SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தக்கோலம் குரு பகவான்

2020-02-12@ 11:12:30

அது சரி. குரு பெயர்கிறாரா? குரு பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் என்ன சம்மந்தம் என்பது பலரின் சந்தேகக் கேள்வியாக உள்ளது. நவகிரகங்களில் முழுமையான சுப கிரகமான குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம். இந்த குருவைத்தான் வியாழ பகவான், பிரகஸ்பதி என்றெல்லாம் அழைப்பர். இவரே தேவர்களுக்கெல்லாம் குரு ஆவார். இந்த தேவகுருக்கு குருவாக ஆதி குருவான தட்சிணாமூர்த்தி விளங்குகிறார். இதனை நன்கு தெரிந்து கொண்ட ஆன்றோர்கள் குரு பெயர்ச்சியின் போது நேரடியாக தட்சிணாமூர்த்தியையே வணங்கினர். நவகிரக குருவிற்கு உண்டான மஞ்சள் நிற ஆடையையும், கொண்டை கடலை நிவேதனம் உள்ளிட்ட சகல பரிகாரங்களையும் தட்சிணாமூர்த்திக்கே செய்தனர்.

நவகிரக கிரகத்தின் குருத்வத்திற்கு அதாவது குருவின் தன்மைக்கே மோன தட்சிணாமூர்த்தியின் பேரருளே காரணம். அதனால்தான் தட்சிணாமூர்த்தியை வணங்குகிறோம். அவரையே ஆராதிக்கிறோம். ஆசையாகவும் பயத்தோடும் நம்பிக்கையோடும் பரிகாரங்களை செய்கிறோம். தேவகுருவான பிரகஸ்பதியோ, ‘‘உங்களின் நன்மைக்கு நான் காரணமல்ல. நான் வெறும் கருவி. எனக்குள் அமர்ந்து என்னை இயக்கும் மோன மூர்த்தமான தட்சிணாமூர்த்திதான் முழுமுதல் காரணம்’’ என்பதை கூறாமல் கூறுகிறார். செயல் முழுவதும் குருவினுடையது எனும் பணிவே பிரகஸ்பதியின் தெளிவு. பொதுவாக குரு பெயர்ச்சியின்போது சகல சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடக்கின்றன. ஆனாலும், குறிப்பிட்ட சில தலங்கள் மட்டுமே குருத் தலங்களாக திகழ்கின்றன.

ஆலங்குடி, தென்குடித் திட்டை, சென்னை - பாடி, உத்திரமேரூர் அருகேயுள்ள திருப்புலிவனம் என்று சில தலங்கள் மட்டுமே சிறப்புடையவாக உள்ளன. அப்படிப்பட்ட முக்கிய குரு தலங்களுள் மூன்றாவதாக தக்கோலம் ஜலநாதீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. தக்கோலத்தில்தான் அதிமுக்கிய புராண நிகழ்வுகள் நிகழ்ந்தேறியுள்ளன. அதுமட்டுமல்லாது பெரிய வரலாற்றுப் பின்னணியும் இதற்குண்டு. தற்போது தக்கோலத்தை குரு பரிகாரத் தலமாகவே பக்தர்கள் பெரும்பான்மையினர் அறிந்துள்ளனர். காரணம் இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் அத்தனை அற்புதமானது.
தேவர்களின் குருவாகிய வியாழ பகவான் என்றழைக்கப்படும் பிரகஸ்பதியின் தம்பி சம்வர்த்த முனிவர் இங்கு வழிபட்டதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார்.

