SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்ன சொல்கிறது என் ஜாதகம்?

2020-01-29@ 10:17:36


?ஐந்து வருடங்களாக வேலைக்குப் போகாமல் இருந்த என் மகன் தற்போது வேலை செய்கிறான். அவனுக்கு திருமணம் செய்யலாம் என்று யோசிக்கிறேன். குரு 9ம் பார்வை பார்ப்பதால் தற்போது செய்துவிட முடியும். தற்போது செய்யவில்லை என்றால் எப்போதும் முடியாது. தயவுசெய்து தாங்கள் கணித்துச் சொல்லவும்.
- சம்பந்தன், செய்யாறு.


குரு ஒன்பதாம் பார்வை பார்ப்பதால் மட்டும் திருமணம் நடந்துவிடாது. அரைகுறையாக ஜோதிடத்தை கற்றுக்கொண்டு தவறான கருத்துக்களை பரப்புபவர்களின் வார்த்தைகளை நம்ப வேண்டாம். இப்போது செய்யவில்லை என்றால் இனி எப்போதும் செய்ய இயலாது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணை கொண்டு கணித்துப் பார்த்ததில் தற்காலம் சூரிய தசையில் சனி புக்தி நடந்து வருகிறது என்பது தெளிவாகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் சனி ஒன்பதாம் பாவகத்தில் சஞ்சரிக்கிறார்.

உத்திராட நட்சத்திரக் காலில் அதாவது சூரியனின் அம்சத்தில் சனி சஞ்சரிப்பதால் தற்காலம் திருமணம் நடத்துவதை விட 09.04.2020ற்குப் பின் திருமணம் செய்வது நல்லது. புதன் புக்தியின் காலத்தில் திருமணத்தை நடத்துவதன் மூலம் அவருடைய வாழ்வு ஆனந்தமயமாக அமையும். தற்காலம் நடந்து வரும் நேரத்தின்படி சனிபகவானின் துணையுடன் அவர் தனது வேலையை நிரந்தரமாக்கிக் கொள்வதோடு முன்னேற்றமும் காண இயலும்.

தனது பணியில் முழு கவனத்தையும் செலுத்தி மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்க முயற்சிக்கச் சொல்லுங்கள். எதிர்காலத்தில் நடைபெற உள்ள தசைகள் அனைத்தும் அவருக்கு சாதகமான பலனையே தருவதால் எதிர்காலம் என்பது வெகு சிறப்பாக அமைந்துள்ளது. உங்கள் மகனுக்கு நிதானமாக பெண் தேடுங்கள். சித்திரை, வைகாசி மாத காலத்தில் அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறத் துவங்கிவிடும்.

?எனக்குத் திருமணமாகி 11 வருடங்கள் ஆகிறது. நாங்கள் இருவரும் தனியார் நிறுவனங்களில் தனித்தனியே பணிபுரிகிறோம். ஒரு பெண் குழந்தை உண்டு. எனது கணவருக்கு மனைவி- மகள் என்ற பாசம் கிடையாது. வந்தேன் - போனேன் என்று இருந்து வருகிறார். மகளும் அப்பா என்ற பாசமில்லாமல் இருக்கிறாள். எதிர்காலம் குறித்து கவலையாக உள்ளது.
- வசந்தா, உடுமலைப்பேட்டை.


ஒரு சிலருக்கு தலையெழுத்து இவ்வாறு அமைந்துவிடுகிறது. பூர்வ ஜென்ம கர்மா என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. உங்கள் மூவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்து பார்த்ததில் உங்கள் மகளின் எதிர்காலம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மகள் மட்டுமல்ல, உங்களது எதிர்காலம் குறித்தும் நீங்கள் பெரிதாக பயப்பட வேண்டிய அவசியமில்லை.

கணவரால் கிடைக்க வேண்டிய பலன் மட்டும் பெரிதாக உங்களுக்கு எதுவும் இருக்காது என்பதை புரிந்துகொள்ளுங்கள். எதிர்பார்ப்பின்றி இருந்தால் வாழ்வு நல்லபடியாக அமையும். மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தில் செவ்வாய்- சுக்கிரன் - ராகுவின் இணைவு அத்தனை உசிதமான பலனைத் தரவில்லை. உங்கள் கணவருக்கு அவர் மீதே நம்பிக்கை என்பது கிடையாது.
தன்னையே நம்பாத மனிதர் பிறரையும் நம்பப் போவதில்லை. அதனால் வாழ்வினில் எந்தவித பிடிப்புமின்றி நடந்துகொள்கிறார்.

