எந்த கோயில்? என்ன பிரசாதம்?
2020-01-03@ 09:47:56

* திருநாராயணபுரம் (மேல்கோட்டை) - புளியோதரை
புராணங்களில் மேல் கோட்டையை பத்ம கூடா, புஷ்கரா, புத்ம சேகரா, அனந்த மாயா, யாதவ கிரி, நாராயணாத்ரி, வேதாத்ரி, வித்யா (ஞான) மண்டல், தட்சிண பத்ரி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. யதுகிரி பர்வதத்தில் அமைந்துள்ள இத்தலம் ஒரு மலை வாசஸ்தலம். இத்தலத்தில் இரண்டு முக்கிய கோயில்கள். பல மடங்கள், புனித தீர்த்தங்கள், மற்றும் பல தர்ம சாலைகளும் உள்ளன பெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருட் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற்கோணமாக அமைந்துள்ளன அவையாவன.
தெற்கு திசை ஸ்ரீரங்கம் - (தமிழ்நாடு) ஸ்ரீ ரங்கநாதன்.
கிழக்கு திசை - காஞ்சீபுரம், ஸ்ரீ வரதராஜன்.
வட திசை - திருப்பதி (ஆந்திரா) திருவேங்கடவவன்.
மேற்கு திசை - மேல் கோட்டை- திருநாராயணபுரம்.
இவ்வளவு சிறப்புப் பெற்ற இந்த திவ்யஸ்தலம் திருநாராயணபுரம் நான்கு யுகங்களிலும் ப்ரஸித்தி பெற்றது. க்ருத யுகத்தில் ஸநத்குமாரரால் நாராயணாத்ரி என்றும், த்ரேதா யுகத்தில் தத்தாத்ரேயரால் வேதாத்ரி என்றும் த்வாபர யுகத்தில் ஸ்ரீபலராமன் கிருஷ்ணரால் யாதவாத்ரி என்றும் வழங்கப்பட்டது. இக்கலியுகத்தில் யதிராஜரால் யதிஸ்தலமென்றும் வழங்கப்படுகிறது. மேலும், ஸ்ரீரங்கத்தை - போக மண்டபமென்றும், திருமலையை புஷ்ப மண்டபமென்றும் பெருமாள் கோயிலை - தியாக மண்டபமென்றும் திருநாராயணபுரத்தை - ஞான மண்டபமென்றும் பெரியோர்கள் கூறுவர். இந்த ராமாநுஜரின் அபிமான ஸ்தலத்தில் இரண்டு திருக்கோயில்கள் மலை மேல், கோட்டையில் அமைந்துள்ளன அவை நரசிம்மர் ஆலயம், இரண்டாவது நாராயணர் ஆலயம். நாராயணர் ஆலயத்தில் மூலவர் :- திருநாராயணன், சங்க சக்ர, கதை, முதலியவைகளுடன் நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம், சரணங்களில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்) சரணங்களில் வணங்கிய முடி. உத்ஸவர் : சம்பத் குமாரர், இதர பெயர்கள் - ராமப் பிரியர், செல்வ பிள்ளை, செல்வ நாராயணன்.தாயார் - யதுகிரி நாச்சியார், மேலும் பூமி தேவி, வரநந்தினி நாச்சியார்.தீர்த்தம் - கல்யாணி தீர்த்தம், வேத புஷ்கரணி, தனுஷ் கோடி தீர்த்தம் முதலிய 8 தீர்த்தங்கள்.விமானம் - ஆனந்தமய விமானம்
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இதர மூர்த்திகள்: வண்புகழ் நாரணன் :- ஸ்நபனபேரர், (நாராயண பகவான் பக்கத்தில்) நித்ய திருமஞ்சனம் கண்டருளுகிறார். வாழ் புகழ் நாரணன், பலி செல்வர், செல்வப் பிள்ளை சந்நதியில் சேவை சாதிக்கிறார். நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் செல்வ நாரணன், திருநாரணன். வண்புகழ் நாரணன், வாழ்புகழ் நாரணன் என்று நான்கு திருநாமங்களையும் அனுபவிக்கலாம். வைரமுடி சேவை நாளில் கருடன் கொணர்ந்த வைரத்தாலான கிரீடம் செல்லப் பிள்ளைக்கு சாற்றப்பட்டு, தங்கத்தாலான கருடன் மீது மாட வீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளச் செய்யப்படுகிறது. வைரமுடியை பகலில் காண இயலாது என்ற நம்பிக்கையின் கண் இந்த வைரமுடி சேவை இப்போதும் இரவுப் பொழுதிலே தொடங்கி விடியும் முன் முடிக்கப்பட்டு விடுகின்றது. மேலும், வைர முடி சாற்றும் போதும் பிரதான அர்ச்சகர் தன் கண்களை மெல்லிய துணியால் கட்டிய பின்னரே வைர முடியை அதற்குண்டான பெட்டியிலிருந்து வெளியில் எடுக்கிறார். கருடனுக்கு வைநதேயன் என்ற பெயரும் உண்டு. எனவே கருடனால் கொணரப்பட்டது “வைநதேய முடி” என்றழைக்கப்பட்டு, “வைநமுடி” என சுருங்கி பின்னர் “வைரமுடி” என மருவியுள்ளது.இந்த புஷ்கரணி சகல பாபங்களையும் நீக்க வலிமையுள்ளது. அதனால் அதன் நீரை தலையில் சிறிது தெளித்துக்கொண்டு அதை சுற்றியுள்ள மணடபங்களையும் அதில் காணப்படும் சிற்பங்களையும் பார்த்து ரசித்துவிட்டு அங்கு அந்த குன்றின் மேல் உள்ள யோக நரசிம்மர் கோயிலுக்கு செல்லலாம்..
