SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிரகப் பிரவேசம் செய்வதற்கு முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

2020-02-11@ 17:43:15

* ஆங்கிலப் புத்தாண்டை இத்தனை விமரிசையாக  கொண்டாடுவது அவசியம்தானா? - மங்கையர்க்கரசி, திருச்சி.

எல்லோரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக இருக்கும் நிகழ்வே கொண்டாட்டம். அது எந்த நாளாக இருந்தால் என்ன? ஆங்கிலப் புத்தாண்டு நாள் என்பது உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகின்ற நாளாகவும், விடுமுறை தினமாகவும் அமைந்துவிட்டது. இந்த பூமியில் வாழுகின்ற மக்கள் யாவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்ற அந்தப் பண்டிகையில் நாமும் பங்கு கொள்கிறோம். தீபாவளித் திருநாள் அன்று அமெரிக்க ஜனாதிபதி கூட தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். தீபாவளியைக் கொண்டாடும் பழக்கம் மெல்ல மெல்ல சீனா உள்ளிட்ட கீழை நாடுகளுக்கும் பரவி வருகிறது.

ஆங்கிலப் புத்தாண்டைப் போலவே இன்னும் சில வருடங்களில் தீபாவளியும் உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆக மக்கள் யாவரும் மகிழ்ச்சியுடன் இருக்கும் நாளை நாமும் கொண்டாடுவதில் தவறில்லை. அதே நேரத்தில் அந்த கொண்டாட்டமானது நமது கலாச்சாரத்திற்கு எதிரானதாக அமையக்கூடாது. ஆங்கிலப் புத்தாண்டாக இருந்தாலும் அதனை ஆலயத்திற்குச் சென்று வழிபடும் நாளாக நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அமைத்துக்கொண்டால் கலாச்சாரத்துடன் கூடிய கொண்டாட்டமானது நம்மை வாழ்நாள் முழுவதும் கலகலப்பாகவே வைத்திருக்கும்.

* கிரகப் பிரவேசம் செய்வதற்கு முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன? - பார்வதி ராமநாதன், ராமாபுரம்.

கிரகப் பிரவேசம் என்று சொல்ல வேண்டும். கிரஹப்ரவேசம் அல்ல. க்ருஹம் என்றால் வீடு. கிரஹம் என்றால் வானத்தில் உள்ள கோள்களைக் குறிக்கும். க்ருஹப்ரவேசம் என்று அழைக்கப்படுகின்ற புதுமனை புகுவிழா செய்வதற்கு என்று ஒரு சில முக்கியமான விதிமுறைகள் உண்டு. முதலாவதாக அந்த வீட்டினில் தரை போடப்பட்டிருக்க வேண்டும். அது சிமெண்ட் தரையாக இருந்தாலும் சரி, அல்லது டைல்ஸ், மார்பிள், கிரானைட், மார்போனைட் என்று எந்தப் பொருளாக இருந்தாலும் சரி, எதனைப் பயன்படுத்தப் போகிறோமோ அதனைக் கொண்டு தரையினை அமைத்திருக்க வேண்டும்.

ஒரு சிலர் மார்பிள் பதிக்கப்போகிறோம், மார்பிள் பதித்துவிட்டு க்ருஹப்ரவேச ஹோமம் செய்தால் தரை அழுக்காகிவிடும் என்ற எண்ணத்தில் வெறும் சிமெண்ட் கலவையை மட்டும் லேசாகப் பரப்பி அதனை பெருக்கித் துடைத்துவிட்டு புதுமனை புகுவிழா நடத்திவிடுகிறார்கள். பூஜைகளையெல்லாம் முடித்துவிட்டு சாவகாசமாக தரைக்கு மார்பிள் பதிக்கிறார்கள். இவ்வாறு செய்வது முற்றிலும் தவறு. எந்தத் தரையை வீட்டினில் உபயோகப்படுத்தப் போகிறோமோ அதை போட்டு முடித்துவிட்டுத்தான் கிரஹப்ரவேசம் நடத்த வேண்டும். ஹோமத்தினால் கரை ஏதும் ஏற்படா வண்ணம் தடுப்பதற்கு பல வழிகள் உண்டு. இரண்டாவதாக சுற்றுச்சுவர் பூசப்பட்டிருக்க வேண்டும். உட்புறச் சுவரும், வெளிப்புறச் சுவரும் பூசப்பட்டு அதற்கு வெள்ளை அடித்திருக்க வேண்டும். மெதுவாக வண்ணப்பூச்சுகளை அடித்துக் கொள்ளலாம்.

