SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிறவியை நாடாதிருக்க அருள் புரிவாயே!

2020-02-25@ 11:49:57

அருணகிரி உலா-93

திருவாடானை கோயில் ஈசன் சந்நதிக்கு அருகே நகர்கிறோம். இரண்டு படிகள் ஏறிக் கருவறை மண்டபத்தை அடைகிறோம். துவாரபாலகர்கள், விநாயகரை  வணங்கி ஆடானைநாதரைத் தரிசிக்கிறோம். சதுரபீட ஆவுடையார்; மிகச் சிறிய பாணம், இவருக்கு அர்ச்சனை செய்வது குறித்தே அமைந்துள்ளது ஞான  சம்பந்தரின் தேவாரப் பதிகம்.

 ‘‘மாதோர்கூறுகந்து ஏறது ஏறிய
ஆதியானுறை ஆடானை
போதினாற் புனைந்து ஏத்துவார்தமை
 வாதியர வினை மாயுமே’’

 ‘‘சுண்ணநீறணி மார்பில் தோல்புனை
அண்ணலான் உறை ஆடானை
வண்ண மாமலர் தூவிக் கைதொழு
 எண்ணுவார் இடர் ஏகுமே’’

கருவறைக் கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். பிராகார வலம் வருகையில் கன்னிமூல விநாயகர்,  சோமாஸ்கந்தர், சித்தி விநாயகர், அர்ஜுன லிங்கம், கௌதம லிங்கம், வருண லிங்கம், ஜோதிர் லிங்கம், ப்ருகு லிங்கம், விஸ்வநாதர்  விசாலாட்சி, ஸ்ரீ தேவி  பூதேவி சமேத வரதராஜர் ஆகியோரைத் தரிசிக்கலாம்.

வடமேற்குப் பகுதியில் தேவியருடன் விளங்கும் சுப்ரமண்யரைத் தரிசித்து மகிழ்கிறோம். நான்கு திருக்கரங்களுடன் ஆஜானுபாகுவாக விளங்குகிறார். ‘ஊனாரும்  உட்பிணியும்’ எனத் துவங்கும் ஆடானைத் திருப்புகழைப்பாடுகிறோம்.

 ‘‘ஊனாருமுட் பிணியுமானா கவித்த வுட
லூதாரி பட்டொழிய வுயிர் போனால்
ஊரார் குவித்துவர ஆவாவெனக் குறுகி
ஓயா முழக்கமெழ அழுதோய
நானாவிதச் சிவிகை மேலே கிடத்தியது
நாறாதெடுத்தடவிஎரியூடே
நாணாமல் வைத்துவிட நீறாமெனிப்பிறவி
நாடாதெனக்குனருள்புரிவாயே’’

இது பாடலின் முற்பகுதி,

மாமிசமும் உள்ள நிறைத்திருக்கும் நோய்களும் நீங்காது மூடப்பட்ட இவ்வுடலானது ஆரோக்கியத்தை கவனிக்காமல் கேடுற்று அழிய உயிர் போய் விட்டால்,  ஊரார் திரண்டு வந்து, ‘ஐயோ’ என்ற கூக்குரலுடன் பிணத்தருகில் வந்து ஓய்வில்லாத கூச்சலுடன் அழுது பின் ஒருவாறு அடங்குவர்; உடனே சடலத்தைப் பல  விதமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கின் மேல் வைத்து, அது ஊசிப் போய் துர்நாற்றம் எடுக்கு முன் இடுகாட்டில் நெருப்பின் மத்தியில் கூசாமல் வைத்துவிட,  உடல் சாம்பலாகி விடும் எனும் விதியுடைய இப்பிறவியை மீண்டும் விரும்பாதபடி உன் திருவருளைத் தந்தருள வேண்டும்.

