SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அபிஷேக விபூதியால் ஆத்ம பலம் பெருகும்!

2020-02-10@ 13:05:08

?ஜோதிடத்தை நம்பி வாழ்க்கையை தொலைத்துவிட்டு இன்று வாழ்வா, சாவா என போராடி வரும் அபலை நான். காதல் திருமணம் செய்து கொண்ட நாங்கள் சிரமப்பட்டாலும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோம். சமீபத்தில் கூட ஒரு ஜோதிடர் 46வது வயதில் வீடு கட்டி அமோகமாக வாழ்வீர்கள் என்று கூறியிருந்த நிலையில் திடீரென்று என் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். நானும் என் பிள்ளைகளும் படும் வேதனை தீர வழிகாட்டுங்கள்.

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நல்வாழ்வு காத்திருக்கிறது என்று நம்பியிருந்த நிலையில் திடீரென்று கணவரை இழந்ததால் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் உங்கள் மனநிலை புரிகிறது. ஜோதிடத்தையே நம்பியிருந்த உங்கள் கணவரிடம் எந்த ஒரு ஜோதிடரும் இப்படி ஒரு கண்டம் வரும் என்று கூறவில்லையே, இதுதான் ஜோதிட தர்மமா, முன்கூட்டியே தெரிந்திருந்தால் பரிகாரம் செய்து என் கணவரின் உயிரை காத்திருப்பேனே என்று உங்களது ஆதங்கத்தை கடிதத்தில் விரிவாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஜனனத்தையும், மரணத்தையும் தீர்மானிக்கும் சக்தி இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு. பிறப்பையும், இறப்பையும் யாராலும் நிர்ணயம் செய்ய இயலாது. இறப்பைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக ஜோதிடம் பார்க்க செல்லக்கூடாது. வாழுகின்ற வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை மட்டுமே ஜோதிடத்தால் வழிகாட்ட இயலும். நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை என்பதை நினைவில் கொண்டு உங்கள் பிள்ளைகளின் நல்வாழ்வினில் கவனத்தை செலுத்துங்கள். அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் தையல் தொழிலை தொடர்ந்து செய்ய முயற்சியுங்கள்.

எம்பிராய்டரி முதலான வேலைப்பாடுகள் உங்களுக்கு சிறப்பான முறையில் கைகொடுக்கும். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி மற்றும் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்திருக்கும் உங்கள் இரு குழந்தைகளின் ஜாதகங்களும் வலிமையாக உள்ளது. மூத்தவனின் உடல் ஆரோக்யத்தில் மட்டும் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். இருவரையும் நன்றாகப் படிக்க வையுங்கள். உங்கள் உழைப்பினாலும் தெய்வமாகிவிட்ட உங்கள் கணவரின் ஆசிர்வாதத்தினாலும் இரு குழந்தைகளையும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வீர்கள் என்பது உறுதி. தமிழ்மாதந்தோறும் வருகின்ற முதல் செவ்வாய்க்கிழமை நாளில் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று விபூதி அபிஷேகம் செய்து வழிபடுங்கள். அபிஷேகம் செய்யப்பட்ட அந்த விபூதி பிரசாதத்தைப் பெற்றுவந்து நீங்களும், உங்கள் பிள்ளைகளும் தினமும் உறங்குவதற்கு முன்னால் நெற்றியிலும், மார்பிலும் பூசிக்கொள்ளுங்கள். ஆத்ம பலம் பெருகுவதோடு உலகில் உள்ள பிரச்னைகளை எதிர்கொண்டு வாழும் திறனையும் பெறுவீர்கள்.

?என்னுடைய காலத்தில் இரண்டு வீடுகள் கட்டி இரண்டையும் விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். பிள்ளைகள் மூவருக்கும் திருமணம் செய்து வைத்து பேரன், பேத்திகள் உள்ளனர். இந்நிலையில் ஒரு மனை வாங்குவதற்காக நண்பர் ஒருவரிடம் 10 லட்சம் வரை கொடுத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அந்தப் பணம் திரும்பக் கிடைக்கவும், நான் தற்போது பார்த்து வைத்திருக்கும் மனையை வாங்கி நல்ல முறையில் வீடு அமையவும் உரிய பரிகாரம் கூறுங்கள்.