அதில் தவறில்லை. அடுத்ததாக வாயிற்கதவு போட்டிருக்க வேண்டும். ஒரு சிலர் வாசக்கால் மட்டும் வைத்துவிட்டு கதவு போடாமல் புதுமனை புகுவிழாவினை நடத்துகிறார்கள். இது முற்றிலும் தவறு. கதவு டிசைன் செய்து வருவதற்கு தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தை முன் வைக்கிறார்கள். வாயிற்கதவு தயாரான பிறகுதான் புதுமனை புகுவிழாவை நடத்த வேண்டும். நான்காவது விதியானது புதுமனைபுகுவிழாவின் போது பஞ்சமஹாயக்ஞத்தினை நடத்த வேண்டும் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. ஐந்தாவதாக புதிய வீட்டினில் கிரகபிரவேச பூஜைகளை முடித்தவுடன் குறைந்தது பத்து நபர்களுக்காவது போஜனமிட வேண்டும். தற்காலத்தில் இடவசதி கருதி புதிய வீட்டிற்குள் பந்தி பரிமாறுவதை விடுத்து எதிர்வீடு அல்லது அருகில் உள்ள காலிமனை, போர்ட்டிகோ முதலான இடங்களில் வைத்து உணவளிக்கிறார்கள்.

இதுவும் தவறான முறையே. உணவளிக்கும் இடமானது க்ருஹப்ரவேசம் செய்யப்படுகின்ற வீட்டின் வாசற்படிக்கு உள்ளே இருப்பதாக அமைய வேண்டும். வாசற்படியைக் கடந்து வீட்டிற்குள் வந்து அமர்ந்துதான் விருந்தினர்கள் உணவருந்த வேண்டும். கிரகபிரவேசத்திற்கு நாள் குறிக்கும்போது வாரசூலையை கணக்கில் கொண்டு சூலம் இருக்கும் திசையை அறிந்து குடும்ப ஜோதிடரின் துணைகொண்டு நாளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பால் காய்ச்சிய கையோடு குறைந்த பட்சமாக சர்க்கரைப் பொங்கல் செய்து பூஜை அறையில் நைவேத்யம் செய்து அந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் உட்கொள்ள வேண்டும். கிரகபிரவேசம் செய்கின்ற நாளில் மனை ஏறிய தம்பதியர் மற்றும் அந்த வீட்டு எஜமானரின் குடும்பத்தினர் அனைவரும் அன்றிரவு அந்த வீட்டிலேயே தங்க வேண்டும். இந்த விதிமுறைகளை சரியாக கடைபிடித்து புதுமனை புகுவிழா செய்வோரின் இல்லத்தில் என்றென்றும் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் நீடித்திருக்கும்.

* செருப்பணிந்து பெண்கள் வாசல் தெளித்து கோலமிடுவது சரியானதா? -  அருணாசலம், காஞ்சிபுரம்.

சரியில்லைதான். தற்காலத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டோம். பெரும்பாலும் வேலைக்காரிதான் இந்த பணியைச் செய்கிறார். பத்து வீட்டில் ஒரே பெண் இந்த வேலையைச் செய்யும்போது அவர்களிடம் பொறுப்புணர்வை எதிர்பார்க்க இயலாது. கடமைக்குச் செய்பவர்கள் தங்கள் உடல்நலம் கருதி இவ்வாறு காலில் செருப்பணிந்து வாசல் தெளித்து கோலம் போடுகிறார்கள். உடல்நலத்தை பேணுகிறோம் என்ற பெயரில் காலில் ஈரம்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில் வீட்டு எஜமானிகளும் இவ்வாறுதான் நடந்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் வீட்டு சமையலறையில் கூட செருப்புடன் அலைகிறார்கள். கேட்டால் இது வீட்டு உபயோகத்திற்காக உள்ள பிரத்யேகச் செருப்பு, வெளியில் செல்லும்போது வேறு செருப்பு அணிந்துகொள்வோம் என்று விளக்கம் வேறு தருவார்கள்.

நிச்சயமாக இது தவறுதான். வாசல் தெளித்து கோலம் போடுவது என்பது மகாலக்ஷ்மியை வரவேற்பதற்காக. பூஜையறையில் எவ்வாறு நடந்து கொள்வோமோ அப்படித்தான் வாயிற்படியிலும் நடந்து கொள்ள வேண்டும். அன்னலக்ஷ்மியைத் தொடும்போதும் காலில் செருப்பணியக் கூடாது. ஹோட்டலில் சென்று உணவருந்துபவர்கள் கூட உணவருந்தும் சமயத்தில் காலில் உள்ள செருப்பினை கழற்றி வைத்துவிட்டுத்தான் உணவருந்த வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நிச்சயமாக உடல் ஆரோக்யம் என்பது சீராக அமையும். வாசல் தெளித்து கோலமிடும்போது செருப்பினை அணிந்திருப்பது என்பது சர்வ நிச்சயமாகத் தவறுதான். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

* கருவறைக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்திருப்பது ஏன்? - ஜெயலக்ஷ்மி, சிவகாசி.

