SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைராக்கிய சீடரான உறங்காவில்லி தாசர்

2020-03-17@ 10:41:35

‘‘பொன்னாச்சி! பொன்னாச்சி!’’ என்று தனது அருமை மனைவியை அழைத்தபடியே இல்லத்துள் நுழைந்தார் உறங்காவில்லி தாசர். ஆஹா! அந்தக் குரலில்தான் எத்தனை இனிமை? முதலில் இருந்த காமத்தின் அனல் வீச்சு அறவே தணிந்து போய், அரங்கனின் அருள் மணம் அல்லவா வீசுகிறது அந்தக் குரலில்? கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று பொன்னாச்சியே கதியாக இருந்த மனிதர், இப்போது ராமானுஜரின் சம்பந்தம் பெற்றதும், மகான்கள் போற்றும் உத்தமராக மாறி விட்டார். எல்லாம் ராமானுஜரின் அருள்தான். பொன்னாச்சிக்கும், தானே கதி என்று கிடந்த (பெண்டாட்டி) தாசரை விட, ரங்கனுக்கு தாசனாகிவிட்ட  தாசரைத்தான் பிடித்திருந்தது. ஆகவே, அவர் அழைத்ததும் நொடிகூட தாமதிக்காமல் அரக்கப்பரக்க ஓடி வந்தாள்.

அவளைக் கண்ட தாசர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றார். காரணம் இல்லாமல் இல்லை. பொன்னாச்சியின் உடலில் ஒரு பாதியில் மட்டுமே ஆபரணங்கள் இருந்தது, மற்றொரு பாகத்தில் ஆபரணங்களைக் காணவில்லை. வலது பக்கத் தோடு இருந்தால், இடது தோடை காணவில்லை. வலது பக்க வளையல் இருந்தால் இடது பக்கத்து வளையலைக் காணவில்லை. ஒரு வேளை அரங்கனை எண்ணிய படியே ஆபரணங்கள் அணிந்து கொண்டதால் , தன்னை மறந்து போய் இவ்வாறு செய்து கொண்டாளோ?.... தாசர் சிந்தித்தார்.

பிறகு மெல்ல நடப்புக்கு வந்தவர்,‘‘என்ன பொன்னாச்சி?, ஒரு பாதி அங்கத்தில் ஆபரணத்தையே காணவில்லை? அணிந்து கொள்ள மறந்து விட்டாயா? நமது குருநாதர் ராமானுஜருக்கு உதவாத ஆபரணங்கள் நமக்கெதற்கு, என்று துறந்து விட்டாயா? அப்படி என்றால் ஏன் ஒரு பாதி உடலில் மட்டும் ஆபரணம் அணிந்து கொண்டிருக்கிறாய்?’’ என்று அன்பாக வினவினார். கேட்ட பொன்னாச்சி ‘‘ஓ’’ என்று அழுது கொண்டே, நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தாள்.

‘‘அரங்கனை வேண்டி விட்டு, உறங்கச் சென்றதுதான் நினைவு இருக்கிறது சுவாமி. பிறகு யாரோ நான்கைந்து பேர் என்னை தீண்டுவது போல உணரும்போதே, விழிப்பு வந்தது...’’‘‘என்ன சொல்கிறாய் பொன்னாச்சி?!’’ தாசர் திடுக்கிட்டார்.‘‘பயம் கொள்ள வேண்டாம் சுவாமி! இருங்கள் நடந்தவற்றை முழுவதுமாக சொல்லி விடுகிறேன்’’.‘‘வேகமாக சொல்!’’ பரபரத்தார் தாசர். பழைய தாசராக இருந்திருந்தால் இந்நேரம், ரங்க மாநகரமே ரெண்டாகி இருக்கும். இப்போது தான் அவர் ராமானுஜதாசராகி விட்டாரே, அதனால் நிதானத்தோடே நடந்து கொண்டார். அதை கவனித்த பொன்னாச்சி மெல்ல உள்ளம் பூரித்தாள். ராமானுஜரின் தாள்களை மனதாற வணங்கிய படியே, தொடர்ந்தாள்.

