SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகரை வழிபட்டால் நல்வாழ்வு கிட்டும்!

2020-02-25@ 10:52:59

?என் மகனுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன. இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எத்தனையோ கோயில்களுக்குச் சென்றும் வேண்டுதல்கள் நடத்தியும் இருக்கிறோம். குழந்தைப்பேறு கிடைக்கவும், அவனுடைய வாழ்வினில் எந்தவிதமான பிரச்னையுமின்றி சந்தோஷமாக வாழவும் பரிகாரம் கூறுங்கள்.
- பிரேமா, நாகர்கோவில்.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சூரிய புக்தி துவங்க உள்ளது. ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. மகனை விட மருமகள் நான்கு மாதம் மூத்தவராக இருக்கிறார். உங்கள் மகனின் ஜாதகத்தில் பிள்ளைப்பேறு பற்றிச் சொல்லும் ஐந்தாம் பாவக அதிபதி குரு ஒன்பதாம் வீட்டில் இருப்பதும், மருமகளின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டின் அதிபதி சூரியன் ஒன்பதாம் வீட்டில் இருப்பதும் பிள்ளைப்பேறு என்பது நிச்சயம் உண்டு என்பதை உறுதி செய்கிறது. அதிலும் தற்போது உங்கள் மருமகளின் ஜாதகப்படி 18.02.2020 முதல் சிறப்பான நேரம் என்பது துவங்குகிறது. உரிய மருத்துவ ஆலோசனை பெற்று அதனை தவறாமல் கடைபிடித்து வரச் சொல்லுங்கள். மகனின் ஜாதகத்தில் ஐந்தில் அமர்ந்திருக்கும் சனி குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதத்தை உண்டாக்கி வந்தாலும் தற்போது அவருக்கு நடந்து வரும் நேரமும் நன்றாகவே உள்ளது. தம்பதியர் இருவரையும் அருகிலுள்ள சிவாலயத்திற்கு பிரதி வியாழன் தோறும் இரவினில் நடைபெறும் அர்த்தஜாமபூஜைக்கு சென்று வரச் சொல்லுங்கள். பூஜை முடிந்ததும் அங்கு தரப்படும் பால் பிரசாதத்தை பெற்று அருந்துவது நல்லது. தொடர்ந்து 16 வாரங்கள் இந்த பூஜையில் பங்கேற்கச் சொல்லுங்கள். நான்கு மாதங்கள் முடிந்து ஐந்தாம் மாதம் துவங்கும் நேரத்தில் உங்கள் வம்சம் விருத்தி அடையத் தொடங்கியிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தினை நிச்சயம் காது குளிரக் கேட்பீர்கள்.

?48 வயதாகும் என் மகன் 25 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான். அவன் ஆயுள் முழுவதும் இப்படியேதான் இருப்பானா? நலம் பெறுவானா? அவன் குணமடைய நல்வழி காட்டுங்கள்.
- திருமதி. கோவிந்தராஜ், வடலூர்.


அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. லக்னாதிபதி குரு வக்ரம் பெற்ற நிலையில் நீச பலத்துடன் உள்ள மனோகாரகன் சந்திரனுடன் இணைந்து 12ல் அமர்ந்திருப்பதும் ஆறாம் பாவகத்தில் சூரியன் - புதன் - சனி ஆகியோரின் இணைவும் அவருக்கு இந்த நிலையை உண்டாக்கி இருக்கிறது. தற்போது நடந்து வருகின்ற தசாபுக்தியாலோ அல்லது கோச்சார நிலையினாலோ பெருத்த மாறுதல் ஏதும் இருக்காது. தற்போது நடந்து வரும் சுக்கிர தசையின் முடிவு வரை அவருக்கு சிரமமில்லாத சுகமான வாழ்வு என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். உங்கள் மகனின் அறுபதாவது வயதில்தான் அவர் சற்று சிரமத்திற்கு உள்ளாவார். அதுவரை அவரது வாழ்க்கை நிலை பற்றிய கவலை தேவையில்லை. உங்கள் மகனின் மனோவியாதிக்கு முழுமையான தீர்வு என்பது இனிமேல் கிடைக்காது என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள். காரண காரியமின்றி இறைவன் எந்த ஒரு ஜீவனையும் படைப்பதில்லை.
கர்மவினையின் தாக்கத்தை உணர்ந்துகொண்டு அதன் பலனையும் முழுமையாக அனுபவித்துவிடுவதே நல்லது. பிரதி வியாழக்கிழமை தோறும் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று நந்தியாவட்டை மலர்களை மாலையாக கோர்த்து இறைவனுக்கு அணிவித்து பிரார்த்தனை செய்து வாருங்கள். மகனின் எஞ்சிய வாழ்நாட்கள் எந்தவிதமான சிரமமுமின்றி கடந்துபோகும்.

