SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மனுக்கு அகல் விளக்கேற்றினால் இல்வாழ்க்கை அமையும்!

2020-02-04@ 11:45:46

?32 வயதாகும் எனக்கு பல வருடங்களாக வரன் பார்த்து வருகின்றனர். எதுவுமே அமையாமல் தட்டிக்கொண்டே போகிறது. நானும் பல பரிகாரங்களை செய்து வருகிறேன். இதுவரை பரிகாரத்திற்கென பல ஆயிரம் ரூபாய் செலவழித்தாகி விட்டது. எனக்கு திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் மனதில் வருகிறது. உரிய பரிகாரம் கூறுங்கள்.
- திருச்சி வாசகி.

கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் (மிதுன லக்னம் என்று தவறாக கணிக்கப்பட்டுள்ளது) பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்களுடைய பிரச்னையே ஜாதகத்தை தவறாக கணித்து வைத்திருப்பதுதான். நீங்கள் எழுதி அனுப்பியிருக்கும் தேதி மற்றும் பிறந்த நேரம் ஆகியவற்றைக் கொண்டு துல்லியமாக கணித்துப்பார்த்ததில் நீங்கள் கடக லக்னத்தில் பிறந்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏழாம் வீடு என்பது சுத்தமாகவே உள்ளது.

ஏழாம் வீட்டின் அதிபதி சனி ஆறில் அமர்ந்துள்ளதால் தாமதமான திருமணம் என்பது விதியாக இருந்தாலும் தற்போது நடந்து வரும் நேரம் திருமண யோகத்தினைத் தந்திருக்கிறது. களத்ர காரகன் சுக்கிரனின் புக்தி நடப்பதாலும், சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதாலும்
நிச்சயமாக இந்த வருடத்திற்குள் உங்கள் திருமணம் நடந்துவிடும். உங்கள் ஊரிலிருந்து மேற்கு திசையில் தூரத்து உறவினர் ஒருவர் மூலமாக வரன் வந்து அமையும்.

நாக தோஷம், சனி தோஷம் என்று எங்கும் பரிகாரத்திற்காக அலைய வேண்டிய அவசியம் இல்லை. கையிலே வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்...? உங்கள் ஊரிலேயே உங்களுக்கான பரிகாரத்தலம் அமைந்துள்ளது. வருகின்ற தை வெள்ளி முதலாக பிரதி வெள்ளி தோறும் தொடர்ந்து திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயத்திற்குச் சென்று நெய் விளக்கேற்றி வைத்து சந்நதியை ஆறுமுறை வலம் வந்து வணங்கி வாருங்கள். ஆடி வெள்ளிக்கிழமைக்குள் திருமணம் நிச்சயமாகிவிடும்.

?கடன் தொல்லை, கூடா நட்பு, குடிப்பழக்கம் இதனால் பெற்றோர் மற்றும் மனைவியைப் பிரிந்து அயலூரில் வாழ்கிறேன். எனது கடன்தொல்லை எப்பொழுது தீரும்? மீண்டும் நான் குடும்பத்துடன் சேர வாய்ப்புள்ளதா? எனது வாழ்வு சிறக்க பரிகாரம் கூறுங்கள்.
- முருகன், பேட்டை.

செய்த தவறை உணர்ந்து மனம் திருந்துவதே சிறந்த பரிகாரம் ஆகும். உங்களை நீங்களே எடைபோட்டு வைத்துள்ளீர்கள். கடன்தொல்லை என்பது இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு. கூடா நட்பும், குடிப்பழக்கமும் குடும்பத்தை விட்டு உங்களைப் பிரித்திருக்கிறது. இவை இரண்டையும் விட்டொழித்தாலே குடும்பத்துடன் இணைந்துவிடலாம். உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசியில் பிறந்திருக்கும் உங்களுக்கு தற்போது நடந்து வரும் நேரம் என்பது நன்றாகவே உள்ளது. மீன ராசிக்கு அதிபதி குரு பகவானே ஆவார். குரு பகவானின் ராசியில் பிறந்தவர்கள் தவறான செயல்களில் என்றுமே ஈடுபடக்கூடாது.

36வது வயதில் உள்ள நீங்கள் கடன்தொல்லைக்கு பயந்து அயலூரில் வாழ வேண்டிய அவசியமில்லை. மனம் திருந்தி பெற்றோரிடமும், கட்டிய மனைவியிடமும் மன்னிப்பு கோரி அவர்களுடன் சேர்ந்து வாழ முயற்சியுங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற எண்ணத்துடன்
குடும்பத்தோடு இணைந்தீர்களேயானால் உங்களுடைய  பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும். வியாழக்கிழமை தோறும் அருகிலுள்ள சாயிபாபா ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து வாருங்கள். ஒரு முறை ஷீரடி தலத்திற்குச் சென்று சாயிநாத ஸ்வாமியின் சந்நதிக்கு எதிரே அமர்ந்து தியானம் செய்யுங்கள். உங்கள் வாழ்வில் சிறப்பானதொரு மாற்றம் உண்டாகக் காண்பீர்கள்.

