SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

2020-01-27@ 10:05:01

குருவருள் திருவருள்!

* என் குடும்ப சூழ்நிலை காரணமாக அதிகமாகப் படித்து நல்ல வேலையில் அமர முடியவில்லை. என் மகனை பி.இ., படிக்க வைத்தேன். அவனும் நிரந்தரமான நல்ல வேலையில் அமரவில்லை. திருமண வயதும் ஆகிவிட்டது. மன உளைச்சல், வாக்குவாதம், ஓய்வு பெற்ற பின்பும் வேலைக்குப் போக வேண்டிய நிலை. மகனின் தொழில் திருமணம் குறித்து ஒரு நல்ல செய்தி சொல்வீர்களா? என்ன செய்தால் விமோசனம்? - நம்மாழ்வார், ஸ்ரீரங்கம்.

அரங்கநாதனின் அருள் நிறைந்திருக்கும் பகுதியில் வசிக்கும் உங்களுக்கு அநாவசியமான மனக்கவலை எதற்கு? திருவோணம் நட்சத்தித்ரம், மகர ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகம் நன்றாகவே உள்ளது. திருவோணம் பெருமாளின் திருநட்சத்திரம் என்பது நீங்கள் அறிந்ததே. அதிலும் பெருமாளுக்கு மிகவும் விசேஷமான புரட்டாசி மாதத்தில் பிறந்திருக்கிறார். ஜாதகத்தில் புதன் மற்றும் குரு ஆகிய கிரஹங்கள் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார்கள். விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானம் ஆகிய 11- ல் புதன் மற்றும் சுக்கிரனுடன் இணைந்திருப்பது மிகவும் சிறப்பான நிலையே ஆகும்.

குரு பகவானும் ஒன்பதில் உச்சம் பெற்றிருப்பதால் அவரது உத்யோகம் என்பது உள்ளூரில் அத்தனை சிறப்பாக இருக்காது. வடநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதால் வட இந்திய பகுதியில் வேலை தேடச் சொல்லுங்கள். அவருக்கு உரிய அங்கீகாரத்துடன் கூடிய உத்யோகம் கிடைத்துவிடும். ஒன்பதில் இருக்கும் குருவுடன் கேது இணைந்திருப்பதால் ஆச்சாரிய அனுகிரஹம் என்பது அவசியமாகிறது.

உங்கள் குலகுருவாக விளங்கும் ஆச்சாரியனின் திருவடியைச் சரணடையுங்கள். ஆச்சாரிய பீடத்திற்கு உங்களால் இயன்ற கைங்கரியத்தைச் செய்வது நல்லது. குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும் என்பதை நினைவில் கொண்டு குடும்பத்துடன் சென்று ஆச்சாரியனை சேவித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. வரும் 2020 - ன் முற்பாதியிலேயே நல்ல உத்யோகமும், 12.06.2021 வாக்கில் திருமணமும் நடந்துவிடும். எதையோ இழந்துவிட்டது போன்ற மனநிலையை மாற்றிக்கொண்டு பெருமாளின் திருவருளால் எல்லாம் கிடைத்திருக்கிறது என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே ஸ்ரீரங்கத்தில் வசிக்க இயலும் என்ற உண்மையைப் புரிந்துகொண்டு பெருமாளின் நிழலில் வசிக்கும் நமக்கு என்றென்றும் அவனது அருள் நிலைத்திருக்கும் என்று நம்பினீர்களேயானால் வாழ்வினில் ஆனந்தம் என்பது என்றென்றும் சாஸ்வதமாய் நிலைத்திருக்கும்.

* என் மகளுக்கு திருமணம் நடந்து பத்து நாட்கள் மட்டுமே கணவனுடன் வாழ்ந்தார். அதன்பின்பு விவாகரத்து ஆகிவிட்டது. தற்போது நிறைய ஜாதகம் வருகிறது. ஆனால் பொருத்தம் சரியாக அமையவில்லை. மறுமணம் எப்போது அமையும், எதிர்கால வாழ்வு எவ்வாறு உள்ளது? எவ்வளவோ பரிகாரம் செய்தும் நல்ல பலன் கிடைக்கவில்லை. கண்ணீருடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். - ரேணுகா, பட்டுக்கோட்டை.

