SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒருநாளும் தளர்வரியா மனம் தருவாள்!

2020-03-17@ 10:24:33

சக்தி தத்துவம்-57

வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும்  வந்திறைஞ்சிப்
பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூனுதற் கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே
 பாடல்  எண் - 40

இறைவியின் அடையாளம் என்ன?
அவள் இருப்பதற்கு சான்று என்ன?
அவள் திருவடியை அடைவதற்கு வழி என்ன?
திருவடியை அடைந்தால் நாம் பெறும் பலன் என்ன?

இது போன்ற வினாக்களுக்கு விடையாய் அமைந்த இந்த பாடலை அபிராமி பட்டரின் வாழ்க்கைப் பயணத்தைப் பார்த்து புரிந்து கொள்வோம்.
அபிராமி பட்டர் தன்னை சுற்றியுள்ளவர்களிடம், நான் காசியில் பிறக்க வேண்டியவன் கடவூரில் பிறந்து அவதிப்படுகிறேன் என்று புலம்புவது வழக்கம். காசி மயானத்தில் செய்வதை கடவூர் மயானத்தில் செய்கிறேன் என்று அடிக்கடி கூறுவதும் உண்டு. மேலும், அவர் பல நேரத்தில் காசிக்குச் சென்று வந்தவர்களிடத்தில் இதே மாதிரி அங்கு சாமியிருக்கா என்று கேட்டிருக்கின்றார். அப்படி ஒன்றும் இல்லை என்றும், சிலபேர் இருக்கலாம்.

நான் பார்க்கவில்லை போலும் என்றும், ஒரு கோயில் பார்த்தேன், அது இதுவாக இருக்கலாம் என்றும், விடை கூறியதை எண்ணி சில நேரம் குழம்பியும், சில நேரம் மகிழ்ந்தும், அவர் தன் உணர்வை வெளிப்படுத்துவார். அவருக்கு நெருங்கிய நண்பர்களிடத்தில், காசிக்கு ஒரு முறை சென்று வர வேண்டும். அம்பாள் என்ன நினைக்கிறாளோ என்று அங்கலாய்ப்பதும் உண்டு. இறைவியைப் பற்றிய பல காட்சிகள் அவர் மனதிற்குள் தோன்றி மறையும். சில நேரங்களில் புரியாத பாஷையில் யாரோ பேசுவதாக தோன்றும். ஆனால் அதற்கு விளக்கம் கனவில் தெளிவாகப் புரியும், விடிந்தவுடன் அந்த விளக்கம் மறந்து போகும்.

தன் கனவுகளைப் பற்றி தாய் வழி பாட்டி ஒருத்தியிடம் அடிக்கடி சொல்லிச் சொல்லி விளக்கம் கேட்பார்.பாட்டி சண்டியை ஜெபம் செய்வதாகவும் அவளே உனக்கு காட்சி கொடுக்கின்றாள் என்றும். ஏதோ தகவலை உன்னிடத்தில் கூற வருகின்றாள் என்று பட்டரிடம் அன்பாய் எடுத்துரைப்பதும் உண்டு. அந்தக் கிழத்துக்கும் (பாட்டி) அவனுக்கும் (அபிராமி பட்டர்) வேற வேலையில்லை. கனவு கண்டேன் காட்சி வந்தது என்று புலம்புவதை தவிர என்ற அடுத்தவர்களின் விமர்சனத்தை அவர்கள் இருவரும் காது கொடுத்துக் கேட்பதுமில்லை கவலைப்படுவதும் இல்லை.

 அபிராமி பட்டரின் ஆன்மீக அனுபவத்தில் அவர் வணங்கும் சண்டி என்ற உமையம்மையே ‘‘வாணுதற் கண்ணியை’’ என்று வரையறுத்திருக்கிறார்.
பரந்த நெற்றியை உடைய காளி பார்வதியின் அம்சமான ஆற்றலை உடையவளாக இருக்கின்றாள். நெற்றிக் கண்ணையுடைய கௌரி சரஸ்வதியின் அம்சமான ஞானத்தைப் பெற்றிருக்கின்றாள். ருத்ரனின் நெற்றி கண்ணிலிருந்தும் மகாவிஷ்ணுவின் தொடையிலிருந்தும் தோன்றியவள் துர்க்கை. அவள் இலக்குமியின் அடையாளமான செல்வத்தை உடையவளாக ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

