SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்: பரதன்

2020-02-25@ 11:37:23

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

ஒன்று, மூன்று, ஆயிரம், கோடி வாரிவாரி, யார் கேட்டாலும் ஞானத்தையும் பொருளையும் வழங்கியவர் ‘திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்’.அவர்  சொன்ன தகவல் இது.

“அடியேன் ஓர் ஊருக்கு,சொற்பொழிவுசெய்யப் போயிருந்தேன்.அன்பர் ஒருவர் வந்து வீட்டிற்கு அழைத்தார் கூடப்போனேன். போய் அமர்ந்ததும், அந்த அன்பர் தன்  மகனை அழைத்து, “சாமி வந்திருக்கார்;வந்து நமஸ்காரம் பண்ணு!” என்றார்.

“சிறுவன் ஒருவன் வந்து நமஸ்காரம் பண்ணினான். அவன் தந்தை, “சாமிக்கு அ னா-ஆ வன்னா சொல்லிக்காமி!” என்றார். சிறுவனும்,” ஆ...ஏ...ஊ...”  என்றான்.மகிழ்ச்சியோடு அந்தச்சிறுவன் கையில் காசு தந்தேன்.

“அதன்பிறகு இருபத்தைந்து வருடங்கள் கழித்து, மறுபடியும் அதே ஊருக்கு, சொற்பொழிவு செய்யப்போனேன். முன்பு சொன்ன அதே அன்பர் வந்து, வீட்டிற்கு  அழைத்தார். போனேன்.

“ஒரு வாலிபன் வந்து நின்றான். அவனிடம் அன்பர், “மகனே! சாமிக்கு அனா, ஆ வன்னா சொல்லிக்காமி!” என்றார்.அவர் மகனும், “ஆ...ஏ...ஊ...”என்று  இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சொன்னதைப்போலவே சொன்னான்.

“அணுவளவுகூட அறிவு வளரவில்லை.என்ன பலன்? மனிதன் என்றால் அறிவு-நற்குணங்கள் என வளர வேண்டாமா? “இதை நமக்கு உணர்த்துவதே பரதன் கதா பாத்திரம். பிறக்கும்போது, ராமரும்  பரதனும் நற்குணங்களில் சமமாக இருந்தார்கள்; பரதனின் நற்குணங்கள் பிற்பாடு  மூன்று மடங்கு வளர்ந்து அதிகரித்தது; அதுவே பிற்பாடு ஆயிரம் மடங்கானது. கடைசியில் கோடி மடங்காக ஆனது. மிகவும் உயர்ந்தவன் பரதன்” என்று உள்ளம்  உருகிச் சொல்வார்.

அப்படிப்பட்ட பரதனைப்பற்றிப் பார்க்கலாம்!

ஒரு மனிதன் நற்குணங்கள் நிறைந்தவன் என்பதை, மற்றவர்கள் - அதுவும் நல்லவர்கள் சொல்ல வேண்டும். அவ்வாறு பரதனைப்பற்றி, யார் யார் என்னென்ன  சொல்லிப் புகழ்ந்தார்கள் என்பதைப்பார்த்தால்...உள்ளம்
நெகிழும். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்!

விஸ்வாமித்திர முனிவர் தாம் செய்யும் யாகத்தைக் கட்டிக்காப்பதற்காக ராம - லட்சுமணர்களை அழைத்துப் போனபோது, தாடகை வதம்- யாக சம்ரட்சணம்-  அகலிகை சாப விமோசனம் ஆகியவை முடிந்து; ஜனகரின் நகருக்குச்  சென்றார்.

அங்கே ஜனக மன்னரிடம் ராம-லட்சுமணர்களைப் பற்றிச் சொல்லும்போது, ராமருடைய முன்னோர்களைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். அப்போது  பரதனைப் பற்றி, விஸ்வாமித்திரர் சொன்னது.

தள்ளரிய பெருநீதித் தனியாறு புகமண்டும் பள்ளம்எனும் தகையானைப் பரதன்னனும் பெயரானை எள்ளரிய  குணத்தாலும் நிறத்தாலும் இவ்விருந்த வள்ளலையே  அனையானைக் கேகயர்கோன் மகள் பயங்தாள்.
(கம்ப ராமாயணம்)

விஸ்வாமித்திரருடன் ராம-லட்சுமணர் அமர்ந்திருக்க, ஜனகரிடம் ராமரைப்பற்றிச் சொல்லி விட்டு,பரதனைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்; “ஒப்பற்ற நதிகள்  பலவும் பள்ளத்தில் வந்து விழுந்து சேர்வதைப்போல, நீதி முதலான நற்குணங்கள் அனைத்தும் நிறைந்த பரதனை; யாரும் குற்றம் குறை சொல்லமுடியாத  குணத்தாலும் அழகாலும், இதோ! இந்த ராமனுக்கு இணையான பரதனை, கைகேயி பெற்றாள்” என்று சொல்லி முடித்தார்.    