?எனது மகன் பட்டப்படிப்பு முடித்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஏகப்பட்ட கம்பெனிகளுக்கு நேர்முகத்தேர்விற்கு சென்று வருகிறான். இரண்டு லெவலில் பாஸ் ஆகிறான். கடைசி லெவலில் வெற்றி கிடைக்காததால் சோர்ந்துவிடுகிறான். விரைவில் அவனுக்கு வேலை கிடைக்க பரிகாரம் கூறுங்கள்.
- வேல்முருகன், திருநெல்வேலி.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் தசாநாதன் குரு வக்ரகதியில் அமர்ந்திருப்பதால் நற்பலன்கள் நிதானமாக நடக்கின்றன. சனி ஆறில் அமர்ந்திருப்பதால் தடைகளையும் போராட்டத்தினையும் சந்திக்க வேண்டியிருக்கும். என்றாலும் வருகின்ற ஏப்ரல் மாத்திற்குள்ளாக வேலை என்பது
கிடைத்துவிடும்.

எதிர்பார்ப்பிற்கு சற்று குறைவாக இருந்தாலும் கிடைக்கின்ற வேலையில் சேர்ந்து பணியாற்றச் சொல்லுங்கள். சம்பளத்தை பெரிதாக எதிர்பார்க்கக் கூடாது. 07.08.2021 வாக்கில் நிரந்தர உத்யோகம் என்பது கிடைத்துவிடும். அது முதல் நல்ல சம்பளமும் நல்ல வாழ்வும் அமைந்துவிடும். அதுவரை பொறுமையாக இருப்பது நல்லது. உங்கள் மகனின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பதால் சிறப்பான எதிர்காலம் என்பது அவருக்கு நிச்சயம் உண்டு என்பதைச் சொல்லிப் புரிய வையுங்கள்.

தோல்விகளைக் கண்டு துவளாமல் ஒவ்வொரு நேர்முகத் தேர்வையும் தனக்குரிய மாதிரித் தேர்வாக எண்ணி தைரியமாக எதிர்கொள்ளச்
சொல்லுங்கள். சனிக்கிழமை தோறும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று ராமநாமத்தை ஜபித்துக்கொண்டே சந்நதியை எட்டுமுறை வலம் வந்து வணங்கி வரச் சொல்லுங்கள். மூன்று மாதத்திற்குள் நிச்சயமாக உத்யோகம் கிடைத்துவிடும்.

?நான் அரசுத்துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவன். கடந்த ஐந்து வருடங்களாக மனைவி, பிள்ளைகளால் கடுமையான மன உளைச்சல், கவலைகள் ஏற்பட்டு வாழ்ந்து வருகிறேன். இங்குள்ள ஜோதிடர்கள் வீட்டைவிட்டு ஓடிவிடுங்கள் என்று கூறுகிறார்கள். 71 வயதாகும் எனக்கு இனி வரும் காலம் எப்படி அமையும்? என் பிரச்னைக்கு உரிய தீர்வு கூறுங்கள். தங்கள் பதிலை வைத்துதான் நான் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
- ராமலிங்கம், மதுரை.

71வது வயதில் இருக்கும் நீங்கள் வாழ்வினில் எத்தனையோ அனுபவங்களைப் பார்த்திருப்பீர்கள். சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தை ஆராயும்போது இளம் வயது முதலாகவே பல்வேறு பிரச்னைகளை சந்தித்தவர் என்பது தெரிய வருகிறது. ஏற்கெனவே நடுத்தர வயதில் நீங்கள் சந்தித்ததை விட பெரிய பிரச்னை ஒன்றையும் தற்போது சந்திக்கப் போவதில்லை. உங்களுடைய லக்னம் மற்றும் ராசி இரண்டுமே எதையும் தாங்கும் வலிமை படைத்தவை. அவ்வாறிருக்க யாருக்கும் நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியமும் இல்லை.

பிரச்னைக்கான தீர்வு வீட்டை விட்டு ஓடிவிடுவது என்றால் நாட்டில் யாரும் குடும்பமே நடத்த இயலாது. உங்கள் ஜாதகத்தில் சனியின் வக்ர சஞ்சாரமும், குருவின் நீச பலமும், சூரியன், செவ்வாய், சுக்கிரன், சந்திரன் ஆகியோரின் இணைவும் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் இவை அனைத்தையும் தாங்கும் வலிமையை இறைவன் உங்களுக்கு அளித்திருக்கிறார். நீங்கள் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவர்களால் உண்டாகும் பிரச்னையைப் பற்றியும் பெரிதாக அலட்டிக் கொள்ளாதீர்கள்.

அவர்களுடைய பிரச்னைக்கு நீங்கள் தீர்வு காண முயற்சிக்காதீர்கள். தவறு செய்பவர்கள் தண்டனையை அனுபவிக்கட்டும் என்று விட்டு
விடுங்கள். அதற்காக குடும்பத்தை விட்டு விலகுவது என்பது தவறு. நீங்கள் விலகினால் குடும்பமே சிதறிப்போய்விடும் என்பதை உணர்ந்து செயல்
படுங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் திருப்பரங்குன்றம் சென்று வேலவனை தரிசித்து கைநிறைய விபூதி வாங்கி உடம்பில் பூசிக் கொள்ளுங்கள். மந்திரமாவது நீறு என்பதை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்