திருக்கடவூரில் சந்நதியில் சரஸ்வதியும், இலக்குமியும், துர்க்கையும் எழுந்தருளி இருக்கின்றனர்.இந்த மூன்று அம்சங்களும் ஒன்றாக இணைந்த வடிவாக. காலசம்ஹார மூர்த்தியின் சக்தியாகிய பாலாம்பிகை காட்சியளிக்கின்றாள். இவளே சண்டியாக வழிபடப்படுகின்றாள்.சண்டி என்ற தேவதைக்கு ஏழு சிறப்பு பெயர்கள் உண்டு. 1. பாலா. 2. காத்யாயினி, 3. பவானி 4. சாமுண்டி, 5. கன்னிகா பரமேஸ்வரி, 6. திரிபுரா, 7. யை.
 இந்த பெயர்கள் அனைத்தும் குறிப்பிடுவது.

‘‘சண்டி’’ என்ற ஒரே அம்மையை தான் -
இவள் சைவம் அசைவம் என்ற இரண்டு நெறிகளாலும் பூசிக்க தக்கவள். ‘‘மாயி’’ என்று அழைக்கப்படும் இவள் காசியில் சமூகத்தால் தள்ளப்பட்ட (மது. . . . ) பொருள்களைக் கொண்டும். உயிர் பலியிட்டும், (ஆடு, எருமை) அசைவ நெறியில் வழிபாடு செய்யப்படுகின்றாள்.
‘‘திருக்கடவூரில் காத்யாயினி சமேத அமிர்த மிருத்யுஞ் ஜயர் என்று அழைக்கப்படும் இவள் சைவ நெறியில் உயிர் பலியிடாது, பிறரைதுன்புறுத்தாது மலர் சந்தனம் போன்ற பொருட்களைக் கொண்டு வழிபடப்படுகின்றாள். ‘‘சவ்யாப சவ்ய மார்கஸ்தாயை  நமஹ‘‘ என்கிறது. லலிதா ஸஹஸ்ர நாமம் . இதையே பட்டரும்.

‘‘வீணே பலி கவர் தெய்வங்கள் பாற்சென்று ’’- 64
‘‘உயிரவி உண்ணும் ’’ - 77 என்று கூறுவதனால் நன்கு உணரலாம்.
எந்த இறைவியின் திரு உருவை வணங்கினால் எத்தகைய பயனை அடையலாம் என்று ஆகமங்கள் வரையறுக்கிறது.
தனம் தரும்  - இலக்குமி, கல்வி தரும் - சரஸ்வதி
ஒருநாளும் தளர்வரியா மனம் தரும் - பாலாம்பிகா
தெய்வ வடிவம் தரும்- பவானி
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் - சுவாசினி.
நல்லன எல்லாம் தரும்   - சிவகாம சுந்தரி.
அன்பர் என்பவருக்கே  கணம் தரும் - மனோன் மணி.

இவை எல்லாவற்றையும் ஒருங்கே தருபவள்‘
‘வாள் நுதல் கண்ணி ’’
‘‘விண்ணவர் யாவரும் ’’

மண்ணுலகத்தில் இருக்கும் மானுடர்கள் விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்கள், பித்ரு உலகத்தில் இருப்பவர்களும் தங்களது தேவையை நிறைவு செய்து கொள்வதற்கு உமையம்மையை நாடி அன்பு செய்கின்றனர். அவளிடத்தில் தான் வேண்டியதை விரும்பி கேட்கின்றனர். இதனோடு மட்டுமல்லாமல் பன்னிரெண்டு ஆதித்யர்கள். அஷ்ட வசுக்கள் எட்டு, இரண்டு அஸ்வினி தேவர்கள், ஏகாதச ருத்ரர்கள் இவர்கள் எல்லோரும் திருக்கடவூரில் பூசித்துள்ளார்கள். இதை நினைவூட்டும் வகையிலே அஷ்ட வசுக்கள், அஸ்வினி தேவர்கள் பன்னிரெண்டு சூரியனும், ஒருங்கே அமைந்த சிலையும், துவாத ஆதித்யர்களும் இணைந்த காலாதித்யன் என்ற பெயரிலும் பூதேவியும் எழுந்தருளியுள்ளார்கள்.

