SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகிழ்வான வாழ்வருளும் மாலோலன்

2020-03-17@ 10:19:58

நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-27

பூவரசன் குப்பம்

பிரகலாதனின் பக்திக்காக தூணைப்பிளந்து எழுந்தருளிய  சிங்கபிரானது கோயில் ஒன்று, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. ‘தென் அஹோபிலம்’ என்று கொண்டாடப்படும்  எனும் திருத்தலம்தான் அது. நரசிம்ம அவதாரம் என்பது தர்மம் நலிவடைந்த வெவ்வேறு காலகட்டங்களில், அதனைக் காக்கும் பொருட்டு, மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் முக்கியமான ஒரு அவதாரமாகும். ஒருபுறம் நான்முகனிடம் ‘நிரந்தர
வாழ்வு’ என்ற வரத்தினை பெற்ற கொடூர அரக்கன் ஹிரண்யகசிபுவின் அட்டகாசங்கள், மறுபுறம், தனது தாயின் கர்ப்பத்தில் இருந்த போதே மந் நாராயணனின் பக்தனான ஹிரண்யனின் மகன் பிரஹலாதன்.

 அக்கிரமங்கள் புரியம் கொடூரமான அரக்கர் குலத்தினில் பிறந்திருந்தாலும், தர்ம சிந்தனை உடையவன் பிரஹலாதன். மந் நாராயணனே உயர்ந்தவன் என்று அவன்பால் மாறாத பக்தியினை உயைவன். தானே அனைவரை விடவும் உயர்ந்தவன் என்ற மமதை மிகுந்தவன் ஹிரண்யன், ஹரியின் பெயரை எப்பொழுதும் உச்சரிக்கும் சிறுவனின் செயலினால் பெருங்கோபமுற்ற ஹிரண்யன், அவனை அச்சுறுத்த எண்ணி, தனது சேவகர்களை ஏவி அவனை உயரிய மலை முகட்டிலிருந்து உருட்டி விடச் செய்தான். ஆழ்கடலில் மூழ்கடிக்கச் செய்தான். யானையை விட்டு மிதிக்கச் செய்தான்.

ஹோலிகா என்பவள் ஹிரண்யனின் தங்கை, நெருப்பு தன்னை எரிக்காதிருக்கும் வரத்தினைப் பெற்றவள் அவள். ஹிரண்யன் ஹோலிகாவை அழைத்து, ப்ரஹ்லாதனை அவளது மடியில் வைத்துக் கொள்ளுமாறும், இருவருக்கும் சேர்த்து நெருப்பு மூட்டப்படும்போது, அவள் பெற்ற வரத்தின் காரணமாக அவள் மட்டும் தப்பித்து விடலாம். ப்ரஹ்லாதன் எரிந்துவிடுவான் என்று யோசனை கூற, ப்ரஹ்லாதன் அத்தை முறையாகும் ஹோலிகாவும் இந்த சூழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டாள்.

 பிரகலாதனை அவன் அத்தை ஹோலிகா தனது மடியில் வைத்துக் கொள்ள, தீ மூட்டப்பட்டது. ப்ரஹ்லாதன் எப்பொழுதும் போல கண்களை மூடி, கை இரண்டையும் குவித்து மந் நாராயணனை த்யானம் செய்து கொண்டிருக்க, ஹிரண்யனால் தன் கண்கள் கண்ட காட்சியினை நம்ப முடியவில்லை. மூட்டப்பட்ட தீயில் ஹோலிகா வெந்து சாம்பலாகிவிட, ப்ரஹ்லாதன் ஒரு சிறு  காயம்கூட உண்டாகாமல் கண்மூடி தியானம் செய்த நிலையில் அப்படியே  இருந்தான்.

ஹிரண்யனுக்கு அளவிலடங்கா கோபம் மூண்டது. பிரகலாதனை மற்றவர்களைக் கொண்டு அழிப்பதெனும் முடிவை விடுத்து, தானே காரியத்தில் இறங்குவது என்று முடிவு செய்தான்.‘ எங்கே உன் மாயாவி?’ என்று தன் மகனிடத்தே கேட்க, ‘எங்குமுளன் என் ஹரி’ என்றான் அவன் மகன், தன் அரண்மனையில் இருந்த தூணினை ஹிரண்யன்பிளக்க, உள்ளிருந்து நரசிம்மவேடம் தரித்து மந் நாராயணன் உக்கிரமாக வெளிவந்து ஹிரண்யனை வதம் செய்தார்.

