SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன்

2020-02-11@ 17:26:48

தசரத புத்திரர்கள் நால்வருக்கும் பெயர் சூட்டியவர் ‘வால் மீகி முனிவர்’. அந்த நால்வரின் பெயர்களுக்கும் காரணங்கள் உண்டு. சத்ருக்கனனே அவர்களில் கடைக்குட்டி. சத்ருக்கனன் என்றால், ‘பகையை அழிப்பவன்’ என்பது பொருள். நமக்குத் தெரிந்து, ராமர் பட்டாபிஷேகம் ஏற்கும்வரை சத்து ருக்னன் எந்தப் போரிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.பிறகு சத்ருக்கனனுக்கு அந்தப் பெயர் எப்படிப் பொருந்தும்? இந்த சந்தேகத்திற்கு இரண்டு விதமான விளக்கங்கள் உண்டு. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

தசரதருக்கு, ராமர்-பரதன்-லட்சுமணன்-சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகள் வரிசையாகப் பிறந்தாலும், ராம - லட்சுமண; பரத - சத்துருக்கனர்கள் என்றே குறிப்பிடப்படுகிறார்கள். காரணம்? காேசலைக்கு ராமர், கைகேயிக்கு பரதன், சுமித்திரைக்கு லட்சுமண-    சத்ருக்கனன்   எனப் பிறந்த நால்வரில். லட்சுமணன் எப்போதும் ராமருடனேயே இருந்தார்.அதன் காரணமாகவே ராம - லட்சுமணர் என்று குறிப்பிடுகிறோம்.அதேபோல, சத்ருக்கனன் எப்போதுமே பரதனுடன் இருந்தார். அதனாலேயே பரத - சத்ருக்கனர் என்று குறிப்பிடுகின்றோம்.

சத்ருக்கனனுக்கு ஏன் ‘பகையை அழிப்பவன்’ எனும் அந்தப் பெயர் பெற வேண்டும்? அனைவரும் ராமரிடம் தங்களை இழந்திருந்தபோது, சத்ருக்கனன் அவ்வாறு தன்னை இழந்ததாக, ராமாயணங்களில் இல்லையே எனும் சந்தேகத்தை மையமாகக் கொண்டு, மகான்கள் ‘சத்ருக்கனன்’ எனும் பெயருக்கு அற்புதமான விளக்கம் கூறுவார்கள். நித்திய சத்ருக்கள், ஐம்புலன்கள். அவை படாதபாடு படுத்துகின்றன. அப்படிப்பட்ட அந்த ஐம்புலப் பகைவர்களையும் வென்றவர், ‘சத்ருக்கனன்’. அதனாலேயே அந்தப் பெயர் பெற்றார். மேலும், அனைவரும் ராமரிடம் தங்களை இழந்திருந்தபோது சத்ருக்கனன் ராமரிடம் தன்னை இழக்காமல், உத்தமமான தூய்மையான ராமபக்தரான பரதனிடம் தன்னை இழந்தார். இறைவனை விட, இறைவனிடம் தூய்மையான பக்தி கொண்ட  அடியார்கள் உயர்ந்தவர்கள்.

இதன் காரணமாகவே, ராம பக்தியில் தலைசிறந்த அடியவரான பரதனிடம் தன்னை இழந்து, பரதனுடனேயே இருந்தார், சத்ருக்கனன். ஐம்புலன்களை, தெய்வத்திடம் கூட இழக்காமல், உத்தம பக்தரான பரதனிடம் இழந்ததாலேயே     சத்ருக்கனன்   அந்தப் பெயர் பெற்றார் என, விரிவாகக் கூறுவார்கள் மகான்கள். அனைத்திலும் பாேய் விழுந்து, அல்லல்களில் ஆழ்த்தும். ஐம்புலச் சேட்டைகளில் சிக்காதவர் சத்ருக்கனன் என்பதை விளக்கும் நிகழ்வைப் பார்த்துவிட்டு, இரண்டாவதான ‘சத்ருக்கன’ பெயர் காரணத்தைப் பார்க்கலாம்!

