SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மர வழிபாட்டின் வேர்களைத் தேடி...3

2020-01-23@ 10:29:36


சில இனத்தவர் மரங்களின் கீழ் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் வைத்திருந்ததால் இம்மரத்தின் கீழ் மழை பொழியும் சடங்குகளை நிறைவேற்றினர். மரத்தின் கிளைகளை வெட்டி தண்ணீரில் நனைப்பதால் மரத்திலுள்ள தெய்வம் குளிர்ந்து மழை பொழிவிக்கும் என்று நம்பினர். ஐரோப்பாவில் பல இனங்கள் இந்த நம்பிக்கை உடையனவாகவே இருந்தன. மரங்கள் குளிர்வதால் மழை பொழியும் பயிர் செழிக்கும் என்று ஐரோப்பிய விவசாயிகள் ஆழமாக நம்பி மரங்களில் தண்ணீரை ஊற்றினர்.மரத்தில் தண்ணீர் ஊற்றுவதை போல மரத்தின் அடியில் சில மாற குச்சிகளை மட்டும் போட்டு நெருப்பு வளர்ப்பதும் உண்டு. அந்த நெருப்பின் புகையால் மேகம் சூழ்ந்து மழை பொழியும் என்று நம்பினர். இவை  ஆதி சமயத்தின் போனமை சடங்குகள் ஆகும். மனிதன் தனக்கு என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கின்றானோ, அதையே அவன் செய்து காட்டுவதாகும். மழை வேண்டுமெனில் தண்ணீரைக் கொட்டுவதுபோல மேகம் திரள வேண்டும் என்றால் புகை உருவாக்குவது என அக்காலத்தில் செய்யப்பட்ட சடங்குகளை ஜேம்ஸ் பிரேசர் என்ற அறிஞர் போன்மை [போல செய்தல்] சடங்குகள் என்றார்.

ஒரு தெய்வ மரம் சாய்ந்து விட்டால் ஊருக்கு அழிவு என்று அஞ்சினர். உடனே அதிலிருந்து ஒரு கிளையை எடுத்து மறு மரம் வளர்த்தனர். புது மரம் தளிர் விட்டதும் தமக்கு புது வாழ்வு கிடைத்ததாக நம்பி மகிழ்ந்தனர். இன்றைக்கும் நமது கிராமங்களில் இந்த வழக்கம் இருந்து வருகிறது. சாமி மரம் வாடக் கூடாது என்பது பொதுவான நம்பிக்கை. சாலைகள் அகலப்படுத்துவதற்காக மரங்களை வெட்ட நேர்ந்தால் உடனே, அதிலிருந்து ஒரு குச்சியை ஒடித்து எடுத்து நட்டு தழைக்க வைக்கின்றனர். வழிபாடுகள் மட்டுமல்லாது பொது மன்றமாகவும் மரத்தடிகள் விளங்கின. வெல்டன் என்ற இனத்தவர்கள் புனித மரத்தின் கீழ் உட்கார்ந்து சண்டை சச்சரவுகளை பேசித் தீர்த்து வைத்தனர். இந்த மரத்தடி ஒரு பொது மந்தைபோல விளங்கியது. இன்றைக்கும் தமிழக கிராமங்களில் மரத்தினடியில் அமர்ந்து பஞ்சாயத்து பேசுவதும் அந்தப் பகுதியை மந்தை என்று அழைப்பதும் அங்கு மந்தையம்மன் என்ற பெயரில் தெய்வம் ஒன்றை வைத்து வழிபடப்பட்டதும் பின்னர் மந்தையம்மன் கோயில்கள் மாரியம்மன் கோயில்களாக உருமாறியதும் உண்டு.