 கொடுமைகள் புரியும் அரக்கன் ஹிரண்யனின் அக்கிரமங்களுக்கு அஞ்சி. அவனது ராஜ்ஜியத்தை விடுத்து மிகத்தொலைவில் தங்கியிருந்த முனிவர்களுக்கெல்லாம், அந்த சிங்கமுகத்தோனை தரிசனம் செய்யவில்லையே என்று மனதில் குறையால். முனிவர்களுள் சிறந்தவர்களான சப்தரிஷிகளிடம் அவர்கள் தங்கள் குறையினைச் சொல்லி அருட்பாலிக்குமாறு வேண்டினர். சப்தரிஷிகளான ஜமதக்னி, அத்ரி, பரத்வாஜர், கௌதமர், வசிஷ்டர், காச்யபர் மற்றும் கௌசிகர் தங்களது இந்த ஆசையினை நிறைவேற்ற வேண்டி மந் நாராயணனை நோக்கித் தவம் புரிய, சிங்க முகத்தோன் அவர்களது தவத்தினை மெச்சி தோன்றிய கோயில்கள் பூவுலகில் எட்டு நரசிம்ம ஸ்தலங்களாக அமைந்துள்ளன.

அவை பூவரசங்குப்பம், அந்திலி, பரிக்கல், சிங்கிரி கோவில், நாமக்கல், சிங்க பெருமாள் கோயில், சோளிங்கர் மற்றும் சிந்தலவாடி ஆகியவை ஆகும். இவற்றுள் ‘பூவரசன் குப்பம்’ என்று அறியப்படும் ‘பூவரச மங்கலம்’ வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு வைணவத் திருத்தலமாக அமைகின்றது.  
சமண ஆதிக்கம் மிகுந்திருந்த ஏழாம் நூற்றாண்டில், முதல் பல்லவ மன்னன், சைவ மற்றும் வைணவ மதங்களை அழிப்ப தென்னும் சபதம் பூண்டு பல கோயில்களை இருந்த இடம் தெரியாமல் அழித்தான். அந்தக் காலகட்டத்தில் அவனது ராஜ்யத்தில் வாழ்ந்த நரஹரி என்ற வைணவ ரிஷியானவர் பல்லவ மன்னனை எதிர்த்துக் குரல் கொடுக்க, அவரைக் கொல்லுமாறு ஆணை பிறப்பித்தான் அகந்தை மிகுந்த மன்னன்.

அவன்மீது சினமுற்ற நரஹரி, ‘என்னைக் கொல்லத் துணிந்த உனக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகட்டும். உன் உடல் முழுவதும் அழுகி சீழ் பிடித்து, புழுக்கள் உண்டாகி நீ துன்பப்படுவாயாக ’ என்று சாபமளித்து, அவனது ராஜ்ஜியத்தை விட்டு நீங்கிச் சென்றார். நரஹரியின் சாபமானது பலிக்க, உற்றார் உறவினரும் அருவருக்கத்தக்க வகையில் மன்னனது உடல் முழுவதும் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியது. உடலெங்கும் புழுக்கள் நெளிய மிகுந்த துன்பத்துக்கு மன்னன் ஆளானான்.

மனம் வெதும்பி தனது நாட்டை விட்டே வெளியேறிய மன்னன், தென்பெண்ணையாற்றின் வடக்கே ஆற்றங்கரையில் ஒரு பூவரச  மரத்தினடியில் வலி மிகுதியால் களைப்புடன் விதியை நொந்தபடி படுத்திருந்தான். வெதும்பிய மனதுடன் விரக்தியில் படுத்திருந்த மன்னனின் மீது பூவரச இலை ஒன்று விழ, அப்பொழுது உண்டான சிறிய அதிர்வில் கண்விழித்தான் மன்னன்.

அந்த இலையை புண்களால் நிறைந்த தனது மேனியின் மீதிருந்து நீக்க முற்படும்போது, அதில் தெரிந்த நரசிம்மரின் திருமுகத்தினைக் கண்டு மனம்  நெகிழ்ந்தான். நிறைந்த புன்னகையுடன் தனது மடிதனில் லட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் நரசிம்மபிரான் காட்சி தந்ததைக் கண்டு கை குவித்து கண்ணீர் மல்கி மனமுருகி நின்றான் மன்னன்.

