SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய பாதைக்கான வழிபிறக்கும்!

2020-03-18@ 10:27:54

?39 வயதாகும் என் மகள் 19 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாள். இன்னும் திருமணம் ஆகவில்லை. வெளியில் ஆலயத்திற்கோ, டாக்டரிடமோ செல்ல கூப்பிட்டாலும் வர மறுக்கிறாள். அவள் ஆயுள் முழுவதும் இப்படியேதான் இருப்பாளா? நலம் பெறுவாளா? அவள் குணமடைய நல்வழி காட்டுங்கள்.
- தமிழரசன், சென்னை.


அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் கேதுவின் அமர்வும், 12ம் வீட்டில் செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்களின் இணைவும் அவரது மனநிலையில் சற்று சிரமத்தைத் தந்திருக்கிறது. 19வது வயதில் அவர் சந்தித்த நிகழ்வு ஒன்று மனநிலையில் பாதிப்பை கொடுத்திருக்கலாம். அதே நேரத்தில் இந்த பாதிப்பிற்காக தொடர்ந்து அவர் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம், கொஞ்சமாக மருந்தின் வீரியத்தை குறைத்து வந்து அதனை முற்றிலுமாக நிறுத்தியும்விடலாம். அவர் ஆயுள் முழுவதும் இப்படியே தான் இருப்பாரென்று ஜாதகம் வலியுறுத்தவில்லை. ஜீவன ஸ்தானம் என்பது அவரது ஜாதகத்தில் நன்றாக உள்ளது. சுயமாக வேலை செய்ய கற்றுக்கொடுப்பதோடு அதனை அவ்வப்போது அன்பான முறையில் வலியுறுத்திச் சொல்லி வாருங்கள். தையல் முதலான கலைகளை கற்றுக்கொள்வதால் மனநிலையில் சற்று மாற்றத்தை உணர இயலும். தந்தையின் ஆதரவு தொடர்ந்தாலும் அவரது மனநிலை கருதி கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொடுக்க முயலுங்கள். இதனால் அவரது தன்னம்பிக்கை வளர்வதோடு மனநிலையிலும் நல்லதொரு முன்னேற்றத்தைக் காண இயலும். வீட்டினில் தும்பைச் செடி வைத்து அதனை நீர் ஊற்றி வளர்க்கும் பொறுப்பினை மகளிடம் ஒப்படையுங்கள். சனிக்கிழமை தோறும் தும்பைப்பூக்களை மாலையாக கோர்த்து விநாயகப்பெருமானுக்கு சாத்தி வழிபட்டு வர அவரது மனநிலையில் நல்லதொரு மாற்றத்தினைக் காண இயலும். ஜாதக பலத்தின்படி தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலத்திலேயே அவரது வாழ்வினில் புதியபாதைக்கான வழி பிறந்துவிடும்.
 
?கணவனைப் பிரிந்து வாழும் என் பேத்தி சிறிய கடை வைத்து நடத்துகிறாள். சிறிது காலமாக அவள் மனதில் ஏதோ குழப்பத்துடனும் பயத்துடனும் வாழ்கிறாள். பருவ வயதில் இருக்கும் தன் மகளின் எதிர்காலம் குறித்து பயப்படுகிறாள். தான் செய்த தவறை உணர்ந்துவிட்டதாக என்னிடம் கூறுகிறாள். அவள் பயமின்றி வாழவும் அவளது மகளின் எதிர்காலம் சிறக்கவும் உரிய பரிகாரம் கூறுங்கள்.
- கணேசன், சேலம்.


