SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தைப்பாவாய்! தமிழர்க்கு வளம் ஆவாய்!

2020-02-11@ 11:56:33

தமிழர் மரபின் அடையாளத்தினைத்
தரணிக்கு உணர்த்தும் தைப்பொங்கல் நிகழும் தைமாதத் திங்களை,
 
எந்தமிழர் கோட்டத்து இருப்பார் உயிர் வளர
எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள் மலர
எந்தமிழர் கைவேல் இடுவெங்களம் சிவக்க
எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ் செழிக்க
முந்து தமிழ்ப்பாவாய் முன்னேற்றம் தான் தருவாய்
தந்தருள்வாய் பாவாய் தைவடிவத் திருப்பாவாய்!
வந்தருள்வாய் கண்ணால் வாழ்த்துரைப்பாய்!
(தைப்பாவாய் )
 
எனக் கவிபாடி வரவேற்றுக் களிகொள்வார் கவியரசு கண்ணதாசன்.

தமிழ் மாதங்களுள் தை மாதம் சிறப்புடையதாகும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடதிசையில் பயணம் செய்யும். இத்தகைய காலம் உத்தராயணம் என்று குறிக்கப்பெறும். ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தென்திசையில் பயணம் செய்யும். இது தட்சிணாயணம் எனப்படும். தைத் திங்கள் முதல்நாளில் சூரியன் தென்திசையில் இருந்து வடதிசைக்குத் திரும்பிப் பயணம் செய்வதாக ஐதீகம்.சோதிட கூறுகளின் படியும் சூரியன் இம்மாதத்தில் கும்ப லக்னத்தில் இருந்து மகர லக்கத்திற்கு வருகிறார். எனவே இப்பொங்கல் ‘மகர சங்கராந்தி’ என்று அழைக்கப்படுகிறது. தைத் திங்கள் முதல்நாள் தமிழர்களால் ’பொங்கல் திருநாள்’ என்று கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கல் விழா என்பது தமிழர்கள் நெல்லின் அறுவடை கண்ட மகிழ்வில் தனக்கு உதவி செய்த அனைத்திற்கும் நன்றி பாராட்டும் நயமுடைய விழாவாகும்.

தமிழ்நாட்டின் வானியல் அமைப்பின்படி புரட்டாசி மாதம் தொடங்கி கார்த்திகை மாதம் வரைக்கும் வான்முகில் மழை பொழியும் காலம் ஆகும். இக்காலத்தில் நீர்நிலைகள் அனைத்தும் ஏற்றம் பெறும். இது வேளாண் தொழிலுக்கு ஏற்றதாய் அமையும். இக்காலத்துப் பயிரிடப்படும் பயிரானது தை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும். எனவே புது நெல்லுடன் புத்தரிசி கொண்டு புதுப் பானையில் பொங்கல் வைக்க இது ஏதுவாகிய காலம் ஆகும். எனவே பொங்கல் பண்டிகை இக்காலத்து வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது, கொண்டாடப்பட்டு வருகின்றது. இத் தைப்பொங்கல் சங்க காலம் தொடங்கியே கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதனைச் சங்க இலக்கியங்கள் எடுத்தியம்பும். சங்ககாலச் சமூகத்தில் தைமாதம் நீராடலுக்கு உரிய காலமாகவும் நோன்பு நோற்பதற்கு உரிய காலமாகவும் கருதப்பட்டது. இந்நீராடல் ‘தைநீராடல்’ என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றது.
 
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருங் திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
.புரிநூல் அந்தணர் பொலங்கலமேற்ப
வெம்பாதாக வியனில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
( பரிபாடல் )
 என்ற பரிபாடலின் அடிகள் இதனை எடுத்துரைக்கும்.

நற்றிணை என்னும் இலக்கியம் தைமாதத்தில் பெண்கள் நீர்நிலைக்குச் சென்று நீராடி வரும் காட்சியானது தைமாத மழையில் நனைந்த குரங்குகள் உணவுண்ணாது இருந்து நோற்பதனை ஒத்ததாய் இருந்தது என்று உவமை கூறுகின்றது. இதனை,
வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தையூண் இருக்கையில் தோன்றும் நாடன்
( நற்றிணை )
 
என்ற பாடல் அடிகள் விளக்கி நிற்கும். சரசோதிமாலை என்னும் இலக்கியம் வேளாண்மை வளம் பெருக வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் தை மாதத்தில் வரும் தைப்பூசத் திருநாளைக் கொண்டாடினர் என்று குறிப்பிடுகிறது. இதனை,
 
திருஉலவு தைத்திங்கள் பூசநாள்
மருவு பூரணையின் மகிழ்ந்து யாவரும்
பொருவிலாத புதியது அருந்திடிற்
பெருகு தானியம் யாவும் பெறுவரே
( சரசோதி மாலை - ஏர்மங்கலம் )
 
