SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஞ்சள் இடித்து மங்கலங்கள் பெருக்கும் உமையம்மை

2020-03-31@ 09:48:06

தென்காசி

தமிழக சக்தி பீடங்கள்

நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார்.எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விமலை சக்தி பீடம் ஆகும். கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது.

திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் வழியில், 60 கி.மீ. தொலைவில் பாபநாசம் பாவநாசர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு 51 சக்தி பீடங்களுள் ஒன்றான விமலைபீட நாயகி உலகநாயகி எனும் லோகநாயகியாக திருவருட்பாலிக்கின்றாள்.இத்தல சக்திபீட நாயகியான உலகம்மை மிகவும் வரப்ரசாதியாகக் கருதப்படுகிறாள்.தன் பக்தருக்காக தேவி திருவருள் புரிந்த ஒரு லீலையை அறிவோமா?

இத்தலத்திற்கு அருகிலுள்ள விக்ரமசிங்கபுரத்தில் ‘நமசிவாயக் கவிராயர்’ என்பவர் (மத் சிவஞான சுவாமிகளின் சிறிய தந்தையார்) வாழ்ந்து வந்தார். இவர் அம்பாள் உலகநாயகி மீது அளவிலா பக்தி கொண்டிருந்தார்.  தினந்தோறும் அர்த்தசாமத்தில் பாபநாச திருக்கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தொழுதுவிட்டு வருவார். அப்போது பரவசத்துடன் பக்திப் பாடல்களைப் பாடிகொண்டே வருவது வழக்கம்.ஒருநாள் இரவு அப்படி பாடியவாறே வீடு திரும்பியபோது அம்பாள் இவர் பாடல்களைக் கேட்டவாறே அவர் அறியாதபடி பின் தொடர்ந்தாள். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில் அவர் பாடி வரும்போது தெறித்து அம்பிகையின்மீது பட்டது.

அக்கோலத்துடனேயே அம்பிகையும் கோயிலுக்கு எழுந்தருளினாள். மறுநாள் காலை அர்ச்சகர் அம்பாள் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு மனம் வருந்தி, மன்னனிடம் முறையிட, அரசனும் பிராயச்சித்தம் செய்யப் பணித்து, இப்பாதகச் செயலைச் செய்தவரைத் தண்டிப்பதாகக் கூறினான். அன்றிரவு மன்னன் கனவில் அம்பிகை தோன்றி, நடந்ததை விவரித்தாள். மறுநாள் காலை கவிராயரை அழைத்து வரச்செய்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணி, அம்பாளின் கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் சுற்றிக்கட்டி, அப்பூச்செண்டு தன் கைக்கு வருமாறு பாடக் கவிராயரைப் பணித்தான். அவரும் கலித்துறையில் அந்தாதி ஒன்றைப் பாடினார். அம்பிகையின் கரத்தில் கட்டப்பட்டிருந்த பொன் கம்பிகள் கவிக்கொரு சுற்றாக அறுந்து கவிராயரின் கைக்குப் பூச்செண்டாக சென்று அவருடைய பெருமையை வெளிப்படுத்தியது.

அம்பிகையின் பாதங்கள் சிந்தாமணி என்னும் ரத்னம்போல் எல்லையற்ற பிரகாசத்துடன் விளங்குகிறது, சிந்தாமணி. நினைத்ததை நினைத்த வண்ணம் அளிக்க வல்லது. தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது ஒரு சிறிய ரத்னமே வெளிப்பட்டது. ஆனால், தேவியின் இருப்பிடமான நகரம் முழுவதுமே சிந்தாமணிக் கற்களால் ஆக்கப்பட்டது என லலிதோபாக்யானம் கூறுகிறது.நினைத்ததை அளிக்கவல்ல சிந்தாமணி கிரகத்தில் வாழும் அம்பிகை, நம் அகங்காரத்தை முற்றிலும் ஒழித்து ஸம்சார துக்கமெனும் தாபத்தை நீக்குகிறாள்.

அம்பிகையின் திருவடிகள் ஒளி மிகுந்த தன்மையினால் சூரியனாகவும், அமிர்தமயமாய் உள்ளதால் சந்திரனாகவும், சிவந்த நிறம் கொண்டமையால் செவ்வாயாகவும், தம்மை வந்து வணங்குவோருக்கு ஸெளம்யம் பொருந்திய புதனாகவும், புத்தியை வாரி வழங்குவதால் குருவாகவும், ஐஸ்வர்யங்களை அளிப்பதால் சுக்கிரனாகவும், மந்தகதி நடையால் சனிபகவானாகவும், பூஜிப்பவர்களுக்கு ஞானத்தை அளிப்பதால் ராகு கேதுவாகவும் விளங்குகிறது. தேவியின் திருவடிகளைப் பற்றினால் நவகிரகங்களையும் பூஜித்த பலன் ஏற்படும் என்பதில் ஐயமேது?

உலகம்மையின் சந்நதி எதிரில் உரல் ஒன்று உள்ளது.அதில் கன்னியரும், சுமங்கலிகளும் விரலி மஞ்சளை இடித்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யத் தருகின்றனர்.அந்த மஞ்சள் தீர்த்தத்தை அருந்தினால் திருமணத் தடை, புத்திரபாக்யத் தடைகள் நீங்கி தீர்க்க சுமங்கலி வரம் கிட்டுகிறது என்பது நம்பிக்கை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்