SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

2020-02-11@ 17:17:20

*செல்வர் அப்பம் -ஸ்ரீரங்கம், திருச்சி

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக மார்கழி பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள். இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்ஸவம் என்று அழைக்கப்படும். பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைப்பர். வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த பத்து நாட்கள் உற்சவம் ராப்பத்து உற்சவம் என அழைக்கப்படுகிறது. அப்போது அரங்கனுக்கு நாச்சியார் திருக்கோல அலங்காரம் செய்யப்படுகிறது. பகல் பத்துக்கு முதல் நாள் இரவு திருமங்கையாழ்வாரால் அருளப்பட்ட திருநெடுந்தாண்டகம், அரங்கன் முன் பாடப்படுகிறது. இந்த உற்சவ நாட்களில் திருமால் அர்ஜுன மண்டபத்திற்கு எழுந்தருளி அரையர் சேவை, திருப்பாவை கோஷ்டி சேவையை ஏற்பார்.

பெருமாளை சுமக்கும் பாக்கியம் பெற்ற ஸ்ரீபாதம் தாங்கிகள் ஒரே மாதிரியான தலைப்பாகையைக் கட்டியிருப்பது கண்களைக் கவரும். சந்நதி திரும்பும்போது ஒய்யாளி சேவையில் சர்ப்பகதி எனும் பெருமாளைக் கீழே தாழ்த்தி அதன் பின் மேலே உயர்த்தி பாம்பு போல் செய்வது கண்களுக்கு விருந்தாகும். தாளம், நடிப்பு, பாட்டு மூன்றும் இணைந்தது அரையர் சேவை. பகல் பத்து உற்சவத்தில் தினந்தோறும் இருமுறை அரையர் சேவை நடக்கும். நாலாயிர திவ்யபிரபந்தத்தை ராக தாளத்தோடு இசைக்கும் அரையர் சேவை கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்து. அரங்கன் சொர்க்க வாசல் கதவுக்கு நேர் எதிரே வந்து நின்றதும், பட்டர், ‘திற’ என குரல் கொடுக்க, பரமபதவாசலில் பக்தர்களோடு அந்த பக்தவத்சலனும் நுழைவான். அப்போது ‘ரங்கா! ரங்கா!’ என்ற கோஷம் விண்ணை முட்டும். ஏகாதசியன்றும் அதையடுத்த தினங்களிலும் முத்தினாலான முத்தங்கியை தரித்திருக்கும் மூலவரை கருவறையில் தரிசிக்கலாம். ஆடி ஏகாதசி பண்டரிபுரத்திலும் கைசிக ஏகாதசி திருக்குறுங்குடியிலும் விருச்சிக ஏகாதசி குருவாயூரிலும் வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்திலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

 மார்கழி மாதம் இருபது நாட்கள் திருவிழா விசேஷமாக நடைபெறுகிறது. பகல் பத்து என பத்து நாட்களும் ராப்பத்து என பத்து நாட்களும் திருவிழா நடைபெறுகிறது. இந்த முதல் பத்து தினங்களில் மூலவர் சந்நதியிலிருந்து நம்பெருமாள் கீழ் நிலைக்கு இறங்கி வந்து நமக்காக யோகத்தைச் செய்து காண்பிக்கிறார். சமாதி நிலையைக் கலைத்து, இடை நிலையைக் கலைத்து, இடகலை, பிங்கலை வழியாக சந்திர கலை, சூர்யகலை, மும்மலங்கள் போன்றவற்றைக் கடந்து ஆறு ஆதாரங்களையும் கடந்து அர்ஜுன மண்டபத்திற்குச் செல்கிறார். இங்கே யோகத்தை அப்பத்து நாட்களும் செய்த பின் பத்தாவது நாள் மோகினித் திருக்கோலம் கொள்கிறார். இதன் தத்துவம் குண்டலினி சக்தி புறப்பட்டு விட்டது என்பதை நமக்கு உணர்த்துவதாகும்.

பத்தாம் நாள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இது பிரம்மந்திரம் திறப்பதைக் குறிப்பதாகும். பிரம்மநிலை என்பது ஆயிரங்கால் மண்டபம். அந்த இடமே ஜெகஜ்ஜோதியாய் திகழும். யோகாக்னி அதிகமாவதால் நல்ல ஆகாரம் வேண்டும். அதனால பெருமாளுக்கு 8 மணிக்கு பொங்கலும் மதியம் நெய்யிலே செய்யப்பட்ட சம்பார தோசையும் நிவேதிக்கப்படுகிறது. சராசரி உடல் ஆரோக்கியம் கொண்ட ஒருவர் ஒரே வேளையில் விதவிதமான உணவு வகைகளை உண்ணமுடியாது. ஆனால், யோகிகளால் முடியும். எனவேதான் ரங்கநாதருக்கு செல்வரப்பம், அரிசிவடை, தோசை, சர்க்கரைப்பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன. எட்டாம் நாள் வேடுவர்பறி திருவிழா. இது 96 தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்றதைக் குறிக்கும். அன்று நம்பெருமாள் தங்கக் குதிரையில் உலா வருவார்.