அதாவது, மகாஞானியான ஜனகர் முன்னால் இருக்கும் ராமரைச் சுட்டிக்காட்டி, பரதனுடைய குணங்களையும் அழகையும் வர்ணித்து,‘‘இந்த ராமனுக்குச் சமமான  பரதனைக் கைகேயி பெற்றாள்” என்று சொல்லி முடித்தார்.   வள்ளலான ராமரும் பரதனும் சமமானவர்கள் என்பதை, மாமுனிவரான விஸ்வாமித்திரரே  சொல்லியிருப்பது, பரதனைப்பற்றி விஸ்வாமித்திரர் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் என்பதைப் புரிய வைக்கிறது.  இவ்வாறு ராமருக்குச் சமமாக இருந்த  பரதன், ராமரைவிட மூன்று மடங்கு நல்லவன் என்று, ராமரைப்பெற்ற கோசலா தேவியே சொல்லப்போகிறாள். அதைப் பார்ப்போம்!

ராமரிடம் ராஜ்யத்தை ஒப்படைப்பது என்ற தசரதரின்  தீர்மானம்,கைகேயியால் மாறிப்போனது. ராமர் காடுசெல்ல வேண்டும்; பரதனுக்குத்தான் ராஜ்ஜியம் எனத்  தீர்மானம் ஆனது. இத்தகவலைத் தன் தாயான கோசலாதேவியிடம் போய், “பரதனுக்குத்தான் மகுடம். அவன் முடிசூட்டிக்கொள் வான்” என்று சொன்னார் ராமர்.
தான் பெற்ற மகனான ராமனுக்கு மகுடம் இல்லை; அது பரதனுக்குப் போகப்போகிறது என்பது தெரிந்ததும், கோசலா தேவி ராமரிடம் சொன்ன வார்த்தைகள்,  பரதனைப்பற்றிக் கோசலை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாள் என்பதை வெளிப்படுத்தும்.

முறைமை அன்று என்பது  ஒன்று உண்டு மும்மையின்  நிறை குணத்தவன்; நின்னினும் நல்லனால் குறைவு இலன் - எனக்கூ றினாள் நால்வர்க்கும் மறு இல்  அன்பி னில் வேற்றுமை மாற்றினாள்
(கம்ப ராமாயணம்)

உத்தமமான தாயின் வார்த்தைகள் இவை. கோசலாதேவி பேசுகிறாள்; “ராமா! மூத்தவன் இருக்க இளையவனுக்கு முடிசூட்டுவது என்பது முறையல்ல.  இருந்தாலும், பரதன் உன்னைவிட மூன்று மடங்கு நிறைந்த குணங்களை உடையவன்; நல்லவன்; குறை இல்லாதவன்” என்றெல்லாம் கூறினாள்.

பரதனை இவ்வாறெல்லாம் பாராட்டிய கோசலையின் வார்த்தைகளைச் சொன்ன கம்பர், இவ்வாறு பேசிய கோசலையைச் சொல்லிப் பாடலை முடிக்கிறார்;  “கோசலை நான்கு புதல்வர்களிடமும் குற்றமற்ற அன்பு செலுத்துவதில் வேற்றுமை காட்டாதவள்” என்கிறார் கம்பர். ஆம்!நான்கு பிள்ளைகளிடமும் அன்பு  செலுத்துவதில் எந்த விதமான வேறுபாட்டையும் காட்டாதவள் ‘கோசலை’.

ராமரைப் பெற்ற கோசலை வாயினால்,‘‘ராமா! உன்னை விடமூன்றுமடங்கு நல்லவன் பரதன்”என்று பாராட்டப்பட்ட பரதனை, “ஆயிரம் ராமர்கள், உனக்கு ஒப்பாவார்களா?”என்று பாராட்டுகிறார் குகன். அதைப் பார்க்கலாம்.

