SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதவன் மருகனே!

2020-03-06@ 10:19:09

பிரான்மலை எனும் கொடுங்குன்றத்திலிருந்து புறப்பட்டு, அங்கயற்கண்ணியாகிய மீனாட்சி வீற்றிருக்கும் அழகிய திருத்தலமாகிய மதுரையை நோக்கி நாம் பயணிக்கிறோம். காமாட்சி என்றதுமே காஞ்சி காமாட்சி நம் நினைவுக்கு வருவது போல், மீனாட்சி என்றதும் மதுரை மீனாட்சி அம்மையே நம் கருத்தில் தோன்றுகிறாள். இங்கு அம்பிகை, பாண்டியன் திருமகளாகத் தோன்றி வளர்ந்து மதியழகனாக வந்த சிவபெருமானுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டாள்.

சிவபெருமான் பாண்டியனுக்காக கால் மாறி ஆடிய திருத்தலம் மதுரை. எனவே தான் கனக சபையாகிய தில்லையையும், வெள்ளியம்பலமாகிய மதுரையையும் ஒப்பிட்டு,

‘‘பொன்னுக்கு வெள்ளி கால் மாற்று அதிகம்’’ என்று சிலேடையாகக் கூறுவது வழக்கம். அரிமர்த்தன பாண்டியனிடத்தில் மணிவாசகர் அமைச்சராகத் ‘‘தென்னவன் பிரமராயன்’’ எனும் பெயருடன் விளங்கிய திருத்தலமும் இதுவே, ஞானசம்பந்தப் பெருமான் அனல் வாதம், புனல் வாதம் செய்து சமணர்களைத் திருத்தி, சைவமும் தமிழும் தழைத்தோங்கச் செய்த பதி மதுரைதான்.

கிழக்கு கோபுரம்  வழியாகக் கோயிலுள்ளே நுழைகிறோம். ஏராளமான புராணக் காட்சிகளை விளக்கும் சிற்பங்களை இங்கு காணலாம். அருணகிரியார் காலத்தில் இந்த நுழைவு வாயில் மண்டபம் இல்லை. (இருபதாம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது) உள்ளே அஷ்ட சக்தி மண்டபம் உள்ளது. இங்கு எட்டு சக்திகளின் உருவங்களும் தனித்தனியே தூண்களில் இடம் பெற்றுள்ளன. (கெளமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, யக்ஞ நாரணி, சாமளை, மகேசுவரி, மனோன்மணி) இங்கிருந்து வேடமண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், இருட்டு மண்டபம் இவற்றைக் கடந்து செல்கிறோம். இருட்டு மண்டபத்தில் 1960களில், வடக்குப்புறச் சுவரை இடித்து வெளிச்சம் வருவதற்காக ஜன்னல்கள் அமைக்கப்பட்டன. இங்கு நர்த்தன கணபதியும் சுப்ரமண்யரும் உள்ளனர்.

அடுத்ததாக நாம் பார்ப்பது பொற்றாமரைக் குளம். ஆலயத்திற்குள்ளேயே அமைந்துள்ளது. நந்தி தேவரின் வேண்டுகோளின் படிப் பெருமான் தமது சூலத்தைப் பூமியில் ஊன்றி உண்டாக்கியது என்பர். இந்திரன் இறைவனைப் பூஜிப்பதற்காக பொன் தாமரைகளுடைய தடாகம் ஒன்றை அமைத்தான் என்றும் அதுவே பொற்றாமரைக் குளம் என வழங்கிற்று என்றும் கூறுவர். ‘‘முத்து நவரத்னமணி’’ எனத் துவங்கும் திருப்புகழில் அருணகிரியார் மதுரையை ‘‘கனக பத்ம புரி’’ என்றே குறிப்பிடுகிறார்! திருவிளையாடற்புராணம், இத்தீர்த்தத்தின் பெருமையை,

‘‘எண்டிசைய நதி வாவி வடிவான மா தீர்த்தம் எல்லாம் இப் பொற்புண்டரிக தடத்தில் ஒரு கோடியிலோர் கூறு நிகர் போதா ஈது
கண்டதனால் அறம்; தீண்டப் பெற்றதனால் நற்பொருள்; அங்கையால் அள்ளிக் கொண்டதனால் இன்ப நலம்; குடைந்ததனாற் பேரின்பம் கொடுக்கு மன்றே’’ என்று குறிப்பிடுகிறது.

