SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா

2020-02-03@ 15:44:30

முருகப் பெருமான் குரு அம்சமாகத் திகழும் இரண்டு தலங்களில் ஒன்று சுவாமிமலை, மற்றொன்று திருச்செந்தூர். மலைகளே இல்லாத தஞ்சையில், சுவாமிமலை சுவாமிநாதர் கோயில் கொண்டிருப்பது கட்டு மலையில். அதாவது பாறைகளை அடுக்கி அமைக்கப்பட்ட செயற்கை குன்றில். முருகப் பெருமான், சுவாமிநாத சுவாமி மற்றும் தகப்பன் சுவாமி என்ற திருநாமங்களுடன் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். இத்தல விருட்சம் நெல்லி மரம். பாண்டியர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் பராந்தக சோழன் காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டது என்கிறார்கள்.

பக்தர்கள் சுவாமிமலையை அடைந்ததும் கோபுர வாசல் நடுவில் இருக்கும் தெய்வ பெண்கள் இருவரை வணங்கி அவர்களை வலம் வரவேண்டும் என்பது ஐதீகம். சந்நிதானத்தை அடைய 60 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தேங்காயை உடைத்து வழிபட்ட பிறகே படியேற வேண்டும். 2ம் பிராகாரத்தில் இருந்து 32 படிகள் ஏறிச் சென்றால் உச்சி (முதல்) பிராகாரம். இங்கு நேத்திர விநாயகர் சந்நதி கொண்டுள்ளார். பார்வை இழந்த ஒருவர், இந்த விநாயகரை வழிபட்டு பார்வை பெற்றதனால் இவருக்கு இந்தப் பெயர்.

(நேத்திரம் என்றால் கண் என்று பொருள்) இங்கு தரிசனம் தரும் சுப்பிரமணியர், இரண்டு கரங்களை நீட்டியவாறும், மேலும் இரு கரங்களை மேல்நோக்கியும் காட்டி நடராஜப் பெருமானை நினைவூட்டுகிறார். இவருக்கு சபாபதி என்றும் பெயர். சுவாமிநாதர் எழுந்தருளியுள்ள பீடம்,
சிவலிங்கத்தின் ஆவுடையாராகவும், சுவாமிநாதர், லிங்கத்தின் பாணமாகவும் காட்சியளிப்பதைக் காணலாம். இது ‘ஈசனே முருகன்; முருகனே ஈசன்’ எனும் தத்துவத்தை உணர்த்துகிறது. செவ்வாய்க்கிழமை மாலையில், நான்கு சரங்கள் கொண்ட சகஸ்ரார மாலை, வைரத்தாலான ஷட்கோணப்பதக்கம் முதலியனவும், வியாழக்கிழமைகளில் தங்கக் கவசமும், வைர வேலும்  அணிந்து அழகுக் கோலம் காட்டுகிறார் சுவாமி.

ஆபரண அலங்காரத்தின்போது, ராஜ கோலத்தினராகவும், சந்தன அபிஷேகத்தின்போது பாலகுமாரனாகவும், விபூதி அபிஷேகத்தின்போது முதியவர் கோலத்திலும் வித்தியாசமாகக் காட்சி தருகிறார். பழநியில் பால பருவத்தினனாகக் காட்சி தரும் முருகப் பெருமான், இங்கு வாலிப பருவத்தினனாகக் காட்சி தருவதாக ஐதீகம். மூலவரை பூஜிக்கும்போது, ‘ஓம் நமோ குமாராய நம’ என்று மந்திரம் உச்சாடனம் செய்யப்படுகிறது. இந்த மந்திரத்தை முதன் முதலில் ஓதி, முருகனை குருவாக ஏற்றுக் கொண்டவர் சிவபெருமான்.

உற்சவர் திருநாமம் சந்திரசேகரர். இவரின் மற்றொரு பெயர் சேனாபதி. பள்ளியறையில் இச்சா, கிரியா சக்திகள் தேவியர்களாக உள்ளனர். இங்கு காரணாகமம் முறைப்படியும், குமார தந்திர முறைப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன. வள்ளிமலை சுவாமிகள் ஒரு முறை, ‘அருணகிரிநாதர் முக்தி பெற்றநாள் எது?’ என்று சுவாமிநாதரை வேண்ட, ‘கார்த்திகை மாதம் மூல நட்சத்திரம்!’ என்று அசரீரியாக பதிலளித்தாராம் சுவாமி!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 09-05-2021

  09-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-05-2021

  07-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 04-05-2021

  04-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 03-05-2021

  03-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்