‘ஆடியாடி அகம் கரைந்து, இசை
பாடிப்பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்கா வென்று,
வாடி வாடுமிவ் வாணுதலே’
ஆழ்வாரின் இந்த வரிகளுக்கேற்ப, சிங்க

பிரான் அசரீரியாக, பல கோயில்களை இடித்த பாவத்திற்கு பிராயச் சித்தமாக, அந்த பூவரச மரத்தினடியிலேயே தனக்கு ஒரு கோயிலை எழுப்ப மன்னனைப் பணித்தார். அவ்வாறு மன்னன் கோயில் கட்டும் இடமானது, பூவரசமங்கலம் என்று பெயர் பெற்ற புண்ணியத் தலமாக விளங்கும் என்று அசரீரியானது கூறியது.

 அந்த அசரீரியின் ஆணைப்படி மன்னன் கோயில் கட்ட விழைந்த அந்த நிமிடம் அவனது சாபங்கள் நீங்கி அவனது உடல்நிலை பரிபூரண சுகம் பெற்றது. கருணை மிகுந்த சிங்க முகத்தோனுக்கு ‘பூவரச மங்கலம்’ என்றழைக்கப்படும் அந்த இடத்தில் கோயில் உண்டானது.
 மற்றொரு காலகட்டத்தில், விஜயநகர சாம்ராஜ்யத்தினைச் சேர்ந்த அரசன் ஒருவன், பகைவரின் சூழ்ச்சியால் தன்னுடைய ராஜ்ஜியத்தை இழந்து நிற்கதியாக நின்றபோது, பகைவரிடமிருந்து தப்பிக்க எண்ணி இந்த கோயிலுக்குள் தற்செயலாக நுழைந்தான்.

இங்கு வீற்றிருந்த கோலத்தில் அருட்பாலிக்கும் சிங்கபிரானையும், தாயாரையும் கண்டு மனமுருகி அவர்களது திருவடிகளில் விழுந்து வணங்கி தனக்கு நல்வழி காட்டுமாறு வேண்டினான். மனமிரங்கிய அந்த திவ்ய தம்பதிகள், அவனது பகைவரின் சூழ்ச்சிகளை முறியடித்து, ராஜ்யத்தை அவனுக்கு மீட்டுக் கொடுத்தனர் என்று ஓலைச் சுவடிகள் கூறுகின்றன. ஆலயமெங்கும் உள்ள சிற்பங்கள், விஜய நரகப் பேரரசின் கலைத்திறனை நயம்பட எடுத்துரைப்பதோடு. இந்த வரலாற்று நிகழ்வுக்கு சான்றாகவும் அமைகின்றது.

 இத்திருக் கோயிலில் சிங்கபிரான் நான்கு கைகளோடு காட்சி தருகின்றார். லட்சுமி நரசிம்ம ரூபம் என்பதினால் சிங்கபிரானின் இடது தொடைதனில் லட்சுமி பாந்தமாக அமர்ந்த வண்ணம் தரிசனம் நல்குகின்றாள். நன்றாக சிங்கபிரான் புறம் திரும்பி தாயார் (லட்சுமி) அமர்ந்திருக்கும் திருக்கோலம், அவள் பக்தர்களாகிய நம்மை ஒரு கண் கொண்டு பார்ப்பது போலவும், மற்றொரு கண்ணால் தனது மனம் கவர்ந்த சிங்கமுகத்தோனைக் காண்பது போலவும் அமைந்துள்ளது.

அமிர்தவல்லி என்ற பெயரினைக் கொண்டு சிங்கபிரானுடன் இத்தலத்தில் காட்சி அளிக்கும் தாயார், இறப்பில்லா வரம் அளிக்கும் அமிர்தத்தையும் வரமாகத் தர வல்லவள். சிங்கபிரான் தாயாரை தன்னுடன் சேர்த்து ஆலிங்கனம் செய்தபடி இருக்கும் கோலத்தினை நாம் பல நரசிம்ம தலங்களில் தரிசிக்கலாம். அமிர்தவல்லித் தாயார், சிங்கமுகத்தோனை ஆலிங்கனம் செய்த வண்ணம் அமர்ந்திருப்பது இந்தக் கோயிலின் தனிப் பெரும் சிறப்புகளில் ஒன்றாகும்.