ஆனால், தலபுராணமோ தேவலோகப் பசுவான காமதேனுவின் சாபத்தை வியாழ பகவானின் தம்பியாகிய உததி முனிவர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார் என்கிறது. உததி முனிவரும், சம்வர்த்த முனிவர் ஒருவரே என்றொரு கருத்தும் நிலவுகிறது. கருவறை கோஷ்டத்தில் தனிக்கோயில் அமைப்பிற்குள் குருபகவான் அருட்பாலிக்கிறார். உருவமைப்பை பார்த்தவுடனே ஆஹா.... ஆஹா... எனும் பிரமிப்பு தோன்றும். இத்தனை நுணுக்கங்களோடு செதுக்க முடியுமா என்று விழி விரியும். விழுதுகளோடு கூடிய ஆலமரத்தின் அடியில் குருபகவான் அமர்ந்திருக்கிறார். காற்றடித்தால் ஆல இலைகள் அசையுமோ எனும் அளவுக்கு நிஜ இலைகளைப்போன்று தோற்றமளிக்கிறது. வழக்கமான தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் யோக நிலையில் இருக்கும்.

தமது ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருப்பார். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில் தமது வலக் காலை சற்று வளைத்து கீழே ஊன்றிய நிலையிலும், இடது காலை மடக்கி பீடத்தின் மீதும் வைத்துள்ளார். வலது பின் கையில் அக்க மாலையுடன் அமர்ந்திருக்கும் இந்த அமைப்பை உத்கடி ஆசனம் என்றழைக்கின்றனர். சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு வழிப்படுத்தும் முறை என்று பல கோணங்களில் விவரிக்கிறார்கள். அதேசமயம் தலையை சற்றே சாய்த்து பார்க்கும் அழகு லாவண்யத்தை வேறெங்கும் காணமுடியாது. பொங்கி வழியும் ஞானத் திருமுகம். அதில் எல்லா காணா வானம்போல சாந்தம் பூசியிருக்கிறது. சாந்தம்... அமைதி... என்கிற பேருணர்வை இப்படி கல்லுக்குள் காட்ட முடியுமா என்ன? இது கல் அல்ல. கடவுள் கல்லை உரித்து தோலால் போர்த்திக் கொண்டிருக்கிறார்.

கரி உரித்த நாயனார் யானைத்தோலை போர்த்தியிருப்பதுபோல. திருமுகத்தில் மெல்லியதான அகலாத புன்னகை தரிசிப்போரின் நெஞ்சில் குளுமையை பரப்புகிறது. ஜென்ம ஜென்மங்களான வினைகள் சிதறுண்டு போகின்றன. கழுத்தில் சவடி என்றழைக்கப்படும் சரடும், அழகான வேலைப்பாடுகளோடு கூடிய சரப்பளி கழுத்தணியும் நெளிந்து காணப்படுகிறது. இடது பின் கையில் தீப்பந்தமும் அதிலிருந்து வெளிப்படும் தீ ஜுவாலையும் நமக்குள் ஞானாக்னியை கொழுந்து விட்டெறியச் செய்கிறது. காட்டில் அமர்ந்திருப்பதால் கால்களுக்கு அருகே மான்கள், பாம்பு என்று சில மிருகங்களை காணலாம். குருபகவானின் தெய்வீக திருக்கோலத்தை வணங்குவதும் அந்த சிற்ப நேர்த்தியை கண்டு திகைத்துப் போவதுமாக பக்தர்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற குருபகவானின் அமைப்பை வேறெங்கும் காண முடியாது.

இங்கு குருபகவான் பேசாமல் பேசுகிறார். மௌனத்தினாலேயே ஞானம் பிரகடனம் செய்யப்படுகிறது என்று உபநிஷதம் கூறுகிறது. அந்த மௌனம் இங்குதான்... இங்குதான்... இருக்கிறது. வாழ்வில் பிரச்னைகள், கிரக தோஷங்கள் என்பவையெல்லாம் இந்த சந்நதிக்கு முன்பு எம்மாத்திரம். வேண்டிக்கொள்ள வந்தவர்கள் வெறும் மௌனத்தை சுமந்து செல்வார்கள். கண்டும் வணங்கியும் எதுவும் வேண்டாமலேயே திரும்பி விடுவர். ஏனெனில், அங்கு ஞானப் பேராறு பிரவாகமாக பொங்கிக் கொண்டிருக்கிறது. அதன்முன்பு நின்று குவளை நீர் கேட்க யாருக்கும் மனம் வராது.
குருபகவானின் ஞானப் பிரவாகத்தில் நனைந்த நாம் கோயிலின் தலபுராணத்தை அறிந்து கொள்வோமா?  ஏனெனில், தக்கோலம் எனும் தலத்தின் பெயரே புராணக்கதையின் அடிப்படையில்தான் ஏற்பட்டது.

