SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகளின் ஆனந்த பொங்கல் எங்கே?

2020-01-14@ 15:05:00

தைப்பிறந்தால் வழிப்பிறக்கும்
தங்கமே தங்கம்
தங்கசம்பா நெல்விளையும்
தங்கமே தங்கம்...

தமிழர்களின் திருநாள் என பெருமைக்குரிய தைத்திருநாளில் விவசாயிகள் தங்களுக்கு ஒன்றுக்கு நூறாய் அள்ளித்தந்த பூமிக்கு காப்பு கட்டியும், மாதம் மும்மாரி பொழிந்து பயிர் செழித்து வளர உதவிய வான்மழைக்கு நன்றி தெரிவித்தும், பூப்பூத்து காய்காய்த்து கலனியை பெருகச்செய்த கதிரவனுக்கு வணக்கத்தை செலுத்தியும், தங்களோடு தங்களாக ஓய்வில்லாமல் உழைத்த காளைமாடுகளை கனிவோடு உபசரித்தும், சூரியஉதயத்தில் எழுந்து அஸ்தமனம் வரை உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பரிசை நினைத்து அகமகிழ்ந்து விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல்மணிகளையும் கிழங்குகளையும் கொண்டு ஆனந்த கூத்தாடும் திருவிழா தைப்பொங்கல் திருநாள்.

உத்ராயனகாலமான சித்திரை மாதம் முதல் நாள் காளைமாடுகளை குளிப்பாட்டி, ஏர்கலப்பை செதுக்கி, மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களை சுத்தம் செய்து, நல்ல நேரத்தில் ஊர்மக்கள் கூடி ஊருக்கு பொதுவான நிலத்தை தேர்வு செய்து சூரியனை நமஸ்கரித்து இறைவன் வழிபாட்டோடு நிலத்தை உழுது, முதல் விதையை விதைத்து விவசாய பணியை துவக்குவர். அது முதல் நாள் கொண்டு சித்திரை, வைகாசி, ஆனி, மாதம் வரை நிலங்களை பண்படுத்தி, உழுது ஆடிப்பட்டத்திற்கு நிலத்தை தயார் நிலையில் வைத்திருப்பர்.

ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் மழை பொழியத்துவங்கியவுடன் விதைப்பை துவங்குவர், ஆற்றுபாசனம், கிணற்று பாசனம், கண்மாய் பாசனம் உள்ள விவசாயிகள் நெல், கரும்பு, வாழை, மஞ்சள்கிழங்கு உள்ளிட்ட பயிர்களையும் வானம் பார்த்த பூமியை சேர்ந்த மானாவாரி விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு, வெள்ளைசோளம், கருப்புசோளம், சிவப்புசோளம், கம்பு, தினை, குதிரைவாலி, பருத்தி, எள், சூரியகாந்தி, உள்ளிட்ட நவதானிய வகைகளையும் பயிரிடுவர், ஆதிகாலம் தொட்டு இன்று வரை பூமி, வானம், கதிரவன், மழை, காற்று, பனி என இயற்கையை மட்டுமே முழுமையாக நம்பி தனது வாழ்க்கை பயணத்தை தொடரும் விவசாயிகள் மழை பெய்து கெடுத்தாலும், மழை பெய்யாமல் கெடுத்தாலும் இயற்கை மேல் கொண்ட நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக கொண்டு விவசாயத்தை உயிர் மூச்சாக கருதி வாழ்ந்து வருகின்றனர்.

சித்திரையின் கடும் வெயிலில் காய்ந்தும், ஆடிக்காற்றில் அலைக்கழிந்தும், ஐப்பசி கார்த்திகையில் மழையில் நனைந்தும், மார்கழி பனியில் உரைந்தும் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் போட்ட `முதல்' சேதாரமில்லாமல் நெல்மணிகளாகவும் நவதானியங்களாகவும் வீடு வந்து சேரும். பசி, தாகம், சந்தோசம், துக்கம் அனைத்தும் மறந்து உழைத்து சோர்ந்த விவசாயிகளுக்கு தைமகளின் பரிசாக கிடைக்கும் மகசூலை கண்டு பூரிப்படைந்து கொண்டாடும் விழா தைப்பொங்கல்.

மாதக்கணக்காக உழைத்த கடும் உழைப்பை மறந்து விவசாயிகள் உழவர் திருநாள், தைத்திருநாள், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், போகிப்பண்டிகை என பல வடிவங்களில் தங்கள் சோகம் மறந்து விவசாயிகளின் திருநாளான தைத்திருநாள் தற்போது வியாபார திருநாளாக மாறிப்போனது. உலகிற்கே படியளக்கும் விவசாயிக்கு தைத்திருநாளில் ஒரு முழம் கரும்பும், ஒரு படி அரிசியும், ஆழாக்கு பருப்பும், அரைக்கிலோ சர்க்கரையும் இலவசமாக வழங்குகிறோம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என அரசு நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் இலவச பொருட்கள் வழங்குகிறது.