மறுமணத்திற்கு நிறைய ஜாதகங்கள் வந்தும் பொருத்தம் சரியாக அமையவில்லை என்று கடிதம் எழுதியுள்ளீர்கள். ஏற்கெனவே ஒரு முறை பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பதால் தற்போது அதிகப்படியான எச்சரிக்கை உணர்வுடன் மாப்பிள்ளை தேடி வருகிறீர்கள். அதீதமான எச்சரிக்கை உணர்வும், எதிர்பார்ப்பும் உங்கள் மகளின் மறுமணத்தை தடை செய்து வருகிறது. பஞ்சாங்கத்தின் துணைகொண்டு அவரது ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில் புனர்பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதம், மிதுன ராசியில் பிறந்துள்ள அவருக்கு தற்போது நடந்திருக்கும் குருபெயர்ச்சியானது சாதகமான பலனைத்  தருகிறது.

குரு பகவான் நேர் ஏழாம் பாவகத்தில் அமர்ந்து அற்புதமான பலனைத் தந்துகொண்டிருக்கிறார். வருகின்ற ஒரு வருட காலத்திற்குள் நிச்சயமாக நீங்கள் அவரது திருமணத்தை நடத்த இயலும். மேஷ லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் சனி அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டின் அதிபதி சுக்கிரன் எட்டாம் அதிபதி செவ்வாயின் இணைவினைப் பெற்றிருப்பதும் மறுமண யோகத்தினைத் தந்திருக்கிறது. தற்போது நடந்துவரும் நேரத்தின்படி நீங்கள் அவருடைய மறுமணத்திற்கான தேதியினைக் குறித்திருக்க வேண்டும்.

திருமணத்தை நடத்துவதற்கான சிறப்பான நேரம் நடந்துகொண்டிருப்பதால் காலதாமதம் செய்யாமல் விரைவாகச் செயல்படுங்கள். உடனடியாகத் திருமணத்தை நடத்தினால்தான் பிள்ளைப்பேறு என்பதை அடைய முடியும். அவரது வயதினை நினைவில் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் தாயாருக்கு மஞ்சள் புடவை சாத்தி உங்கள் மகளின் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். தற்போது நடைபெற உள்ள மறுமணத்தின் மூலம் உங்கள் மகள் மஞ்சள் குங்குமத்தோடு நீடுழி வாழ்வார். வருகின்ற 12.08.2020ற்குள் அவர் நல்லபடியாக குடும்பம் நடத்துவதை கண்குளிரக் காண்பீர்கள்.

*என் மகள் சி.ஏ. இறுதித் தேர்வு நான்கு முறை எழுதியும் தேர்வு பெறாததால் மிகவும் மன வருத்தத்துடன் திருமணத்தில் நாட்டமின்றி சோர்ந்து காணப்படுகிறாள். அவள் ஜாதகப்படி சி.ஏ. தேர்ச்சி பெறுவாளா? படிப்பிற்கேற்ற நல்ல வேலை அமையுமா? வெளிநாட்டு மாப்பிள்ளை அமையும் யோகம் உள்ளதா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
- கமலா, கோவை.

சிஏ படிப்பினைத் தருகின்ற கிரகமான புதனின் ஆட்சி பலத்தைப் பெற்றிருக்கும் உங்கள் மகளால் நிச்சயமாக ஒரு ஆடிட்டராக உருவாக முடியும். உங்கள் கடிதத்தில் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளாகக் கேட்டுள்ளீர்கள். முதலில் உங்கள் மகளின் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். அதோடு அவருக்கும் உற்சாகமூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவரது முயற்சிக்கு பக்கபலமாகத் துணை நில்லுங்கள். சித்திரை நட்சத்திரம் மூன்றாம் பாதம், துலாம் ராசியில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் தற்போது குருதசையில் புதன் புக்தி நடந்து வருவதாகத் தெரிகிறது.