 பாடலின் பிற்பகுதி : -

‘‘மா நாக துத்தி முடி மீதே நிருத்தமிடு
மாயோனும் மட்டொழுகுமலர்மீதே
வாழ்வாயி ருக்கு மொரு வேதாவுமெட்டிசையும்
வானோரும் அட்டகுலகிரியாவும்
ஆனா அரக்கருடன் வானார்பிழைக்க வரும்
ஆலால முற்ற அமு தயில் வோன் முன்
ஆசார பத்தியுடன்ஞானாகமத்தையருள்
ஆடானை நித்தமுறை பெருமாளே ’’

பொருள் : - காளிங்கன் எனும் பெரிய பாம்பின், புள்ளிகள் கொண்ட படத்தின் மேல் நடனம் செய்த திருமாலும், நறுமணம் தாமரையில் வசிக்கும் ஒப்பற்ற  பிரமனும், எட்டுத் திசைகளில் வாழ்பவர்களும், தேவர்களும், எட்டுத் திக்கிலுமுள்ள மலைகளில் வசிப்பவர்களும் கடலைக் கடையும் போது, அங்கு நின்றிருந்த  அசுரருடன் தேவர்களும் உயிர் தப்பிக்கும் பொருட்டு, கடலிலிருந்து தோன்றிய ஆலகால விஷம் முழுவதையும் அமுது போல் குடித்த சிவபெருமான், சிஷ்ய  பாவனையுடன் நியமமாகக் கேட்க,வேதாகமங்களின் ஞானப் பொருளை உபதேசித்த முருகோனே !

திருவாடானைத் தலத்தில் நிலைத்து வீற்றிருக்கும் பெருமானே ! [ மீண்டும் இப் பிறவியை நாடாது இருக்க அருள் புரிவாயே !]

கஜவல்லி, சிவகாமி அம்மையுடன் கூடிய நடராஜர் இவர்களை வணங்கி, வெளியே தனிக் கோயிலில் வீற்றிருக்கும் தாயாரைத் தரிசிக்கிறோம். விநாயகர்,  முருகனை வணங்கிக் கருவறையில் பத்ம பீடத்தின் மீது நின்ற கோலத்தில் விளங்கும் தாயார் சிநேகவல்லியை வணங்கி வெளியே வருகிறோம். [ தேவியின்  தமிழ்ப் பெயரை ‘அன்பாயிரவல்லி’ என்பதை‘அம்பாயிரவல்லி’ என்று தவறாகக் குறிப்பிட்டிருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

சிவகணநாதர்கள் ஆயிரவர், சிவபெருமான் பார்வதிக்கு உபதேசித்த ஆகமப்பொருளைத் தமக்கும் உபதேசித்தருளுமாறு கேட்டுக் கொண்டபோது அவர்களை  உத்தரகோசமங்கைக்கு வந்து காத்திருக்குமாறு சிவபெருமான் ஆணையிட்டதைத் திருப்பெருந்துறைப் புராணத்தில் ஏற்கனவே பார்த்தோம். இத்தகு பெருமை  வாய்ந்த உத்தர கோசமங்கை எனும் திருத்தலத்திற்கு இப்போது நாம் வருகிறோம்.

உத்தரம் = திரும்பப் பெறும் விடை; கோசம் = வேதம் மங்கை = பார்வதி. [ உத்திரம் = உபதேசம் ; கோசம் = ரகசியம்என்பதாகவும் ஒரு கருத்து உண்டு.] மதுரை -  ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாக, வலது பக்கம் பிரிந்து செல்லும் தூத்துக்குடிதிருச்செந்தூர் பாதையில் 7 கி.மீ  தொலைவு சென்று உத்தரகோசமங்கையை அடையலாம். இறைவன் = மங்களநாதர். இறைவி = மங்களாம்பிகை.