ராமரைத் தரிசித்து, ராமரிடம் தன்னை இழந்தவர் ‘குகன்’ எனும் படகோட்டி. அப்படிப்பட்ட குகன், பரதனிடம் தன்னை இழக்கிறார் என்றால்... சீதா கல்யாணம்  முடிந்தவுடன், பரதன்-சத்ருக்னன் இருவரும் கேகயதேசம் போய் விட்டார்கள். தன் மகன் பரதனுக்காகக் கைகேயி வரம்கேட்டு, சீதா-ராம-லட்சுமணர்கள் காடு  செல்ல; தசரதர் இறக்க எனும் நிகழ்வுகள் நடந்தபோது,பரத-சத்ருக்னர்கள் அயோத்தியில் இல்லை.

பிறகு வசிஷ்ட முனிவரின் உத்தரவால், பரத-சத்ருக்னர்கள் அயோத்திக்குத் திரும்பினார்கள்.  வந்த பரதன், தன் தாய்செய்தவைகளை அறிந்தவுடன் கடுங்கோபம்  கொண்டார்; “அரசாட்சி ராமருடையது. ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன்.நானும் மரவுறி பூண்பேன்” என்ற பரதன், தான் சொன்னபடியே மரவுறி பூண்டார்.   இவ்வாறு தாயிடம் கோபங்கொண்ட பரதன், கோசலா தேவியிடம் சென்றார். தன்முன்னால் வந்த பரதனைக்கண்ட கோசலை, “பரதா! கைகேயியின் எண்ணம்  உனக்குத்தெரியாது போலும்!” என்றாள்.   

கேட்ட பரதன் நடுங்கினார்; புலம்பினார்; “தாயே! ராம பிரானையன்றி எனக்கு வேறுதெய்வம் இல்லை. அத்தெய்வம் காடுபோனதற்கு நான் உடன்பட்டேன்  என்றால், இன்ன இன்ன பாவங்கள் செய்தவர்கள் போகும் நரகத்திற்கு நான் போகிறேன்” என்று புலம்பி, சபதங்கள் செய்கிறார். பரதனின் இந்த வாக்குகள், மனித  குலத்திற்கு அரணாக அமைய வேண்டியவை; ஒரு சிலவற்றைப் பார்ப்போம்!

“அறச்செயல்கள் அழிந்து போகும்படி செய்பவன், இரக்கம் இல்லாத மனம் கொண்டவன், அடுத்தவர் வீட்டு வாசலில் தவறான எண்ணத்தோடு காத்திருப்பவன்,  அடுத்தவர் மீது கடுங்கோபம் கொண்டவன், பாவத்தை மேற்கொண்டு உயிர்களைக் கொன்று வாழ்ந்தவன், முற்றும் துறந்த முனிவர்க்குத்துன்பம்  கொடுத்தவன்-ஆகியோர் அடையும் நரகத்தை நான் அடைவேனாக!” என்று சொல்லி சபதம் செய்தார்.

அறங்கெட முயன்றவன் அருள் இல்  நெஞ்சினன் பிறன் கடை நின்றவன் பிறரைச் சீறினோன் மறங்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன் துறந்த மாதவர்க்கு  அருந்துயரம் சூழ்ந்துளோன்
(கம்ப ராமாயணம்)

பரத சபதம் என்றே விரிவாகச் சொல்லப்படும் பகுதி இது. முழுமையாகப் பார்க்க முடியாவிட்டாலும் ஒருசில தகவல்களையாவது பார்க்கலாம்.   “குருநாதர்,  பெண்கள் ஆகியோரைக் கொலை செய்தவன்; மன்னருடன் போர்க்களத்திற்குச் சென்று,மன்னரை விட்டு விட்டுப் புறமுதுகு காட்டி ஓடி வந்தவன்; ஏழைகளின்  செல்வத்தைக் கவர்ந்தவன் -ஆகியோர் அடையும் நரகத்தை நான் அடைவேனாக !
 
“தாயானவள் பசியால் உயிர் சோர்ந்து வாட, தனது பெருத்த வயிற்றுக்கு உணவுண்ணும் பாவி; நம்பியிருந்த தலைவனைக் கைவிட்டு ஓடிப்போனவன் -  ஆகியோர் அடையும் நரகத்தை அடைவேனாக!
 