படிப்பு,உத்யோகம் - திருமணம் இந்த மூன்றையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பது என்பது நமது சமூகத்தில் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. எல்லோரும் செய்து வரும் அதே தவறினை நீங்களும் செய்து வருகிறீர்கள். மகளின் படிப்பிற்கேற்ற உத்யோகமும், அதே போல உயர்ந்த உத்யோகத்தில் இருக்கும் மாப்பிள்ளையையும் தேடுகிறீர்கள். அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளை அமைவாரா என்றும் கேட்டிருக்கிறீர்கள். வெளிநாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளை என்றால் உயர்ந்தவர் என்ற தவறான கருத்து நம் எல்லோர் மனதிலும் ஆழப் பதிந்திருப்பது மிகவும் மன வருத்தத்தைத் தருகிறது. மிதுன லக்னத்தில் ஆட்சி பலம் பெற்ற புதனின் ஆசியினைப் பெற்றிருக்கும் உங்கள் மகளின் ஜாதக பலத்தின்படி அவருக்கு வெளிநாட்டு உத்யோகமோ, அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளையோ அமையாது.

திருமணத்தைக் குறிக்கும் ஏழாம் பாவகத்திற்கும், உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் பாவகத்திற்கும் அதிபதி குருபகவானே என்பதால் நல்ல குணத்தை உடைய மாப்பிள்ளை உங்கள் மகளுக்கு அமைவார். உள்ளூரிலேயே ஆசிரியர் உத்யோகத்தைப் பார்க்கும் உங்கள் உறவுமுறையைச் சேர்ந்த ஒருவர் உங்கள் மகளின் கணவராக அமைவதற்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. திருமணமும், உத்யோகமும் உங்கள் மகளுக்கு ஒரு சேர அமையும் என்பதால் திருமணத்திற்கான முயற்சியில் நீங்கள் இறங்கலாம். தற்போது நடந்து வருகின்ற நேரம் மிகவும் நன்றாக உள்ளது. மகளின் வயதினைக் கருத்தில் கொண்டு காலத்தை தள்ளிப்போடாமல் உடனடியாக திருமணத்திற்கான ஏற்பாட்டில் இறங்குங்கள். நேரம் நன்றாக உள்ளதால் பரிகாரம் எதுவும் தேவையில்லை. அவருக்கு அமைகின்ற கணவர் அவரை நல்லபடியாக படிக்க வைத்து உயர்ந்த உத்யோகத்தில் அமர வைப்பதோடு அவரது வாழ்விற்கும் வழிகாட்டியாக விளங்குவார். தைரியமாக திருமண ஏற்பாட்டினைச் செய்யுங்கள். வருகின்ற 01.10.2020க்குள் திருமணம் நடந்துவிடும்.

* என் மகளுக்கு ஜூலை 2017ல் திருமணம் செய்தோம். மருமகன் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிந்து மகள் பிரிந்து வந்துவிட்டாள். மகளின் ஜாதகத்தில் களத்திரம் மற்றும் மாங்கல்ய ஸ்தானத்தை சரிசெய்ய வழி காட்டுங்கள். எப்பொழுது என் மகள் வாழ்க்கை மலரும்? - சரோஜினி, சென்னை.

உங்கள் மகளின் ஜாதகத்தில் ஏழாம் பாவக அதிபதி சூரியனின் சஞ்சார நிலை கடுமையான தோஷத்தினைத் தந்திருக்கிறது. அவர் பிறந்த நேரத்தில்தான் சூரியன் எட்டாம் வீட்டிலிருந்து ஒன்பதாம் வீட்டிற்கு இடம் மாறுகிறார். எட்டாம் பாவகம் மற்றும் ஒன்பதாம் பாவகங்களின் சந்தியில் சூரியனின் சஞ்சாரம் இருக்கும் காலத்தில் உங்கள் மகளின் ஜனனம் உண்டாகியுள்ளது. கிருத்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதக பலத்தின்படி தற்போது ராகு தசை நடக்கிறது. ராகு 12ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் எதிர்பாராத இடைஞ்சல்களைத் தந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கி இருக்கிறார்.

மாங்கல்ய ஸ்தானம் ஆகிய எட்டாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருந்தாலும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி புதன் உச்ச பலத்துடன் அதே இடத்தில் சஞ்சரிப்பதால் மாங்கல்ய பலம் என்பது உண்டு. ஐந்தாம் வீட்டில் குருவின் அமர்வும் பத்தாம் வீட்டில் சுக்கிரனின் அமர்வும் நல்ல நிலையே. மறுமணத்திற்கு தற்போது அவசரப்பட வேண்டாம். உங்கள் மகளின் உத்யோகம் குறித்து நீங்கள் உங்கள் கடிதத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. தற்போதைய சூழலில் அவரது உத்யோகத்தில் அதிக கவனத்தைச் செலுத்தச் சொல்லுங்கள். வேலை பார்ப்பது என்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது. அடுத்த வருடத்தின் பிற்பாதியில் மாப்பிள்ளை பார்க்கத் துவங்குங்கள்.