‘‘விண்ணவர்’’ என்ற சொல்லால் முப்பத்து முக்கோடி. தேவர்களையும் ‘‘யாவரும்’’ என்ற சொல்லால் மானுடர்களையும் கூட
குறிப்பிடுகின்றார்.‘‘வந்து இறைஞ்சி’’ என்பதனால் சத்ய லோகத்தில் வாழும் பிரம்மாவும், வைகுந்தத்தில் வாழும் விஷ்ணுவும், கைலாயத்தில் வாழும் ருத்ரரும், அமராவதி நகரில் வாழும் இந்திரனும், விண்ணுலகத்தில் வசிக்கும் மற்ற தேவர்களும் அவரவர் இருப்பிடத்தை விட்டு இருப்பூலகத்தில் அமைந்திருக்கிற திருக்கடவூர் வந்து வணங்கினார்கள் என்பதையே ‘‘வந்திறைஞ்சி ’’ என்கிறார்.  தேவர்களுக்கு அப்படி என்ன தேவை உள்ளது ? எதற்காக வந்து வணங்குகிறார்கள் என்ற காரணத்தை அவரே சொல்கிறார்.

உமையம்மையானவள் - விஷ்ணுவிற்கு தங்கை, பிரம்மாவிற்கு பேத்தி, ருத்ரனுக்கு தாய் இந்திரனுக்கு தலைவி என்பதனால் அவரவர் உறவுப்படி வந்து இறைஞ்சுகின்றார்கள்.

இந்திரன் - கடவுளர்யாவர்ருக்கும் மேலே
இறைவியுமாம் - 44
விஷ்ணு -  செங்கண்மால் திருத்தங்கச்சியே - 61
ருத்ரன் - முதல் மூவருக்கும் அன்னே  - 25

பிரம்மா, படைத்தல் தொழிலுக்கும், விஷ்ணு காக்கும் தொழிலுக்கும். ருத்ரன் அழிக்கும் தொழிலுக்கும் உதவும் பொருட்டும், இந்திரன், மற்ற தேவர்கள் அனைவருமே இறவா மருந்தான அமுதத்தை பெரும் பொருட்டும் இறைஞ்சுகின்றார்கள்.

‘‘அமரர் பெரு விருந்தே ’’ -  24
‘‘பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியை ’’   
நாம் வேண்டிய பொருள், விரும்பிய நபர் இவை மீது நமக்கு தோன்றும் ஓர் உணர்வு பேணுதல். நமக்கு பாதுகாப்பு தரும் இடம், நமக்கு மகிழ்ச்சியை தரும் சூழல் இவற்றின் மீது நாம் கொள்ளும் பண்பு பேணுதல் இதையே
அபிராமிபட்டர் .
‘‘நின் புகழ்ச்சியன்றி பேணேன் ’’- 64 என்று குறிப்படுகின்றார்.

உமையம்மையின் புகழ் என்பது அவளின் அருளை அடைந்தவர்கள், அவள் அருளால் தன் துயர் நீங்கியவர்கள், அவளால் பேரானந்தம் பெற்றவர்கள், உமையம்மையை பற்றி தான் அனுபவித்தவைகளைப் பற்றி அறிவித்தார்கள். அதையே உபாசனை நெறியில், தேவி மஹாத்மியம், லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி மாலா மந்திரம் இவை அனைத்தையும் அனுபவித்து அறிவித்தவர்கள் தேவர்கள், யோகிகள், ரிஷிகள், முனிகள் ஆகியோர் ஆவார். தேவர்கள் தங்களை மகிடாசுரனிடமிருந்து பாதுகாக்க வேண்டி வழிபட்டது தேவி மஹாத்மியம். அந்த தேவிமஹாத்மியத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் துதிப்பதாய் மார்க்கண்டேய ரிஷியால் கூறப்பட்டுள்ளது.

இதையே,‘‘விண்ணவர் யாரும் வந்திறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம் பெருமாட்டியை ’’ என்றுஅபிராமி பட்டர் குறிப்பிடுகின்றார்.‘‘பேதை நெஞ்சில் காணுதற் கண்ணியள் அல்லாத கண்ணியை ’’உபாசனையை பொறுத்தவரை பேதை நெஞ்சு என்ற வார்த்தையை அபிராமி பட்டர் இங்கு இரண்டு முரண்பாடான பொருள்களை தரவல்லதாக கூறுகின்றார்.

