SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்த கோயில்? என்ன பிரசாதம்?

2020-01-29@ 10:07:10

திருநெல்வேலி... நெல்லையப்பரின் பெயரை நெஞ்சத்தில் தாங்கியிருக்கும் ஊர். நெல்லையப்பரும் காந்திமதியம்மனும் வரும் பக்தர்க்கு அருளை அள்ளி வழங்கும் அந்த ஊரில் இன்னொரு அம்மையும் முக்கியமான இடத்தை வகிக்கிறாள். அந்த அம்மைக்கும் நெல்லையப்பர் ஆலயத்துக்கும் நெருங்கிய தொடர்பும் உள்ளது.நெல்லை நகரம், நெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கில் உள்ளது புட்டார்த்தி அம்மன் கோயில். நெல்லை டவுனில் இருந்து பேருந்துகள் குளக்கரையை நோக்கித் திரும்பும் ஒருவழிப்பாதையில், நெல்லையப்பர் கோயிலின் வட மேல்புறத்தில் அமைந்திருக்கிறது அம்மன் கோயில்.

 இந்த இடத்தை பிட்டாபுரம் என்று அழைக்கிறார்கள். அம்மனுக்கு அதனால் பிட்டாபுரத்து நாயகி, பிட்டாபுரத்தம்மன் என்று பெயர் ஏற்பட்டது. இந்த அம்மைக்கு பிட்டாபுரத்தி, வடவாயிற்செல்வி, நெல்லைமாகாளி, செண்பகச்செல்வி என்றெல்லாம் பெயர்கள் வழங்கப்பட்டாலும், பேச்சு வழக்கில் புட்டார்த்தி அம்மன் என்றே அழைக்கிறார்கள். அம்மைக்கு பிட்டு நைவேத்தியம் மிகவும் புகழ்பெற்றது.

துர்க்கை, ஆர்த்தி என்ற சொற்களுக்கு துன்பம், கஷ்டம் போன்ற பொருள்கள் உண்டு. நம் துன்பம், கஷ்டங்களை நீக்குவதால் அம்மைக்கு துர்க்கை என்றும், ஆர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டது. சிவபெருமானுக்கு பிரணதார்த்திஹரன் என்று ஒரு பெயர் உண்டு. இந்தப் பிராணனுக்கு ஏற்படும் துன்பங்களை நீக்குபவன் என்னும் பொருளில் அந்தப் பெயர் வழங்கப்படும்.

இங்கே அம்மனுக்கும் அப்படித்தான். நாம் புட்டு அல்லது பிட்டு எனும் இனிப்பினை அம்மைக்கு நைவேத்தியமாக அளிக்க, நம் கஷ்டங்களை, சொல்லொணாத் துன்பங்களை, நம்மை அண்டும் துயரங்களை அம்மை அடியோடு நீக்கிவைப்பாள் என்னும் பொருளில் புட்டார்த்தி என்னும் பெயர் வழங்கப்படுகிறதாம்.

புட்டார்த்தி அம்மன் குறித்த கதைகள் நிறைய இங்கே உண்டு. அதில் ஒன்று, தாயுள்ளத்துடன் அம்மை நம்மை அணுகுவதைக் காட்டுகிறது. அன்னை பார்வதி தட்சயாகத்தின் போது யாகத்துக்குச் செல்ல வேண்டும் என்கிறாள். ஆனால் சிவபெருமானோ, தன்னை மதித்து அழைக்காத தட்சனின் யாகத்துக்கு செல்லக்கூடாது என்கிறார்.

இருப்பினும் தந்தை செய்யும் யாகத்துக்கு தட்டிக் கேட்கவாவது செல்லவேண்டுமே என்று பார்வதி தேவி சென்றுவிடுகிறாள். இதனால் வெகுண்ட சிவபெருமான் கோப அக்னியில் அன்னையைச் சுட்டு சாம்பலாக்கி விடுகிறார். சக்திக்கும் சிவத்துக்கும் இடையே நடக்கும் திருவிளையாடல் மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. அதுபோல்தான் இங்கும் நடந்தது.