“படைக்கருவிகள் வீசும் போர்க்களத்தில்,பகைவர்க்குப் பணிந்தவன்; ஆடு,மாடு,பன்றி முதலான உயிர்களை வளர்த்து, அவற்றைக் கொன்று தின்னும் ஆசை  உடையவன்; குறைவு படாத அறவழியில் செயல்படாமல், தவறான வழியில் மிகுந்த பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பும் அரசன் - ஆகியோர் அடையும்  நரகத்தை நான் அடைவேனாக!

எஃகு எறி செருமுகத்து ஏற்ற தெவ்வருக்கு ஒஃகினன்; உயிர் வளர்த்து உண்ணும் ஆசை யான்; அஃகல் இல் அறநெறி ஆக்கியோன் பொருள் வெஃகிய மன்னன்;  வீழ்நரகில் வீழ்க யான்
(கம்ப ராமாயணம்)

ஒவ்வொரு தவறாக-பாவமாகச்சொல்லி,அதைச் செய்பவர் அடையும் நரகத்தைச் சொல்லி, “ராமர் காடுபோக நான் மனதளவிலாவது ஒத்துழைப்பு  கொடுத்திருந்தால், அந்த நரகங்கள் எனக்குக் கிடைக்கட்டும்” என்பதன் மூலம், பரதன் ஒரு தர்மக்கடல் என்பது வெளிப்படுகிறது.  இப்படிப்பட்ட நல்லவரை,  எல்லோரும் புகழ்வார்களே! இதோ! குகன் புகழப்போகிறார்; அதுவும்,‘‘ஆயிரம் ராமர் சேர்ந்தாலும் பரதா! உனக்கு ஒப்பாவரோ?”என்று புகழப் போகின்றார். அதைக்  காணலாம்.

ராமர்,சீதை,லட்சுமணன் ஆகியோர் வனவாசம் சென்றது, ராமரைச்சந்தித்த குகன் அவரிடம் முழுமையாகத் தன்னை இழந்தது - முதலானவை நடந்தபின்,  தகவலறிந்த பரதன் “ராமர் தான் நாடாள வேண்டும். நான்போய் அவரை அழைத்து வருவேன்” என்று சொல்லி, மரவுறி உடுத்துத் துறவுக் கோலம் பூண்டு,  ராமரைத்தேடிப் போய், கங்கைக்கரையை அடைந்தார்; படைகளும் மக்களும் கூடப் போனார்கள். படைகளுடன் பெருங்கூட்டமாக வந்த பரதனைக் கண்டதும் குகன்  கொதித்தார்; “ஹும்! நாட்டை விட்டு விரட்டிய பரதன், நாம் இருக்கும் காட்டில்கூட ராமரை, இருக்கவிட மாட்டான் போலிருக்கிறதே!

இவனையும் இவன் படைகளையும் இப்போதே கொல்வேன்”என்று மனம் கொண்ட மட்டும் பரதனை இகழ்ந்து, போருக்குத் தயாரானார் குகன். தன் படைகளைத்  தயாராக இருக்கச்சொல்லி விட்டு, தனி ஆளாகப் படகில் ஏறிப் பரதனைக் காண வருகிறார் குகன். வந்த குகனிடம், “ராமரை அழைத்துப்போய், அவரிடம் அரசை  ஒப்படைப்பதற்காகவே வந்தேன் நான்” எனக் கூறுகிறார் பரதன். பரதனுடைய தோற்றத்தைக் கண்டும்,  வார்த்தைகளையும் கேட்ட குகன், பரதனின் மனதைப்  புரிந்து கொண்டார்; அவ்வளவுதான்! ராமரிடம் ஈடுபட்ட குகனின் மனம், முழுமையாகப் பரதனிடம் ஈடுபட்டு விட்டது. பரதனைப்பற்றிய தகவல்கள் அனைத்தையும்  அறிந்த குகன், பரதனைப் புகழ்கிறார்.

தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி, போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மைகண்டால்  ஆயிரம் ராமர் நின்கேழ் ஆவரோ? தெரியின் அம்மா!
(கம்ப ராமாயணம்)

பரதனின் அன்பில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்ட குகனின் வார்த்தைகள் இவை. “தாய் சொல் கேட்டு, தந்தை கொடுத்த அரச பதவியைத் ‘தீயது  இது’ என்று விட்டுவிட்டு வந்து விட்டாய். வருத்தத்துடன் இருக்கும் உன் முகத்தைப் பார்த்தால்,பரதா! புகழ் படைத்தவனே! உன் தன்மைக்கு ஆயிரம் ராமர்  சமமாவார்களா ? தெரிய வில்லையே!” என்று புகழ்கிறார் குகன்.