அன்னை பார்வதி வேதாகமங்களின் உண்மைப் பொருளைத் தனக்கு விளக்கியருளுமாறு இறைவனிடம் கேட்டுக் கொண்டாள். அதன்படி அவர் அன்னைக்கு  உபதேசம் செய்ய முற்பட்டபோது, அன்னையின் கவனம் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த மீன்கள் பாற் சென்றது. இதனைக் கண்ணுற்ற இறைவன் அவளை  மீனவர் குலத்தில் சென்று பிறக்குமாறு ஆணையிட்டார். கடலில் பெண் குழந்தையாகத் தோன்றிய அன்னை, வலைஞர்தலைவன் வீசிய வலையில் சிக்கி, அவன்  வீட்டில் அவன் மகளாக வளர்ந்து வந்தாள்.

அன்னைக்கு அளிக்கப்பட்ட உபதேசத்தை ஓட்டுக் கேட்டுக் கொண்டிருந்த முருகன் இறைவன் சாபத்தால் கடலில் சுறா மீனாகத் தோன்றி மீன் குலங்களையும்  கடலில் வரும் படகுகளையும் கதிகலங்கச் செய்து கொண்டிருந்தான். வலைஞர்களின் மன்னன் ‘‘இந்தக் கொம்பன் சுறாவை அம்பெய்தி அடக்குபவரே என்  மகளைத் திருமணம் செய்து கொள்ளத் தகுதி உடையவர் ’’ என்று அறிவித்தான். அன்னையையும் குமரனையும் மீட்கும் வேளை வந்து விட்டதனால் இறைவன்  தானும் ஒரு வலைஞனாக வந்து மீனை வலையில் சிக்க வைத்து மன்னனிடம் கொடுத்தான்.

திருமணம் புரிந்து கொள்ள அன்னையின் திருக்கரத்தைத் தொட்டதும் அதுவரை ஜடையும் கொன்றையும் மானும் மழுவுமின்றி விளங்கிய அப்புதிய வலைஞனும்,  மற்ற இருவரும் தத்தம் உருவங்களில் அனைவருக்கும் காட்சி அளித்தனர். இத்தலத்திற்கு வந்து அன்னைக்கு உபதேசம் செய்து உமா மகேஸ்வரராக  வீற்றிருந்தபடியால் தலத்தின் பெயரும் உத்தர கோச மங்கை என்றாயிற்று. இப்போதும் நாம் கோயிலுள்ள நுழைகிறோம். கோயில் முகப்பில் இரு கோபுரங்கள்  உள்ளன. வலப்பாலுள்ளது ஏழுநிலைகளைக் கொண்டதாகவும் இடப்பாகம் உள்ளது.

மொட்டைக் கோபுரமாகவும் காட்சி அளிக்கிறது. பெரிய கோபுரத்தின் இரு புறமும் முருகப் பெருமானும், விநாயகரும் காட்சி அளிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும்  இடப்புறம் அரசமரத்தடியில் இரு விநாயகர் உருவங்களும் நாகப்பிணையல்களும் இருப்பதைக் காணலாம். இரண்டாவது கோபுரத்தருகில் வரும்போது சற்றுத்  தொலைவில் மற்றொரு கோபுரம் காட்சி அளிக்கிறது. இது அம்பிகை கோயிலுக்குச் செல்வதற்கான தனி வாசலாகும். (கோயிலுள்ளிருந்தும் அம்பிகை சந்நதியைச்  சென்றடையலாம் )

சுவாமி சந்நதிக்குச் செல்லும் வழியில் பலிபீடம், கொடி மரம், மிகப் பெரிய கல் நந்தி, [ பிரதோஷ நந்தி) விநாயகர், வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகன்,  சனீஸ்வரர் ஆகியோரைக் காணலாம்.

சற்று இடைவெளி விட்டு விளங்கும் மற்றொரு மண்டபத்தை அடைகிறோம். இங்கிருந்து பார்த்தால் நேரே மூலவர் விளங்கும் கருவறையைக் காணலாம். முன்  மண்டப வாசலில் விநாயகர் மட்டுமே துவார பாலகர்களோடு காட்சி அளிக்கிறார். நந்தி ஒரு பெரிய தொட்டிக்குள் உட்கார்ந்திருக்கிறது. நேரே  மங்களேஸ்வரரையும் சதுர ஆவுடையாரையும் கண்டு வணங்குகிறோம். முன் அறையில் பலிபீடங்கள், பாண லிங்கம் தவிர, அம்பிகை சண்டிகேஸ்வரர்  ஆகியோரின் திருவுருங்களையும் காணலாம்.