ராமரின் பாதுகைகளை நந்தி கிராமம் எனும் இடத்தில் வைத்து, ராமர்பெயரிலேயே பரதன் ஆட்சி செலுத்தி வந்தது, நன்றாவே தெரியும். ராவண சங்காரம் முடிந்து திரும்பிய ராமர், பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் இருந்த நேரம் ! ஆஞ்சநேயரை அழைத்த ராமர், “நீ போய் பரதனிடம் என் வருகையைப் பற்றிய தகவலைத் தெரிவி!” என்று சொல்லி ஆஞ்சநேயரை அயோத்திக்கு அனுப்பினார். அதற்குள்ளாக, அண்ணா இன்னும் வரவில்லையே! எனத் துயரத்தில் ஆழ்ந்த பரதன், தீயைமூட்டி அதில் விழுந்து இறக்கத் தீர்மானித்தார். அப்போது   பரதனின் மனம், “நான் திரும்பி வரும்வரை, அயோத்தியை நல்லவிதமாகப் பரிபாலனம் செய்து வா! என்ற அண்ணா, குறிப்பிட்ட காலம் ஆகியும் இன்னும் வரவில்லையே! அவர் வரும்போது ராஜ்ஜியத்தை அவரிடம் ஒப்படைக்காமல், அதற்குமுன் நான் இறப்பது முறையா?” எனச் சிந்தித்தது.

சிந்தித்த மனம் ஒரு முடிவும் கண்டது; உடனே, சத்ருக்கனனை அழைத்த பரதன், ‘‘தம்பி! அண்ணா சொன்ன  நாளில் வரவில்லை. சுடர் விட்டு எரியும் இத்தீயில் விழுந்து நான் இறப்பேன். நீ அரசனாக இருந்து, அண்ணா வந்தவுடன் அவரிடம் அரசை ஒப்படைத்து விடு!’’ என வேண்டினான். அதைக் கேட்டதும் சத்ருக்கனன் திடுக்கிட்டார். அடுத்தவரால் பலவந்தமாக ஊட்டப்பட்ட விஷத்தை உட்கொண்டதைப்  போலத் துடித்தார்; நடுங்கினார்; காதுகளைப் பொத்திக் கொண்டார். தரையில் விழுந்து புரண்டார், கதறினார்; எழுந்து நின்று, ‘’நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்?’’ என அலறினார். வேறு எந்தவொரு  நிலையிலும்     சத்ருக்கனன் இவ்வாறு துடித்ததாக வரலாறே கிடையாது. அது மட்டுமா? ‘‘ராஜ்ஜியத்தை நீ ஏற்றுக்கொள்!’’ என்ற பரதனை நோக்கிச் சில வார்த்தைகளும் சொன்னார். இதுவரை அதிகமாகப் பேசாத மிகவும் அசந்தர்ப்பமான நேரங்களில் கூட ஓரிரு வார்த்தைகளே பேசும் சத்ருக்கனன், இப்போது பரதனிடம் விரிவாகவே பேசத் தொடங்கினார்.
 
கானாள நிலமகளைக் கைவிட்டுப்
பானோனைக் காத்துப் பின்பு
போனானும் ஒரு தம்பி போனவர்கள்
வரும் அவதி போயிற்று என்னா
 ஆனாது உயிர்விட என்று அமைவானும்
ஒரு தம்பி அயலே நாணாது
யானோ இவ்வரசு ஆள்வேன் என்னே
  இவ்வரசாட்சி இனிதே அம்மா!
(கம்ப இராமாயணம்)

