SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எல்லாம் இறைவன் செயல்..!

2020-01-23@ 10:25:03

என்ன சொல்கிறது என் ஜாதகம்

* நல்ல வேலையில் இருக்கும் நான் ஒருவரை விரும்புகிறேன். அவர் வீட்டில் அனைவருக்கும் என்னை பிடித்துள்ளது. ஆனால், என் வீட்டிலோ வேண்டாம் என சொல்கிறார்கள். எனது திருமணம் எவ்வாறு நடைபெறும்?
- சுனிதா, கடலூர்.

அடிப்படையில் உங்கள் இருவரின் ஜாதகங்களும் வெற்றியைத் தரக்கூடிய அளவிற்கு பலம் பொருந்தியவை. உங்கள் இருவருக்கும் உத்யோக பலம் என்பது சிறப்பாக அமைந்துள்ளது. என்றாலும் திருமணம் என்று வரும்போது பல முக்கியமான அம்சங்களையும் ஆராய வேண்டியுள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் கணவரைப் பற்றிச் சொல்லும் களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் வீட்டில் சூரியன்-சுக்கிரன் ஆகியோரின் இணைவு உண்டாகி உள்ளது. ஆட்சி பெற்ற சூரியனுடன் களத்ர காரகன் சுக்கிரனும் இணைந்துள்ளார்.

அதோடு காதலைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் பாவக அதிபதி புதன் எட்டில் அமர்ந்துள்ளதால் காதல் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியே. ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்திலும் காதலைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் பாவகத்தில் கேதுவும், ஐந்தாம் பாவக அதிபதி செவ்வாய் எட்டில் நீசம் பெற்றிருப்பதும் காதல் விஷயத்தில் வெற்றியைத் தராது. அதே நேரத்தில் மனைவியைக் குறிக்கும் ஏழாம் பாவக அதிபதி புதன் சாதகமான இடத்தில் உள்ளதால் நல்லதொரு மண வாழ்வு என்பது உண்டு.

உங்கள் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்ததில் தனிப்பட்ட முறையில் இருவருக்கும் நல்ல சம்பாத்யத்துடன் கூடிய வேலை, அற்புதமான திருமண வாழ்வு, வசதி வாய்ப்புகளுடன் கூடிய வாழ்க்கை என்ற அம்சங்கள் நிறைந்துள்ளன. அதே நேரத்தில் பரஸ்பரம் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்துகொண்டு நல்லபடியாக வாழ முடியுமா என்ற கேள்விக்கான விடை என்பது சாதகமாக அமையவில்லை. இருவரும் நண்பர்களாகவே பிரிந்து அவரவருக்கான வாழ்வினை குடும்பத்தினரின் ஆலோசனையின் பேரில் தேர்ந்தெடுத்துக் கொள்வதே நல்லது.

உங்கள் இருவருக்குள்ளும் உண்டாகியிருப்பது இனக்கவர்ச்சியே அன்றி உண்மையான காதல் அல்ல. வருகின்ற ஏப்ரல் 2020 முதல் இந்த உண்மையை தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள். அதுவரை திருமண விஷயத்தில் அவசரப்படாமல் பொறுத்திருங்கள். 2020ம் ஆண்டின் பிற்பாதியில் உங்கள் இருவருக்கும் தனித்தனியாக திருமண வாழ்வு என்பது சிறப்பாக அமைந்துவிடும். வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் நன்மை-தீமைகளை ஆராய்ந்து நிதானமாக முடிவெடுத்து செயல்படுங்கள். உங்கள் இருவருக்கும் தனித்தனியே அற்புதமான வாழ்வு காத்திருக்கிறது என்பதையே உங்கள் இருவரின் ஜாதகங்களும் தெளிவாக உணர்த்துகிறது.

* எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாத எனக்கு இவ்வளவு கடன் தொல்லைகள் எப்படி வந்தன? கடந்த 1991ல் குறைந்த தொகைக்கு என் வீட்டை இழந்தேன். சமீபத்தில் கைரேகை பார்த்த ஒருவர் உங்கள் வீடு உங்களுக்கு மீண்டும் கிடைக்கும் என்றார். நம்பலாமா? யாருக்கும் எந்த தொந்தரவும் இன்றி என் மரணம் நிகழுமா? -  அனந்தராமன், வேலூர்.