இந்த மரவழிபாட்டின் தோற்றம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தால் மக்கள் உயரமான வானத்தை நோக்கிச் செல்லும் மரங்களை நம்மை உயரே அல்லது மேலே அழைத்துச் செல்லும் ஒரு வாகனமாக நம்பினர். மேலே இருக்கும் அதீத சக்திகளிடம் அமானுஷ்ய சக்திகளிடம் மனிதர்களைக் கொண்டு போகும் சக்தி வாய்ந்தனவாக பிற்காலத்தில் ஸ்தூபிகள், கொடி மரம், கோயில் ஸ்தல விருட்சங்கள் நம்பப்பட்டன இந்த நம்பிக்கையே பின்னர் கோயில்களில் கொடி மரம் வைக்கும் பழக்கத்தையும் கொண்டு வந்தது.  ஆரம்பத்தில் மலை, மரம் போன்றவை தெய்வம் உறையும் சக்தி உடையவையாக நம்பப்பட்டு வந்த பின்னர் தானே கோயில் போன்ற உயரமான கட்டிடங்களை கடவுளுக்கு  எழுப்பும்போது அதில் கொடி மரத்தையும் தூண்களையும் மனிதர்கள் அதாவது மன்னர்கள் எடுப்பித்தனர்.

தமிழகத்தில் மர வழிபாடு ஆலமரம், அரசமரம், வேப்ப மரம் என்பதோடு நின்று போய்விடவில்லை. மானாமதுரை அருகே வேதியரேந்தல் என்ற ஊரில் பெயர் தெரியாத ஒரு மரம் வழிபடும் மரமாக நான்கு ஊர்க்காரர்களுக்கு விளங்குகிறது. இந்த மரத்திற்கு பெயர் கிடையாது. இந்த மரத்தின் அடியில் ஒரு சாமியார் வந்து இருந்ததனால் அவர் தண்ணீர் தேடி மண்ணுக்குள் போய்விட்டதனால் அவரை முனீஸ்வரர் என்று அழைத்து அங்கு அவர் நினைவாக ஒரு முனீஸ்வரர் சிலையும்  இப்போது வைத்திருக்கின்றனர். இந்த வேதியரேந்தல் கிராமத்தில் நெடுங்குளம், பூக்குளம், கீழ் பசலை, இளைய நாயக்கன் ஆகிய நான்கு ஊர்களைச் சேர்ந்த மக்களுக்கும் இம்மரம் குலதெய்வமாக இருக்கின்றது. இம்மரம் தரையோடு தரையாக படர்ந்து ஒரு அதிசய மரமாக அமைந்துள்ளது. இந்த மரத்தின் நிழலில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

உருவ வழிபாடு வேண்டி அங்கு வைக்கப்பட்டிருக்கும் முனீஸ்வரரை தர்ம முனீஸ்வரர் என்று அழைக்கின்றனர். ஒரு சாமியார் தாகம் தாங்காமல் மரமாக மாறி பூமிக்குள் போல் வேரோடி வேர்களின் மூலமாக தனது தாகம் தீர்த்தார். அதாவது அவர் மரமாகிப் போனார். அந்த மரத்தை அங்கு வாழ்ந்த மக்கள் தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். மர வழிபாடு காலப்போக்கில் அபூர்வ மரங்களை [rarespecies] இனம் கண்டு அவற்றை வழிபாட்டுக்குரியனவாகக் கருதினர்.  பின்னர், அபூர்வ மரங்கள் இருந்த இடத்தில் தெய்வ சக்தி இருக்கின்றது என்ற நம்பிக்கையில் அங்கு கோயில்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு ஸ்தல விருட்சம் அமைந்ததும் இதன் வழியில்தான் எனலாம். திருவானைக்காவலில் தலவிருட்சமாக இருக்கும் வெண் நாவல் மரம் ஒரு அபூர்வ வகையை சேர்ந்தது ஆகும்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் காசி விஸ்வநாதர் கோயிலில் இருக்கும் வில்வ மரம் அபூர்வமான ஏழு இலை வில்வ மரமாகும். இது போன்ற அபூர்வ மரங்கள் ஆரம்பத்தில் வழிபடப்பட்டு சைவ சமய எழுச்சிக்குப் பிறகு பின்னர் தல விருட்சங்களாக ஏற்றுக்  கொள்ளப்பட்டன. நாகை மாவட்டத்தில் உள்ள திருவிற்குடி திருப்பயன்குடி ஆலயம் உண்டு. இங்கு சிலத்தி மரம் என்பது ஸ்தல விருட்சமாக இருக்கிறது. இந்த சிலத்திமரம் சித்திரை முதல் நாளில் இருந்து வைகாசி 18 ஆம் நாள் வரை சுமார் 48 நாட்கள் மட்டுமே பூ பூக்கும். இது ஒரு அபூர்வ மரமாகும். மதுரைக்கு கடம்ப மரமும் பிள்ளையார்பட்டிக்கு  மருதமரமும், சிதம்பரத்திற்கு தில்லை மரமும் காஞ்சிக்கு நான்கு வகை சுவையுடைய காய் காய்க்கும் மா மரமும் என