1). இறைவியை அடையச் செய்யும் மனதின் குணம்.
2). இறைவியை விட்டு விலகச் செய்யும் மனதின் குணம்.
இந்த இரண்டு குணங்களில் எது ஒருவரிடம் உள்ளதோ. அதைக் கொண்டு தான் இறைவியானவள் அந்த உபாசகனிடம் காணுதற்கு அன்னியன் அல்லாமல் எளிமையான முறையிலே காட்சியளிக்கின்றாள். அல்லது உபாசனையை விட்டு விலகிச் செல்கின்றாள்.
இறைவியை பற்றிய விளக்கத்தை தரும்
தத்துவ நூல்களை பயில்தல்
‘‘அறிந்தேன் எவரும் அறியா மறையை’’ - 3
அவ்வாறு பார்த்தவற்றை முழுவதும் மனதில் கொண்டு அதில் ஒரு சிறிதும் வழுவாமல் அதைப் பின்பற்றி இறை வழிபாட்டை செய்யும் பண்பு.
‘‘பத்ம பதம் சூடும் பணி எனக்கே அடைத்தனை ’’- 27 என்பதாக குறிப்பிடுகின்றார்.

உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுகின்ற பண்பு.
‘‘நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை ’’- 27   என்பதனால் தூய்மையை வலியுறுத்துகிறார். இப்படிப்பட்ட உயர்ந்த பண்புகளை கொண்டவரிடத்திலே உமையம்மை விரும்பி வருகின்றாள் அதையே
‘‘காணுதற்கு அன்னியில் அல்லாத கண்ணியை ’’ என்று குறிப்பிடுகின்றார்.

மனதின் இயல்பானது புலன்களின் வழிச் சென்று தடுமாறும், அது இறைவியை விட்டு விலக செய்யும், தேவைக்கு அதிகமாக ஆசைப்படும் பண்பையும் கொண்டது.
‘‘ஆசைக்கடலுள் அகப்பட்டு ’’- 32  
தீயவருடன் சேர்ந்து நல்ல வாழ்கையை
இழக்கின்ற பண்பு.

‘‘கயவர் தம்மோடென்ன கூட்டினியே ’’- 79 என்கிறார்.  உழைப்பின்றி முயற்சியின்றி குறுக்கு வழியில் விரைவில் எதையும் அடைய விரும்பி தேவையற்ற வழியை நாடிச் செல்கிற பண்பு   ‘‘வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று ’’- 64 என்று சுட்டிக் காட்டுகிறார்.பொய்யான வார்த்தைகளால் பிறரை ஏமாற்றித் திரியும் பண்பு.பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய் ’’- 57 இவையாவும் இறைவியை ‘‘ காணுதற் கண்ணியள் அல்லாத கன்னி ’’ ஆக்கிவிடும் என்று உபாசகனுக்கு இருக்கக் கூடாது பண்புகளைச் சுட்டிக்காட்டி நமக்கு அறிவுறுத்துகிறார்.‘‘காணும் அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணமனறோ முன் செய் புண்ணியமே’’அன்பு பூணுதல் என்பது இப்பாடலை பொறுத்தவரை உமையம்மையின் மீது அன்பு செலுத்துவதை குறிக்கிறது.

உலகியலில் தாய் மகனிடத்தில் செய்யும் அன்பு கணவன் மனைவியிடத்தில் கொள்ளும் அன்பு, உடன் பிறந்த சகோதரிகள் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளுகின்ற பண்பு, தாய் வழி உறவினர். சித்தி மாமா முதலானவர்களின் உறவான மாமனார். மாமியார் மைத்துனி மைத்துனர் மகன், மகள் இவர்களிடத்து கொள்ளுகின்ற அன்பு இவை எல்லாவற்றையும் நாம் நேரடியாகக் கண்டு கொண்டு அனுபவிக்கிறோம்.

இந்த உறவுகளின் மீது செலுத்தும் அன்பு வரையறுத்துப் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. அன்பு  எப்படிச் செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.இயல்பாகவே மானிடர்களிடம் இப்பண்பு தோன்றுகிறது.  ஆனால் இறைவியினிடத்து அன்பு செய்து என்பது அவ்வாறு அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் ?