ஈசனை மாப்பிள்ளையாகப் பெற்றும் கூட தட்சனுக்கு அகங்காரத்தை அறுக்கத் தெரியவில்லை. ஆயிரம் வேதங்கள், தர்மங்கள் தெரிந்தாலும் கூட கண்ணுக்கெதிரேயே நிற்கும் மகாதேவனை தொழும் தெளிவை பெறாமலேயே இருந்தான். அருகே இருப்பதானாலேயே என்னவோ தெரியவில்லை எப்போதுமே ஈசனை அலட்சியமாகப் பார்த்தான். உலகமே வணங்குகிறதா. சரி, வணங்கி விட்டுப் போகட்டுமே? நான் எதற்கு பூஜிக்க வேண்டும். சுடுகாட்டுச் சாம்பலை பூசிக் கொள்பவரின் காலில்போய் என்னை எதற்கு விழச் சொல்கிறீர்கள் என்றே பேசி வந்தான். திடீரென்று பெரிய யாகம் செய்தான். ஈசனைத் தவிர எல்லோரும் வந்திருந்தார்கள். ஆனால், பிரபஞ்சத்தின் மையச் சக்தியான ஈசனை வேண்டுமென்றே அழைக்கவில்லை. யாகத்திற்கு வந்தோர்கள் விபரீதத்தைப் புரிந்து கொண்டனர்.

மிக சூட்சுமமாக இந்த விஷயத்தை பார்த்தோமானால் வேதங்களில் ஈசனைக் குறிக்கும் சப்தங்களை தட்சன் வேண்டுமென்றே தவிர்த்தான். மற்ற எல்லா தேவர்களையும் சப்த ரூபமாக அழைத்தான். ஹோமத் தீயில் அவர்களுக்கு உரித்தானதை ஆகுதியாகக் கொடுத்தான். வேதங்களெல்லாம் யக்ஞம் செய்வதாலேயே ஈசனின் நிலையை ஒருவன் அடைகிறான் என்று கோஷிக்கின்றன. ஆனால், அதே யக்ஞத்தை செய்யும்போது தட்சன் முட்டாள்தனமாக ஈசனை அழையாமல் தவிர்த்தான். தட்சனின் மகளான தாட்சாயிணி நிறைய தர்மங்களை எடுத்துக் கூறி தந்தையை திருத்தப் பார்த்தாள். ‘‘சிவபெருமானை என் கணவர் என்றும், உங்களின் மாப்பிள்ளை என்றும் குறுகிய பார்வையில் பார்க்காதீர்கள். அவர் எனக்கு கணவராக
வாய்த்ததும், உங்களுக்கு மாப்பிள்ளையாக இருப்பதும் நம் பாக்கியம். உங்களுக்கு அவரை கொண்டாடத் தெரியவில்லை.

அவரே பிரபஞ்சத்தின் ஆதிசக்தி. எனக்குள் அவரும், அவருக்குள் நானுமாக இருக்கிறோம். அவரை இகழும்போது என்னையும் சேர்த்தே அவமானப்படுத்துகிறீர்கள். கொஞ்சம் உங்கள் அகங்காரத்தை ஒதுக்கிப் பார்த்தால் உங்களுக்குள்ளும் அவர்தான் இருக்கிறார் என்பதை அறிவீர்கள்’’ என்றெல்லாம் கூர்மையாகப் பேசினாள். தட்சன் தாட்சாயிணியை வெளியேறும்படி கூறினான். ஆனால், அவளோ அங்கிருந்த யாக குண்டத்தில் இறங்கி யோகாக்னியால் தன்னை எரித்துக் கொண்டாள். ஈசனின் கோபம் பன்மடங்கு கூடியது. அவருக்குள்ளிருந்து வீரபத்திரர் வெளிப்பட்டு தட்சனின் யாகத்தையே சிதைத்தார். தட்சனின் தலையை சீவியெறிந்து ஆட்டின் தலையை பொருத்தினார். அப்போது தக்கன் ஓலமிட்டான். தக்கன் இப்படி ஓலமிட்டதால் இத்தலத்தை தக்கோலம் என்றழைக்கப்பட்டது. தக்கனின் அகங்காரம் சிதைந்து சத்வ குணம் பெருகியது.