ரேவதி நட்சத்திரம், மீன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேத்தியின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. தான் செய்த தவறை தன் மகளும் செய்துவிடுவாளோ என்ற அச்சம் அவரது மனதினை வாட்டுகிறது. உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் சுக்கிரன்- கேதுவின் இணைவு அவரது வாழ்க்கையைப் புரட்டி போட்டிருக்கிறது. என்றாலும் உடன் அமர்ந்திருக்கும் சூரியன் எதையும் சமாளிக்கும் திறனை அளித்திருக்கிறார். எப்பாடுபட்டாவது தன் மகளின் வாழ்க்கையை சிறப்பானதாக அமைத்துத் தந்துவிட வேண்டும் என நினைக்கிறார். சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. பருவ வயதில் இருக்கும் அவருக்கு தற்போது நடந்து வரும் தசா புக்தியின் காலம் ஒரு சில பிரச்னைகளைத் தரக்கூடும். வீண் மாயை என்பது அவரது கண்ணை மறைக்கலாம். அதே நேரத்தில் மாத்ரு ஸ்தானம் ஆகிய நான்காம் வீட்டில் குருவின் உச்சபலம் தாயாரின் அரவணைப்பால் இவர் நல்லபடியாக வாழ்வார் என்பதைக் காட்டுகிறது. உங்கள் பேத்தியிடம் வீண் கவலையை விடுத்து மகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அன்பான அரவணைப்போடு அவரை நல்வழிப்படுத்தச் சொல்லுங்கள். தான் வாழ்வில் பட்ட அனுபவங்களை எடுத்துச் சொல்லி தன் மகளுக்கு புரிய வைக்கச் சொல்லுங்கள். நன்றாக படிக்க வைத்து அவருக்கு ஒரு உத்தியோகம் வாங்கித் தரும் வரை திருமணம் பற்றி யோசிக்க வேண்டாம் என்பதை உறுதியாகச் சொல்லுங்கள். திங்கட்கிழமை தோறும் அருகில் உள்ள அம்பிகையின் ஆலயத்திற்குச் சென்று தாமரை மலர் வைத்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். பேத்தியின் மனம் தெளிவடைவதோடு அவரது மகளின் எதிர்காலமும் சிறப்பாக அமையும்.

?முப்பத்தொன்பது வயது கடந்த நிலையில் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நல்ல தகுதி இருந்தும் ஏன் திருமணம் கூடவில்லை? நண்பர்கள், உறவினர்களின் கேலிப் பேச்சும் அவச்சொல்லும் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளத் தோன்றுகிறது. வாழ்வா, சாவா? பதில் கூறுங்கள்.
 - விஜய்ஆனந்த், கர்நாடகா.


திருமணம் நடைபெறவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உதிப்பது நன்கு படித்தவருக்கு அழகல்ல. அடுத்தவர்களின் பேச்சினை நீங்கள் ஏன் காதில் வாங்குகிறீர்கள்? குறை சொல்லும் உலகம் உதவப்போவதில்லை. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. 32வது வயதில் வந்த வரனை தட்டிக் கழித்ததன் விளைவினை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டின் அதிபதி குரு வக்கிர கதியில் சஞ்சரிப்பதோடு 12ம் வீட்டில் வக்கிரம் பெற்ற சனியுடன் இணைந்திருப்பது கடுமையான தோஷத்தினைத் தந்திருக்கிறது. இதனை குரு - சண்டாள யோகம் என்று சொல்வார்கள். பரம்பரையில் உண்டான சாபம் உங்களைத் தாக்குகிறது. சாது அல்லது சந்நியாசி ஒருவரின் சாபம் கடுமையான தோஷத்தினைத் தருகிறது. இஸ்கான் இயக்கத்தைப் பின்பற்றும் உங்களுக்கு இதில் உள்ள உட்கருத்து நன்றாக புரியும். உங்கள் உத்தியோக நேரம் போக எஞ்சியிருக்கும் நேரத்தில் சாதுக்கள் மற்றும் சந்யாசிகளுக்கு உங்களால் இயன்ற பணிவிடையைச் செய்ய முயற்சியுங்கள். பிரதி வியாழன் தோறும் அருகிலுள்ள ராகவேந்திர சுவாமி மடத்திற்குச் சென்று கௌரவம் பாராமல் மடத்தினைத் தூய்மை செய்யும் பணிவிடைகளைச் செய்து வாருங்கள். உங்களைப் போலவே சேவை மனப்பான்மை உடைய பெண்ணை வரும் 23.11.2020ற்குள் கரம் பிடிப்பீர்கள்.

?என் மனைவி இறந்துவிட்ட நிலையில் நான் மறுமணம் செய்து கொள்ளவில்லை. 11 வயதில் ஒரு மகன் இருக்கிறான். மூளை வளர்ச்சி குறைவாக உள்ளது. நன்றாக பேசுகிறான், நடக்கிறான், செல்போனில் கேம் விளையாடுகிறான், ஆனால் மற்ற குழந்தைகள் போல் படிக்கத் தெரியவில்லை. மன வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் பள்ளியில் சேர்த்துள்ளேன். அவன் எல்லோரையும் போல நல்வாழ்வு பெற பரிகாரம் கூறுங்கள்.
 - விஜயகுமார், திருச்சி.


கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் ராகு புக்தி முடிவுறும் தருவாயில் உள்ளது. மகனின் நல்வாழ்விற்காக மறுமணம் செய்து கொள்ளாமல் வாழும் உங்கள் எண்ணம் சரியானதே. உங்கள் மகனின் ஜாதகத்தில் சூரியனோடு இணைந்திருக்கும் புதன் வக்கிர கதியில் சஞ்சரிப்பது, சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் வக்கிரம் பெற்ற சனியின் அமர்வு, மனோகாரகன் சந்திரன் நீச பலத்துடன் சஞ்சரிப்பது, சந்திரனின் வீட்டில் கேதுவின் அமர்வு என பல்வேறு காரணிகள் அவரது இந்த நிலைக்கு காரணமாக அமைந்திருக்கிறது. தாயன்பும் இல்லாத நிலையில் தந்தை ஸ்தானம் ஒன்று மட்டுமே அவருக்கு பலமாக அமைந்திருக்கிறது. ஒன்பதாம் வீட்டின் அதிபதி குரு 11ல் இருப்பதும், பித்ரு காரகன் சூரியன் உச்ச பலம் பெற்றிருப்பதும் தந்தையால் அவரது வாழ்வு நல்லபடியாக அமையும் என்பதை நன்றாக உணர்த்துகிறது. உங்களது விடாமுயற்சியும், அன்பான அரவணைப்பும் அவருக்குள் மாற்றத்தினை உண்டாக்கும். 10.04.2020 முதல் துவங்க உள்ள புதன் தசையில் குரு புக்தியின் காலம் அவரது மூளை வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரியும். புதன்கிழமை தோறும் மாலை வேளையில்
மலைக்கோட்டை தாயுமானவ ஸ்வாமி சந்நதிக்கு உங்கள் மகனையும் அழைத்துச் சென்று வில்வ அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அதோடு
மகனின் கைகளால் சந்யாசிகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். அடுத்து வர உள்ள இரண்டு ஆண்டு காலத்திற்குள் மகனின் மனவளர்ச்சியில் நல்லதொரு மாற்றத்தினைக் காண்பீர்கள்.
 
?32 வயதாகும் என் மகனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. 10ம் வகுப்பு வரை படித்து பெரிய கடையில் பணிபுரிந்து வருகிறான். எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் பெண் தர மறுக்கிறார்கள். ஓரளவிற்கு சேமிப்பு இருந்தாலும் தகுதியை மீறி கடன் வாங்கி வீடு கட்ட மகன் விரும்பவில்லை. வேறு இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? மகனின் திருமணம் விரைவில் நடைபெற உரிய பரிகாரம் கூறுங்கள்.
- ஜெயகோபி, கள்ளக்குறிச்சி மாவட்டம்.

 
உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது கேது தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் எண்ணம் நியாயமானதே. வீண் கௌரவத்திற்காக கடன் வாங்கி வீடு கட்ட வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் அவர் வேறொரு இடத்தில் பணி செய்வதை விட சுயதொழில் செய்ய இயலும். தொழில் முதலீட்டிற்காக வங்கியில் கடன் வாங்கலாம். ஜென்ம லக்னத்தில் இணைந்திருக்கும் சூரியனும், புதனும் சுயதொழில் செய்ய துணை புரிவார்கள். ஜீவன ஸ்தான அதிபதி செவ்வாய் ஒன்பதாம் பாவகத்தில் லக்னாதிபதி சந்திரனுடன் இணைந்து சனியின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதால் தொழிலில் நல்ல அபிவிருத்தியைக் காண்பார். உணவு, தின்பண்டம் சார்ந்த தொழில் செய்யலாம். திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு சுத்தமாக இருந்தாலும், பாவக அதிபதி சனி வக்கிரம் பெற்ற நிலையில் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வேறு இனத்தைச் சேர்ந்த பெண்ணை அவருக்கு மணம் முடிப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. நல்ல உழைப்பாளியாகவும், அவர் செய்யவிருக்கும் தொழிலில் பக்கபலமாகவும் துணையிருக்கும் பெண்ணாக அமைவார். வீண்பேச்சு பேசும் சுற்றத்தாரைப் பற்றிக் கவலைப்படாது அதற்கான முயற்சியில் இறங்குங்கள். உங்கள் மகனின் மனதிற்கு பிடித்தமான பெண்ணாக பார்த்து வெகுவிரைவில் திருமணத்தை நடத்தி விடுவீர்கள். உங்கள் குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி அம்மனின் ஆலயத்தில் வைத்தே திருமணத்தை நடத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவரது ஜாதக பலத்தின்படி 26.09.2020- ற்குள் திருமணத்தை நிச்சயம் செய்துவிடுவீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்