என்பதனால் அறியலாம். எனவே இத் தைத்திங்களில் நோன்பு இருந்தால் நாட்டில் நன்கு மழைபெய்து செந்நெல் வளர்ந்து வளம் பெருகும் என்று கருதப்பட்டது. இதனை, ஆண்டாள் தனது திருப்பாவையில்,
 
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஒங்கு பெருஞ் செந்நெலூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும்
பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்
( திருப்பாவை)
 
எனக் குறிப்பிடுவாள். மேற்கண்ட பாடலில் ஓங்கி உலகளந்தவனாகிய கண்ணனை பாவை நோன்பிருந்து வழிபட்டால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து, ஓங்கு பெருசெந்நெல் உயர்ந்து வளரும் என்பன போன்ற குறிப்புகள் காணப்படுவதனை அறிக. இவ்வாறு விளைந்த நெல்லானது அறுக்கப்படும் காலம் அறுவடை விழாவாகக் கொண்டாடப்பட்டது, இதனை புறநானூற்றின் பாடலொன்று விளக்கியுரைக்கும்.
 
அலங்குசெந்நெல் கதிர் வேய்ந்த பாய்கரும்பின்
கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல
( புறநானூறு )
 
என்ற பாடலில் குறுங்கோழியூர் கிழார் அறுவடைநாள் விழாவினை ‘சாறுகண்ட களம்’ என்று குறிப்பிடுகிறார்.சிலப்பதிகாரக்காலத்தில் இத்திருநாள் இந்திரவிழா என்னும் பெயரில் கொண்டாடப்பட்டது.இந்நாளில் வீதிகள் அலங்காரம் செய்யப்பெற்று, பிறவாயாக்கை பெரியோனாகிய சிவபெருமான், ஆறுமுகக் கடவுளாகிய முருகப்பெருமான் முதலிய பல கடவுளர்க்கு வழிபாடு நிகழ்த்தப்பெற்றதனை,
 
பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்,
அறு முகச் செவ்வேள் அணி திகழ் கோயிலும்,
வால் வளை மேனி வாலியோன் கோயிலும்,
நீல மேனி நெடியோன் கோயிலும், ----
வேறு வேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால்-
( சிலப்பதிகாரம் )
 
என வரும் சிலப்பதிகார அடிகள் விளக்கி நிற்கும்.

மணிமேகலை காலத்தும் இப்பொங்கல் விழா இந்திர விழா என்னும் பெயரிலே அழைக்கப்பெற்றது. இவ்விழா கொண்டாடப்படும் காலங்களில் செய்ய வேண்டிய செயல்களை எல்லாம் சோழ மன்னன் தெரிவித்ததாய் மணிமேகலை குறிப்பிடுகின்றது. காதலர்கள் கூடிக்களிக்கும் பந்தல்களில் மணலை நிரப்புங்கள். ஊர்அம்பலங்களை மரங்களினால் மறைத்து நிழல் பரப்புங்கள். விழா நடக்கும் அரங்கங்களில் நல்ல உரையை நிகழ்த்துங்கள். சமயத் தத்துவங்களை காதலருக்கு உரையுங்கள். சமயக் கருத்துகள் குறித்து வாதம் செய்து நிறுவுங்கள்.

 பகைவர்களைக் காணின் அவர்களுடன் பூசல் கொள்ளாது அவர்கள் இருக்கும் இடம் விட்டு அகலுங்கள். நீர்த்துறைகளில் கூடும் மக்கள் நீராடுவதற்கேற்ற பாதுகாவலைச் செய்யுங்கள் என்றெல்லாம் ஆணையிடுகிறான். இத்தகைய சிறப்புடைய விழாவானது சோழன் நெடுமுடிக்கிள்ளி காலத்தில் கொண்டாடாது விடப்பட்டதாக மணிமேகலை மூலமாக அறியமுடிகிறது. தன் குழந்தையைத் தொலைத்த அந்த அரசன் அதன் வேதனையில் மூழ்கி இருந்தமையால் இவ்விழாவினைக் கொண்டாடாது விடுத்தான் என்பதனையும் அதனாலே புகார் நகரம் அழிந்தது என்பதையும் அறவண அடிகள் மணிமேகலையிடம் எடுத்துரைக்கின்றார். ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகிய சீவக சிந்தாமணி என்னும் காப்பியம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட மரபினை எடுத்தியம்புகின்றது. இக்காப்பியம் பொங்கல் பண்டிகை பற்றிக் குறிப்பிடும் பொழுது,
 
மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்
( சீவகசிந்தாமணி )
 