விஸ்வாமித்திரரால், ராமருக்குச் சமமாகச் சொல்லப் பட்டு; பின் ராமரைப்பெற்ற தாயான கோசலையால், ராமரைவிட மும்மடங்கு நல்லவன் என்று புகழப்பட்டு;  ராமரின் கருணைக்குப் பாத்திரமான குகனால், ஆயிரம் ராமர் சேர்ந்தால் ஒரு பரதனுக்குச் சமமாகுமா? தெரிய வில்லையே என்று புகழப்பட்ட பரதன், மேலும்  புகழப் படுகிறார். யாரால்? எப்படி? பார்க்கலாம்.

ராவண சங்காரம் முடிந்து, சீதையுடன் திரும்பிய ராமர் வரும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார்; அப்போது ஆஞ்சநேயரை அழைத்து, “நீ  போய் பரதனிடம் நம் வருகையைத் தெரிவி!” என்று சொல்லி, அடையாளமாக மோதிரத்தையும் கொடுத்து அனுப்பினார்.

அதற்குள்ளாக இங்கே பரதன்,‘‘ராமர் வரும் நாள் கடந்து விட்டது. இனி நான் உயிரோடு இருந்து பலனில்லை” என்று தீர்மானித்தார்; தீயை மூட்டி உயிர் துறக்க  எண்ணினார். அதே சமயம்,தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அரசை, ராமர் வந்ததும் அவரிடம் ஒப்படைக்க வேண்டுமல்லவா? அதற்காக சத்துருக்னனை அழைத்த  பரதன், “சொன்ன நாளில் ராமர் திரும்பவில்லை.நான் நெருப்பில் விழுந்து இறப்பேன். அரசை நீ ஏற்றுக்கொள்!” என்றார். (அதற்கு சத்துருக்னன் சொன்ன  அற்புதமான பதிலை, ஏற்கனவே ‘ஆன்மிக பலன்’ இதழில் பார்த்திருக்கிறோம்)

தீயை மூட்டிப் பரதன் உயிர் துறக்கத் தீர்மானித்த அவ் வேளையில், ராமரின் தாயான கோசலாதேவி வந்து பரதனைத் தடுத்தார்; “என்ன செய்கிறாய்? என்  மகனே!” என்று கேட்டு மேலும் சொல்லத் தொடங்குகின்றார் கோசலை.

எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்  அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ? புண்ணியம் எனும் நின்னுயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும்  வாழுமோ?
(கம்ப ராமாயணம்)

பதினான்கு ஆண்டுகள் கடுந்தவம் பூண்டு, ராமர் வருகையை எதிர்பார்த்து, உயிரையும் துறக்கத் தீர்மானித்த பரதனைத் தடுத்த கோசலாதேவி, “பரதா! தசரதர்  வரம் கொடுத்ததும் ராமன் காடு சென்றதும் விதியின் விளையாட்டல்லவா? என் மகனான நீயும் என்னை விட்டுப் போகலாமா? நீ இறந்தால், மக்களும்  தேவர்களும் மற்றைய ஜீவராசிகளும் வாழுமா? “கோடிக்கண்கான ராமர்கள் கிடைத்தாலும், பரதா! உனக்கு ஈடாகுமா?” என்றார் கோசலை.

ராமரைப்பெற்ற தாயே இவ்வாறு சொல்லியிருப்பதைப் பார்த்தால், பரதனின் உயர்வு புரிகிறதல்லவா? கோசலை மட்டுமா? தன்னை வீழ்த்திய ராமரை ஏசத்   தொடங்கிய வாலி,”பரதன் முன் தோன்றினாயே?” என்றான். அங்கும் பரதன் புகழ் பேசப்படுகின்றது. அரச பதவி உட்பட எதன்மீதும் ஆசைப்படாமல்,  நற்குணங்களை வளர்த்துக்கொண்டு, அனைவராலும் பாராட்டப்பட்ட பரதனைப் போன்ற ஒரு கதா பாத்திரத்தை, உலகெங்கிலும் காண முடியாது. பரதனின்  நற்குணங்கள் சிலவாவது நமக்கும் கிடைக்க, பரம்பொருளை வேண்டுவோம்!

(தொடரும்)

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

 • india-jappan28

  வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

 • soldier28

  தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

 • balaji28

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்