தனது ஆணாதிக்கத்தை காட்டுகின்ற வகையில் அவ்வப்போது மனைவியை கைநீட்டி அடித்தும் வருகிறார். அவருடைய ஜாதகத்தில் புத்ர ஸ்தான அதிபதி சூரியனும் ஆறாம் வீட்டில் மறைவதால் தான் பெற்ற பிள்ளையின் மீதும் அதிக பற்றுதல் இன்றி இருக்கிறார். ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்திலும் லக்னாதிபதி குரு பகவான் எட்டில் அமர்ந்துள்ளதால் வாழ்வினில் கஷ்டங்களை சந்தித்து வருகிறீர்கள்.

கணவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஏழாம் பாவக அதிபதி புதன் அஸ்தமனம் பெற்றிருப்பதால் பலம் குறைந்து விடுகிறது. அதேநேரத்தில் புத்ர ஸ்தான அதிபதி சந்திரன் லக்னத்திலேயே அமர்ந்துள்ளதால் மகளை நல்லபடியாக வளர்த்து நல்ல வாழ்வினை அமைத்துத் தருவீர்கள். மகளும் உங்களை உயிருக்கு உயிராக பார்த்துக் கொள்வார்.

சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் மகளின் ஜாதகமும் இதனை உறுதி செய்கிறது. உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றியோ, மகளின் எதிர்காலத்தைப் பற்றியோ நீங்கள் பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மகளை நல்லபடியாக படிக்க வையுங்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் கணவரின் கையை எதிர்பார்த்து நிற்காமல் சொந்தக் காலில் நிற்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

எதிர்காலத்தில் உங்கள் கணவர்தான் உங்களுடைய உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழல் உருவாகும் என்பதையே உங்கள் ஜாதகங்கள் உணர்த்துகின்றன. தற்காலம் அவரை சமாளிக்கும் விதத்தை நன்றாக அறிந்து வைத்துள்ளீர்கள். அதன்படியே பொறுமை காத்து வாருங்கள். கடவுள் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் கைவிடாதீர்கள். காலம் உங்களுக்குத் துணை நிற்கும்.

?மனைவி குழந்தையுடன் 12 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தேன். விதியோ அல்லது சதியோ கடந்த 11 ஆண்டுகளாக நான் பிரிந்திருக்கிறேன். போகாத கோயில் இல்லை ஆனாலும் குடும்பம் இன்னும் ஒன்று சேரவில்லை. ஒற்றுமையாக இருந்த குடும்பம் எப்படி பிரிந்தது என்று என்னால் நம்பமுடியவில்லை. பிரிந்த குடும்பம் எப்போது ஒன்று சேரும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? என்ன சொல்கிறது என் ஜாதகம்?
- திருச்சி வாசகர்.


கணவன்- மனைவி இருவரும் ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் புரிந்துகொள்வதில் தோன்றிய பிரச்னையால் பிரிவினை என்பது உண்டாகி இருக்கிறது. இருவருமே கும்ப ராசிக்காரர்கள் என்றாலும் உங்கள் மனைவியின் ஜாதகத்தில் ராசியில் கேது இணைந்துள்ளதால் அவருக்கு மனத் தெளிவின்மை என்பது உண்டு. கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சந்திரன் எட்டில் அமர்ந்திருப்பதால் கஷ்டப்படுகிறீர்கள். லக்னாதிபதியே மனோகாரகன் ஆனதால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறீர்கள்.

ஆக மொத்தத்தில் இருவர் ஜாதகங்களிலும் மனோகாரகன் ஆகிய சந்திரன் பாதிக்கப்பட்டுள்ளதே இந்தப் பிரிவினைக்கு காரணம். விட்டுக்கொடுத்துச் சென்றிருந்தால் பிரச்னை உண்டாகி இருக்காது. இருவரது ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் உங்கள் ஜாதகமே வலிமை வாய்ந்தது.

அவரது ஜாதக பலத்தின்படி புரிந்துகொள்ளும் தன்மை குறைவு என்பதால் நீங்கள்தான் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். கௌரவம் பாராது நீங்களாக வலியச் சென்று குடும்பத்தை ஒன்றிணைக்க முயற்சியுங்கள். உங்கள் ஜாதகத்தில் தற்போது நடந்து வரும் புதன் தசையில் சுக்கிர புக்தியின் காலம் உங்கள் முயற்சியில் வெற்றி காண துணை புரியும்.