மிகப்பெரிய வங்கியில் பணியாற்றிய நீங்கள் மோசடியின் மூலம் வீட்டை இழந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு உங்களது கவனக்குறைவுதான் காரணம் என்பதை உணர்ந்திருப்பீர்கள். எல்லாம் இருந்தும் அதனை அனுபவிக்க இயலாத அம்சம் என்று சொல்வார்கள். அதுபோன்ற அம்சத்தைக் கொண்டது உங்கள் ஜாதகம். அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதம், கும்ப ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் கடன் தொல்லையைப் பற்றிச் சொல்லும் ஆறாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு ஆறாம் வீட்டிற்கு அதிபதியும் செவ்வாயே என்பதால் சற்று போராடி நீங்கள் ஜெயித்திருக்கலாம். பொறுமையிழந்து தொல்லை விட்டால் போதும் என்ற எண்ணத்தில் குறைந்த தொகைக்கு வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டு தற்போது அதன் மதிப்பு ஒன்றரை கோடி என்று ஆதங்கப்படுவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை. உங்கள் ஜாதகத்தில் குருவும் சனியும் ஒன்றாக இணைந்து குருசண்டாள யோகத்தினைத் தந்திருக்கிறது. எந்த ஜென்மத்தில் பட்ட கடனோ இந்த ஜென்மத்தில் தீர்ந்துவிட்டது என்று எண்ணி அமைதி கொள்ளுங்கள்.

தற்போது நீங்கள் ஓரளவிற்கு நன்றாக வாழும் அளவிற்கு ஓய்வூதியம் என்பது வந்துகொண்டிருக்கிறது. அதனைக்கொண்டு திருப்தி அடையுங்கள். 79வது வயதில் இருக்கும் நீங்கள் இனிமேல் மனதில் எந்தவிதமான ஆசையையும்வளர்த்துக் கொள்ளாமல் எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணத்துடன் செயல்படுங்கள். நீங்கள் இழந்த சொத்தினை மீண்டும் அடைவதற்கான வாய்ப்பு உள்ளதாக உங்கள் ஜாதகம் சொல்லவில்லை. எதிர்பார்ப்பினைத் தவிர்த்து இறைவனின் பால் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். தேவையற்ற ஆசைகளால்தான் உடல்நிலை பாதிப்பிற்கு உள்ளாகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படியும் இனி வரும் தசாபுக்திகளின் அடிப்படையிலும் ஆராயும்போது நீங்கள் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுவதற்கான வாய்ப்பு இல்லை. யாருக்கும் எந்த தொந்தரவும் தரமாட்டீர்கள். இறைவனின் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களால் யாருக்கும் எந்தவிதமான தொல்லையும் கிடையாது என்பதையே உங்கள் ஜாதகம் உணர்த்துகிறது.

* 30 வயதாகும் என் மகனுக்கு இதுவரை அரசுவேலை கிடைக்கவில்லை. தற்சமயம் ஒரு தனியார் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இவருக்கு முன்னேற்றம் உண்டாகுமா? திருமணம் எப்போது கூடி வரும்? ஏதேனும் வெளிநாடு சென்று பொருள் ஈட்டும் வாய்ப்பு உள்ளதா? திருமணத்திற்குப் பின் பெற்றோருடன் கூடி வாழும் நிலை அமையுமா?
- பிரகாஷ், காஞ்சிபுரம்.

தை மாதத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் சிறப்பான எதிர்காலம் உண்டு என்பது புலனாகிறது. தற்போது ராகு தசையின் தாக்கத்தினை அனுபவித்து வரும் அவருக்கு அடுத்து வரவுள்ள குரு தசை என்பது சிறப்பான நற்பலனைத் தரும். 34வது வயது வரை சற்று போராட்டத்தினை சந்திக்க வேண்டியிருக்கும். ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தான அதிபதி ஆகிய புதன் ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்துள்ளதால் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். தற்போது பணி புரிந்து வரும் நிறுவனமே நல்ல அனுபவ பாடத்தினைக் கற்றுத் தருகிறது. அந்த நிறுவனம் சார்ந்த பணியையே 35வது வயது முதல் சொந்தமாக இவரால் தனித்துச் செய்ய இயலும். சுயதொழில் என்பது நல்ல லாபத்தினைத் தரும். வெளிநாடு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு இல்லை.

33வது வயதில் திருமணம் நடந்துவிடும். மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் ஜென்ம லக்னாதிபதி குரு அமர்ந்திருப்பதால் நற்குணங்களுடன் கூடிய மனைவி அமைவார். அவருக்கு வர உள்ள மனைவியால் குடும்பம் நல்ல முன்னேற்றம் காணும். திருமணத்திற்குப் பின் தாய் - தந்தையரை விட்டு பிரிந்து போகக்கூடிய அம்சம் எங்கும் காணப்படவில்லை. சொந்த ஊரில் இவருக்கான தொழில் அமையாது. தற்போது பணிபுரியும் ஊருக்கு அருகிலேயே அவரது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள இயலும். 35வது வயது முதல் சொந்த முயற்சியாலும், சுயதொழிலைச் செய்வதாலும் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்வார் என்பதை உங்கள் மகனின் ஜாதகம் உணர்த்துகிறது.

*  என் மகனுக்கு மூன்று வருடமாக பெண் பார்த்து வருகிறேன். பி.காம், எம்பிஏ படித்திருக்கும் அவனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும்? - இராஜரத்தினம், மாதவரம்.