இவர்கள் எவர் மீது நாம் அன்பு செலுத்தினாலும் அவர்கள் நம்மிடத்தில் மீண்டும் அதே அன்பை பிரதிபலிக்கிறார்கள் என்று நம்புலன்களுக்குப் புலப்படுகிறது.ஆனால் உமையம்மையிடம்  நாம்  செலுத்தும் அன்பு அவள் ஏற்றாளா இல்லையா என்று நம் மனதிற்கோ, புலன்களுக்கோ புலப்படவில்லை.உலகியலில் நாம் செலுத்தும் அன்பானது, நாம் கண்டும், கேட்டும், உற்றும், உணர்ந்தும் நமக்கு சாத்தியப் படுகிறது.

ஆனால்‘‘மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத ’’- 87  இருக்கக் கூடிய உமையம்மையை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை பிறகு எப்படி அவள் மீது நாம் அன்பு வைக்க முடியும் என்கிறது நம் மனது. அதனால் சாத்திரங்கள் இறைவியை பற்றி அன்பு செலுத்த ஒரு உருவத்தை நமக்கு கற்பிக்கிறது (விக்கிரஹத்தை) அந்த உருவத்திலேயே இறையருளை நிலைப்படுத்துகிறது. அதை ‘‘ஆவாஹனம்’’ என்று கூறுவர். அப்போது உமையம்மையானவள் அந்த உருவத்தை தன் வடிவாக எடுத்துக் கொண்டு, சாதகனுக்கு தன் வடிவத்தைக் காட்டி அருள்வாள்.
அந்த அருள் சக்தியானது நம்மிடத்தில் தொடர்பு கொள்வதற்கு எண்ணத்தை ஒருமித்து அதன் வழியாக மந்திரத்தை சொல்லி கொண்டேயிருக்க வேண்டும் என்கிறது சாத்திரம்.

அப்படி சொல்லிக்கொண்டேயிருப்பதற்கு ஜெபம் என்று பெயர். அந்த ஜெபமானது தொடர்ந்து இறைவிக்கு கொடுக்கிற விக்கிரஹத்தை மனதில் கொண்டு செய்யும் போது உமையானவள் தன் அன்பை சாதகனுக்குள் உணர்வாள் வெளிப்படுத்துவாள்.அதைத் தான் இந்த இடத்தில் ‘‘அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம்’’- என்கிறார்.

உமையம்மையை தரிசிக்கும் நோக்கத்துடன் அவளிடத்தில் அன்பு செய்ய, அவளது மந்திரத்தைப் பெற்று, அது தொடர்பான சாத்திரங்களைக் கற்று, அதன் வழி சில செயல்களை செய்து, சில செயல்களை விலக்கி சில மன உணர்வுகளை மாற்றி, இறைவி என்று சாத்திரங்கள் சொன்ன வழி அமைக்கப்பட்ட யந்திரம், மற்றும் திருவுருவத்தை மனதில் பதித்து அகத்திலும், புறத்திலும், ஒரே அமைப்பை ஏற்படுத்தும் மனம், வாக்கு, காயங்களினாலே, சந்தனம், முதலான பொருட்களைப் பயன்படுத்தி சிற்பியின் விக்கிரஹத் தோடு சாத்திரங்களின் தத்துவங்களை உணர்ந்து அதையே உமையம்மையாக எண்ணி வழிபாடு செய்வதையே அதாவது ஆத்மார்த்த பூஜை செய்வதையே.
‘‘அன்பு பூணுதற்கு எண்ணிய’’ எண்ண மன்றே’’ என்கிறார்.

உபாசகன், உபாசனை, உபாசிக்கும் கடவுள் இம்மூன்றிற்கும் உள்ள தொடர்பு அதிலே உள்ள மிகச் சரியான தன்மை. அது சார்ந்து ‘‘அன்பு பூணுதற்கு’’ எண்ணம் அமைகிறது. அதனால் இம்மூன்றின் இன்றியமையாமையும், உமையம்மையும் அபிராமி பட்டர் மறைமுகமாக வரையறுக்கிறார்.
அந்த எண்ணமானது ஐந்து வகைகளில் தோன்றுகிறது.

1). கோயில் போன்ற புறச் சூழல்  2). தீட்சை பூஜை போன்ற செயல்கள், 3). உபாசகனின் தேவை மற்றும் தொடர் முயற்சி, 4). குருவின் சரியான வழிகாட்டல் , 5). உமையம்மையின் அருள்.