?என் குழந்தைகள் இரண்டு பேருக்கும் கல்வி என்பது பிரச்னையாக இருக்கிறது. பீடி சுற்றி குடும்பம் முன்னேறுகிறது என்று சொந்தங்கள் பொறாமைப்படுகிறார்கள். அதையும் தாண்டி +2 முடித்தேன். தையல் தொழில் செய்து ஓரளவிற்கு நன்றாக இருக்கிறேன். என் மீதான பொறாமை என் குழந்தைகளை தாக்குகிறதா? நான் என்ன செய்ய வேண்டும்?
- சுரேஷ், முக்கூடல்.


பூசம் நட்சத்திரம், கடக ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது குரு தசையில் குரு புக்தி நடக்கிறது. இருவர் ஜாதகங்களிலும் ஜீவன ஸ்தானம் அதாவது தொழில் என்பது மிகவும் சிறப்பாக உள்ளது. கல்வி கற்பது என்பது ஒரு நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிப்பதற்காகத்தான். அந்த சம்பாத்யம் என்பது உங்கள் இரு குழந்தைகளின் ஜாதகங்களிலும் நன்றாகவே உள்ளது. மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் 11ல் இருப்பதும், ஜீவன ஸ்தானத்தில் சுக்கிரன் - சனியின் இணைவும் அவரை வாழ்வினில் உயரத்திற்குக் கொண்டு செல்லும். மகளின் ஜாதகத்திலும் நிரந்தர உத்யோகம் என்பது நிச்சயம் உண்டு. அதனால் அவர்களது கல்வி நிலை குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தேர்வு நேரத்தில் தனிப்பயிற்சி வகுப்புகளின் மூலம் அவர்களை தேர்ச்சி பெற வைக்க முயற்சியுங்கள். தகப்பனாரைப் பற்றிச் சொல்லும் ஒன்பதாம் பாவகமும் இருவரின் ஜாதகங்களிலும் நன்றாகவே உள்ளது. திருஷ்டி தோஷம் என்பது எல்லோரையும் தாக்க வல்லது. பிரதி மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் குடும்பத்தினர் அனைவருக்கும் எவரேனும் பணியாள் ஒருவரை வைத்து பூசணிக்காய் சுற்றி உடைக்கச் சொல்லுங்கள். அடுத்தவர்கள் பேசும் வார்த்தைகளைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள். கடவுளின் துணை என்பது கடமையைச் செய்பவர்களுக்கு நிச்சயமாக இருக்கும். உங்கள் உழைப்பிற்கான பலனை குழந்தைகளின் உயர்வினில் நிச்சயம் காண்பீர்கள்.

?என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். படித்த பாடங்கள் அனைத்தும் மறந்துவிடுகிறது என்று கூறுகிறான். அடிக்கடி தலை வலிக்கிறது என்கிறான். அதனால் எனக்கு கவலை அதிகமாக உள்ளது. என் மகனின் உடல்நிலையும் கல்விநிலையும் முன்னேற்றம் காண வழி கூறுங்கள்.
- உஷாராணி, சேலம்.

அவிட்டம் நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரனும், ராசி அதிபதி சனியும் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளது நல்ல நிலையே. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலமும் ஏழரைச்சனியின் தாக்கமும் மனதில் ஒருவிதமான சோம்பல் தன்மையைத் தரும். அவரது ஜாதகப்படி படிப்பது என்பது மறக்காது. அவர் இன்னமும் முழுமையான கவனத்துடன் படிக்கத் தொடங்கவில்லை என்பதே நிஜம். உங்களுடைய முயற்சியின் மூலமாகவும் ஆசிரியர்கள் தரும் ஊக்கத்தின் துணையுடனும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடுவார். கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது. குறிப்பாக வலது கண்ணில் லேசான குறைபாடு உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. மூக்குகண்ணாடி அணிவதன் மூலம் அவரது தலைவலி சார்ந்த பிரச்சினை சரியாகிவிடும். உடல்நிலையில் வேறு எந்தவிதமான தொந்தரவும் இருப்பது போல் தெரியவில்லை. உத்யோக ஸ்தானத்தில் செவ்வாயின் ஆட்சி பலமும், சுக ஸ்தானத்தில் சுக்கிரனின் ஆட்சி பலமும் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை
உறுதியாகச் சொல்கிறது. சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள விநாயகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று அறுகம்புல் மாலை சாத்தி வழிபட்டு வாருங்கள். மகனின் நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்