தாழ்நிலையில் இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருத்தி, பிரசவ வேதனையில் தவித்தாள். அம்மையை அனுதினமும் துதித்துப் போற்றும் அவள், உதவுவார் இன்றி அலறிக் கதறினாள். அபலையின் குரல் அன்னைக்குக் கேட்டது. அய்யனின் அனுமதிக்குக் காத்திராமல் ஆலயம் விட்டு வெளியேறினாள் அம்மை. அபலைக்கு பிரசவம் பார்த்தாள். அதனால் அம்மைக்கு தீட்டு பட்டதாகக் கூறி, ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுத்தாராம் சிவபெருமான். அதனால், ஆலயத்துக்கு வெளியே வடமேற்கே துர்க்கையாக அன்னை கோயில் கொண்டாள் என்று ஒரு கதையைச் சொல்கிறார்கள் சிலர்.

வேறுசிலரோ, “”பெருமானுக்கு சிறுமை புகட்டுவதாக இது உள்ளது. உண்மையில் சிவபெருமானே தாயுமானவராகச் சென்று ஒரு பெண்ணுக்குப் பிரசவம் பார்த்திருக்கிறார். திருச்சி மலைக்கோட்டைத் தலவரலாறு அது. எனவே ஓர் அபலைக்கு பிரசவம் பார்த்ததால் அன்னையை அய்யன் தள்ளிவைத்தார் என்பது சரியல்ல. ஊருக்கு வெளியே அம்மை கோயில் கொண்டதற்கு வேறு காரணம் இருந்திருக்கும்’’
என்கிறார்கள்.

எப்படி இருப்பினும், பிட்டாபுரத்தில் கோயில் கொண்டதால் பிட்டாரத்தி அம்மன் எனப்பட்டாள். நெல்லையப்பரின் முதல் அம்பிகை இவளே என்பது செவிவழிச் செய்தியாக இங்குள்ளவர்களிடம் வந்தடைந்து சரளமாக புழங்கப்படுகிறது.அன்னை கருவறையில் ஆறடி உயரத்தில் ஐந்து அடி அகலத்தில் மிகப் பெரிய உருவில் காட்சி தருகிறாள். துர்க்கையாகக் காட்சி தரும் அம்மை, பீடத்தின் மேல் அமர்ந்தகோலத்தில் இருக்கிறாள். வலது காலை பீடத்தில் வைத்து, இடது காலை மடக்கிய நிலையில் அமர்ந்திருக்கிறாள். வலது கையில் சூலம் தாங்கியிருக்கிறாள்.

 சூலம் கீழ் நோக்கிய நிலையில் உள்ளது. காலுக்குக் கீழே அசுரன். அசுர சம்ஹார நிலையில் அன்னை காட்சி தருவதால், தம்மைப் பீடித்த தீவினை அகல அம்மையின் அருள் நாடி பக்தர்கள் இங்கே செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் குவிகிறார்கள்.

பிட்டாரத்தியம்மை அமர்ந்துள்ள நிலையையும், அம்மையின் மிகப் பெரும் திருவுருவையும், அந்தச் சிறிய சந்நதியையும் கண்ணுறும்போது, இந்தச் சந்நதிச் சுவர்கள் பிற்காலத்தில்தான் கட்டப்பட்டிருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. காரணம் இச்சிறிய கருவறையைக் கட்டிய பிறகு, இந்த அம்மனை இங்கே பிரதிஷ்டை செய்திருக்க இயலாது. எனவே, உறையூர் வெக்காளி அம்மன்போல், அல்லது சுயம்புவாக நெடுங்காலத்துக்கு இந்த அம்மன் வழிபடப்பட்டிருக்க வேண்டும்.

கோயிலின் கொடிமர மண்டபத்தின் தென்மேற்குப் புறத்தில், விநாயகர் அருள் பாலிக்கிறார். இவரின் இரு கைகள், தும்பிக்கை ஆகியவை பின்னமடைந்துள்ளன. இவரை அகோர விநாயகர் என்று வணங்குகிறார்கள். இவர் முன்புறம் அமர்ந்துதான் பூசாரிகள் அன்பர்களுக்கு திருநீறு பூசுகிறார்கள்.

நோயுற்ற குழந்தைகளுக்கு திருநீறு பூசி, அம்மனின் அபிஷேக நீர் எடுத்து முகத்தில் தெளிக்கிறார்கள். குழந்தைகளுக்கு பயத்தால் வரக்கூடிய நோய்களுக்கு மருந்தாக அம்மையின் திருநீறும் அபிஷேக நீரும் திகழ்கின்றன. மேலும் வேர்கட்டி மை இடுவதும் இங்கே பிரபலம்.இந்தக் கோயிலில் பிள்ளையார் மட்டுமல்லாது, மாடன், மாடத்தி, பிரம்மராட்சி, பேச்சி, பதினான்கு கன்னிமார்கள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். அதே சந்நதியில் உற்சவ விக்கிரகங்கள் உள்ளன.