பிராகாரத்தில் அறுபத்துமூவர் (மூலத் திருமேனிகள்) சப்தமாதர்கள், விநாயகர் ரிஷிபாரூடர் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். ஒரு பெரிய வெளிப் பிராகாரத்தைக்  கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அடுத்த பிராகாரத்தைச் சுற்றி வர முடியவில்லை. வெளியே வந்து மங்களாம்பிகையின்  கோயிலுக்கு வருகிறோம். விநாயகர், பிட்சாடனர், ஊர்துவ தாண்டவர் சிற்பங்கள் உள்ளன. அறுமுகனின் அழகிய சிற்பம் சிதில மடைந்து காணப்படுகிறது.  இங்கிருந்து பார்க்கும் பொழுது வலப்புறம் தனியான ஒரு சந்நதியில் மங்கள விநாயகர் காட்சி தருகிறார்.

விநாயகரை வணங்கி, மீண்டும் கோயில் பிராகாரத்தை அடைந்து அம்பிகையின் சந்நதி நோக்கிச் செல்கிறோம். அம்பிகையின் திருக்கல்யாண மண்டபத்தைக்  காணலாம். ஏராளமான உற்சவ மூர்த்தங்கள் பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ மங்கைப் பெருமான் சிற்பம் கண்களை மிகவும் கவர்வ தொன்றாகும்.  மங்களேஸ்வரி சந்நிதி வாசலில் விநாயகரும் முருகன் - வள்ளி - தெய்வானையும் காட்சி அளிக்கின்றனர்.

அன்னை நான்கு கரங்களுடன் பேரழகியாக விளங்குகிறாள். ஒன்று அபய ஹஸ்தம் ; மற்றொரு சரம் இடுப்பில் வைக்கப்பட்டு விளங்குகிறது. அம்பிகை சிவனைப்  பூஜை செய்யும் சோலமாதலால் மற்ற இரு கரங்களிலும் தாமரைப் பூவும், ருத்ராட்சமும் ஏந்திக் காட்சி தருகிறாள். வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வரும் போது  கன்னி மூல கணபதி, அறுமுகன் ஆகியோரின் சந்நதிகளைக் காண்கிறோம். உத்தரகோச மங்கைத் தலத்திற்கான திருப்புகழைச் சமர்ப்பிக்கிறார்.

 ‘‘கற்பக ஞானக் கடவுள் முன் அண்டத்
திற்புத சேனைக் கதிபதி யின்பக்
 கட்கழை பாகப் பமமுது வெண் சர்க் கரைபால்தேன்
கட்டிள நீர்முக் கனி பய றம் பொற்
தொப்பையி னேறிட் டருளிய தந்திக்
கட்டிளையாய் பொற்பதமதி றைஞ்சிப் பரியாய
பொற் சிகி யாய் கொத் துருண்மணி தண்டைப்
 பொற்சரி நாதப் பரிபுர என்றுப்
பொற்புற வோதிக் கசிவொடு சிந்தித் தினிதேயான்
பொற்புகழ் பாடிச் சிவபத மும்பெற்
றுப் பொருள் ஞானப் பெருவெளியும் பெற்
றுப் புகலாகத் தமுதையு முண்டிட் டிடுவேனோ’’

பாடலின் இப்பகுதிக்கான பொருளைப் பார்ப்போம்.

கற்பக விருட்சம் போன்று, பக்தர்களுக்கு வேண்டியதைக் குறைவின்றி அளிக்கும் வளர்ந்த தேவசேனையின் தலைவனே !