உங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் ராகுவும், ஏழாம் வீட்டில் உண்டாகியுள்ள சுக்கிரன்-கேதுவின் இணைவும் அவரது திருமணத்தை தடை செய்து வருகிறது. என்றாலும் ஏழாம் வீட்டின் அதிபதி ஆகிய புதன் ஐந்தில் அமர்ந்திருப்பதால் அவரது மனதிற்குப் பிடித்தமான வகையில் பெண் அமைந்துவிடுவார். பூச நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் தற்போது சுக்கிர தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. அடுத்து வரவுள்ள சந்திர புக்தியின் காலத்தில் அதாவது 29.07.2020க்கு மேல் திருமணம் கூடி வரும். அதற்கு முன்னதாக சுக்கிரன் மற்றும் கேதுவிற்கு உரிய சாந்தி பரிகார பூஜைகளை உங்கள் குடும்ப புரோஹிதரின் துணைகொண்டு செய்து முடிப்பது நல்லது. வெள்ளிக்கிழமை தோறும் அருகிலுள்ள பசுமாட்டுத் தொழுவத்திற்குச் சென்று பசுவிற்கு உங்கள் மகனின் கைகளால் அகத்திக்கீரை வாங்கித் தரச் சொல்லுங்கள். அவரது மனதிற்கு பிடித்தமான வகையில் அன்பும் அழகும் கூடிய பெண் மனைவியாக வருவார் என்பதையே அவரது ஜாதகம் தெளிவாகச் சொல்கிறது.

* அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற எனக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் செய்தாகிவிட்டது. கடன்சுமை இருப்பதால் நிம்மதியின்றி தவிப்பாக உள்ளது. 75 வயதாகும் எனக்கு எஞ்சிய ஆயுட்காலத்திற்குள் பொருளாதாரம் சீர்பட்டு கடன்சுமை சரியாகிவிடுமா? பூர்வீக சொத்து கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டா? - தஞ்சை மாவட்ட வாசகர்.

உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களைக் கொண்டு ஜாதகத்தைக் கணித்துப் பார்த்ததில் தற்காலம் கேது தசையில் சனி புக்தி நடந்து வருகிறது என்பது புலனாகிறது. மாசி மாத அமாவாசை நாளில் பிறந்திருக்கிறீர்கள். அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாதம் கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் (துலாம் லக்னம் என்று தவறாக உங்கள் ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது) ஜனித்திருக்கும் உங்களது ஜாதக அமைப்பின்படி நீங்கள் தற்போது இருந்து வரும் கடன்சுமையைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கேது தசை வரை நீடிக்கும் இந்த கடன் சுமை சுக்கிர தசை துவங்கியதும் குறையத் தொடங்கிவிடும். கடன் பிரச்னையைப் பற்றிச் சொல்லும் ஆறாம் பாவகம் சுத்தமாக இருப்பதால் கடனாளி என்ற பெயர் உங்களுக்கு வந்து சேராது. பூர்வீக சொத்தினால் பெருத்த ஆதாயம் காணும் அம்சம் உங்கள் ஜாதகத்தில் இல்லை.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மனைவியின் ஜாதகம் வலிமை பொருந்தியது. அவர் அருகில் இருந்தாலே உங்கள் பிரச்னைகள் அனைத்தும் காணாமல் போய்விடும். புதன் தசையில் புதன் புக்தி நடப்பதற்கான பலனைக் கண்டு வரும் அவரது ஜாதகத்தில் தன லாபாதிபதி ஆகிய புதன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பான அம்சம் ஆகும். அவரது ஜாதக பலத்தின்படி தற்போது தனலாபம் என்பது வந்து சேரும்.

உங்கள் இருவரின் ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது உங்கள் மனைவியின் ஜாதகம் சிறப்பான பலன்களைத் தருகின்ற வகையில் அமைந்துள்ளது. உங்கள் கடன் பிரச்னைகளைத் தீர்க்கின்ற வகையில் அவரது ஜாதகம் சகல ஐஸ்வரியங்களையும் தந்துவிடும். பூர்வீக சொத்திற்கான ஆதாயத்தை அனுபவிக்கும் அம்சம் அவருக்கு உண்டு. இருவரின் ஜாதக பலத்தின்படி 2021ம் ஆண்டின் பிற்பாதியில் உங்கள் கடன் பிரச்னைகள் முற்றிலுமாகக் குறைந்துவிடும். கடன்பிரச்னையால் மன நிம்மதியின்றி தவிப்பதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். தவிப்பினை விடுத்து மன மகிழ்ச்சியுடன் மனைவியோடு பொழுதினைக் கழித்து வாருங்கள். பெற்ற மகள்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் சரிவர செய்திருக்கும் உங்களுக்கு கடன்சுமை என்பது பெரிய பிரச்னையே இல்லை என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள். முதுமையில் மன நிம்மதியோடு வாழ்வினைக் கழிப்பீர்கள் என்பதையே உங்கள் இருவரின் ஜாதகமும் தெளிவாக உணர்த்துகிறது.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chinacoal28

  சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து திடீரென வெளியேறிய கார்பன் மோனாக்சைடு: மூச்சுத்திணறி 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!!

 • 26-09-2020

  26-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்