ஆம் அங்கிருந்துதான் ஆரம்பமாகிறது வியாபார பொங்கல்... தேனும் தினைமாவும், பச்சரிசியும், சர்க்கரை பாகும், முற்றிய கரும்பும், வாழையும், மஞ்சளும், இளநீரும், தேங்காயும் என இனிய சுவைகளோடு கொஞ்சி குலாவிய நாவும், உதடுகளும் இன்று ரசாயன குளிர்பானங்களால் சுரணையற்றுப்போனது. ஏழைகள் பயன்படுத்திய எளிமையான உணவுகள் இன்று அவர்களுக்கு எட்டாக்கனியாகி போனது. நாட்டு கம்மக்கஞ்சியும் தினைச்சோறும் குதிரைவாலி சாதமும், கஞ்சி என்ற பெயர்மாறி ஏழைகளுக்கு எட்டாத ஆர்கானிக்ஸ் புட்டாகி போனது. செல்வந்தர்கள் ஒதுக்கி தள்ளிய உணவுகள் ஏழைகளுக்கு அமிர்தமாக அடையாளம் காட்டப்பட்டது.

பிரமமுகூர்த்தம் என்று போற்றப்படும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து முதல் நாள் கம்மங்கூழில் இருந்து எடுக்கப்பட்ட அமிர்தமான நீச்சுதண்ணீரும், மதிய வேளையில் வயல் வெளியில் வெயில் சுட்டெரிக்கும் போது பருகும் இளநீரும் பருகி களைப்பற்று இருந்த விவசாயிக்கு கலர்கலராய் பானங்கள் சத்து என்று பறைசாற்றப்பட்டது. கம்மங்கூழும், இளநீர் எங்களுக்கு சொந்தம் என பறித்துக்கொண்டது. சிரட்டையில் டீ குடித்தால் தாழ்ந்த சாதி அடையாளம் என மோதலை ஏற்படுத்திவிட்டு ஸ்டார் ஓட்டலில் அதே சிரட்டையில் தேநீர் அருந்தும் கூட்டம் நாங்கள் உயர்ந்த சாதி என்று ஒய்யாரத்தில் நிற்கிறது.

ஆளும் வேலும் பல்லுக்கு உறுதியென்று இருந்த தமிழனின் வாயில் ரசாயன கலவை பற்பசையையும் மக்காத பிளாஸ்டிக்கையும் திணித்து நாகரிகம் என்றது. கைக்கு எட்டிய தூரத்தில் வேப்பங்குச்சி இருந்தும் சூப்பர்மார்க்கெட்டில் மட்டுமே கிடைக்கும் அரியா பொருள் என மக்களுக்கு அடையாளம் காட்டியது. பாக்கெட் பாலில் தான் பவர் அதிகம் என கிராம மக்களுக்கு பிரச்சாரம் செய்து விட்டு நாட்டு பசும்பாலில் நாவை கழுவுகிறது. உப்பும் கரியும் தேவர்களுக்கே கிடைக்காத அறிய பொருள்போல் அதை நாங்கள் அட்டை பெட்டியில் உங்களுக்கு அடைத்து தருகிறோம் என பாசாங்கு செய்கிறது.

மானத்தை மறைத்த கோவணமும், லங்கோடும் அணிந்த மனிதனை அரைவேக்காடு என்றது. கந்தல் துணியும் கைத்தறி ஆடையும் கிழிந்த ஜீன்சும், இன்று நவநாகரீக ஆடையானது. எது எல்லாம் தங்களுக்கு தேவையில்லையோ பயன்படுத்த உகந்தது இல்லையோ அதையெல்லாம் விவசாய ஏழைகளுக்கு தள்ளிவிட்டு எட்டாத உயரத்தில் இருந்து மகிழ்ச்சியாக கலப்படம் இல்லாத அரிசியில். சுத்தமான நெய்யில், முனைமுறியாத கரும்பில், ரசாயன உரம் சேர்க்காத உணவுப்பொருளை பயன்படுத்தி ஒரு கூட்டம் தைப்பொங்கல் கொண்டாடுகிறது. இங்கு விவசாய நிலங்களில் மட்டும் அல்ல மனங்களிலும் ரசாயனம் என்னும் நஞ்சை விதைத்து விட்டு வேடிக்கை பார்க்குது. நாம் கொண்டாடுவது விவசாயிகள் திருநாள் அல்ல வியாபார திருநாள்...

- த.சு.குமரன். எட்டயபுரம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ooty_flower

  பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

 • bharat111

  சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

 • charles_kameela

  3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

 • arungatchimmaa1

  சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்