹனுமனின் வீர தீர செயல்களை பற்றி கூறுவது தான் சுந்தரகாண்டம். இந்த சுந்தர காண்டத்தை பாராயணம் செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும். நோய் நொடிகள் தீரும். திருமண தடை விலகும். நவகிரக தோஷம், ஏழரை சனி, அஷ்டமசனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல விடிவு காலம் பிறக்கும்.

இதோடு மட்டுமல்லாமல் தினம்தோறும் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யும் போது மன தைரியம் அதிகரிக்கும். மன வலிமை உண்டாகும். நம்முடைய கவலையெல்லாம் மறந்து போகும். அறிவு, ஆற்றல், புகழ், துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதுரியம் இவைகள் அனைத்தும் மேலோங்கி நிற்கும். குறிக்கோளை விரைவாக அடையலாம். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். கடவுளை விரைவாக நெருங்கும் சூழலையை நமக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே சுந்தரகாண்டம்.

இப்படிப்பட்ட பல பெருமைகளைக் கொண்ட சுந்தர காண்டத்தை வாய்மொழியால் சொல்லிவிட முடியாது. சொல்லில் அடங்காத, கணக்கிலடங்காத பலனை கொடுப்பது சுந்தரகாண்டம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்ம திருப்தியோடு, மனதார எவரொருவர் சுந்தரகாண்டத்தை தினம்தோறும் பாராயணம் செய்கிறாரோ, அவர் நல்ல மனிதனாக வாழும் தகுதியைப் பெற முடியும். சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் தோல்வியே இருக்காது. ஏனென்றால் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயன் இதுவரை தோல்வியை சந்தித்தது இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சுந்தரகாண்டத்தை ராமநவமி தினத்திலிருந்து நீங்கள் படிக்க தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா!

காலை வேளையில் எழுந்து, குளித்து, சுத்தமான பின்பு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து அமைதியான சூழ்நிலையில், சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கலாம். ராமநவமி அன்று ராமருக்கு துளசி மாலை சாத்தி, அனுமனுக்கு வெண்ணெயை நைவேத்தியமாக படைத்து, முடிந்தால் வடைமாலை சாத்தி சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்வது மிக அற்புதமான பலன்களைத் தரும். பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

தினம்தோறும் சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்யும்போது நெய்வேத்தியம் செய்து வைக்க முடியாதவர்கள் ஒரு சொம்பில் தண்ணீர் வைத்து, அதில் இரண்டு கற்கண்டுகளைப் போட்டு நெய்வேதியமாக வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி பெண்கள் சுந்தரகாண்டத்தை தினந்தோறும் பாராயணம் செய்து வந்தால் அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை தெய்வ கலாட்சம் நிறைந்த குழந்தையாக பிறக்கும் என்பது நம்பிக்கை. சுந்தரகாண்டத்தை உச்சரித்து விட்டு அசைவ சாப்பாட்டை சாப்பிடக்கூடாது. நீங்கள் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்யும் போது உங்கள் அருகில் ஒரு சிறிய பாபையோ அல்லது மன பலகையையோ போட்டு வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் பாராயணம் செய்வதை கேட்பதற்கு உங்கள் வீட்டிற்கு ஹனுமன் கட்டாயம் வருகை தருவார் என்பது ஐதீகம். ஏனென்றால் ராமநாமம் உச்சரிக்கும் இடத்திலெல்லாம் அனுமன் வராமல் இருக்க மாட்டார். சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து பலன் பெற முடியாதவர்கள், இந்தப் பாடலை உச்சரிப்பதன் மூலம் சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்த பலனைப் பெறமுடியும். உங்களுக்காக சுந்தரகாண்ட பாடல் இதோ!

ரீ ராம ஜெயம் சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்
இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்
கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன
கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே
ஆயத்தமாகி நின்றான்
இராமபாணம் போல் இராட்சசர் மனைநோக்கி
இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.
அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்
அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!
வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்
வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!

மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க
மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து
சரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்து
சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.
இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை
இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை
அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான்.

சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்
சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்
ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிட
வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !
கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி
 சூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்
அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு
அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்
பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க
வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்
அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.
ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்
அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.

ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்
ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கி கண்டேன் சீதையை என்றான்.
வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி
சொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.
மனம் மகிழ மாருதியை மார்போடணைத்து
ராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ
அனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.

அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை
அன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.
அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்
அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு.
எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோ
அங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்து
 ஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே
 ஸ்ரீ ஆஞ்சநேயனே உனை பணிகின்றோம் பலமுறை!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்