SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நலம் தருவாள் நத்தம் மாரியம்மன்

2020-03-10@ 13:06:06

திருமலைநாயக்கர் மதுரையை ஆண்டபோது அவரின் கீழ் சிற்றரசர்களாக பலர் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி புரிந்து வந்தனர். அதில் எர்ர தாது வெண்முடி சொக்கலிங்க நாயக்கரும் ஒருவர். தள்ளாத வயதிலும் அயராது உழைத்து வந்தார். தமக்குப் பிறகு நாடாளுவது யார் எனும் கவலையில் இடைவிடாது யோசித்தபடி இருந்தார். தமக்கு ஒரு புதல்வன் இருந்தால் அவனையே சிம்மாசனத்தில் அமர்த்தி திருமலை நாயக்கருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஏழு மகன்களில் யாரை அரியாசனத்தில் அமர்த்துவது எனும் ஐயம் எழுந்தது. வித்தியாசமாகச் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருந்த சொக்கலிங்க நாயக்கர் விசித்திரமான போட்டி ஒன்றை அறிவித்தார். ஏழு மகன்களும் ஒரே நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும்.

அதில் யாருடைய பானை முதலில் பொங்குகிறதோ அவரே அடுத்த அரசர் என்றார். ‘‘நாடாளத் தெரிந்தவனுக்கு நெல் குத்தவும் தெரிந்திருக்க வேண்டும். வெறும் போக வாழ்க்கை மட்டுமல்ல அரச பதவி. சாதாரண பொங்கல் வைக்க எது எதெல்லாம் வேண்டும் என்று முதலில் தெரிந்து கொண்டால்தான், நாளை மக்களுக்கு வயிறார உணவளித்து அவர்களின் அடிப்படையான விஷயங்களை சரிசெய்ய முடியும். எனவேதான் இப்போட்டி உடனே பொங்கலை பொங்க வையுங்கள். இதையொரு ஆபத்துகால செயலாகச் செய்யுங்கள்’’ என்று உத்தரவிட்டார். ஆறு புதல்வர்களும் விறகு தேடி ஓடினர். அதில் கடைசி மகனான லிங்கன் மட்டும் தந்தையைச் சுற்றியுள்ள சருகுகளைச் சேகரித்தான்.

மூன்று கற்களை முக்கோணமாக வைத்து சட்டியை வைத்து தீமூட்டினான். அடுப்பு கனன்று எரிய ஆரம்பித்தது. அருகிலுள்ள வீடுகளில் அரிசியும், வெல்லமும் கொணர்ந்து கொதிக்கவிட்டான். மற்ற புதல்வர்கள் அப்போதுதான் விறகையே எடுத்து வந்தனர். ஆனால், அதற்குள் இங்கு பொங்கல் பொங்கி வந்தது. தந்தையின் முகம் மலர்ந்தது. லிங்கனை ஆரத் தழுவி நீயே அடுத்த அரசன் என அறிவித்தார். மற்றவர்களுக்கும் அவரவர்களுக்குரிய பணிகள் கொடுத்து திருப்திபடுத்தினார். அவ்வூர் மக்கள் சருகு கொண்டு சமைத்ததால் சருகு சொக்கலிங்க நாயக்கர் என்று அழைத்தனர். கால் சற்று ஊனமாக இருந்ததால் சப்பாணி என்று சேர்த்து சப்பாணி சருகு சொக்கலிங்க நாயக்கர் என்று முழுப்பெயராக்கி அழைத்தனர். அரண்மனைக்கு பால் அளக்கும் ஒருவன் பக்கத்து சிற்றூரிலிருந்து குடத்தில் பால் கொணர்வான்.