அற்புதமான வரிகள்!  சத்ருக்கனன் மனதில் இருந்தவை, அப்படியே வார்த்தைகளாக வெளிப்பட்டிருக்கின்றன. அனுப வித்து உணரலாம் வாருங்கள்! இப்பாடலில் சத்ருக்கனன் ராம - லட்சுமண - பரதர் எனும் மூவர் செயல்களையும் சொல்லி,தன் நிலையையும் விவரிக்கிறார். ராமருக்கு ராஜ்ய செல்வம் கிடைத்தும் அதைத் தம்பிக்குத் தந்து விட்டு, காட்டிற்குப் போய் விட்டார்; அந்த ராமருக்குத் தொண்டு செய்வதற்காக, உதவியாளராக லட்சுமணனும் கூடவே போய் விட்டார்; காட்டிற்குப்பானே அவர்கள் வரவில்லையே எனும் துயரத்தால், பரதனும் இறக்கத் தீர்மானித்து விட்டார். ஆனால், இறக்கத் தீர்மானித்த அந்த நிலையிலும் பரதன், கடுகளவுகூட அரசப் பதவியின் மீது ஆசை கொள்ளவில்லை. அதேசமயம், ராமர் தந்த அரசை அவரிடமே ஒப்படைக்க வேண்டுமல்லவா? அதற்காக பரதன், ‘‘தம்பி! சத்ருக்கனா! நீ அரசனாக இருந்து பாதுகாத்து வா! ராமர் வந்ததும் அவரிடம் ஒப்படைத்து விடு!” என்றார்.

இதைக் கேட்டுத்தான் சத்ருக்கனன் துடித்தார்; ‘‘அரசு வேண்டாமென்று நீங்கள் மூவரும் ஒதுக்கி விட்டீர்கள்; ஒதுங்கியும் விட்டீர்கள். மூவரும் வேண்டாமென்று சானென்ன இந்த அரசை ஆள, நான்தான் கிடைத்தேனா?” என்று துடித்தார். சத்ருக்கனனுக்கு அணுவளவுகூட அரச பதவியில் ஆசை கிடையாது என்பதை விவரிக்கும் நிகழ்வு இது. உண்மையான ராம பக்தர்கள் எதன் மீதும் ஆசைப்பட மாட்டார்கள் என்பதை விளக்கும் நிகழ்வு இது. அதாவது, சத்ருக்கனன் தன் பெயருக் கேற்ப, ஐம்புலப் பகைவர்களை ஆசைகளை வென்றவர் என்பதை விளக்கும் நிகழ்வு இது. சத்ருக்கனன் ‘‘பகைவர்களை அழிப்பவன்’ எனும்பெயருக்கேற்ப, சத்ருக்கனன் பெரும் பகைவர்களுடன் போரிட்டு அவர் களை அழித்த விவரம், அடுத்து வருகிறது. இந்நிகழ்வு, ஸ்ரீசீதா ராம பட்டாபிஷேகம் நடந்த பிறகு நடந்தது. அதிக வெப்பமும் இல்லாமல், அதிக குளிர்ச்சியும் இல்லாத வசந்தகாலம்! ராமர் சபா மண்டபத்தில் அமர்ந்திருந்தார். அப்போது  சியவன முனிவர் தலைமையில் ஏராளமான முனிவர்கள் ராமரைப் பார்க்க வந்தார்கள். அவர்களை முறைப்படி வரவேற்று ஆசனங்களில் அமர வைத்தார். வந்த முனிவர்கள் பேசத் தாடெங்கினார்கள்; ‘‘ராமா! லவணாசுரன் என்பவனின் காடுமை தாங்கவில்லை. அவனிடமிருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்” எனத் தொடங்கி விவரித்தார்கள்.

மது என்ற அரக்கனுக்கும் கும்பீனசி என்பவளுக்கும் பிறந்தவன் லவணாசுரன்; சிறுவயது முதல் கொடூரமான  குணங்கள் படைத்தவனாக இருந்தான்; ‘நான் பிறந்ததே, அடுத்தவர்களுக்கு தீமை செய்வதற்காகத்தான்’ என்ற கொள்கை உடையவன்; துஷ்டன் என்ற பெயர் எடுத்தவன். மகனின் அந்தநிலை கண்டு,தந்தையான மது,மிகவும் வருந்தினார்; என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைசியில் தன் மகனிடம் ஒரு சூலாயுதத்தைக் காெடுத்த மது, “இந்த சூலாயுதம், நான் கடுமையாகத் தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து பெற்றது.