எனக் குறிப்பிடுகின்றது. பொங்கல் பண்டிகையின் முதல்நாள் ‘போகி’ என்னும் பெயரால் கொண்டாடப்படுகின்றது. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வகையினானே என்பது போல் பழையனவற்றை நீக்கிப் புதியனவற்றை வரவேற்கும் மரபின் தொடக்கமாக இப்போகிப்பண்டிகை அமைகின்றது. இந்நாளில் வீட்டில் இருக்கும் பயன்பாடற்ற பழைய பொருட்களை வீட்டினுள் இருந்து நீக்குகின்றனர். போகி என்னும் சொல் வருண பகவானைக் குறிப்பதாயும் அமையும். வருண பகவான் ஆன்மிக மரபில் மழையின் கடவுளாகப் போற்றப்பட்டான். பயிர் நன்கு செழித்து வளர்தற்கு மழைதந்த வருணனைப் போற்றி வழிபடும் நாளாகவே இந்நாள் அமைந்திருந்தது. தைத்திங்கள் முதல்நாள் வேளாண்மையின் சிறப்பினை எடுத்துரைப்பதாய் அமைவதாகும். உழுதுண்டு வாழும் மக்களைத் தொழுது பிறர் பின் செல்வர் என எடுத்துரைக்கும் வான்புகழ் வள்ளுவம்.
இதனைக் கம்பரும் தனது ஏரெழுபது என்னும் நூலில்/
 
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே ( ஏரெழுபது )
 
எனச் சிறப்பித்து உரைப்பார். உலகில் அலகிலா மறை விளங்க, அந்தணர்களின் ஆகுதி விளங்க, பலகலைகள் செழித்து விளங்க, பாவலர்களின் பாடல்கள் விளங்க, உலகெலாம் ஒளி விளங்க, உற்ற துணையாய் அமைவது உழவே என எடுத்துரைக்கும் ஏரெழுபது. அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும் பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும் மலர்குலாந் திருவிளங்கும் மழை விளங்கும் மனு விளங்கும் உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே (ஏரெழுபது) இத்தகைய உயர்ந்த உழவிற்கு உதவி செய்யும் ஞாயிற்றினைப் போற்றி நன்றிசொல்லுவதாய் தைப் பொங்கல்நாள் அமைகின்றது. இத்தகைய நன்நாளை, பாவேந்தர் பாரதிதாசன்,
 
தைமதி பிறக்கும் நாள், தமிழர் தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்: வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்புநெய்
ஏலமும் புதுநெருப்பேறி அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!
தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்
எனக் கூறி மகிழ்ந்துரைப்பார். கவியரசர் கண்ணதாசனோ,
கண்ணார் கரும்பும் கதலிகளும் பூச்சரமும்
தண்ணாரும் மஞ்சள் சரங்கோத்த மங்கலமும்
 
எனப் பொங்கல் திருநாளை மங்கலத்தின் வடிவாய்ப் புகழ்ந்துரைப்பார். மறுநாள் உழவிற்கு உதவி செய்த மாடுகளுக்கு நன்றி சொல்லும் நாள் ஆகும்.இந்நாள் ‘மாட்டுப் பொங்கல்’ என்று அழைக்கப்படுகின்றது. இத்தகைய மாட்டுப்பொங்கல் குறித்து ஒரு கதையும் சொல்லப்படுவதுண்டு. சிவபெருமான் தன் வாகனமான ’பஸவா’ எனப்படும் நந்தியிடம் நீ பூலோகம் சென்று மக்களிடம் தினமும் எண்ணெய் குளியல் எடுத்து மாதம் ஒருமுறை சாப்பிடும்படிக் கூறி வா! என்று அனுப்பினாராம். ஆனால் நந்தியோ, அதனை மாற்றி தினமும் சாப்பிட்டு மாதம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கும்படிக் கூறி விட்டதாம். இதனால் கோபமடைந்த சிவபெருமான் என் பேச்சினைக் கேட்காத நீ மண்ணில் சென்று மனிதர்களின் வேளாண்மைப் பணிக்கு உதவிக்கொண்டு அங்கேயே இரு! என்று கூறிவிட்டாராம்.இதனால்தான் காளை மாடுகள் மண்ணில் வேளாண்மைக்கு உழைப்பதாய் ஒரு கதை சொல்லப்படுவது உண்டு. தமிழர்கள் இம்மாட்டுப் பொங்கல் நாளில் மாடுகளை அலங்கரித்து அவற்றிற்குப் பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.