கிழக்குப் பிராகாரத்தின் தென்பகுதி நோக்கிச் செல்லும் போது 10ஆவது தூணினருகில் சதுர வடிவில் மலர்போன்ற கல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் நின்று மேற்கு நோக்கிப் பார்த்தால் அம்பிகையின் கோயில் தங்க விமானத்தையும், வடமேற்கே சொக்கநாதர் கோயிலின் தங்க விமானத்தையும் தரிசிக்கலாம்.

குளத்தின் தெற்குப் பிராகாரத்தில் விபூதிப் பிள்ளையார் உள்ளார். மக்கள் தாங்களே இவருக்கு விபூதி அபிஷேகம் செய்து மகிழ்கின்றனர். மேற்குப் பிராகாரத்தில் சித்தி விநாயகர், கூடற்குமார் சந்நதிகள் உள்ளன. இங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வெள்ளி தோறும் மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் உற்சவ மூர்த்தங்களை அமர்த்தி ஊஞ்சல் ஆட்டுவார்கள். இதன் வடக்கே உள்ளது கிளிமண்டபம். அம்பிகைக்குப் பிடித்த கிளிகள் இங்கு வளர்க்கப்பட்டன. இப்போது கிளிகள் இல்லாவிட்டாலும் கிளி மண்டபம் என்றே அழைக்கப்படுகிறது.  

முன்பு இது சங்கிலி மண்டபம் என்று அழைக்கப்பட்டு வந்தது. திருவிழாக் காலங்களில் கோலாட்டம் ஆடுகையில், பெண்கள் வண்ணக் கயிறுகளைத் தொங்க விட்டு அவற்றைப் பிடித்துக் கொண்டு பின்னி ஆடும் போது பார்ப்பதற்குச் சங்கிலி போன்று காணப்பட்டதால் இம்மண்டபம் சங்கிலி மண்டபம் என்று பெயர் பெற்றது. ‘புருவச் செஞ்சிலை’ எனத் துவங்கும் மதுரைத் திருப்புகழில் சங்கிலி மண்டபம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் அருணகிரி நாதர்.
 
‘‘மருவைத் துன்றிய பைங்குழு லுமையவள்
சிவனுக் கன்பருள் அம்பிகை கவுரிகை
மலையத் தன் தரு சங்கரி கருணை செய்
முருகோனே வடவெற்  பங்கய லன்றணி
குச  சரவணையிற் றங்கிய பங்கய முகதமிழ்
மதுரைச் சங்கிலி மண்டப இமையவர்
பெருமாளே’’
 
பொருள்: வாசனை மிக்க மருக் கொழுந்தை சூடியுள்ள அழகிய கூந்தல் உடைய உமைதேவி, சிவபெருமானிடத்தில் எப்போதும் அன்பு வைத்திருக்கும் அம்பிகை, கவுரி, இமவான் பெற்ற பார்வதி கருணையுடன் வாழ்த்திய முருகனே! (‘‘எம் புதல்வா வாழி வாழி எனும்படி வீறான வேல்தர’’  செந்தூர் திருப்புகழ்)

முன்பு அவதார சமயத்தில் வடக்கே உள்ள இமயமலைச் சாரலில் அழகிய தர்ப்பைகள் நிறைந்த சரவணப் பொய்கையில் தங்கியிருந்த தாமரை அன்ன முகத்தோனே!  (‘‘இமயச் சாரல் தங்கிய கமலம் பூத்த சரவணம்’’  கந்த புராணம்)

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் சங்கிலி மண்டபத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! தேவர்கள் பெருமாளே!’’ இத்துடன் ‘‘வண்டனும் (தீயவனாகிய நானும்) உனதடி பணிவேனோ’’ என்று இறைஞ்சுகிறார்.