இது உன்கையில் இருக்கும் வரை, உன்னை யாராலும்  கொல்ல முடியாது” என்று கூறினார். அதை லவணாசுரன் வாங்கிய அதே விநாடியில், அவன் தந்தை நாட்டை விட்டு வெளியேறினார். கேட்க வேண்டுமா? லவணாசுரனின் அட்டூழியம் எல்லை மீறிப் போனது; சிவபெருமான் தந்த சூலாயுதம் என் கையில் இருக்கிறது’’ என்ற ஆணவம் வேறு; உலகங்களில் உள்ள நல்லவர்களுக்குத் தீங்குசெய்து அழித்து வந்தது மட்டுமல்ல; விலங்குக ளையும் விட்டு வைக்க வில்லை லவணாசுரன்.அவனால் துயரப்பட்ட முனிவர்கள் எல்லோரும், பற்பல அரசர்களிடம் போய் முறையிட்டார்கள்; பலன் ஏதுமில்லை. அந்த நேரத்தில்தான் ராவண சங்காரம் முடிந்து, ராமர் அயோத்தி திரும்பி அரசாட்சி செய்யத் தொடங்கினார். ராமரிடம் முறையிட்ட முனிவர்கள் இதைச் சொன்னார்கள்.

‘‘ராமா! மற்றவர் யாராலும் செய்ய முடியாத ராவண சங்காரத்தைச் செய்து முடித்தாய் நீ! அதை அறிந்தே வந்தோம். யாராலும் வெல்ல முடியாத லவணாசுரனிடம் இருந்து எங்களைக் காப்பாற்று!’’ என வேண்டினார்கள். வேண்டிய முனிவர்களைக் கைகூப்பி வணங்கிய ராமர், ‘‘அந்தத் தீயவனை அழிப்பேன் நான். பயப்படாதீர்கள்!’’ என்று சொல்லி தன் சகோரர்கள் பக்கம் திரும்பினார்; ‘‘சகோதரர்களே! இந்த லவணாசுரனை சங்காரம் செய்யப்போவது யார்? ராவணனை நான் சங்காரம் செய்தேன். லட்சுமணன் இந்திரஜித்தை சங்காரம் செய்தான். பரதனாவது சத்ருக்கனனாவது போய் லவணாசுரனை சங்காரம் செய்ய வேண்டும்’’ என்றார்.

‘‘லவணாசுரனை அழிக்கும் ெபாப்பை நான் ஏற்கிறேன்” என்றார் பரதன். அதைக் கேட்டதும் அதுவரை அமைதியாக இருந்த சத்ருக்கனன் பளிச்சென்று எழுந்து ராமரை வணங்கிப் பேசத் தொடங்கினார்; “சுவாமி! இவர் (பரதன்) இதுவரை பலவிதமான துயரங்களை அனுபவித்து இருக்கிறார்; முனிவர்களைப் போலத் தவக்கோலம் கொண்டு தரையில் படுத்துத் தாங்க முடியாத துயரங்களையெல்லாம் அனுபவித்தவர். ஆகையால், இவர் லவணாசுர வதம் செய்யப் போக வேண்டாம். நான் செல்கிறேன்; அனுமதி அளியுங்கள்!” என வேண்டினார் சத்ருக்கனன். ராமர் முகம் மலர்ந்தார்; “பலே! பலே! சத்துருக்னா! உன்னை இப்போதே அந்த அரக்கனின் ராஜ்யத்திற்கு அரசனாகப் பட்டாபி ஷேகம்செய்து வைக்கிறேன்.வித்தைகள் அனைத்தையும் அறிந்தவன் நீ!லவணாசுரனைக் கொன்று அவன் ராஜ்ஜியத்தை நல்ல விதமாக ஆண்டு வா!” என்று கூறி ஆசி அளித்தார். வசிஷ்டரின் தலைமையில் சத்ருக்கனனுக்கு, ராஜ்யாபிஷேகம் நடை பெற்றது.

