SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மையைப் பணிவோம்!

2020-02-11@ 11:52:16

*அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 53

பவளக் கொடியில்  பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையாய் எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது  துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்பீர் அமராவதி ஆளுனகக்கே
பாடல் எண் - 38

பரபரப்பான இந்த அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனக்குள் பல தீர்க்க முடியாத பல தேவைகளை வைத்துள்ளான். தான் விரும்பிய வாழ்க்கை விரும்பிய படி அமையாத சூழலில் பல இல்லறங்கள் நல்லறமாகாமலே போய் விடும் சூழலும் உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் தான் அபிராமி பட்டர் இல்லறத்தை நல்லறமாக்கி வளமுடன் வாழ இந்த பாடலின் மூலம் சில இரகசியமான உபாசனை நெறிமுறைகளை நமக்கு வெளிப்படுத்துகிறார். இறைவனையும் இறைவினையும் நாயக நாயகி பாவத்தில் வழிபட்டால் எண்ண ஒருமைப்பாடு ஏற்படும் என்கிறார்.

‘‘பரஸ் பராஸ் சிலுஸ்ட்ட
வபுர்தராப்யாம் நகேந்திர கன்யாம்
விருஷகேதனாப்யாம் நமோ நமஸ்
சங்கர பார்வதிப்யாம்’’
 
சிவனையும் பார்வதியையும் இரண்டாக, காமேஸ்வர காமேஸ்வரி என்னும் தியானத்தை கூறி வழிபடும் போது சம்மேளனம் என்னும் உணர்வாள் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு நீங்கி அன்பு மேம்படும். இருவரையும் இணைத்து வழிபடும் யாவருக்கும் சொர்க்கம் போன்ற யாவும் கிடைக்கும். மேலும் மன அமைதி, தெளிவு, ஞானம் , ஆனந்தம் உலகத்தில் விரும்பிய பொருள் கிடைத்தல் போன்ற அனைத்தும் கிடைக்கும். அபிராமி பட்டர் சொல்வதைக் கேட்போம் வாருங்கள்.

‘‘பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும்’’
சிவந்த நிறத்தை கொண்ட இதழ்களை உடையவள் என்பது பொருள்.

உமையம்மையின் இதழ் சிவப்பிற்கு ஐந்து காரணங்களை கூறுகின்றார் பட்டர். அதை ஒவ்வொன்றாய் இனி காண்போம். உமையம்மை இயல்பாகவே சிவந்த நிறத்தை கொண்டவள். அதனால் இதழும் சிவந்த நிறத்தை பெற்றிருந்தது. இதை ‘‘சிந்துர வண்ணத்தினால்’’ - 8 என்பதால் அறியலாம் .பெண்களுக்கு நாணத்தினாலும், கோபத்தினாலும் முகம் சிவக்கும். அப்படி முகம் சிவந்ததினாலும் இதழ் சிவந்ததாகிறது.

பரமேஸ்வரனோடு திருமணக்கோலத்தில் நாணியவளாக இருக்கும் போது இதழ் சிவந்திருக்கிறது ‘‘உங்கள் திருமணக் கோலமும்’’ - 18உமையமை தாம்பூலம் திரித்திருப்பதனால் (வெற்றிலை பாக்கு) உமையின் உதடும் அதை ருசித்த நாக்கும் சிவந்திருக்கிறது இதை லலிதா சஹஸ்ர நாமம் ‘‘தாம்பூல பூரித முக்யை நம’’: என்பதனால் அறியலாம் ‘‘வதனாம் புயமும் ’’ - 58நாககன்னிகை, காளி இவர்கள் வழிபாட்டில் பாம்பு கடித்தவாகளை காப்பாற்றுவதற்கு மந்திர வாதிகளால் சொல்லப்படும் மந்திரத்தில், உமையம்மையானவள் விஷம் கலந்த இரத்தத்தை உறிஞ்சியதால் சிவந்த இதழ்களை உடையவளாய் தியானிக்கப்படுவாள். இதையே அபிராமி பட்டர் சாதி நச்சு வாயகி ’’- 50 என்று குறிப்பிடுவதால் அறியலாம்.
‘‘பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும்’’ என்பதனால் நாம் முன் பார்த்த உடல் சிவந்திருப்பதனால் இதழ் சிவக்கவில்லை, (பவளக்காளி). நானத்தினால் இதழ் சிவக்கவில்லை ( பச்சைகாளி). கோபத்தினால் இதழ் சிவக்கவில்லை (தட்ஷிணகாளி). தாம்பூலம் தரித்ததனாலும் இதழ்சிவக்கவில்லை (சுவாசினி). உயிர்பலி உண்ட இரத்தச் சிவப்பினாலும் இதழ் சிவக்க வில்லை (நாகாத்தம்மன்).