கிளிக்கூண்டு மண்டபத்திலிருந்து அம்மன் கோயில் இரண்டாம் பிராகாரத்தை அடைகிறோம். இப்பிராகாரத்தில் திருமாலை விநாயகர் சந்நதி, திருமலை சுப்ரமண்யர் சந்நதி, அம்மன் கோயில் மேற்கு கோபுரம், கூடலிங்கர், கூடற்குமாரர் சந்நதி ஆறுகால் பீட மண்டபம் இவை உள்ளன. இங்கு கொடி மரம் மட்டுமே உள்ளது; பலிபீடம், கிளிக்கூண்டு மண்டபத்திலுள்ளது என்பது வியப்பிற–்குரியது.

அம்மன் நவராத்திரியின் போது வீற்றிருக்கும் கொலு மண்டபத்தினருகே உச்சிஷ்ட விநாயகர், கூத்தப் பிள்ளையார் ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன. கிழக்கு முகமாக வீற்றிருக்கும். கூடற்குமாரர் சந்நதிக்கருகே திருப்புகழ்ப் பாக்கள் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1595  1601) கட்டிய இக்கோயிலில் நாமும் மதுரைத் திருப்புகழ்ப் பாக்களைச் சமர்ப்பிக்கிறோம்.

(அருணகிரிநாதரின் திருவுருவச் சிலையும் இங்குள்ளது)
 
‘‘ஆலப்பணி மீதினில் மாசறும்
ஆழிக்கிடையே துயில் மாதவன்
ஆனைக்கினிதாயுத வீயருள் நெடுமாயன்
ஆதித்திரு நேமியன் வாமனன்
நீலப்புயள் நேர்தரு மேனியன்
ஆரத் துளவார் திரு மார்பினன் மருகோனே !
கோலக்கய மாவுரி போர்வையர்
ஆலக்கடு வார் கள நாயகர்
கோவிற்பொறி யால்வரு மாசுத குமரேசா
கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய
சீரற்புத மாநகராகிய
கூடற்பதி மீதினில் மேவிய பெருமாளே ’’

பொருள் : ஆலிலையில், அந்த ஆதிசேஷன் மீது, தூய பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் மாதவன், கஜேந்திரனுக்கு அன்புடன் உதவி, அவனை முதலை வாயிலிருந்து காப்பாற்றிய பெரிய மாயவன், ஆதி மூர்த்தியாகிய சக்ராயுதன் குறுகிய வடிவம் எடுத்து மகாபலியிடம் சென்றவன், கரும்புயல் வண்ணன், மாலையாகிய துளசியை நிரம்ப அணிந்துள்ள அழகிய மார்பை யுடையவன் ஆகிய திருமாலின் மருகனே!
அழகிய யானையின் பெரிய தோலை உரித்து போர்வையாகக் கொண்டவர்,

 (‘‘கரித்தோல் உரித்தார், விரித்தார், தரித்தார்’’  கதிர்காமத் திருப்புகழ்)

ஆலகாலம் நிறைந்த கழுத்தைக் கொண்ட தலைவராகிய சிவபெருமானின் நெற்றிக் கண்களிலிருந்து புறப்பட்ட தீப் பொறிகளிலிருந்து (கோவிற்பொறி) உதித்த அழகிய பிள்ளையாகிய குமரேசா !