ஒவ்வொரு தெய்வ தலத்துக்கும் ஒவ்வொரு மரம் சிறப்பான மரமாக தலவிருட்சமாக போற்றப்படுகிறது. பின்னர் ஸ்தல புராணங்கள் எழுந்த காலத்தில் இந்த ஸ்தல விருட்சங்களும் அந்தப் புராணத்தில் முக்கிய இடத்தைப் பெற்று விட்டன. இந்த மரத்தின் அடியிலும் தெய்வ தரிசனம் தெய்வ பரிகாரங்கள் நடந்ததாக கதைகள் எழுதப்பட்டன. நாட்டுப்புறக் கதை வடிவங்களில் சமய நம்பிக்கைகளில் வன்னி மரம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மகாபாரதக் கதையில் பஞ்ச பாண்டவர்கள் வன்னி மரத்தினடியில் தங்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்துவிட்டு போனதாகவும் மீண்டும் அவற்றை வந்து எடுத்து பூஜை செய்த நாளே ஆயுதபூஜை நாளாக கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர நாயக்கர் காலத்தில் முஸ்லிம்கள் இந்து பெண்களை பெண்டாள நினைத்தபோதும் பெண் கேட்டு வந்த போதும் தங்கள் பெண்ணைக் காப்பாற்றுவதற்காக குடும்பம் குடும்பமாக இடம் ஊர் விட்டு ஊர் இடம் பெயர்ந்தனர். அவ்வாறு இடம் பெயர்ந்து வந்த போது வன்னிமரம் ஆற்றின் நடுவே குறுக்கே விழுந்து இவர்கள் மறுகரைக்குச் செல்ல உதவியதாகவும் முஸ்லிம்கள் ஆற்றின் கரையில் வந்து நின்றபோது அவர்கள் ஆற்றை கடக்க இயலாத வகையில் மரங்கள் நிமிர்ந்து கொண்டன என்றும் கதைகள் சொல்லி வருகின்றனர். இதனால் வன்னி மரம் பல இனங்களுக்கு குலதெய்வமாக விளங்குகின்றது.

இதுபோல வேறு சில மரங்களும் இதே கதையின் மறு வடிவங்களாக இருப்பதை நாட்டுப்புறவியல் நமக்கு விளக்குகின்றது. கதையில் பெண் கொள்ள வரும் ஆதிக்க சாதியினர் அல்லது இனத்தவர் அரச வகுப்பினர் மாறியுள்ளனர். அபூர்வ மரங்கள் மற்ற மரங்களை விட வித்தியாசமானதாக தோன்றியதால் அவற்றில் தெய்வ சக்தி குறைந்து இருப்பதாக எண்ணி ஆதிகால மனிதன் பயந்து மரங்களுக்கு பலி கொடுத்து பூஜைகள் செய்து மரத்தில் உறைந்திருக்கும் சக்திக்கு சாந்தப்படுத்தினார். மரத்தில் உறையும் தெய்வம் தன்னைக் காக்க வேண்டும் என்று வணங்கி சில காணிக்கைகளையும் தனக்கு உயர்வாக தோன்றும் பொருட்களையே அவன் இறைவனுக்கு காணிக்கையாக கொடுத்தான்.