இத்திருத்தலத்தில் மூல மூர்த்தி ‘ லட்சுமி நரசிம்மன்’ உற்சவ மூர்த்தி ‘ ப்ரஹ்லாத வரதன்’ என்று கொண்டாடப்படுகிறார். இக்கோயிலின் தலமரம் ‘ நெல்லி மரம் ’. இங்குள்ள தீர்த்தமானது (குளம்) ‘சக்கர தீர்த்தம்’ எனப்படுகின்றது. பாஞ்சராத்ர ஆகம முறைப்படி இந்தக் கோயிலில் செய்யப்படும் பூஜைகள் அனைத்தும் வருடம் முழுவதும் பல விசேஷ தினங்களில் மிக உயர்வாக பரிமளிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தினில் கொண்டாடப்படும் நரசிம்ம ஜெயந்தி திருநாளன்று நரசிம்மபிரானுக்கு ஸஹஸ்ர கலச திருமஞ்சனம் செய்விக்கப்படுகின்றது.

பிரதி மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி எனப்படும் வருடாந்திர ஏகாதசியன்று இந்த ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக விளங்குகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி, வைகாசி மற்றும் தை மாதங்களில் உற்சவங்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

 இரண்டு கால பூஜைகள் அனுதினமும் நடக்கும் இத்திருத்தலத்தில் அனுதினமும் அன்னதானம் நடைபெறுகின்றது. பிரதோஷ காலங்களிலும் சிங்கபிரானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.  சப்த ரிஷிகளின் தவத்தினை மெச்சி, அவர்களது ஆசைக்கிணங்கி சிங்கபிரான் சாந்தமூர்த்தியாக அருட்பாலிக்கும் தலம் என்பதால், மனதில் உண்மையான பக்தியுடன் வேண்டப்படும் அனைத்து ஆசைகளும் இந்தக் கோயிலுக்கு வந்தால் நிறைவேறுகிறது என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

கிரஹ மற்றும் வேறு பலவிதமான தோஷங்களினால் திருமணத்தடை உண்டாகி அல்லலுறுபவர்கள், இந்த ஆலயத்திற்க்கு வந்து ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்த வண்ணம் அருட்பாலிக்கும் சிங்கப்பிரானையும் அமிர்தவல்லித் தாயாரையும் தரிசனம் செய்தால், திருமணத் தடைகள் நிவர்த்தி ஆவதாக ஐதீகம். முக்கியமாக பிரதோஷ காலங்களிலும் ஸ்வாதி நட்சத்திரத்தன்றும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகளை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேறுகின்றனர்.

நல்ல வரன் அமைய வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டு, சிங்கபிரானைத் தழுவிய வண்ணம் இணை பிரியாது அவனது மடிமீது அமர்ந்திருக்கும் அமிர்தவல்லித் தாயாருக்கு திருமாங்கல்யம் வாங்கி சம்ர்ப்பித்தால், திருமணம் விரைவில் கைகூடுவது பலரது அனுபவம். உடற் பிணிகளால் அல்லலுறுபவர்கள், பிரதி மாதமும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று இந்த திருத்தலத்தில் நடத்தப்படும் தன்வந்த்ரி ஹோமத்தினில் கலந்து கொண்டு, தமது நோய்களிலிருந்து மீளலாம். ஒன்பது ஸ்வாதி தன்வந்திரி ஹோமங்களில் இடைவிடாது கலந்து கொண்டு தங்கள் உடல் உபாதைகளிலிருந்து மீண்டவர் பலர்.

ராஜ்யத்தை இழந்த மன்னனுக்கு அதனை மீட்டுக் கொடுத்த கொடை வள்ளலாம் பூவரசமங்கலம் சிங்கபிரானை, தடையின்றி ஒரு மண்டலம் (48 நாட்கள்) வழிபட்டு வர, இழந்த பட்டம், பெயர், புகழ், பதவி, செல்வம் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை, அவனது திருவுருவப் படத்தினைக் கொண்டு அவரவர் இல்லங்களில் இருந்து கொண்டே நிறைவேற்றலாம். விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2. கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தக் கோயிலை அடையலாம்.

பூவரசமங்கலம் சிங்கபிரான் கோயிலானது காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும். மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சிங்கபிரானை தரிசனம் செய்யலாம்.  விழுப்பும் பண்ருட்டி சாலை வழியே வருபவர்கள், கள்ளிப்பட்டி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து மூன்று கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து இத்தலத்திற்குச் செல்ல நேரடியான பேருந்து வசதிகளும் உள்ளன.

(தரிசனம் தொடரும்)

தொகுப்பு: ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்