இந்தக் கோயில் நெல்லையப்பர் கோயிலுடன் தொடர்பு கொண்டது. இக்கோயில் திருவிழாக்கள் முடிந்த பிறகே நெல்லையப்பர் கோயில் திருவிழா துவங்குகிறது. வைகாசி பத்து நாள் திருவிழா நிறைவில் பிட்டாபுரத்து அம்மனுக்கு தேர்த் திருவிழா முடிந்த பிறகு, ஆனி மாதத்தில் நெல்லையப்பருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. நெல்லையப்பரின் தேர் பிட்டாரத்தி அம்மன் ஆலய வீதிக்கு அருகே வந்தவுடன், சற்று நேரம் தயங்கித் தயங்கி நிற்குமாம். பின்னரே தேர் புறப்பட்டுச் செல்லும் என்பது இங்குள்ளவர்கள் பிட்டாரத்தி அம்மனுக்குச் சொல்லும் கதையுடன் தொடர்புகொண்ட நிகழ்வாக நடக்கிறது.

இங்கே சுகப் பிரசவம் ஆக, தாய்மார்கள் தொட்டில் கட்டி நேர்ந்து கொள்கிறார்கள். மேலும், குழந்தைகளின் பயம் உள்ளிட்ட சிலவகை நோய் தீர தொட்டில் கட்டி நேர்ந்து கொள்வதும் உண்டு. மகப்பேறு வேண்டியும், திருமணத் தடை நீங்கவும், மருத்துவத்தால் குணம்காணா நோய்கள் தீரவும் இங்கே புட்டார்த்தியம்மனை நம்பிக்கையுடன் வணங்கி சந்நதித் திருச்சுற்று வருகிறார்கள் பெண்கள்.

பொதுவாக, பிறந்தவுடனே குழந்தைகளை ஆலயத்துக்கு அழைத்துவரக்கூடாது என்பர். ஆனால் இங்கே பிறந்த குழந்தைகளை கூட ஆலயத்தினுள் எடுத்துவருகின்றனர். இதனால் எந்தத் தீட்டும் கிடையாது என்பது இங்குள்ள நம்பிக்கை. பிறந்த குழந்தைகளுக்கும் திருநீறு பூசி, அபிஷேக
நீர்தெளித்தல் நடக்கிறது.

ஆலயத்தில் வைகாசி மாத பத்து நாள் திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. ஆடி, தை மாத கடைசி செவ்வாய் அன்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. இங்கே கார்த்திகை தீபம், தை மாத பத்ர தீபம், கஞ்சிப் படையல் உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறுகின்றன.கோயில் இருப்பிடம்: நெல்லை டவுண், நெல்லையப்பர் கோயில் அருகில்.

பிரசாதம் - பிட்டு


தேவையான பொருள்கள்
பச்சரிசி : 1 kg
வெல்லம் : 1 ½ kg
ஏலக்காய்த்தூள் : தே. அளவு
கிராம்புத்தூள் . தே. அளவு

செய்முறை : முதலில் பச்சிரிசியை 5 மணிநேரம் நன்கு  ஊற வைக்கிறார்கள்… பின் ஊறவைத்த பச்சரிசியில் முழுவதுமாக தண்ணீரை வடித்து விட்டு நன்கு உணர வைத்து பின்பு அதை மாவாக  திரித்து நன்கு வாசனை வரும் வரை சிவக்க வறுக்கிறார்கள். அதில் சிறிது உப்பு நீர் தெளித்துப்பிசிறி கோயில் மடப்பள்ளியில் வெங்கலப் பானையில் தாம்பாளம் வைத்து அதன் மீது அம்பாளின் பட்டை விரித்து சேர்த்து வைத்த மாவை அதனோடு சேர்த்து வேக வைக்கிறார்கள். பின்பு வெல்லத்தை நன்கு பாகுபோல் காய்ச்சி மாவையும் வெல்லத்தையும் நன்கு பதமாக கலக்கிறார்கள்.

பின் வாசனைகளுக்கு ஏற்றார்போல் ஏலக்காய் தூளையும் கிராம்யுத்துளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இறுதியில் நன்கு வெந்தவுடன் மணல் மணலான மண மணக்கும் புட்டு  தயார்.

படங்கள் : சுடலை குமார்.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்