அது முடிந்ததும் சத்ருக்கனனைத் தன்  மடியில் அமர வைத்துக் கொண்ட ராமர், சத்ருக்கனனுக்கு ஓர் அம்பைக் கொடுத்தார். அறிவுரை - அறவுரை சொல்லத் தொடங்கினார்; ‘‘குழந்தாய்! சத்துருக்கனா! இந்த அம்பை வைத்துக் காெள்! இது மிகவும் சக்தி வாய்ந்தது. இதனால் லவணாசுரனைக் கொல்! சக்தி வாய்ந்த சூலாயுதத்தை அரண்மனையில் வைத்து விட்டு, லவணாசுரன் உணவிற்காக வெளியே வருவான். ‘‘ஆயுதமில்லாது இருக்கும் அந்த வேளையில் லவணாசுரனைக் கொல்ல வேண்டும். லவணாசுரன் உணவிற்காக வெளியேறும் அவ்வேளையில், நீ அவன் நகரத்தின் வாசலில் காத்துக் கொண்டிரு! அவன் திரும்பி வரும்பாேது,அவனை நகரத்திற்குள் பிரவேசிக்க விடாமல் நீ அவனை யுத்தத்திற்கு அழைத்துக் கொல்! வேறுவழியில்லை” என்று     சத்ருக்கனன் செயல்பட வேண்டிய வழி வகைகளை விரிவாகச் சொன்னார், ராமர்.

அதன்படியே செயல்பட்ட சத்ருக்கனன், வலணாசுரன் இருப்பிடத்திற்குச் சென்றார்; லவணாசுரன் கையில் சூலாயுதம் இல்லாமல் உணவிற்காக வெளியேறிய வேளையில், நகரின் கோட்டை வாசலில்போய் தயாராக நின்றார். சத்ருக்கனன்  .
உணவு தேடப் பாேயிருந்த லவணாசுரன் ஏராளமான விலங்குகளைக் கொன்று சுமந்துகொண்டு வந்தான்; வந்தவன் ஆயு தங்களுடன் நின்றிருந்த சத்ருக்கனனைப் பார்த்தான்.   ‘‘அடே! முட்டாளே! உன்கையில் இருக்கும் ஆயுதங்களால் உனக்கு என்ன பிரயோஜனம்? உன்னைப் போன்ற வீரர்களை ஆயிரக்கணக்காய்க் கொன்று  தின்றிருக்கிறேன். நீயாகவே மரணத்தைத் தேடி வந்திருக்கிறாயே! வெளியில்போய், எனக்காக உணவைக்கொண்டு வந்திருக்கிறேன் நான். ஆனால், என் கோட்டை வாசலிலேயே எனக்காக, அருமையான நர மாமிசம் என்னைத்தேடி வந்து, என் வாயில் வலுவில் விழுகிறது. என்ன வியப்பு!” என்று பெருங்குரலெடுத்துச் சிரித்தான் லவணாசுரன்.

அதைக்கேட்ட  சத்ருக்கனன் கோபத்தால் கொதித்தார்; “முட்டாள் அரக்கா! உன்னைத்தேடி யமனே வந்ததைப்போல வந்திருக்கிறேன், நான். அரக்கர்களை அலற வைத்த தசரதரின் பிள்ளை; அனைத்தும் அறிந்த ராமரின் தம்பி; சத்ருக்கனன்  (பகைவர்களை நாசம் செய்பவன்) என்பது எனது பெயர். மனிதனை முக்தி அடைய விடாமல் தடுக்கும் அறியாமையையும் அதன் செயல்களான காம குரோதங்களையும் வென்ற எனக்கு, உன்னைப் போன்ற வெளிப்படையான பகைவர்களை வெல்வது ஒரு காரியமா என்ன? என்னைத் தாண்டி நீ உயிருடன் போக முடியாது” என்றார்.