இனிய தேன் சுவை கொண்ட கரும்பு, வெல்லப்பாகு, அப்பம், சோறு, வெண்சர்க்கரை, பால், தேன், கற்கண்டு, இளநீர், முக்கனிகள், பயறு இவற்றை அழகிய  பொலிவான வயிற்றில் நைவேத்தியமாக ஏற்றுக் கொண்டுஅடியாருக்கு அருள் புரியும் யானை முகனுக்கு வலிமை மிக்க இளையவனே ! உன் மங்களகரமான திருவடிகளை வேண்டி, அழகிய மயில் வாகனனே ! திரளாக உருண்ட ரத்னம் பதித்த தண்டையும், அழிய நாதம் கொண்ட சிலம்பும்  உடையவனே ! என்றெல்லாம் அழகுறத் துதித்து, மனமுருகித் தியானித்து, உனதினிய திருப்புகழைப் பாடி ஜீவன் சிவசொரூபம் எனும் உணர்வை அடைந்து,  மெய்ஞ்ஞானப் பெருவெளியை அடைந்து, சூஷ்ம சரீரம் என்று சொல்லப்படும் ஞான உடம்பில் சிவ அமுதை உண்ணப் பெறுவேனோ ?

விளக்கவுரை :-

‘‘பொற்பதமது இறைஞ்சிப் பரியாய பொற்சிகியாய்’’

சூரன், பதுமன், சிங்கமுகன், தாரகன் எனும் நால்வரும் கருடன் முதலான வாகனங்களை வதைத்தார்கள். முருகவேள் நால்வரையும் அசுரராகும்படிச் சபித்தார்.  ஆனால், சூரனும் பதுமனும், தாங்கள் மயிலும் சேவலுமாக முருகனுக்குப் பணி செய்ய நீண்ட காலமாகத் தவம் புரிவதாகக் கூற,‘‘ நீங்கள் இருவரும்  ஒருருவாகி ‘சூரபத்மன்’ எனும் பெயருடன் என்னுடன் போர் புரியும் போது எனது கருணையால் சேவலும் மயிலும் ஆவீர்கள்’’ என்று அருள் புரிந்தான்  முருகன்.

 ‘‘தெற்ப முளாகத் திளப்ரி உம்பலம்
 குப்பைகளாகத் தசுரர் பிணந் திக்
 கெட்டையு மூடிக் குருதிகள் மங்குற் செனையாகித்
 திக்கயமாடச் சிலசில பம்பைத்
தத்தன தானத் தடுடுடு வென்கச்
செப்பறை தாளத் தகுதொகு வென்கச் சிலபேரி
உற்பனமாகத் தடிபடு சம்பத்
தற்புதமாகத் தமரர் புரம் பெற்
றுட்செல்வ மேவிக் கனமலர் சிந்தித் தொடுவேலா
உட்பொருள் ஞானக் குறமகள் உம்பல்
சித்திரை நீடப் பரி மயில் முனிபெற்
 றுத்தர கோசத் தலமுறை கந்தப் பெருமாளே’’

யுத்தம் செய்வதில் துடிப்பும் செருக்கும் உள்ள குதிரைக் கூட்டங்களும் யானைகளும் இறந்து குப்பை ஆயின; அசுரச் சடலங்கள் எட்டுத் திக்கிலும் நிறைந்து, ரத்தம்  படிவதால் திசைகள் செந்நிறம் அடைந்தன; அஷ்டதிக் கஜங்கள் நடுங்கின. பல பம்பைகளின் தாளங்களிலிருந்து ஒலிகள் எழும்பின. முரசு வாத்தியங்கள் இடி  இடிப்பது போலவும் மின்னல் மின்னுவது போலவும் தோற்றம் கொடுத்தன. இத்தகைய சூழ்நிலையில் அறீபுத அழகு நிறைந்த தேவர்கள் அமராவதியை மீண்டும்  பெற்று அங்குள்ள செல்வ போகங்களை அனுபவித்து, பொன் மலர்களைத் தூவ, வேலைச் செலுத்தியவனே !