மர வழிபாடும் மரத்தில் உறையும் தெய்வ சக்தி பற்றிய நம்பிக்கைகளும் பௌத்த மதத்தில் இயற்கை வழிபாட்டில் இன்றும் காணப்படுகின்றன. மரத்தில் யட்சி  உறைந்திருப்பதாக பௌத்த மதத்தில் நம்பிக்கை  உண்டு. பவுத்தம் செல்வாக்கு பெற்றிருந்த கேரளத்தில் யட்சி என்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இசக்கி என்றும் இத்தெய்வம் அழைக்கப்படுகிறது.  மேலும் மரத்தில் உறையும் தெய்வீக சக்தி நல்ல சக்தியாக இருந்து மனிதர்களுக்கு பாதுகாப்பும் வளமும் தருவதாக இருக்க வேண்டும் என்ற பயத்தில் மக்கள் மரங்களில் உள்ள தெய்வத்தை வழிபட்டனர்.

பௌத்தம் பிரபலமாக இருந்த கேரளாவில் பல இடங்களில் மரங்கள் வெறும் மரங்களாகவே என்றும் வழிபடப்பட்டு வருகின்றன. அமிர்தபுரி என் அருகில் உள்ள ஊர் சேரி என்ற இடத்தில் பெரிய பெரிய மரங்களாக  ஒரே இடத்தில் ஐந்து ஆறு மரங்கள் இருக்கின்றன. அவை தெய்வ சக்தி உள்ளவையாக பரம் பொருள் என்று அழைக்கப்பட்டு இன்றைக்கும் சிறப்பு வழிபாடுகள் தினமும் நடக்கின்றன. ஆல மரங்கள் இருக்கும் பகுதியில் பிள்ளையாரை அதன் அடியில் வைத்து அதனை வழிபடு பொருளாக கருதியதற்கு இன்னொரு முக்கிய காரணமூம் உண்டு.

பூமிக்கடியில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் மட்டுமே ஆலமரம், அரச மரம் மற்றும் நாவல் மரம் வளரும். எனவே இம்மரங்கள் பெரும்பாலும் குளக் கரைகளில் ஆற்றங்கரைகளில் காணப்படும் இந்த மரங்களை பாதுகாத்தால் அடியில் இருக்கும் நீரோட்டம் பாதுகாக்கப்படும் என்பதாலும் இந்த மரத்தில் தெய்வம் உறைந்திருப்பதாக நம்பிக்கையை உருவாக்கி அங்கு தெய்வச் சிலைகளை வைத்து மரத்தையும் மதத்தையும் ஒரு சேரப் பாதுகாத்து வந்தனர் தெய்வம் உறைந்திருக்கும் மரங்கள் என்றால் அதனை யாரும் சேதப்படுத்த மாட்டார்கள். ஆக.. அந்த மரங்களும் பாதுகாக்கப்படும் மரங்களின் உதவியால் மனிதர்களுக்கும் பல நன்மைகள் ஏற்படும்.

ஆதிகால மனிதன் மரங்களை தெய்வமாக வழிபட்டு வந்தபோது தன்னை ஏதேனும் ஒரு தாவரத்தின் வழி வந்தவனாக நம்பிக் கொண்டான். இதனால் அந்தத் தாவரம் அவனுடைய குல முதல்வராக, மூத்தவராக நம்பப்பட்டது அதனால் அவன் அந்தத் தாவரத்திற்கு சேதம் விளைவிப்பது கிடையாது. மரம், செடி, கொடி, பறவை, விலங்கு ஆகியவை அவனுடைய குலமுதல்வனாகக் [totem] கருதப்பட்டது. இதனையே செங்கீரை கூட்டம், காடை கூட்டம், குருவிக் கூட்டம் என்று மக்கள் தங்களுக்கு பெயர் வைத்துக் கொண்டு அழைக்கின்றனர். செங்கீரை கூட்டத்தார் செங்கீரையை பறித்து உணவாக்கி உண்பது கிடையாது. காடை கூட்டத்தார் காடையை உண்ண மாட்டார்கள். இவ்வாறு இந்த மரங்கள் அல்லது இந்த செடி, கொடிகள் அவர்களின் குல முதல்வராகக் கருதப்பட்டன.

(வேர்களைத் தேடுவோம்)
* முனைவர் செ. ராஜேஸ்வரி


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

 • biharele28

  கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

 • pakistanbomb27

  பாகிஸ்தானில் மத பாடசாலையில் பயங்கர குண்டு வெடிப்பு!: சிறுவர்கள் உள்பட 7 பேர் பலி...70க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்