பின்னர் எதனால் இதழ் சிவந்திருக்கிறது ? என்று வினவினாள்.கொடியில் பழுத்தபழமானது இயல்பாகவே சிவந்த நிறமுடையதாக இருக்கிறது. கொடியானது பச்சை நிறமாக இருந்தாலும், அதில் தோன்றிய கோவை பழம் மட்டும் எப்படி இயற்கையிலேயே சிவந்ததாக உள்ளதோ, அதுபோல் ‘‘பவளக் கொடியில் பழுத்த செவ்வாய்’’ என்பதனால் உமையம்மைக்கு இயல்பாகவே இதழ்கள் இரண்டும் மிகச் சிவந்த நிறமுடையதாக தோன்றும் என்கிறார் அபிராமி பட்டர். இதையே ஆகமம் 1. பவளக்காளி, 2. பச்சைகாளி, 3. தட்ஷிணகாளி (கோபத்தினால்), 4. சுவாசினி, 5. சண்டி, 6. நாகாத்தம்மன் இந்த ஆறு தேவதைகளை விடவும் உயர்ந்த நிலையில் உள்ள மனோன்மணி என்று சிவபெருமானின் மனையாளை குறிப்பிடுகின்றார். இவளையே ‘‘பழுத்த செவ்வாயும்’’ என்கிறார் பட்டர்.

பனிமுறுவல் தவளத் திருநகையும்

நகை என்பது ஒருவகை மெய்ப்பாட்டுனர்வு இது நான்கு வகைப்படும். எள்ளல், இளமை, பேதமை, மடமை என்கிறது தொல்காப்பியம்.தேவத்தை படைத்த பிரம்மாவும், ஆகமத்தை படைத்த அழிக்கும் கடவுளான ருத்ரரும் உலகமக்கள் உய்யும் பொருட்டு கீதை போன்ற தத்துவங்களை படைத்த விஷ்ணுவும் உன்னை (உமையம்மையை )பற்றி கூறியிருக்க. நான் கூறுவது என்பது இகழ்ச்சியுடைய நகைப்பிற்குரியதாகிறது என்கிறார் பட்டர். ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம் …- 26.

…. என் நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே  - 26 என்று எள்ளல் நகையை குறிப்பிட்டுள்ளதை நன்கு உணரலாம்.திருக்கடையூரில் மார்க்கண்டேயனுக்காக காலனை காலால் உதைத்த கால சம்ஹார மூர்த்திக்கு மனைவியாக இருப்பவள் பாலாம்பிகை எனப்படுவாள். காலனை காலால் காய்ந்ததனால் மிகவும் சினம் கொண்டவராய்  சிவபெருமான் இருக்கின்றார் மற்றும் காலம் கடந்து அழிவற்ற தன்மையால் முதுமையாக  தோன்றும் சிவபெருமானிற்கு அருகில் மிகச்சிறு வயதை உடைய பாலாம்பிகையாக உமையம்மை மகிழ்ந்து சிரிக்கின்றார். தன் தோழியருடன் விளையாடியபடி சிரிக்கின்றாள். இந்த சிரிப்பானது பேதன்மையால் ஏற்பட்டதாகும் இதையே பட்டக் முகிழ் நகையே - 92 என்கிறார்.
லட்சுமி சரஸ்வதியுடன் இருக்கும் இத்தோற்றத்தை இன்றும் காணலாம். அபிராமி பட்டர் காலத்தில் பால்ய விவாஹம் இருந்தது. அந்தனர் குலத்தினில் சிறு வயதிலேயே முடித்து விடுகின்ற வழக்கம் இருந்ததாக வரலாறு கூறுகிறது.
அபிராமியானவள் தன் குழந்தைகளாகிய ‘‘காதி பொருபடை கந்தன் கணபதி’’ - 97 முதலியோரை கண்டு மனம் மகிழ்ந்து சிரிக்கின்ற போது சிவந்த அவளது இதழ்களின் இடையே முத்து போன்ற பற்கள் தெரியும் படி சிரித்து மகிழ்கின்றாள்.
இந்த சிரிப்பு தாயன்பை, தாய்மையை, வெளிப்படுத்துவதாகும். இதையே பட்டர் ‘‘வெண்ணகையும்’’ - 100 என்கிறார்.