உண்மைப் பொருள் முருகனே என்ற ஞானம் உள்ள வள்ளியும், ஐராவதம் வளர்த்தஅபூர்வ அழகு உள்ள தெய்வானையும், சிறந்த உன் வாகனமான மயிலும்  சந்நதியில் வீற்றிருக்கின்ற கந்தப் பெருமாளே !

[ ஞான அமுதை உண்டிட்டிடுவேனோ ?]

முருகனை வணங்கி வெளியே வந்து நடக்கும் பொழுது உலகப்புகழ் பெற்ற நடராஜர் சந்நதிக்கு வருகிறோம். மற்ற ஆலயங்களில் தனிச் சந்நிதியாக நடராஜர்  சந்நதி விளங்கும். இங்கு மற்றொரு திருக்கோயிலாக கர்ப்படக்ருஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், பிராகாரம், விமானங்களுடன் தனிக் கோயிலாக உள்ளது.  விலை மதிப்பிட முடியாத ஐந்தரை அடி உயரமுள்ள முழு மரகதத் திருமேனி. மார்கழி மாதத் திருவாதிரை நாளன்று மட்டுமே அபிஷேகம் நடத்தப்படுகிறது.  அதன் பின்னர் சந்தனக் காப்பிடப்பட்டு மேனி முழுதும் மறைக்கப்படுகிறது. அக் கோலத்திலேயே அடுத்த ஆண்டு மார்கழி திருவாதிரை வரை காட்சி அளிக்கிறார்.  [ இம் மூர்த்தியைத் திருட முயற்சி செய்யப்பட்டதால் தற்போது பூட்டிய கதவின் பின்னுள்ள நடராஜரைத் தொலைவிலிருந்து தான் உற்றுப் பார்க்க  வேண்டியுள்ளது. உள்ளேயிருந்த சிறு மின் விளக்கும் பழுதாகிக் கிடந்தது]

நடராஜர் சந்நதி அருகே உமா மஹேஸ்வரர் சந்நதி ஒரு சிறு கட்டுமலை மேல் உள்ளது. இங்கு சிவபெருமான் உமா தேவியை இடது மடி மீதமர்த்தி அவளுக்கு  ஆகமப் பொருளை அருளும் உமா - மஹேஸ்வரராக எழுந்தருளியுள்ளார். கட்டுமலையைச் சுற்றி நீராழி அமைப்பும், திருமாளிகைப் பத்தியும் உள்ளன. [ படிகள்  ஏறிச் சென்று உமாமஹேஸ்வரரைத் தரிசிக்க முடியாத படி வழி முழுதும் புறாக்களின் கழிவுகள் நிரம்பிக் கிடந்தன; சந்நதிக் கதவும் பூட்டப்பட்டிருந்தது]  கருவறைக் கோட்டத்தில், நடராஜருக்கு நேர் பின்னால் மிக அழகான முருகப்பெருமான் திரு உருவம் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தோம்.

 நடராஜர் திருக்கோயிலருகே அக்னி தீர்த்தம் விளங்குகிறது. கரையில் சந்தனக் காப்பு சார்த்தப்பெற்ற மாணிக்க வாசகரின் திரு உருவம் உள்ளதைக் காணலாம்.  அருகே ஸஹஸ்ர லிங்கம் விளங்கும். சந்நதியும் உள்ளது. இது பற்றிய உத்தரகோசமங்கைப் புராணக் குறிப்பை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.  இப்புராணம் திருப்பெருந்துறைப் புராணக் குறிப்பிலிருந்து சற்றே மாறுபட்டுள்ளது.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kalingar-pic-3

  காலம் பொன் போன்றது... கடமை கண் போன்றது!: தமிழக சட்டப்பேரவைவில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு..புகைப்படங்கள்..!!

 • turkey-fire-3

  துருக்கியில் அதிதீவிரமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஒரு நகரமே கருகியது!: ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்பு..!!

 • jammu-flood-29

  ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலில் மேக வெடிப்பால் பெருவெள்ளம், நிலச்சரிவு!: 22 பேர் உயிரிழப்பு..பலர் மாயம்..!!

 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்