‘‘விழிப்பு வந்ததும் மெல்ல கண்களைத் திறந்து நோக்கினேன். முகத்தில் துணியை இருக்கக் கட்டிக் கொண்டு, நான்கைந்து ஆடவர்கள் எனது இடது பக்க ஆபரணங்களை கழற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை திருடர்கள் என்று நினைத்து, கத்திக் கூப்பாடு போட இருந்தேன். ஆனால், நல்ல வேளையாக எம்பெருமானாரின் அருள் நம்மைக் காத்து விட்டது. எனது நகைகளை கழற்றுவது சாதாரண மனிதர்கள் இல்லை, மாலவனின் உன்னத அடியார்கள் என்பதை அப்போது நொடியில் உணர்ந்தேன். அதைக் காட்டிக் கொடுத்த அவர்களது உடலில் மின்னும் பன்னிரு திருநாமச் சின்னத்துக்கு மனதாற நன்றி உரைத்தேன்.

 பரம வைஷ்ணவர்களான அவர்களுக்கு என்ன பணக் கஷ்டமோ? நம்மிடத்தில் வந்து திருடுகிறார்கள். இந்தப் பாழாய்ப்போன நகைகள், ஒரு  வைஷ்ணவரின் குடும்பத்திற்கே உணவிடவாவது பயன்படுகிறதே? என்று உள்ளம் உவந்தேன். இப்படி பகவானின் பக்தர்களான அவர்களுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை, நமக்குத் தந்த ராமானுஜரின் சரணங்களுக்கு வந்தனங்கள் செய்தேன். அதற்குள் அவர்கள் உடலின் ஒரு பாதியில் இருந்த நகைகளைக் களைந்து விட்டார்கள்.

மறுபாதி நகைகளும் பகவத் பக்தர்களின் சேவைக்கு பயன்படட்டுமே என்று எண்ணிய நான் மெல்ல தூக்கத்தில் திரும்புவது போல இடது பக்கம் திரும்பினேன். சத்தியமாக அந்த வைஷ்ணவர்களுக்கு நன்மை செய்யவே அவ்வாறு செய்தேன். ஆனால் சில நொடிகளில் நான் செய்தது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர்ந்தேன். ஆம். நான் திரும்பியதைக் கண்டு அவர்கள் பயந்து ஒரே ஓட்டமாக ஓடி விட்டார்கள். அந்தோ!  நான் கெட்டேன்!,  பாகவதர்களை பயமுறுத்திய பாவம் என்னை வந்து அடைந்து விட்டதே! இந்தப் பாவத்தை எங்கே சென்று தொலைப்பேன் என்றே விளங்கவில்லையே.?’’ என்று அழ ஆரம்பித்தாள் பொன்னாச்சி.

எத்தனை நேரமாக அடக்கி வைத்திருந்தாளோ தெரியாது. தாசரைக் கண்டு அவரிடம் நடந்ததை சொல்லும் வரையில் பொறுத்திருந்த அவளால், அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. ஓவென அழுது விட்டாள். அதைக்கண்ட தாசருக்கு அவள் மீது கருணை வரவில்லை, மாறாக கோபமே பொங்கிப் பொங்கி வந்தது. சினத்தை அடக்கியவர்களே  வைஷ்ணவர்கள். ஆனாலும், இறைவன் அடியவருக்கு தீங்கு செய்ததைக் கண்டு கோபம் கொள்ளாமல் இருந்தால் தானே பெரும் அபசாரமாகும்.? ஆகவே, தாசரைச் சொல்லிக் குற்றமில்லை. கோபமாக தனது மனைவியை இழுத்துக் கொண்டு ராமானுஜரிடம் ஓடினார்.

அவரோ எப்போதும்போல ஒரு ஆழ்வார் பாசுரத்தை ஜபித்தபடியே ரங்கனை நினைத்துக் கொண்டிருந்தார். அவரெதிரில் ,
தன் மனைவியைக் கொண்டு நிறுத்தினார் தாசர். தாசரைக் கண்ட எம்பெருமானாரது கண்கள் ஆச்சரியத்தில் அகன்று விரிந்தது. ‘‘என்ன பொன்னாச்சி ஏன் அழுகிறாய்? தாசா, என்ன ஆனது வழக்கத்துக்கு மாறாக கோபத்தோடு காணப் படுகிறாயே?.’’ என்று கேட்ட எம்பெருமானாரின் குரலில்
கரிசனம் நிரம்பி வழிந்தது.