அவரது ஜாதகக் கணக்கின்படி தற்காலம் புதன் தசையில் ராகு புக்தியின் காலம் முடிவடையும் தருவாயில் உள்ளது. வருகின்ற தை மாதத்தில் முயற்சித்தீர்களேயானால் குடும்பம் ஒன்றிணைவதில் தடையேதும் இருக்காது. உங்கள் மனைவியின் ஜாதகத்தில் அவர் கன்யா லக்னத்தில் பிறந்திருப்பதாக குறித்திருக்கிறீர்கள். ஆனால் பிறந்த ஜனன உதயாதி நாழிகை அவர் துலாம் லக்னத்தில் பிறந்திருப்பதாகக் காட்டுகிறது. கன்யா லக்னத்தில் பிறந்திருந்தால் இத்தனை பிரச்னை உண்டாகி இருக்காது.

அவர் துலாம் லக்னத்தில் பிறந்தவர்தான் என்பதை இதுவரை நடந்துள்ள பலன்கள் உணர்த்துகின்றன. அங்கே இங்கே என்று எல்லா கோயில்களுக்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. உங்கள் ஊரில் மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவ ஸ்வாமியிடம் உங்கள் குறைகளை முறையிடுங்கள். குடும்பம் ஒன்றிணைந்தவுடன் இறைவனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் செய்வதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 2020ம் ஆண்டின் முற்பாதியிலேயே உங்கள் குடும்பம் ஒன்றிணைந்துவிடும். வாழ்வின் எஞ்சிய காலத்தை குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து
செலவிடுவீர்கள். கவலை வேண்டாம்.

?எனக்கு கையெழுத்தும் நன்றாக இல்லை, தலையெழுத்தும் நன்றாக இல்லை. ஏகப்பட்ட அவமானம். எங்கு சென்றாலும் என்னை வேண்டாம் என்று ஒதுக்குகிறார்கள். யாரும் என்னை மதிப்பது இல்லை. 33 வயது முடிகின்ற போதும் எந்த முன்னேற்றமும் இல்லை. திருமணமும் ஆகவில்லை. என் எதிர்காலம் எவ்வாறு அமையும்?
- செந்தில்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.


உங்கள் கடிதத்தில் நேர்மறையான எண்ணம் என்பது எங்கும் காணப்படவில்லை. முதலில் உங்கள் குணத்தினை மாற்றிக் கொள்ள முயற்சியுங்கள். உங்கள் கையெழுத்து நன்றாகத்தான் இருக்கிறது. நீங்களாக உங்கள் மனதினில் தாழ்வு மனப்பான்மையை அளவுக்கதிகமாக வளர்த்துக் கொண்டுள்ளீர்கள். எம்எஸ்சி, எம்ஃபில், எம்எட் படித்தால் மட்டும் போதாது, படித்தவற்றை வாழ்க்கையில் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.

 உங்கள் ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனோடு கேது இணைந்து விரக்தியைத் தந்தாலும் ஜென்ம லக்னத்தில் செவ்வாயும் ராகுவும் இணைந்திருப்பது பலமான நிலையே. உத்யோகம் என்பது தானாக யாரையும் தேடி வராது. நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும். அதிலும் உங்கள் ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தான அதிபதி குரு பகவான் 12ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் உள்ளூரில் உங்களுக்கான உத்யோகம் கிடைக்காது. நீங்கள் பிறந்த ஊரில் இருந்து வடக்கு திசை நோக்கி பயணிக்க வேண்டும்.

வடதிசையில்தான் உங்களுக்கான உத்யோகம் என்பது அமையும். உங்கள் தந்தையார் முன்னோருக்கு எந்த விதமான கடமையையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நிச்சயமாக அதன் பாதிப்பு உங்கள் வாழ்வினில் வெளிப்படத்தான் செய்யும் என்றாலும் அதற்குரிய பிராயச்சித்தங்களை செய்து அந்தப் பிரச்னைகளில் இருந்து வெளியில் வர முடியும். அதற்கு முன்னதாக நீங்கள் முதலில் ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டும். தற்காலம் நடந்து வரும் நேரம் என்பது நன்றாகவே உள்ளது.

சென்னை போன்ற பெருநகரத்தில் வேலையைத் தேடுங்கள். தனியார் பள்ளி, கல்லூரி அல்லது கோச்சிங் சென்டர்களில் பணி செய்யத் துவங்குங்கள். தற்போது வரை தனியாக இருந்து வரும் உங்களுக்கு சொற்ப சம்பளமே போதுமானது. பணத்தை பெரிதாக எண்ணாமல் முதலில் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் படிப்பிற்கு உரிய உத்யோகமே கிடைக்கும். விண்ணப்பமே போடாமல் இருந்தால் எந்த வேலையும் வீடு தேடி வராது.