ஈசனின் ஆணைப்படியே சீர நதிக்கரையின் ஓரமான இத்தலத்தில் அமர்ந்து ஈசனை பூஜித்தான். ஆட்டின் தலை பொருத்தப்பட்டதால் ஆடு கத்தும் ஒலியாகிய ‘‘மே... மே...’’ என்னும் சமகத்தை சொல்லி பூஜித்தான். இது ருத்ரத்தோடு சேர்ந்து வரும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கிற பிரார்த்தனை மந்திரங்களோடு இது அமைந்திருக்கும். தக்கன் வழிபாடு செய்த இத்தலத்திற்கும் பார்வதி தேவி வந்து பூஜித்தாள். அருகேயுள்ள ஆற்றில் வெள்ளம் வந்து லிங்கத்தை அடித்துச் செல்லும்போது தேவி தமது இருகரங்களால் அணைத்து வெள்ளத்திலிருந்து தடுத்தார். நீருற்றின் வடிவமாக இத்தல இறைவன் விளங்குவதால் திருவூறல் என்றே தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகிறது. ஜலநாதீஸ்வரர் என்று வடமொழி கூறுகிறது. தக்கனின் தீந்தவமோ என்னவோ தெரியவில்லை.

ஓரு அக்னிக் கோளமொன்று கருவறையில் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால், ஜலநாதீஸ்வரர் என்றே இவருக்குப் பெயர். நீருக்குள் நெருப்பாக ஈசன் இருக்கிறார் என வேதங்கள் ஈசனைக் கூறுகின்றன. அது இத்தலத்தைப் பொறுத்தவரை மிகப் பொருத்தமானது. அம்பாள் கிரிராஜகன்னிகாம்பாள்
என்றழைக்கப்படுகிறாள். ‘‘என் தந்தை தவறு செய்து விட்டார். உங்களின் பேச்சைக் கேட்காது நானும் அந்த யாகத்திற்கு சென்று விட்டேன். தாங்களை ஏன் அழைக்கவில்லை என்று கேட்கத்தான் சென்றேன்’’ என்கிற பரிதவிப்பை அம்பாளின் திருமுகத்தில் இன்றும் காணலாம். ‘‘என்னையும், தந்தையையும் மன்னித்துவிடுங்கள்’’ எனும் தாபத்தை அந்த சாந்த முகத்தை உற்றுப் பார்த்தால் உணரலாம். தனிச் சந்நதியில் பேரருளோடு கணவனைக் கண்டோமே எனும் திருப்தியோடு பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறாள்.

உததி முனிவரின் ஜீவசமாதியென்றும், அவர் பூஜித்த லிங்கமென்றும் கூறும் சிவலிங்கமொன்று குருபகவானுக்கு அருகேயே சற்று உள்ளடங்கியதுபோல இருக்கிறது. ஒன்றா... இரண்டா... எந்த சிற்பத்தின் அழகை வர்ணிப்பது என்று குழம்பிப்போய் திகைத்துத்தான் இத்தலத்திற்குவந்து
போவோம். தரிசிக்க தரிசிக்க தெவிட்டாத தனியமுதாக இக்கோயில் விளங்குகிறது. சென்னை - பூவிருந்தவல்லியிலிருந்து பேரம்பாக்கம் வழியாகவும், அரக்கோணத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.

கிருஷ்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

 • korona-death19

  கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

 • tn-school19

  தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

 • jesee_chrrr1

  3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

 • 19-01-2021

  19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்