புத்தி கூர்மையுள்ள முத்தமிழ்ப் புலவர்கள் சிறப்பாக வாழும் சிறந்த அற்புத நகரமாகிய நான்மாடக் கூடல் எனப்பெறும் மதுரையில் விளங்கும் பெருமாளே ! (மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழுமேகங்களையும் தடுக்கும் பொருட்டுப் பெருமான் தன் சடையினின்றும் விடுத்த நான்கு மேகங்களும் மலைபோல் உயர்ந்து நான்கு மாடங்களாக கூடிக் காத்ததால் ‘நான்மாடக் கூடல்’ எனும் பெயரைப் பெற்றது மதுரை என்கிறது தலபுராணம்)               

‘‘கலைமேறு ஞானப் பிரகாசக் கடலாடி, ஆசைக் கடலேறிப்
பலமாய வாதிற் பிறழாதே, பதிஞான வாழ்வைத் தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின் மன மேவு வாலக் குமரேசா
சிலை வேட சேவற் கொடியோனே, திருவாணி கூடற் பெருமாளே ’’
என்பது மற்றுமோர் மதுரைத் திருப்புகழ்.

உலகக் கலைகளை எல்லாம் தன்னுள் அடக்கிய ஞான ஒளி வீசும் சமுத்திரத்தில் திளைத்துக் குளித்து, மூவாசைக் கடலிலிருந்து வெளியேறி, வலிமையுள்ள சமயவாதங்களில் சிக்கித் தவிக்காமல், பசு பதியாகிய சிவனாருடன் ஒன்று
படும் சிவோகம் எனும் ஞான வாழ்க்கையைத் தந்தருள்வாயே!

வள்ளிமலையில் வசித்த வசீகர அழகுடைய குறப்பெண்ணின் இதயத்தில் தங்கி இருக்கும் பால குமரனே! வில் ஏந்திய வேடுவ ரூபம் எடுத்தவனே! (வனசரர் கொம்பாகிய வள்ளியின் பொருட்டு, பொய்யா மொழிப் புலவரை ஆட்கொள்வதற்காகவும் முருகன் இரு முறை வேடன் வடிவு கொண்டு சென்றான். (‘‘அயிலவசமுடன் அததி திரி தரு கவி ஆளப் புயங் கொண்டருள்வோனே’’  கதிர்காமத் திருப்புகழ்) செல்வமும், கல்வியும் விளங்கும் கூடற்பதி வாழ் பெருமாளே!

 பின் குறிப்பு:- பவானி நதியும் காவிரியாறும் கூடும் இடத்திற்குரிய பாடல் இது என்றும் கூறுவர், வானி = பவானி. எனவே ‘‘திருவானி கூடல்’’ என்றும் பாடுவது உண்டு. ‘‘குடகில் வரும் காவிரி புகு வானிக் கொழு நாடு’’ என்கிறது அவிநாசிப் புராணம், காவிரி பவானி கூடும் இடத்திலிருக்கும் சங்கமேச்வரர் கோயிலில் இதைக் கல்வெட்டாக வைத்துள்ளனர்.உயிர்கள் மேல் அன்பு நிலை கூட வேண்டி மதுரையில் பின்வரும் பாடலைப் பாடுகிறார் அருணகிரியார்.
 
‘‘நீதத்துவமாகி நேமத் துணையாகிப்
பூதத்தயவான போதைத் தருவாயே
நாதத் தொனியோனே ஞானக் கடலோனே
கோதற்றமுதானே கூடற் பெருமாளே’’

(நீதத் துவம் ஆகி) நீதித் தன்மையின் உயிர் நாடியாகி, சீரிய ஒழுக்க வழியில் செல்பவர்கட்கு துணை செய்வதாய், உயிரினங்களின் மீது கருணை செய்வதாய் விளங்கும் மூதறிவைத் தந்தருள்வாயாக! (பூதத் தயவு = ‘‘எவ்வுயிருந் தன்னுயிர் போல் எண்ணுந் தபோதனர்கள் செவ்வறிவை நாடி மிகச் சிந்தை வைப்ப தெந்நாளோ’’  தாயுமாணவர்)

ஒலியும் ஓசையுமாய் விளங்குபவனே! ஞான வாரிதியே! குற்றமில்லாத அமுதம் போன்றவனே! கூடல் எனப்படும் மதுரை நகர்ப் பெருமாளே!

(உலா தொடரும்)

தொகுப்பு: சித்ரா மூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • formars29

  வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

 • coronadeath29

  கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

 • thee29

  பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்