எள்ளல், பேதமை, அறிந்து மகிழ்தல் போன்ற எந்த வகையிலும் இந்த பாடலில் சொல்லப்பட்ட‘‘ பனிமுறுவல்’’ என்ற சிறிப்பு வகையில்லை.பின் பனி முறுவல் என்றால் என்னி இறைவியின் இந்த புன்னகையானது அவள் குளிர்ந்த மன நிலையில் இருக்கின்றாள் என்பதை காட்டுகிறது. இதை ஸ்ரீ சூக்தமானது ‘‘ஆர்த்ராம்’’ என்கிறது. பரமனிடத்து தன் அன்பை முதன் முறையாக சூட்டுகின்ற போது நடுக்கம் (சிறிது தயக்கம்) இருக்கிறது தன் அன்பை வௌிப்படையாக வெளிப்படுத்த நாணம் தடுக்கிறது என்ற குறிப்பும் இருக்கிறது.அனைத்து உயிர்களையும் உமையம்மையானவள் கருணையோடு பார்ப்பதனாலும் . அந்த உயிர்கள் அறியாமையால் படும் துன்பத்தை அறிவதாலும் உமையம்மைக்குள் ஏற்பட்ட துக்கமும் இருக்கிறது. இந்த புன்னகையில் துன்பத்தை இறைவனிடத்து கூறு போக்க நினைத்து இறைவனை பார்த்த போது அவர் அந்த துக்கத்தை போக்கும் வகையில் நோக்குகின்றாள்.

அதனால் உமையம்மையானவள் மகிழ்கிறாள் இதையே ‘‘பனிமுறுவல்’’ என்கிறார்.

இமையமலையை தாயகமாக கொண்டதனால் அந்த பனி சார்ந்து ஏற்பட்ட மாறுதல்களை கொண்ட இதழை கொண்டவள் என்றும் வெளியில் இருக்கக் கூடிய பனியினால் இதழில் ஏற்பட்ட மாறுதலையும், பனி என்ற வார்த்தை குறிப்பிடுகின்றது. காண்பார்க்கும் இனிமை பயப்பதாக இருக்கிறது. ‘‘பனி’’ என்ற சொல்லிற்கு அகராதியானது - அச்சம் இக்கட்டு (தயக்கம்) துக்கம், நடுக்கம், பெய்யும் பனி சொல், இனிமை, என்ற ஏழு பொருள் தருகிறது. அத்துனை பொருளிலேயும் அபிராமி பட்டர் ‘‘பனி’’- என்ற சொல்லை பயன்படுத்துகின்றார்.

‘‘தவளத்திரு நகையும்’’

தவளம் என்பதற்கு வெண்மை என்று பொருள். திருநகையும் என்று கூறுவதனால் இறைவியானவள் வெண்மையான முத்து போன்ற பற்கள் சற்று வெளியில் தெரியும் படி உமையம்மை சிரித்தால் என்பதால் கூறப்படுகிறது. இந்த சிரிப்பிற்கு காரணம் என்ன என்று கேள்வியாக கேட்டால் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டு தன் கணவனாகிய சிவபெருமானிடம் அனுமதி கேட்டபின் அருளை வழங்குகின்றார். அந்த ஆன்மாக்களை விட மகிழ்பவர் உமையம்மையே , காரணம் இறைவனுக்கு வேண்டுதல் வேண்டாமை என்று எதுவும் இல்லை ஆனால் உமையம்மையோ ஆன்மாக்கள் அறியாமல் செய்த பிழையை கணக்கில் கொள்ளாமல் கூடுதல் கருணையினால் ஒரு தாய் தந்தையின் சீற்றத்தில் இருந்து (அறம் தவ்ரிய புதல்வனிடம் ) தன்மகனை காப்பாற்ற கருணை கொள்வது போல், அந்த கருணையை தந்தை அனுமதித்தார். அப்போது தோன்றுகிற சிறப்பு தான் ‘‘பனிமுறுவல் தவளத்திரு நகையும்’’ என்கிறார் பட்டர்.