கருவறையில் இருக்கும் இறைவனை தரிசித்துவிட்டு திரும்பி வரும்போதும் இறைவனின் திருமுகத்தைக் கண்டுகொண்டே வர வேண்டும் என்ற எண்ணத்தில் கருவறைக்கு நேரெதிரே கண்ணாடியை அமைத்தார்கள். தீபாராதனை நடக்கும்பொழுது சந்நதிக்கு இருபுறமும் நிற்கும் பக்தர்கள் தங்களின் வலது புறம் மற்றும் இடதுபுறம் என இருபுறமும் இறை தரிசனத்தைக் காண வேண்டும் என்பதும் ஒரு காரணம். அதோடு இறைவன் தனக்குச் செய்யப்பட்டிருக்கும் அலங்காரத்தினைக் கண்டு ஆனந்தமாய் வீற்றிருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்வதற்காக கண்ணாடி பதிக்கப்படுகிறது என்று விளக்கமளிப்பதோடு இதனை தர்ப்பண தரிசனம் என்ற பெயரிலும் அழைப்பார்கள்.

விசிறி, வெண்சாமரம் உள்ளிட்ட ஷோடஸ உபசார பூஜை செய்யும்போது இறைவனின் திருமுகத்திற்கு நேராக அர்ச்சகர் கண்ணாடியைக் காண்பித்து அதற்குரிய மந்திரத்தைச் சொல்லி அர்ச்சிப்பார். அர்ச்சகர் கருவறைக்குள் செய்யும் அந்த தர்ப்பண தரிசன வைபவத்தை பக்தர்கள் எல்லோரும் காண வேண்டும் என்பதற்காக கருவறைக்கு நேரே கண்ணாடி பதித்திருக்கிறார்கள் என்பதே உங்கள் வினாவிற்கான விடை ஆகும்.

* வடக்கு நோக்கி தலை வைத்து படுக்கக்  கூடாதாமே! ஏன்? - எஸ். பார்த்திபன், பாண்டிச்சேரி.

இயற்கையாகவே இந்த பூமியைச் சுற்றி அமைந்துள்ள காந்தப்புலத்தின் வீரியம் வடக்கு திசையில்தான் குவிந்திருக்கும். இந்த விசையானது மூளையை பாதிக்கும் என்பதால் வடக்கு நோக்கி தலை வைத்து உறங்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். இந்த அறிவியல் உண்மையைச் சொன்னால் நம்மவர்களுக்கு எளிதில் புரியாது என்பதால் ஆன்மிக ரீதியிலான ஒரு கதையையும் சொல்லி வைத்தார்கள். பார்வதிதேவி மஞ்சளில் ஒரு பாலகனின் உருவத்தினைச் செய்து அந்த உருவத்திற்கு உயிரளித்து வாயிலில் காவல் வைத்துவிட்டு குளிக்கச் சென்றாராம்.

அந்த நேரத்தில் பரமேஸ்வரன் அங்கு வர வாயிலில் காவலாக நின்ற சிறுவன் அவரைத் தடுத்து நிறுத்தவே கோபம் கொண்ட பரமேஸ்வரன் அந்தச் சிறுவனின் தலையைக் கொய்துவிடுகிறார். பார்வதி தேவி குளித்து முடித்து வெளியில் வந்ததும் நடந்ததை அறிந்து மனம் வருந்த, பரமேஸ்வரன் இறந்த பிள்ளைக்கு மீண்டும் உயிரளிக்க வேண்டி தனது பணியாட்களிடம் யார் வடக்கு நோக்கி தலை வைத்து படுத்திருக்கிறார்களோ அவரது தலையை வெட்டிக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டாராம்.