எம்பெருமானாரின் உத்தரவுக்காக காத்திருந்தார் தாசர். அது அவர் கேட்ட கேள்வியின் மூலம் வெளிப்படவே, மடை திறந்த வெள்ளம்போல நடந்ததைக் கொட்டித் தீர்த்தார்.‘‘இவள்.... (தழு தழுத்துவிட்டு பின் தொடர்ந்தார்) இறை அடியவர்கள் வந்து நகைகளைக் களையும்போது கல்லாக சமைத்திருந்தால் இன்று நான் இப்படி ஒரு அபச்சாரத்துக்கு ஆளாகி இருப்பேனா? இவள் எதற்காக அப்போது இடது புறமாக நகர்ந்தாள்?’’ கொதித்தபடியே மொழிந்தார் தாசர்.

‘‘சுவாமி! வந்த அடியவர்கள் மற்றொரு பாகத்து நகையையும் எடுத்துக் கொண்டு போகட்டுமே என்றுதான் இந்தப் பேதை அப்படி செய்து விட்டேன்! அறியாமல் செய்துவிட்ட பிழை சுவாமி! தயை கூர்ந்து மன்னித்து அருளுங்கள்.’’ பொங்கும் கண்ணீரை அடக்கிக்கொண்டு மொழிந்தாள் பொன்னாச்சி.
‘‘செய்யக் கூடாத பாவத்தை செய்துவிட்டு மன்னிப்பாம் மன்னிப்பு’’ என்று கொக்கரித்த தாசரை எம்பெருமானாரது பார்வை தடுத்தது. தனது எதிரே இருக்கும் இருவரையும் கருணை பொங்க பார்த்து விட்டு, இளப்பமாக தனது இரு புறமும் இருந்த மற்ற சீடர்களை நோக்கினார் எம்பெருமானார். மற்ற சீடர்கள் யாரும் அவரது விழி நோக்கை சந்திக்க சக்தியில்லாமல் தலைகுனிந்தார்கள். எம்பெருமானார் முகத்தில் மீண்டும் இள நகை அரும்பியது.

‘‘எடுத்த நகைகளை கொண்டுவந்து தாசரிடம் கொடுங்கள்!’’ மெல்ல கட்டளை பிறந்தது. பொன்னாச்சியின் நகைகள் அடங்கிய மூட்டையை, எம்பெருமானாரின் முன்னிலையில் வைத்தார்கள், அவரது மற்ற சீடர்கள். நகையை திருடும் நாடகத்தை அரங்கேற்றியதே அவர்தானே! ஆம். எம்பெருமானார் தாசருக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்,  என்று சீடர்கள் வெதும்பினார்கள். விஷயம் ராமானுஜரின் காதுகளுக்குச் சென்றது. தாசரின் பக்குவ நிலையை, உலகிற்குக் காட்ட வேண்டும் என்று நினைத்தார் எம்பெருமானார்.

இப்படி ஒரு நாடகத்தை தனது (மற்ற நல்ல) சீடர்களைக் கொண்டு அரங்கேற்றினார். நாடகமும் நல்ல படியாக அரங்கேறியது. தாசர் வென்று விட்டார்.  சீடர்களின் ஆணவம் அழிந்து விட்டது! பாம்பின் கால் பாம்பறியும் இல்லையா? ஒரு உயர்ந்த மகானை எம்பெருமானார் அறியாமலா? இப்படி ராமானுஜரே தனது சீடர்களில் சிறந்தவர் என்று போற்றிய பிள்ளை, உறங்காவில்லி தாசரை அவரது அவதார நட்சத்திரமான ஆயில்யத்தன்று வணங்கி நற்கதி பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • chennaiheavy29

  வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் சென்னை: விடிய விடிய கொட்டிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள்..!!

 • carbomb28

  ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்