SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேடனுக்கு அருள் புரிந்த வேதநாயகர்

2020-02-20@ 16:08:17

காளத்தி நாதனே என்று பக்தி பெருக்கில் பட்டினத்தார் உருகி பிரார்த்திக்கும் பெருமான் திரு காளஹஸ்தி ஈசன். முன்னொரு சமயம், பாரதப் போர் செய்யும் தருணத்தில் பாசுபத அஸ்திரம் வேண்டி அர்ச்சுனன் சிவனை நோக்கி தவம் செய்து அதனைப் பெற்றார். ஆனால் தனக்கு அப்பேறு அளித்த சிவனை, உருகிப்போற்றி, நன்றி தெரிவிக்கவும் மறந்து போர் சிந்தனையிலேயே தன் இருப்பிடத்துக்குத் திரும்பிவிட்டார். பின்னாளில் இந்தத் தவறு குறித்து வருந்திய அர்ச்சுனன், கிருஷ்ண பரமாத்மாவிடம் அதைச் சொல்லி முறையிட, ‘‘பின்னைப் பிறவியில் அம்பும் வில்லும் ஏந்தி, கங்கையினும் புனிதமான சுவர்ணமுகி கரையில் அமர்ந்து அருட்பாலிக்கும் அந்த வாயுலிங்கனை ஆராதிப்பாயாக’’ என்று ஆறுதலளித்தார் கிருஷ்ணன். அந்த வாயுலிங்க ஸ்தலம் என்கிருக்கிறது என்பதை அர்ச்சுனனுக்கு அறிவிக்கும் வகையில், பின்பிறவியில் கிருஷ்ண பரமாத்மா, ஒரு வேடனை போல வேடமிட்டு, ‘‘நீ காணும் இந்த சிவலிங்கம் சிலந்தி, பாம்பு, யானை போன்றவைகளால் ஆராதிக்கப்பட்டு முக்தி பெற்றது.

சிலந்தியை ஸ்ரீ என்றும் பாம்பை காள என்றும் யானையை ஹஸ்தி என்றும் தேவர்கள் போற்றுவர். இவை மூன்றும் இங்கு முக்தி பெற்றமையால், இவ்வூர் ஸ்ரீ காளஹஸ்தி என்றும் இங்கு கோயில் கொண்ட சிவன் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரன் என்றும் தேவர்கள் கொண்டாடுவர்’’ என்று அர்ச்சுனனுக்கு அறிவுறுத்தினார். அப்போது அர்ச்சுனனே திண்ணாடு என்ற வேடனாக சிவனை வணங்கி வழிபட்டு வந்திருந்தார். சிவன், திண்ணாடுவின் பக்தியை சோதிக்க எண்ணி, லேசாக தான் குடியிருக்கும் கோயிலை அதிரச் செய்ய, கோயிலின் கூரை இடிந்து படபடவென ஓடுகள் சரிந்தன. அத்தருணம் கோயிலில் அமர்ந்திருந்த அந்தணர்களும், முனிவர்களும் மற்றேனைய பக்திமான்களும், சிவனடியார்களும் ஓட்டம் பிடிக்க, திண்ணாடு மட்டும், தனது உடலால் சிவலிங்கத்தைத் தழுவி மூடியபடி, அதற்கு எந்தச் சேதமும் வராது காத்தார்.

பின்னொரு முறை சிவலிங்கத்தின் கண்ணில் ரத்தம் வர, தன் கண்ணையே அம்பால் குத்திப் பிடுங்கி சிவலிங்கத்தில் பொருத்தி, குருதியை நிறுத்தினார் திண்ணாடு. ஆனால், மற்றொரு கண்ணிலும் ரத்தம் வர, தன்னுடைய இன்னொரு கண்ணை பிடுங்க முற்பட்டார். அப்போது ‘நில் கண்ணப்பா’ என்று அசரீரியாகக் கூறி அவரைத் தடுத்தாட் கொண்டார் ஈசன். எல்லா உயிர்களுக்கும் தந்தையான சிவனுக்கும் அப்பன் ஆனார் திண்ணாடு. அன்று தொட்டே அவருக்கு ‘கண்ணப்பர்’ என்ற நாமம் உண்டாயிற்று.