அது வாசியின் ஓட்டத்தைக் குறிக்கும். குதிரை என்பது மனது. குதிரைபோல மனதும் கட்டுக்கடங்காது முன்னும் பின்னும் ஓடும். அதை நினைவுறுத்த குதிரை வாகனம் முன்னும் பின்னும் வேகமாக ஆடும்போது அதில் ஆரோகணித்திருக்கும் அரங்கனைக் காணக் கண் கோடி வேண்டும். ராப்பத்து உற்சவத்தில் பரமபதவாசலைக்கடந்து திருமாமணி மண்டபத்தைச் சேர்வது ஜீவாத்மா சரீரத்தை விட்டு வைகுண்டத்தை அடைவதன் சாட்சியாகக் கருதப்படுகிறது. யோகத்தில் உள்ள சர்ப்பகதி, வியாக்ரகதி, கஜகதி, விருஷபகதி, சிம்மகதி எனும் ஐந்து கதிகளிலும் பெருமாளின் ஒய்யாளி சேவை நடைபெறும்.

பெருமாளுக்கான நம்முடைய தினசரி வழிபாட்டில், நம்மை அறியாமல் ஏற்படும் தோஷங்கள் நீங்க மாதந்தோறும் சில விழாக்கள் ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது. சித்திரை மாதம் மலர் தோஷம் நீங்க பூச்சாத்தி விழா, ஆனி மாதத்தில் தீர்த்த தோஷம் நீங்க திருமஞ்சன விழா, ஆடி மாதத்தில் அன்ன தோஷம் நீங்க பெரிய பாவாடைத் திருவிழா, ஆவணி மாதம் பூணூல் தோஷம் நீங்க பவித்ரோற்சவ விழா, ஐப்பசி மாதத்தில் ஊஞ்சல் தோஷம் நீங்க ஊஞ்சல் திருவிழா, கார்த்திகை மாதத்தில் தாம்பூல தோஷம், ஆடை தோஷம் நீங்க தாம்பூல கைசிக ஏகாதசி விழா மற்றும் அக்கினி தோஷம் நீங்க கார்த்திகை தீப உற்சவம், வேத பாராயண, திவ்யப்பிரபந்த தோஷம் நீங்க திருவத்யயன உற்சவம், பக்ஷ்யதோஷம் நீங்க பெரிய திருப்பாவாடை உற்சவம், பங்குனியில் உலாத்தோஷம் நீங்க பிரம்மோற்சவம் போன்றவை நடைபெறுகின்றன.

செல்வர் அப்பம். இது ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதசி, பகல் பத்து, இராப் பத்து இருபது நாட்களில் மட்டும் கோயிலில் கிடைக்கும் சிறப்பு பிரசாதம்.
 
தேவையான பொருட்கள்:

பச்சரிசி  1/2 கிலோ
நெய்  1/2 கிலோ
உப்பு  தேவையான அளவு

செய்முறை:

அரிசியை முதல்நாளே ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நீரை வடித்துக் கொள்கிறார்கள். பிறகு அதை  உரலில் போட்டு இடித்து மாவாக்கி சலித்து வைத்துக் கொள்கிறார்கள். சலித்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஈரப் பதத்துடன் கையால் நன்கு அழுத்தி அடைத்து வைத்துவிடுகிறார்கள் சலித்ததில் கடைசியாக மிச்சம் இருக்கும் மெல்லிய ரவை போன்ற கப்பியை உப்புப் போட்டு தண்ணீர் விட்டு கஞ்சியாகக் காய்ச்சி வைத்துக் கொள்கிறார்கள். இவைகளை முதல்நாளே செய்துவைத்துக் கொள்கிறார்கள். அதனால்தான்மாவு புளிப்பாக இருக்கும். அடுத்த நாள், முதல்நாள் தயார் செய்துவைத்துள்ள கஞ்சியை அடைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கெட்டியாகப் பிசைந்து கொள்கிறார்கள். தேவைப்பட்டால் சிறிது உப்பும், தண்ணீரும் சேர்த்துக் கொள்கிறார்கள். பிசைந்த மாவை ஒரு வெள்ளைத் துணியில் தட்டை மாதிரி(தட்டையை விட சற்று தடிமனாகத்) தட்டிக்கொள்கிறார்கள். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, அப்பங்களைப் பொன்னிறமாக, நன்றாக ஓசை அடங்கும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுத்து, நெய்யை வடித்தபின்  பெருமாளுக்கு நிவேதிக்கிறார்கள்.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்