- ராமச்சந்திரன், தஞ்சாவூர்.

ரேவதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. நீங்கள் ராகு தசையில் சனி புக்தியின் காலத்தில் பணத்தைக் கொடுத்ததால் அது இழுபறியைத் தந்துகொண்டிருக்கிறது. கோர்ட் மூலமாக 90 சதவீத பணி முடிந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் கடுமையான அலைச்சலை சந்தித்து வருவதாகவும் எழுதியுள்ளீர்கள். இந்த அலைச்சல் என்பது இந்த வருடமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். வருகின்ற 18.01.2021 முதலே சாதகமான நேரம் என்பது துவங்குகிறது. ஆகவே அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் நீங்கள் பார்த்து வைத்திருக்கும் இடத்தில் மனை வாங்கவும், அதில் வீடு கட்டத் தொடங்குவதற்கும் சாதகமாக நேரமாக அமையும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். பிரதி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாளில் தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வாராஹி அம்மன் சந்நதிக்குச் சென்று இலுப்பை எண்ணெய் விளக்கேற்றி வைத்து வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ள உங்கள் விருப்பம் ஈடேறும்.

?நான் இரண்டு வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். எனக்கும் அந்த பெண்ணிற்கும் பொருத்தம் இல்லை என்கிறார்கள். ஜோதிடரிடம் காரணத்தைக் கேட்டபோது அந்தப் பெண்ணிற்கு கேது தசை நடப்பதால் அப்படி கூறினேன் என்கிறார். உரிய வழி காட்டுங்கள்.

- சீனிவாசன், சாத்தூர்.

ஜாதகப் பொருத்தம் பார்த்து வருவதில்லை காதல். அதே நேரத்தில் உண்மையாக காதலிப்பவர்கள் ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இயற்கையாகவே அவர்களுக்குள் பொருத்தம் என்பது நன்றாகவே அமைந்திருக்கும். இருவருக்கும் இடையே உண்டாகும் ஈர்ப்பு என்பதே ஜாதக ரீதியாக அமைவதுதான். மாறாக நமக்குள் பொருத்தம் உண்டா என்ற சந்தேகம் காதலர்களுக்குள் தோன்றிவிட்டாலே அது உண்மையான காதலாக இருக்க முடியாது. உங்கள் விவகாரத்திலும் இது நிஜமாகிறது. அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படியும், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் அந்தப் பெண்ணின் ஜாதகப்படியும் இருவருக்குள்ளும் ஈர்ப்பு உண்டாகியிருப்பது என்பது சகஜமே. மேஷ ராசி விருச்சிக ராசிக்கு இடையேயும், கடக லக்னம்-ரிஷப லக்னத்திற்கு இடையயேயும் வசியப் பொருத்தம் என்பது நன்றாக அமைந்திருக்கிறது. பொருத்தம் என்பது நன்றாக உள்ளது. என்றாலும் தற்போது அந்தப் பெண்ணிற்கு நடந்து வரும் கேது தசையின் காலம் அவரது நடவடிக்கையில் ஒரு சில மாற்றத்தை உருவாக்கும். அந்த மாற்றங்கள் உங்கள் மனதிற்கு பிடிக்காத வகையில் அமையலாம். நீங்கள் அந்தப்பெண்ணையே கைப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இன்னும் மூன்று ஆண்டு காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். 2023ம் வருடம் மே மாத வாக்கில் அந்தப் பெண்ணின் ஜாதகப்படி திருமண யோகம் என்பது நன்றாக அமைகிறது. நிதானமாக யோசித்து முடிவெடுங்கள். உங்கள் பிரச்னைக்கு பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

?எனது ஒரே மகன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரைவேட் கம்பெனி வேலைக்குச் செல்கிறேன் என்று சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. நாங்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பையன் உயிருடன் உள்ளானா என்பதே தெரியவில்லை. வயதான காலத்தில் எனக்கு ஆறுதலான செய்தி கிடைத்திட வேண்டுகிறேன்.

- ராசு, திருவையாறு.