அகஸ்தியர் இந்த சம்பவத்தினை, ‘திண்ணாடும் வேடன் ஈந்த கண்ணை தாங்கி பொறுகண் அப்ப என்ன, வானோர் வியந்தனரே, முன்னே தேரை கண்ணனூர்ந்தது யாவர் மாட்டோ, யவனே திண்ணாடு நாமமேந்திய கண்ணப்ப நாயனாக காண்டாமே’’ என்கிறார். திரு காளஹஸ்தி நாதரை முனிவர்கள் ‘காளத்தியப்பரே’ என்றே போற்றுகின்றனர். இது வாயு க்ஷேத்திரம். இங்குள்ள லிங்கம், தானே தோன்றிய சுயம்புலிங்கம், பால் போன்ற வெண்மை நிறமானது. யாராலும் தீண்டப்படாதது. அபிஷேகம் புரியும் அர்ச்சகரும் தீண்டியதன்று இந்தப் புனித லிங்கம்! இங்குள்ள கருவறையின் தீபங்கள் அனைத்தும் காற்றிலசைவது போன்று அசையும். இதுவே வாயுலிங்கம் என்பதற்கு சாட்சி.

ராகு - கேது என்ற சர்ப்ப தோஷங்களிலிருந்து பூரண குணமளிக்கும் கோயில் இது. கோயில் முழுவதும் ஒரே மலைப் பாறையால் ஆனது. பக்த மார்க்கண்டேயருக்கு சிவபெருமானே மந்திர உபதேசம் செய்த ஸ்தலம். ‘குருதான் பிரம்மா, குருவே, சிவன், விஷ்ணு என்று நாம் எல்லோரும் அறிந்து போற்றும் மந்திரம் இங்குதான் உருவானது. ‘குரு ப்ரஹம்மா, குருர விஷ்ணோ, குரு தேவோ மஹேஸ்வரா, குரு சாக்ஷாத் பரப்ரஹ்மா, தஸ்மை ஸ்ரீ குருவே நம:’ என்ற மந்திரத்தை சிவன் உபதேசித்த இந்த ஸ்தலத்தில், கானகாலா என்ற பேய் உருவிலான ஒரு பெண்மணிக்கு அவள் பதினைந்து ஆண்டுகள் பைரவ மந்திரம் ஜபம் செய்ய, ஈசன் அவளுக்கு முக்தி அருளினார்.

ஸ்ரீ புரமலை - மும்முடிச் சோழபுர மலைக்கு இடையில் அமைந்த திவ்விய பூமியிது. சுவர்ணமுகி ஆறு வடக்கு நோக்கி பாய்கிறது. கோயிலின் மேற்புரத்தை தொட்டே ஓடுகிறது. தேவேந்திரன், மாயூரன், சந்திரபகவான் ஆகியோரின் சாபத்தை முற்றிலும் தீர்த்த திரு தீர்த்தமிது. காளத்தி நாதர் நித்ய கல்யாணயீச்சுவரர். இங்கு சிவ - பார்வதி திருமணம் நடத்தி வைத்து விரதம் இருக்க, மனையில் செல்வ செழிப்பு குன்றாது. திருமணத்தடை என்பது இனி தொடரும் வம்சத்துக்கே வாராது என்கிறார் அகஸ்தியர். நித்ய அன்னதானமது தன்னில், சித்தர்களும், தேவர்களும்கூட, மாறு வேடத்தில் வந்து கலந்து சிறப்பிக்கின்றனராம்.

மனக்கஷ்டம், தொழில் பிரச்னைகள், திருமணத்தடை, வழக்கு, வியாஜ்ஜிய விவகாரங்கள் விலக, ஞாயிற்று கிழமை ராகு காலத்தில் திருக்காளத்தி நாதரை, அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே பைரவ ஜபமாக ஜபித்து வர, வெற்றி கிட்டும். இடி, மின்னல், மின்சாரம், அக்னி போன்றவற்றால், எந்தத் தொல்லையும் வாராதபடி அர்ச்சுனன் காப்பார் என்றும் நாடி கூறுகிறது. பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்களை தொழுதால் கிட்டும் பலன்களை, நூற்றி எட்டு சிவ சேத்திரங்களில் செய்த பூஜையால் கிடைக்கும் நன்மைகளை, ஒருமுறை திருக்காளத்தி நாதரை தொழுதால் சேரும். இக்கோயிலில் கொலுவிருக்கும் அம்பிகை ஞானபிரசுராம்பிகை தேவியார்.

- ஆர். அபிநயா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

 • india-jappan28

  வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

 • soldier28

  தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

 • balaji28

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

 • ukraine28

  உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்