SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர்பண்பு

2020-02-25@ 11:02:59

நடுவுநிலை என்பது சான்றோர்களின் உயர்பண்பு என்று இலக்கியங்களும், வேதங்களும் கூறுகின்றன. தராசின் முள்போல் எந்தப் பக்கமும் சாயாமல் சரியான புள்ளியில் நின்று சத்தியத்தைச் சொல்லுதலே நடுவுநிலை ஆகும் என்று விளக்கம் அளிப்பர் சான்றோர் பெருமக்கள். உலக மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடுவுநிலை குறித்துத் திருமூலர் கூறுகிறார்:

‘‘நடுவுநின்றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின்றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின்றார் நல்ல தேவருமாவார்
நடுவுநின்றார் வழி நானும் நின்றேனே”

ஞானம் யாருக்குக் கிடைக்கும் என்று கேட்டால் யார் நடுவுநிலையில் நிற்கிறாரோ அவருக்கே என்கிறார் திருமூலர். பொன்னை எடைபோடுகிற துல்லிய தராசு போல் நடுவுநிலை இருக்கவேண்டும் என்று அழகுபடக் கூறுகிறார் கம்பர்.

‘‘சீலம் அல்லன நீக்கி செம்பொன் துலை
தாலம் அன்ன தனிநிலை தாங்கிய’’
என்கிறார் கவிச் சக்ரவர்த்தி.

இஸ்லாமிய வாழ்வியல் இந்த நடுவுநிலைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது. இஸ்லாமிய வழிமுறை என்பதே நடுவு நிலைதான். இருபத்து நான்கு மணிநேரமும் வழிபாடுகளிலேயே மூழ்கி விடலாமா? கூடாது என்கிறது மார்க்கம். எப்போதும் உலக விவகாரங்களிலேயே உழன்றுகொண்டிருக்கலாமா? அதுவும் கூடாது. பிறகு என்ன செய்வது?

“இரண்டிலும் சமநிலையைப் பேணுக” என்கிறது மார்க்கம். “நான் திருமணமே முடிக்க மாட்டேன். உலக இன்பங்களைத் துறந்து வழிபாட்டில் ஈடுபடப்போகிறேன்” என்று தோழர் ஒருவர் கூறியதாக நபிகளாருக்குச் செய்தி வந்தது. உடனே இறைத்தூதர் அந்தத் தோழரை அழைத்து “அப்படிச் செய்யாதீர்கள். உங்கள் உடலுக்கும் சில உரிமைகள் உள்ளன. அவற்றை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நான் திருமணமும் முடித்துள்ளேன். வழிபாடுகளிலும் ஈடுபடுகிறேன்” என்று அறிவுறுத்தினார்கள்.

இறுதிவேதம் திருக்குர்ஆன் கூறுகிறது: “இவ்வாறே உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன்- சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம்.”(2:143)
‘‘உம்மத்தன் வஸத்தன்’’ என்பதன் பொருள் நடுவுநிலை சமுதாயம் என்பதாகும். அது நீதி, நேர்மை, சமநிலை ஆகியவற்றை நிலையாகக் கடைப்பிடிக்கும். அனைவரிடமும் ஒரேவிதமான சத்தியமான- நேர்மையான நடத்தையை மேற்கொள்ளும். எவரிடமும் அசத்தியமான, தவறான போக்கை மேற்கொள்ளாது. இத்தகைய பண்புகள் கொண்ட மிக உயர்ந்த, இலட்சிய சமுதாயம் ஆகும்.

சமநிலையுடைய சமுதாயம் என்பதற்குக் குர்ஆன் தரும் விளக்கமாகும் இது. இத்தகைய உயர்பண்பு ஒருவரிடம் வந்துவிட்டால் அதுதானே ஞானம்? “நடுவுநின்றார்க்கன்றி ஞானமும் இல்லை” எனும் திருமூலரின் கூற்று திருக்குர்ஆனின் கூற்றுடன் எவ்வளவு அழகாக இயைந்து போகிறது..!
எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை இழந்துவிடாமல் - தீவிரப்போக்கு இல்லாமல் - சமநிலையுடன் வாழ்வை அமைத்துக் கொள்வதே நடுவுநிலை சமுதாயத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். நாமும் ஞானம் பெற்றவர்களாக - நடுவுநிலைமை எனும் உயர்பண்பைக் கொண்டவர்களாக வாழ்வோமாக.

தொகுப்பு: சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

 • india-jappan28

  வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

 • soldier28

  தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

 • balaji28

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

 • ukraine28

  உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்