25.03.2021ற்குப் பின் அவரது மறுமணம் என்பது நல்லபடியாக நடந்தேறும். ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியை அடுத்துள்ள ‘ஞாயிறு’ திருத்தலத்திற்குச் சென்று சூரிய பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுங்கள். கோதுமை மாவினால் செய்யப்பட்ட அப்பம் முதலான இனிப்பு வகைகளை நைவேத்யம் செய்து ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். மகளின் மறுமணத்தை திருத்தணி போன்ற முருகப்பெருமானின் ஆலயத்தில் வைத்து நடத்துங்கள். களத்ர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானத்தில் உண்டான குறைகள் நீங்குவதோடு உங்கள் மகளின் மணவாழ்வும் நல்லபடியாக அமையும்.

* எம்பிஏ படித்து வரும் என் மூத்த மகனுக்கு நல்ல வேலை கிடைக்குமா? தனியார் துறை, அரசுப்பணி, வங்கிப்பணி இவற்றில் எது அமையும்?  உரிய பரிகாரம் கூறவும். - சுந்தரம், ராணிப்பேட்டை.

உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களைக் கொண்டு ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில் தற்காலம் சந்திர தசையில் கேது புக்தி நடந்து வருகிறது என்பது புலனாகிறது. உங்கள் மகன் ஆவணி மாதத்தில் பிறந்திருப்பதால் சூரியன் ஆட்சி பலத்துடன் சஞ்சரிக்கிறார். என்றாலும் 12ம் வீட்டில் சூரியனின் அமர்வு உள்ளதால் அரசுப்பணிக்கான வாய்ப்பு இல்லை. பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னியா லக்னத்தில் ஜனித்திருக்கும் அவரது ஜாதக அமைப்பின்படி தனியார் வங்கியில் வேலை பார்ப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அவருடைய ஜாதகத்தில் புதன் மற்றும் குரு ஆகிய இருவரும் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நிதானமாகத்தான் பலன் என்பது கிடைத்து வரும். எந்த ஒரு செயலிற்கும் ஒரு முறைக்கு இரு முறை முயற்சி செய்ய வேண்டியது அவசியம். குரு பகவான் வக்ரம் பெற்றிருப்பதோடு நீச பலத்துடன் அமர்ந்துள்ளார். அதே போல மற்றொரு சுப கிரஹம் ஆன சுக்கிரன் ஜென்ம லக்னத்திலேயே நீசம் பெற்றுள்ளார். எனவே தனியார் வங்கி அதுவும் கிராமப்புறம் சார்ந்த இடங்களில் இவரது பணி அமையும். மாறாக நகர்புறத்தில்தான் வேலை வேண்டும் என்று நினைத்தால் தன்னை விட தகுதி குறைந்தவர்களுக்கு கீழ் அடிமைத் தொழில் பார்க்க வேண்டிய சூழல் உருவாகும்.

அவரது ஜாதக பலத்தின் படி 2020ம் ஆண்டின் இறுதியில் உத்யோகம் என்பது கிடைத்துவிடும். முதல் இரண்டு வருடங்கள் சற்று சிரமப்பட வேண்டியிருந்தாலும் எப்படியாவது சமாளித்து வேலை பார்க்கச் சொல்லுங்கள். வாய்ப்பினைத் தவறவிட்டால் பின்பு உத்யோகம் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பு ஆகிவிடும். உத்யோகம் கிடைத்தவுடன் திருமலை திருப்பதிக்குச் சென்று முடிகாணிக்கை செலுத்தி பெருமாளை சேவிப்பதாக பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள். நல்ல கௌரவம் நிறைந்த உத்யோகம் கிடைத்துவிடும்.

  சுபஸ்ரீ சங்கரன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையை த் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வை க்கும் உங்களுக்கு இப்ப�ோதே , வண்ணமய
மான, வளமான வாழ்க்கை க்கு வாழ்த்து தெரிவிக்கின்றோம். என்ன சொல்கிறது.

என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்