லவணாசுரன் சிரித்தான்; வெகு நாட்களாக இதற்காகவே காத்துக் கொண்டிருந்தேன். என் உறவினனான ராவண னை, ராமன் கொன்றதாகக் கேள்விப்பட்டேன். ஏதோ தெரியாமல் செய்து விட்டான் என்று அந்த அவமானத்தை இதுவரை பொறுத் திருந்தேன். என்னை எதிர்த்தவனும் கிடையாது; எதிர்க்கக் கூடியவனும் கிடையாது. உன்னைப் போன்றவர்களை எல்லாம் நான் கணக்கில் எடுத்துக் கொள்வதே கிடையாது. இருந்தாலும் போர் செய்ய வேண்டுமென்று விரும்புகிறாய் நீ! சற்று பாெறு! என் ஆயுதத்தை எடுத்து வருகிறேன்” என்றான் லவணாசுரன்.

சத்ருக்கனன் மறுத்தார்; ‘‘இங்கிருந்து உன்னை உயிருடன் பாேக விடுவேன் என்று நினைத்தாயா? வீண் பெருமை பேசும் உன் அரக்க மாயைகளை நான் அறிவேன். பகைவனின் வார்த்தைகளில் மயங்கி, அவனைத் தப்ப விடும் மடையன் அழிவான். அனைத்து ஜீவ ராசிகளையும் கொன்று தின்னும் உன்னைக்  கொன்றால், அது உலகிற்குச் செய்யும் பெரும் உபகாரம்” என்றார், சத்ருக்கனன். கோபம் தாங்கவில்லை லவணாசுரனுக்கு; ‘‘இதுவரை யாருமே நம்மிடம் இவ்வளவுநேரம் பேசி, உயிரோடு போனதே கிடையாது. ஊஹும்! இவனை விட்டு வைக்கக் கூடாது” என்று பெரும் மரங்களை அப்படியே பெயர்த்து எடுத்து சத்ருக்கனன் மேல் வீசிக் கடுமையாகப் போரிட்டான்.

அரக்கன் வீசிய அனைத்தையும் கீழே தள்ளிய சத்ருக்கனன், அவனை நகரின் உள்ளே பாேக விடாமல் தடுத்தார்; ராமரால் கொடுக்கப்பட்ட உத்தமமான அம்பை எடுத்தார்; மிகவும் சக்தி வாய்ந்த அந்த அம்பு வெளிப்பட்டதும் பெரும் விபரீதங்கள் உண்டாயின. தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் நடுங்கினார்கள். அவர்களை பிரம்மதேவர் சமாதானப் படுத்தினார். ராமர் தந்த அம்பைக் கையில் எடுத்த சத்ருக்கனன், ராமரைத் தியானித்து அந்த அம்பை லவணாசுரன் மீது ஏவினார். அது லவணாசுரனின் மார்பைப் பிளந்து, மறுபடியும் சத்ருக்கனனிடமே வந்து சேர்ந்தது.

லவணாசுரன் மாண்டு கீழே விழுந்தான். அதே விநாடியில் அரண்மனையில் இருந்த, சிவபெருமான் தந்த சூலாயுதம், சிவபெருமானிடமே  போய்ச் சேர்ந்தது. முனிவர்களும் தேவர்களும் வாயாற மனமாற சத்ருக்கனனைப் புகழ்ந்தார்கள். பிறகென்ன? லவணன் ஆண்ட மதுபுரியை ஏற்கனவே ராமரால் சத்ருக்கனனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட மதுபுரியை, சத்ருக்கனன் நல்ல முறையில் ஆட்சி செய்தார். உட்பகைவர்களான பாெறி புலன்களை வென்று தன் வசப்படுத்தியதோடு, வெளிப் பகைவர்களையும் வென்று, அனைவருக்கும் நன்மை செய்த சத்ருக்கனன், உயர்ந்த கதாபாத்திரம் என்பதில் ஐயமேதுமில்லை.

தொகுப்பு: பி.என் பரசுராமன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

 • india-jappan28

  வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

 • soldier28

  தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

 • balaji28

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்