இவை ஐந்தையும் கடந்து வருவது பூர்வஜென்ம புண்ணியம், இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை சென்ற பிறவியில் செய்த உபாசனையின் விளைவாக இந்த பிறவியில் தொடர்கிற, தோன்றுகிற இறை உணர்வு மிகுதி மற்றும் சில அனுபவமான கனவு பிரார்த்தித்தவுடன் செயல் நிறைவேறுவது, தீயதில் இருந்து மனது இயல்பாகவே விலகி இருந்தல், இறையன்பு மிகுதியாக இருந்தல், உலகியல் சார்ந்த வறுமை முதலிய  உபாசனைக்கு தடையின்றி இருத்தல் போன்றவைகள்.

முன் செய் புண்ணியம்  என்கிறார்கள். அதையே இங்கு அபிராமி பட்டர் குறிப்பிடுகின்றார். அபிராமி பட்டருக்கு மற்றவர்களை விட கூடுதல் உள் உணர்வு சார்ந்து அன்பு இருந்தது என்பது.
‘‘உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் ’’ - 1
அபிராமியிடத்து வேண்டியதை பல நேரங்களில் உடனே அடைந்திருக்கிறார்.
‘‘எண்திறைந்த விண்ணோர் தங்கட்கும் இந்ததவம் எய்துமோ’’

- 35 என்பதனால் அறியலாம். தீயதில் இருந்து அவர் மனது இயல்பாக விலகியிருந்ததற்கும் காரணம் அவர் செய்த இறைபணியே. இறைவி அவருடன் இருப்பதாலும், அக்ரஹாரம் என்ற கோயிலை சூழ்ந்து வசிப்பதாலும், இறை அன்பர்களுடனேயே, தொடர்பை பெற்றதனாலும், அது இயல்பாகவே அமைந்திருந்தது. இதையே ‘‘கூட்டியவா என்னை தன் அடியாருள் ’’- 80‘‘பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே’’ -  27 என்ற வரிகளால் நன்கு உணரலாம்.

இவையாவும் இந்த பிறவியில் கிடைத்ததன்று, இது ‘‘முன் செய் புண்ணியம் ’’- 12 என்று உணர்கின்றார்.
இந்த பிறவியில் செய்வது வேறு, முன் பிறவியில் செய்த விளைவாய் வந்தது வேறு என்பதை
‘‘கை தவமோ அன்றி செய்தவமோ ’’- 45 என்று பிரித்துகாட்டியதிலிருந்து அறியலாம்.

‘‘நான் முன் செய் புண்ணியம் ஏது என் அம்மே ’’ -12  என்று கேட்கிறார் பட்டர் (கனவில்) காசிக்கு வாடா தெரியும் என்று கூறினாளாம் உமையம்மை. அபிராமி பட்டர் அம்மையின் அருள் பெற்று அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய பிறகு அரசின் உதவி பெற்று காசிக்குச் சென்றார்.
அப்படி சென்ற போது கங்கைக் கரையில் ஓர் இடத்தை தோண்டி அந்த இடத்தில் புதைந்து கிடைந்த  சக்ரத்தை எடுத்தார். போன பிறவியில் விட்டதை மீண்டும் எடுத்து வந்த தன் இல்லத்தில் பூஜித்தார். இது அவர் வாழ்வில் நடந்த சம்பவம்.

இதிலிருந்து அபிராமி பட்டர் செய்த ஜபம் கன்னி என்றும், அவள் அனைத்து தேவர்களுக்கும் அருள் செய்ய வல்லவள் என்று நமக்கு சொல்கிறார். அவர் தன் மனதுக்குள்ளே ஜபம் செய்து கொண்டே இருந்தார். என்பதை ‘‘காணும் அன்பு பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ’’ இப்பிறவி மட்டும் அல்லாது சென்று பிறவியோடும் தொடர்புடையது என்பதை ‘‘முன் செய் புண்ணியமே’’ என்ற அற்புதமான இப்பாடலில் தெரிவிக்கிறார்.
இப்பாடலை படிப்போர்க்கு பூர்வ ஜென்ம ஞாபகம் வரும். இறப்பு அச்சம் அகலும், என்பதை அனுபவத்தில் சிலர் அடைந்திருக்கிறார்கள். அதை நாம் பெற முயல்வோமாக.

(தொடரும்)

தொகுப்பு: முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்