SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆருத்ரா தரிசனத் தலங்கள்

2020-01-09@ 17:24:24

10.1.2020 - ஆருத்ரா தரிசனம்

*  சென்னை பட்டாபிராம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது சித்துக்காடு. இங்குள்ள நெல்லீஸ்வரர் திருத்தலத்தில் திருவாதிரை தினத்தன்று நடராஜர், சிவகாமி இருவருக்கும் மாணிக்கவாசகர் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது. பின் ராஜகோபுரம் முன்பு காலை 10 மணிக்கு திருவெம்பாவை இசைக்கப்பட்டு, மூன்று முறை பார்வேட்டை நடைபெறுகிறது.

*  நடராஜரின் பஞ்சசபைகளில் ஒன்றான வடாரண்யேஸ்வரர் ஆலயம் திருவாலங்காட்டில் உள்ளது. இத்தல நடராஜர் சந்நதியில் தீர்த்த பிரசாதம் தருவதும் இந்திய தேசத்தின் வரைபடம் போல் நடராஜரின் திருவுருவம் அமைந்திருப்பதும் சிறப்பு அம்சங்கள்.

*  பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் அருளும் நடராஜருக்கு பங்குனி உத்திரத்தன்றும் அபிஷேகம் செய்கின்றனர். விரிசடை இல்லாத இந்த நடராஜப்பெருமானுக்கு இருபுறங்களிலும் திருமால் கோமுனியாகவும் நான்முகன் பட்டிமுனியாகவும் வீற்றுள்ளனர். இத்தலத்தில் நடராஜப்பெருமான் ஆடும் நடனம் ஆனந்தத் தாண்டவம் என வழங்கப்படுகிறது.

*  கரூர் அருகில் உள்ளது புகழிமலை வேலாயுதம் பாளையம். அங்கு உள்ள பாலசுப்ரமண்ய சுவாமி ஆலயத்தில் திருவாதிரை விழா விமரிசையாக நடைபெறுகிறது. மலையடிவாரத்தில் நடராஜருக்கும் சிவகாமியன்னைக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின் இருவரும் கிரிவலம் வருவார்கள். அப்போது அவர்களை தரிசித்தால் திருமணத்தடைகள் நீங்கும்.

*  பாண்டிய மன்னன் ராஜசேகரனுக்காக தன் காலை மாற்றி ஆடிய நடராஜரை மதுரையில் வெள்ளியம்பலத்தில் தரிசிக்கலாம். திருவாதிரை தினத்தன்று அதிகாலை 3.30 முதல் 5.30 வரை இவருக்கு பதினாறு வகையான அபிஷேகங்கள் விமரிசையாக நடக்கின்றன. பின் தைலக்காப்பு சாத்தி, வெள்ளிக்கவசம் அணிவித்து, திருவெம்பாவை பாடி, களியமுது பிரசாதம் படைக்கின்றனர். அந்நாளில் சோமசுந்தரப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*  திருச்சி சமயபுரத்தருகே, ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் ஆலயத்தில் பஞ்சநதனம் எனும் கல்லில் வடிக்கப்பட்ட நடராஜர் அருள்கிறார். சிறுநீரக பாதிப்புக்குள்ளானவர்கள் இந்த நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாத்தி, பின் பிரசாதமாக அதை திரும்பப் பெற்று, அதைத் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை அருந்தினால் சிறுநீரக பாதிப்புகள் விரைவில் குணமாவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

*  குலோத்துங்க மன்னனுக்கு ஈசன் நடராஜ வடிவத்தில் தன் திருநடனத்தைக் காட்டியருளிய தலம் முன்னூர். திண்டிவனம்&மரக்காணம் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஆலங்குப்பத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது, இத்தலம். தீராத நோய்கள் தீர இத்தல நடராஜரும் ஈசனும் அருள்கிறார்கள்.

*  ஈரோடு அருகே காங்கேயம்பாளையத்தில் நட்டாற்றீசர் ஆலயம் உள்ளது. பொதிகைக்குச் செல்லும் வழியில் அகத்தியருக்கு ஈசன் நட்டாற்றில் பாறை மீது தரிசனம் அளித்த திருத்தலம் இது. இங்கு திருவாதிரை திருநாளில் நடராஜப்பெருமானும் சிவகாமியம்மையும் பரிசலில் எழுந்தருள்வார்கள். இன்னொரு பரிசலில் மேளதாளங்கள் முழங்க ஈசனும் அம்பிகையும் ஆலயத்தைச் சுற்றி வலம் வருவதைக் காணக் கண்கோடி வேண்டும்.

*  சின்னமனூரில் உள்ள தேனியில், மாணிக்கவாசகருக்கு தனிக் கோயில் உள்ளது. நடராஜரின் திருவருளைப் பெற்று அவருடனேயே ஐக்கியமான மாணிக்கவாசகரை திருவாதிரை தினத்தன்று நடராஜரைப் போலவே அலங்கரித்து கோபூஜை, வீதியுலா நடத்துகின்றனர். ஆண்டவனின் திருக்கோலத்தில் அந்த அடியாரைக் காணும் கண்கள் பாக்கியம் பெற்றவை.

*  நடராஜப்பெருமானின் திருமுன் அமர்ந்து குடமுழா எனும் வாத்தியக்கருவியை இசைக்கும் நந்திதேவரை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில், கீழப்புலிவார்டு சாலையில் உள்ள பூலோகநாதர் ஆலயத்தில் தரிசிக்கலாம். இந்த நடராஜர் கல்வி சிறக்கவும் வீடுமனை வாங்கவும் அருள்வதாக பக்தர்கள்
நம்புகின்றனர்.

*  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து படவேடு செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள காமக்கூர் சந்திரசேகரர் ஆலயத்தில் சதுரதாண்டவ நடராஜப் பெருமானை தரிசிக்கலாம். கால்கள் இரண்டையும் மடக்கி முன்னும் பின்னுமாக சதுரவடிவில் வைத்தபடி பெருமான்  நடனம் ஆடும் அரிய திருக்கோலம் இது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • RamMandirBhoomiPoojan05

  ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு

 • ayothikkk1

  மின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்

 • italy_96611

  வயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்!!

 • umilneer11

  உமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி!!

 • 25-07-2020

  25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்