துணையாய் எங்கள் சங்கரனை
காமனையே எரித்த ஆசையற்றவனும்
‘‘விற்காமன் அங்கம் தகனம் செய்த - 65’’
காலத்தை கடிந்த அழியாத தன்மை பெற்றவனும் ‘‘உதிக்கின்ற செய்கதிர் உச்சித்திலகம் - 1’’
சக்தியை தழைக்கச் செய்தவனுமாகிய
‘‘சக்தி தழைக்கும் சிலமும் ’’- 29

உயர்ந்த பண்புகளைக் கொண்டவனைதால் எங்கள் சங்கரனார் என்று சிவனை உயர்த்தி பேசுகின்றார்.அதே அபிராமி பட்டர் ‘‘எங்கள் சங்கரனார்’’  - 44 என்ற சொல்லால் சிவனினும் சக்தியை சற்று  உயர்த்தி பேசுகின்றார். காமனை எரித்த தவமுடையவர் அன்பின் மிகுதியால் உடல் பாதியை, அன்பின் மிகுதியால் உமையம்மைக்கு கொடுத்ததாக பேசுகிறார்.‘‘அண்டமெல்லாம் பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டாளும்’’ - 87இறைவியின் ஊடலைத் தவிர்க்க அவளையே வணங்கினார் என்பதை ‘‘ கை வந்த தீயும் தலை வைத்த ஆறும் கரந்தது’’  -  98என்று வார்த்தையால் கூறுகிறார்.பார்வதியானவள் செல்வ முடையவளாய், உயர்ந்த பண்புகளை உடையவாய் - 32 அறமும் தவறாது செய்யும் தன்மை கொண்டவளாய் இல்லறத்தை நல்லறமாய் நடத்தும் தன்மை கொண்டதாய் இருக்கும் இறைவியின் தன்மையை கூறினார். சிவபெருமான் அவளின் உயர்வுத் தன்மையை இழிவுபடுத்தும் வண்ணமாய் செயல்படுகிறார் என்பதை

‘‘நீடுலங்களுக்கு ஆதாரமாய் நின்று
நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத் திரண்டறம் வளர்க்கின்ற
நீ மனைவியாய் இருந்ததும்
வீடு வீடுகள் தோறும் ஓடிப் புகுந்து கால
வேசற்று இலச்சையும் போய்
வெண்துகில் அபைக்கணய விதியற்று நிர்வாண
வேடமுங் கொண்டு கைக்கோர்
ஓடேந்தி நாடெங்கும் உள்ளந் களர்ந்து நின்று
உன் மத்தனாகி அம்மா
உன் கணவன் எங்கெங்கும் ஐயம் புகுந்தேங்கா
உழல் கின்ற கேது சொல்வாய் ………- பதிகம்
என்று இறவைனைப் பற்றி இழிவுப் பொருளாலு உயர்வுப் பொருளாலும் உணர்ச்சி ததும்ப கூறியிருப்பது நோக்கத்தக்கது.
துவளப் பொருது என்ற சொல்லால்
சிவபெருமான் மிகக் கோபியாக இருந்தாலும் ‘‘நமஸ்த்தே ருத்ரமண்யவ’’ (உன் கோபத்திற்கு வணக்கம் )- என்கிறது வேதம்.
அவரை மணந்தாள் அழியாத குணக்குன்றே.
உன்தன் திருமணக் கோலமும் - 18
சிவபெருமான் பிச்சை எடுப்பவராக இருந்தாலும் அவர் கொண்டு வருகிற மிகக் குறைவான அளவு உணவுப் பொருளை உலக மக்கள் அனைவருக்கும் அளித்து இல்லறத்தை செம்மையுறச் செய்கிறாள்.
‘‘ஐபன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம் செய்யும் ’’ -   57
என்ற பாடலைக் கொண்டு மிகவும் திறமையாக இல்லறம் நடத்தியதோடு அன்பு, அறிவு, ஒழுக்கம், உண்மை உயர்வு இவற்றின் வாழ்வாகிய ஐந்து மிக உயர்வான பிள்ளைகளை உலக நலனுக்கா ஈன்றாள் என்பதை.
‘‘நடக்கையும் செம்
முகனும்முந் நான்கிரு முன் எனத்தோன்றிய முதறிவின் மகனும் உண் டாய தன்றோ ? வல்லி நீ செய்த வல்லபமே ’’- 65
என்று கூறுகிறார் .
சிவபெருமானை அன்பினால் அரவணைத்து அவரது கடுமையான உள்ளத்தை தன்வயப்படுத்தியவள் என்பதை
‘‘மலைகொண்டிறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி’’ - 42
என்று கூறுகிறார் அபிராமி பட்டர்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

 • bogi13

  பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

 • 13-01-2021

  13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-vaccine12

  கொரோனாவுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது!: புனேவில் இருந்து 5.36 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்