நீங்கள் அனுப்பியிருக்கும் பெண்ணின் ஜாதகம் உங்கள் ஜாதகத்துடன் ஒத்துப் போகிறது. அவரையே நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்குப் பிறகும் வாழ்க்கை சிறப்பாகவே அமையும். உங்களுடைய பிரச்சினை வண்டி ஓடாமல் ஒரே இடத்தில் நிற்பது மட்டுமே ஆகும். வண்டியை நீங்கள் இன்னமும் ஸ்டார்ட் செய்யவில்லை. ஸ்டார்ட் செய்வதோடு ஆக்ஸிலேட்டரையும் சரியான முறையில் அழுத்திப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையின் வேகம் என்ன என்பதும், அடைய வேண்டிய இலக்கு எது என்பதும் கண்களுக்குத் தெளிவாகத் தெரிய வரும். நீங்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை மாற்றத்தினை 2020ம் ஆண்டின் மார்ச் மாதம் முதல் காண்பீர்கள். உங்கள் விருப்பத்தின்படியே திருமண வாழ்வினை அமைத்துக் கொள்ளலாம்.

வேலை கிடைப்பது என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது. நாற்பத்திமூன்றாவது வயதில் சொந்த வீட்டில் குடியேறுவீர்கள். உண்மையில் பரிகாரம் என்பது உழைப்பு மட்டுமே. செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று சந்நதியை ஆறுமுறை வலம் வந்து வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தினந்தோறும் கந்தசஷ்டி கவசத்தினை அதன் பொருளுணர்ந்து முழு ஈடுபாட்டுடன் சொல்லி வாருங்கள். புத்துணர்வு பெறுவதோடு வாழ்க்கையிலும் மாற்றத்தினை உணர்வீர்கள்.

?33 வயதாகும் என் மகனுக்கு கடந்த நான்கு வருடங்களாக பெண் பார்த்து வருகிறேன். ஆனால் எந்த பெண் வீட்டாரிடம் இருந்தும் சாதகமான பதில் வரவில்லை. அவன் ஜாதகத்தில் என்ன தடங்கல் உள்ளது என்று தெரியவில்லை. அவனது திருமணம் எப்போது நடைபெறும்?
- நாகராஜன், திருச்சி.


உங்கள் மகனின் ஜாதகத்தில் செவ்வாய், புதன், குரு, சனி ஆகிய நான்கு கிரஹங்கள் வக்ர கதியில் சஞ்சரிப்பதாக நீங்கள் அனுப்பியுள்ள ஜாதக நகல் தெரிவிக்கிறது. வக்ர நிலை என்பது கிரஹங்கள் செயல்படும் வேகத்தினைக் குறைத்துவிடும். அதன் பலன் யாதெனில் எந்த ஒரு விஷயமும் இவர்களுக்கு நிதானமாகத்தான் நடைபெறும். தற்போது 33 வயது ஆவதால் இனிமேல் பரிகாரம் ஏதும் அவசியமில்லை. உங்கள் மகனின் ஜாதக கணக்கின்படி தற்போது குரு தசையில் கேது புக்தி முடிவடைந்து சுக்கிர புக்தி என்பது துவங்கியுள்ளது.

பொதுவாக குரு தசையில் சுக்கிர புக்தி நடைபெறும் காலத்தில் எல்லோருடைய வாழ்விலும் நிரந்தரமான நன்மை என்பது நடக்கும்.
 அந்த விதியின்படி தற்காலம் உங்கள் மகனின் திருமணத்திற்கான நேரம் என்பது துவங்கிவிட்டது. அவரது ஜாதகத்தில் லக்னத்தில் கேதுவும் களத்ர ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்திருந்தாலும், ஏழாம் வீட்டின் அதிபதி செவ்வாய் நான்கில் உச்ச பலத்துடன் சஞ்சரிப்பது நல்ல நிலையே. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனுக்கு உறவு முறையிலேயே பெண் காத்திருக்கிறார்.
வெளியில் தேடாமல் உறவினர்களிடம் சொல்லி வையுங்கள்.

உங்கள் மகன் பிறந்த இடத்திற்கும் தெற்கு திசையில் இருந்து மணமகள் அமைவார். மணமகளின் பூர்வீகம் என்பது உங்கள் ஊரில் இருந்து தென்திசையில் அமைந்திருக்கும். உறவு முறையில் உள்ள பெண்ணாகத் தேடுங்கள். ஏழாம் பாவக அதிபதி செவ்வாய் என்பதால் திருச்சிக்கு அருகில் உள்ள விராலிமலைக்கு ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் சென்று சுப்ரமணிய ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தற்போது கல்யாண யோகம் வந்துவிட்டதால் வருகின்ற புத்தாண்டில் உங்கள் மகனின் திருமணத்தை நிச்சயம் நடத்தி விடுவீர்கள்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • humanbodies23

  2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

 • jammu23

  ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

 • yamuna23

  இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

 • chadpuja23

  சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

 • isrelviva23

  இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்