SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகராசன் வழிபட்ட நாக சுப்ரமணியர்

2020-02-05@ 11:13:44

காஞ்சிபுரம் - அனந்த சுப்பிரமணியர்

காஞ்சிபுரத்தில் குமரகோட்டம் எனும் பெயரில் முதன்மை பெற்ற முருகன் ஆலயம் உள்ளது. இத்தலம் வரலாற்றுச் சிறப்புகளோடு புராணச்  சிறப்புக்களையும் கொண்டது. தமிழில் கச்சியப்ப சிவாச்சார்யரால் இயற்றப்பட்ட கந்தபுராணம் அரங்கேற்றப்பட்ட இடம் என்ற தனிச் சிறப்பை உடையது. இத்தலத்தில் முருகப்பெருமான் பிரம்ம சாத்தன் வடிவில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் உள்ள உலாத்திரு மேனிகளில் ஒன்றாக நாக  சுப்பிரமண்யர் வடிவம் உள்ளது. மக்கள் இதனை உடுப்பி சுப்பிரமண்யர் என்றழைக்கின்றனர். இவருக்கு அனந்த சுப்பிரமண்யர் என்பது பெயராகும். இவர் நாகவழிபாட்டுடன் தொடர்புடைய மூர்த்தியாவார்.

காஞ்சிபுரத்தில் பாம்பரசர்கள் கூடி வழிபட்ட தலங்கள் பல உள்ளன. சிவபெருமானைப் பாம்புகள் வழிபட்டு அவருக்கு ஆபரணமான பணாதரேச்சரம்,  பணாமணீச்சரம் என்னும் தலங்களும் திருமால் பாம்பு வடிவாக விளங்கும் திருஊரகம் என்ற தலமும், அனந்தன் என்ற பாம்பரசன் வழிபட்ட  அனந்தேசம் என்ற தலமும் வாசுகி வழிபட்ட வாசுகீசரும் அமைந்திருப்பது இங்கு எண்ணத்தக்கதாகும்.காஞ்சியில் அனந்தன் எனும் பாம்பரசனும்  அவனது தேவியர்களும் சுப்ரமண்யப் பெருமானை வழிபட்டு அருள் பெற்றனர். பின்னர், அவருக்குக் குடையாக விளங்கும் பேறுபெற்றனர்.

இதனையொட்டியே இந்த அனந்த சுப்பிரமணியர் எனும் திருமேனி அமைக்கப்பட்டிருக்கின்றது. இதில் ஐந்து தலைகளைக்கொண்ட அனந்தன் தனது  படத்தை விரித்து முருகனுக்குக் குடைப் பிடிக்கின்றான். அந்தக் குடையின் கீழ் பாலசுப்ரமண்யராக முருகன் நின்றவாறு காட்சியளிக்கின்றார். அவர் இரண்டு கரங்களுடன் விளங்குகிறார். வலக்கரம் அபயமாகவும், இடக்கரம் ஊரு முத்திரையிலும் உள்ளன. இரு புறமும் வள்ளி தெய்வயானை  ஆகிய தேவியர்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களுடைய திருமுடியின் மீது அனந்தனின் தேவியர் படம் எடுத்துக் குடைபிடிக்கின்றனர்.

இதுபோன்ற திருமுருகன் வடிவத்தைப் பிற ஆலயங்களில் காண முடியவில்லை. அனந்தன், குடைபிடிப்பதுடன் அவருக்கு ஆசனமாகவும் உள்ளான்.  சுப்பிரமண்யரின் மஞ்சாசனத்தில் அனந்தன் என்ற வெண்ணிறமான பாம்பும் இடம் பெற்றிருக்கிறதென்று கூறுகிறது. சிலர் அனந்தனுக்குப் பதிலாக  மகாகாளன் என்பவன் மனைவியருடன் முருகனை வழிபட்ட இடம் என்பர். மகாகாளேஸ்வரர் எனும் பெயரில் அவன் அமைத்த லிங்கம் அருகில்  இருக்கிறது.கர்நாடக மாநிலத்தில் உடுப்பிக்கு அருகிலுள்ள சுப்பிரமண்யா எனும் ஊரில் விளங்கும் முருகன் நினைவாக அன்பர் ஒருவரால்  இத்திருமேனி அமைக்கப் பெற்றதென்றும், அதையொட்டி இவர் உடுப்பி சுப்பிரமணியர் என்று பெயர் பெற்றார் என்றும் கூறுவர். ஆனால் இக்கருத்து  சரியானதல்ல. இவர் மக்களுக்குப் புத்திரப் பேற்றை அருளும் மூர்த்தியாவார். மக்களின் நாகதோஷத்தை அழித்து நல்வாழ்வு அளிக்கின்றார். இவர்  வம்சத்தை வாழ்விக்கும் பெருமானாகப் போற்றப்படுகின்றார்.

முருகனின் பரிவாரமாக விளங்கும் நாகர்

முருகனுக்கு அமைக்கப்படும் ஆலயங்களில் அவருடன் அவருக்குத் துணைத் தேவர்களாக (பரி வாரமாக) எட்டு அல்லது பதினாறு அல்லது  முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கையில் பரிவார தேவதைகளை அமைக்க வேண்டுமென்று குமார தந்திரம் என்ற நூல் கூறுகின்றது. முப்பத்திரண்டு  பரிவாரங்களில் ஒன்றாக வாசுகி என்ற பாம்பும் இடம் பெறுகின்றது. மேலும், வாசுகி முருகனோடு கொண்டுள்ள தொடர்பைப் பல்வேறு  புராணங்களாலும் அறிய முடிகின்றது. சில நூல்களில் வாசுகி, பத்மன், ஆதிசேடன், அனந்தன் ஆகிய நால்வரும் முருகனின் சதுர்த்த பரிவாரம் என்று  கூறப்பட்டுள்ளது.

முருகனுக்கு ஆதிசேடன் குடையாக இருக்க அனந்தன் வலப்புறமும் வாசுகி இடப்புறமும் நின்று ஏவல் புரிகின்றனர் என்பாருமுண்டு. முருகன்  ஆலயங்களில் நாகர்களுக்குத் தனிச் சந்நதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதை நாகத் தம்பிரான் கோயில் என அழைக்கின்றனர். ஏழு தலைகளுடன்  கூடிய அகன்ற படத்தை விரித்துக் கொண்டு உடலை மூன்றாக சுருட்டிக்கொண்டு அமர்ந்த கோலத்தில் வாசுகி காணப்படுகிறார். அவரது படத்தின்  நடுவில் பாலமுருகன் காட்சிதருகிறார்.

- மீனாட்சி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

 • biharele28

  கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

 • pakistanbomb27

  பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

 • bee27

  6 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை உடலில் சுமந்து சீன இளைஞர் கின்னஸ் சாதனை!: பேஸ்புக்கில் கலக்கும் வித்தியாசமான சாதனை முயற்சி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்