பொங்கல் பண்டிகையை ஒட்டிக் கொண்டாடப்படும் பிறிதோர் பண்டிகை ‘காணும் பொங்கல்’ என்பதாகும். இப்பொங்கல் பெண்களுக்கு உரியதாய்க் கொண்டாடப்படுகிறது, இந்நன்நாளில் பெண்கள் பொங்கல் பானையில் கட்டப்பட்டிருக்கும் மஞ்சளினை எடுத்து வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ அல்லது கணவனிடமோ கொடுத்து நெற்றி மற்றும் தாலியில் மூன்று தடவை ஒற்றிக்கொள்வர். இப்பண்டிகையின்போது பெண்களுக்குப் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் அனுப்பும் வழக்கம் உண்டு. பெண்கள் பிறந்த வீடு செழிப்பாய் இருக்கவேண்டும் என்பதற்காக இப்பண்டிகை கொண்டாடப்படுவது உண்டு. இந்நாளில் நீர்நிலைகள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அவற்றைக் கண்டு நீராடி மகிழும் வழக்கம் இருந்தது. மேலும் இந்நாள் வான்புகழ் வள்ளுவத்தினை வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்த்த திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகின்றது. வள்ளுவர் காட்டிய வழியினைத் தமிழ்ச் சமூகத்திற்கு அறிவுறுத்தி, அதன்வழி நடக்க வழிகாட்டும் நன்நாளாகவும் இந்நாள் அமைகின்றது.

தைப்பொங்கல் பண்டிகையின்

நிறைவுநாள் அன்று மஞ்சுவிரட்டு நடைபெறுகின்றது.இது சில பகுதிகளில் ‘ஜல்லிக்கட்டு’ என்னும் பெயரால் குறிக்கப்படுகின்றது. இது தமிழர் மரபில் நடைபெற்ற ’ஏறுதழுவல்’ என்பதன் இன்னொரு வடிவமே ஆகும். சங்க இலக்கியங்களில் முல்லைக்கலிப் பாடல்களில் மட்டுமே முதன்முதலாக ஏறுதழுவல் நிகழ்வு சுட்டப்பட்டுள்ளது. முல்லை நில ஆயர்கள் இதில் பங்குபெற்றனர். ஏறுதழுவலில் முல்லை நில ஆண்கள் தலைவியின் காதலைப்பெறும் பொருட்டுத் தங்கள் வீரத்தினை வெளிப்படுத்தி காளையினை அடக்கித் தலைவியைப் பெற முயற்சித்தனர். ஏறுதழுவும் களத்தில் பலவகையான காளைகள் கூரிய கொம்புகளுடன் இருந்தன. அவை சிங்கமும், குதிரையும், யானையும், முதலையும் ஒருங்கே கூடி நிற்பது போல் காட்சியளித்தன என்பதனை,
 
“மணிவரை மருங்கின் அருவி போல
அணிவரம்பு அறுத்த வெண்காற் காரியும்,
மீன்பூத்து அவிர்வரும் அந்திவான் விசும்பு போல
வான்பொறி பறந்த புள்ளி வெள்ளையும்,
கொலைவன் சூடிய குழவித்திங்கள் போல்
வளையுபு மழிந்த கோடு அணி சேயும்,
பொருமுரண் முன்பின் புகல்ஏறு பலபெய்து-
அரிமாவும்,பரிமாவும்,களிறும்,கராமும்,
பெருமலை விடாரகத்து,ஒருங்கு உடன் குழீஇ,
படுமழை ஆடும் வரையகம் போலும்-
கொடிநறை சூழ்ந்த தொழூஉ” ( முல்லைக்கலி )
 
என்ற பாடல் விளக்கியுரைக்கின்றது.
 
கொல் ஏற்றுக்கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே,ஆயமகள் ” (முல்லைக்கலி)
 
என்ற கலித்தொகையின் அடிகள் கொல்கின்ற கொம்புகளைக் கொண்ட காளையினைக் கண்டு அஞ்சும் ஆண்மகனைத் தமிழ்மகள் விரும்பாள் என எடுத்துரைக்கும். முல்லை நிலத்தில் மட்டுமே இருந்த இவ் ஏறுதழுவல் நிகழ்வு பின்னர் ஏனைய நிலங்களிலும் நிகழத் தொடங்கியது.வீரத்தின் விளைநிலமாய் விளங்கும் இந்த ஏறுதழுவல் தமிழ் மண்ணில் இன்றும் நடைபெறுகின்றது. இவ்வாறு தமிழ்ப்பண்பாட்டின் அடையாளமாய், உழவின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் உன்னதமாய், நன்றியறிதலின் நற்சான்றாய் விளங்கும் பொங்கல் திருநாளில் புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலிட்டு புதுவாழ்வு பெறுவோமாக!

முனைவர்  மா. சிதம்பரம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-01-2021

  24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 22-01-2021

  22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்