71வது வயதில் இருக்கும் நீங்கள் மனதளவில் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது. உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. ராகு தசையில் செவ்வாய் புக்தியின் காலத்தில் வீட்டை விட்டுச் சென்ற அவர் எங்கோ ஒரு இடத்தில் வசமாக சிக்கியிருக்கிறார் என்பதை அவரது ஜாதகம் உணர்த்துகிறது. அவருடைய ஜாதக பலத்தின்படி ஜென்ம ராசிக்கும், லக்னத்திற்கும் அதிபதி ஆகிய சனி எட்டாம் வீட்டில் ராகுவுடன் இணைந்து அமர்ந்திருப்பதால் கடுமையான கஷ்டத்தினை அனுபவிக்க வேண்டும் என்பது அவருக்கு அமைந்த விதியாக உள்ளது. உச்சபலம் பெற்ற குருவின் பார்வை லக்னத்தின் மீது விழுவதால் அவரது ஆயுளைப் பற்றி கவலைப்படாதீர்கள். மகன் உயிருடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
28.01.2020 முதல் சற்று நல்ல நேரம் என்பது உங்கள் மகனின் ஜாதகத்தில் துவங்கியுள்ளதால் அவரைப் பற்றிய தகவல் தற்போது வந்து சேரக் காண்பீர்கள். என்றாலும் 04.05.2022 வரை காத்திருக்க வேண்டும். சனிக்கிழமை தோறும் சிவாலயத்திற்குச் சென்று பைரவர் சந்நதியில் விளக்கேற்றுங்கள். தயிர்சாதம் நைவேத்யம் செய்து ஆதரவற்றோருக்கு தானம் செய்து வாருங்கள். பைரவரின் அருளால் உங்கள் மகனைப் பற்றிய தகவல் வெகுவிரைவில் வந்தடையும்.

?என் வீடு அருகே சில மாதங்களாக மந்திரிக்கப்பட்ட எலுமிச்சை பழங்கள் கிடந்தன. பின்னர் மர குச்சிகள் ஒன்றாகக் கட்டப்பட்டு கிடந்தன. நான் யார் வம்பிற்கும் போகாதவன். என் வீட்டில் அநாவசிய செலவுகள் ஏற்படுகின்றன. நான் நிம்மதியாக வாழ உரிய தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரம் தெரிவிக்கவும்.

- தேவராஜன், ஓசூர்.

ஆண்டவனை முழுமையாக நம்புபவர்களை இதுபோன்ற பில்லி, சூனிய விவகாரங்கள் தாக்குவதில்லை. புனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் நன்றாக உள்ளதால் நீங்கள் இதுபோன்ற விவகாரங்களைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே சனி - கேதுவின் இணைவும், ராசியில் சந்திரனோடு ராகுவின் இணைவும் இதுபோன்ற பய உணர்வினை மனதிற்குள் உண்டாக்கி உள்ளது.
தீயசக்திகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு இறைவனை முழுமையாக நம்புவது மட்டுமே ஒரே வழியாகும். நெற்றியில் திருமண், அல்லது திருநீறு அணிவது எந்தவிதமான அசுரசக்தியிடம் இருந்தும் உங்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டது. நீங்கள் சிவ வழிபாடு செய்பவராக இருந்தால் நெற்றி நிறைய நீரில் குழைத்த திருநீற்றினை காலை மாலை இருவேளையும் பூசிக் கொள்ளுங்கள். நெற்றி மட்டுமல்லாது மார்பு, வயிறு, இரு கைகளிலும் தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு ஆகிய பகுதிகளிலும் பூசிக் கொள்ள வேண்டும். வைணவத்தை பின்பற்றுபவர் என்றால் நெற்றியில் பளிச்சென்று திருமண்ணால் நாமம் போட்டுக் கொள்ள வேண்டும்.

உடம்பில் பெருமாளின் முத்திரையை பதித்துக்கொள்ளும்போது எந்தவிதமான தீயசக்தியும் அருகில் நெருங்காது. காளபைரவர் படத்தையும், நரசிம்மர் படத்தையும் வீட்டுப் பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டு வர உங்கள் பிரச்னைக்கான தீர்வினை எளிதாகக் காண இயலும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்