இறைவனின் ஆணையைப் பின்பற்றிச் சென்ற பணியாட்கள் ஒரு யானை வடக்கு நோக்கித் தலைவைத்து உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அந்த யானையின் தலையை வெட்டிக் கொண்டு வந்து இறைவனிடம் ஒப்படைக்க, அந்த யானையின் தலையினை பிள்ளைக்குப் பொருத்தி உயிர்ப்பித்து பிள்ளையாராக மாற்றினார் என்று ஒரு புராணக்கதையைச் சொல்வார்கள். வடக்கே தலை வைத்துப் படுத்தால் தலை வெட்டப்பட்டுவிடும் என்ற கருத்தினை உள்ளடக்கிய இந்தக் கதையின் மூலம் அவ்வாறு வடக்கு நோக்கி தலை வைத்து படுக்கக்கூடாது என்பதனை பெரியவர்கள் வலியுறுத்திச் சொல்வார்கள். காந்தப் புலத்தின் வீரியம் முழுவதும் வடதிசையில் வந்து குவிவதால் வடக்கு நோக்கி தலை வைத்துப் படுக்கக் கூடாது, அவ்வாறு செய்தால் மூளைக்குக் கேடு உண்டாகி உடல் ஆரோக்யம் பாதிக்கப்படும் என்பதே அந்தக் கதையின் மூலமாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படை உண்மையாகும்.

* தில்லுமுல்லு திருவாதிரை என்று சொல்வதன் பொருள் என்ன? -   குமார சுப்ரமணியன், திருவதிகை.

“தில்லுமுல்லு திருவாதிரை” என்று திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றி நம்மவர்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு. பொய், புரட்டு, சாமர்த்தியமான செயல்பாடு, காரியம் ஆகவேண்டும் என்பதற்காக ஒரு விஷயத்தைத் திரித்துப் பேசுதல் போன்ற குணங்களைக் கொண்டவர்களை தில்லுமுல்லு செய்பவர்கள் என்கிறோம். திருவாதிரை நட்சத்திரத்திற்கும் இந்த குணங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதையும் காண்போம். திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரிய கிரஹம் ராகு. பேராசை, தன்விருப்பம் நிறைவேற எதையும் செய்தல் ஆகிய குணங்கள் ராகுவிற்கு உரியவை.

திருவாதிரை நட்சத்திரம் முழுமையாக மிதுன ராசிக்குள் அடங்கிவிடும். மிதுன ராசியின் அதிபதி புதன். புத்திகூர்மை, இடம் பொருள் அறிந்து பேசும் தன்மை, நேரத்திற்குத் தகுந்தாற் போல் தன்னை மாற்றிக் கொள்ளும் குணம் ஆகியவற்றைத் தருபவர் புதன். திருவாதிரையில் பிறந்தவர்கள் ராகு + புதன் இணைந்த குணத்தினைக் கொண்டிருப்பர். மிகவும் சாமர்த்தியசாலிகள். தான் நினைத்த செயலை செய்து முடிக்க எப்படி வேண்டுமானாலும் திரித்துப் பேசி சாதித்துவிடுவார்கள். இக்காரணங்களால் தில்லுமுல்லு திருவாதிரை என்ற பழமொழி தோன்றியிருக்கலாம் என்பது ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. உண்மையில் இப்பழமொழி குறிப்பிடும் கருத்து அதுவல்ல. வடமொழியில் ஆருத்ரா என்றழைக்கப்படும் திருவாதிரை பரமேஸ்வரனின் நட்சத்திரமாகச் சொல்லப்படுகிறது. பௌர்ணமியும், திருவாதிரையும் இணையும் மார்கழி மாதம் வருகின்ற திருவாதிரை நட்சத்திர நாளில் ஆருத்ரா தரிசனம் என்ற நிகழ்வானது அனைத்து சிவாலயங்களிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அன்றைய தினத்தில் நடராஜப்பெருமான், சிவகாமசுந்தரியோடு ஆனந்த தாண்டவத்தில் பக்தர்களுக்குக் காட்சி தருவார். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த அற்புதமான காட்சியைக் காண கூடுவர். “திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தில் நடராஜரை தரிசித்தால் முக்தி, அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி”, என்று பெரியோர் சொல்லக் கேட்டிருப்போம். தில்லை என்பது சிதம்பரத்தின் மற்றொரு பெயர். தில்லை திருத்தலத்தில் மார்கழி திருவாதிரை நாளன்று நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவத்தை தரிசித்தோமேயானால் செய்த பாபங்கள் அனைத்தும் அகன்று முக்தி கிட்டும். தில்லையில் முக்தி தரும் திருவாதிரை என்ற சொல் வழக்கானது திரிந்து தில்லுமுல்லு திருவாதிரை என மாறியிருக்கிறது. இந்தப் பழமொழியின் உண்மைக் கருத்தினை உணர்ந்துகொண்டு வரும் ஆருத்ரா தரிசனத் திருநாள் (10.01.2020) அன்று சிதம்பரத்தில் நடராஜப் பெருமானின் தரிசனம் காண்போம். முக்திக்கு வழி தேடுவோம்!

திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

 • india-jappan28

  வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

 • soldier28

  தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

 • balaji28

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்