ஒருநாள் பாலைக் கறந்து குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட்டுத் திரும்ப, பால் குடம் காலியாக இருந்தது. முதலில் யாரோ திருடுகிறார்கள் என்று சுற்றும் முற்றும் பார்த்தவன், அதிசயமாக தானே காலியாவது பார்த்து அதிர்ந்தான். பல நாட்கள் அரண்மனைக்கு பால்வரத்து குறைந்தது பார்த்து அரண்மனை நேரே அழைத்து காரணம் கேட்டது. தானாக மாயமாக மறைந்து போகிறது என்று சொன்னவனை உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது என்று அரசரிடம் புறம் சொன்னது.

சொக்கலிங்க நாயக்கர் அந்தப் பால்காரனைப் பார்த்தான். அவன் மனம் வெண்மையாக இருப்பதை சூட்சுமமாக கண்டு கொண்டார். விந்தி விந்தி நடந்து அவன் அருகே வந்தார். எவ்விடத்தில் காணாமல் போகிறது. அந்த இடத்தைக் காட்ட முடியுமா என்று கேட்டார். அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். சரியென்றான். ஒரு சிறு குழு மன்னரோடு குடம் வைக்கும் இடம் சென்றது. மன்னர் குடம் வைக்கும் இடத்தின் அடையாளத்தை உற்றுப்பார்க்க சிவந்த நிறத்தில் ஒரு வேர் கொடிபோல் பூமியில் ஆழமாய் பரவியிருப்பதை பார்த்தார். அந்த வேரை வெட்டிவிட்டு குழியை நோண்டச் சொன்னார்கள். ஏதோ ஒன்று அங்கு மறைந்திருக்கிறது என்பது வரையில்தான் மன்னரால் ஊகிக்க முடிந்தது.

வேரைத் துண்டாக்கி, குழியை ஆழமாக்க கடப்பாரையையும், மண்வெட்டியையும் பூமிக்குள் சொருகி வெளியே எடுக்க ரத்தம் ஊற்றாகப் பொங்கி மன்னரின் முகத்தை நனைத்தது. தோண்டியவர்கள் அதிர்ந்து வாய்குழறி நத்தம்... நத்தம்.. என்று ரத்தத்தைப் பார்த்து கொச்சை மொழியில் அலறினார்கள். அதற்குள் ஊர் முழுதும் காட்டுத்தீயாய் ரத்தம் வந்ததை நத்தம் வந்தது என்பதாகப் பரவியது. மன்னன் குழியை கைகளால் அகலப்படுத்தி உள்ளுக்குள் சிவந்திருந்த மாரியம்மன் சிலையை வெளியே எடுத்தனர். மன்னன் உடனே மஞ்சள் நீரினால் அபிஷேகங்கள் செய்து சிறுகுடிலை அமைத்து வழிபட்டான். காலப்போக்கில் கற்கட்டிடமாக மாற்றிக் கட்டப்பட்டது. அதிலிருந்து சொக்கலிங்கநாயக்கரின் அரசபீடத்தை அலங்கரிக்கும் தெய்வமாக இவள் விளங்கினாள்.

நத்தம் மாரியம்மன் என்றே இவளை அழைக்கின்றனர். தற்போது அர்த்தமண்டபமும், மகா மண்டபமும் கட்டப்பட்டுள்ளது. அம்மனைச் சுற்றிலும் விநாயகர், முருகப்பெருமான் சந்நதிகளும், நவகிரக நாயகர்களும் அமர்ந்திருக்க கோயில் இன்னும் பிரகாசமாகத் திகழ்கிறது. மாசித்திருவிழா இங்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அதிலும் பதினைந்தாம் நாளன்று கழுகு மரம் ஏறுதல், தீச்சட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், பூக்குழி இறங்குதல் என்று ஊரே ஆரவாரமாக இருக்கும். பூக்குழியில் இறங்கி அம்மனின் அருட்கனலில் நனைந்து புனிதம் பெறுவோர் இங்கு அதிகம்.நத்தம் மாரியம்மன் பாதம் பணியுங்கள். நலம் பல பெற்று பெரு வாழ்வு வாழுங்கள். திண்டுக்கல்லுக்கு அருகே உள்ளது நத்தம்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்