கிருமி கண்ட சோழன் என்ற அரசன் சைவ மதப்பற்றினால் ராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான். இதனால் கூரத்தாழ்வாரின் ஆலோசனைப்படி ராமானுஜர் வெள்ளை சாத்தி, தமிழ்நாட்டைவிட்டு கர்நாடக தேசத்துக்கு வந்தார். அப்போது ஜைன மதத்தை ஆதரித்து வந்த விட்டல தேவராயன் என்ற மன்னன் இந்த இடத்தை ஆண்டு வந்தான். அவனது மகளுக்கு சித்தபிரமை பிடித்திருந்தது. அதனை நீக்க ஜைனத் துறவிகளால் முடியாமல் போக, ராமானுஜர் உதவியால் அது நீங்கியது. இதைக் கண்ட பிட்டிதேவன் ஜைன மதத்தைத் துறந்து, வைஷ்ணவன் ஆனான். ராமானுஜர் அவனுக்கு விஷ்ணுவர்தனன் என்ற பெயரைச் சூட்டினார். இந்த மன்னன் மேல்கோட்டை கோயிலுக்குப் பல உதவிகள் செய்துள்ளான். உதயகிரி மலையில் திருக்கோயிலைக் கட்டியவன் இவனே.மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் ஏரி ராமானுஜர் ஏற்படுத்தியது. அவர் தொண்டனூரில் வசித்து வந்த போது அவரது நெற்றியில் அணியும் திருமண் தீர்ந்துவிட, அன்று இரவு அவர் கனவில் பெருமாள் தோன்றி, திருநாராயணபுரத்துக்கு செல்லும் வழியைச் சொல்லி அங்கு ஒரு புற்றில் இருக்கிறேன் என்றும் தன்னை வெளியே கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.
ராமானுஜர் திருநாராயணபுரத்துக்கு அங்கு வேதபுஷ்கரணியில் குளித்துவிட்டு திருமண் அணிந்துக்கொண்டு, கல்யாணி குளத்துக்கு பக்கத்தில் இருந்த எறும்புப் புற்றை, ஊர் மக்கள் உதவியுடன் பால், மற்றும் தீர்த்தத்தைக் கொண்டு கரைத்தார். திருநாராயணர் திவ்ய மங்கள விக்ரஹத்தை ராமானுஜர் பிரதிஷ்டை செய்தார். ராமானுஜருக்கு இங்கே திருமண் கிடைத்தால் இன்றும் மேல்கோட்டையில் திருமண் விஷேசமாக விற்கப்படுகிறது. ஒருமுறை உற்சவ மூர்த்தியான செல்லப்பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து ஸ்ரீ இராமானுஜர் மீட்டுக் கொண்டுவரும் வழியில் எதிர்ப்பட்ட கள்ளர் கூட்டத்திடமிருந்து இப்பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி உற்சவ மூர்த்தியையும் ஸ்ரீராமானுஜரையும் காத்தனர். இதற்கு நன்றி நவிலும் வண்ணம் ராமானுஜரின் ஆணைக்கு இணங்க, இன்றும் தேர்த் திருவிழாவின் அடுத்த நாளிலிருந்து மூன்று நாட்கள் “திருக்குலத்தார் உற்சவம்” மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இங்கிருக்கும் கல்யாணி தீர்த்தம் எனும் அழகிய குளம் பழமையான மண்டபங்கள் சூழ அழகுடன் காட்சித் தருகிறது. திருத்தொண்டனூர், ஸ்ரீரங்கப்பட்டினம் போன்றவை அருகிலிருக்கும் வைணவத் தலங்களாகும். பெருமாள் கோயிலில் பேரருளாளனுக்கு சமர்ப்பிக்கப்படும் ‘‘குடை” மிகப் பெரியது. திருநாராயணனுக்கே “முடி” (கிரீடம்) உரிய அழகுப் பொருத்தமாக விளங்குகிறது. இத்தல புளியோதரை பிரசாதம் புகழ் பெற்றது.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 3/4 கிலோ
புளி - 200 கிராம்
வெல்லம் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க
தனியா - 100 கிராம்
மிளகாய் - 50 கிராம்
கடுகு - 50 கிராம்
உளுத்தம்பருப்பு - 50 கிராம்.
வறுத்து இடித்துப் பொடித்த விரலிமஞ்சள்
தூள் 3 ஸ்பூன் நெய் தாளிக்க தேவையான
அளவு நல்லெண்ணெய் 1/4 கிலோ
தாளிக்க கடுகு, வேர்க்கடலை, கொப்பரைத்துண்டுகள், முந்திரி, வேகவைத்த
கொண்டைக்கடலை தலா சிறிதளவு.
செய்முறை
அரிசியை பொலபொலவென வடித்து ஓர் தாம்பாளத்தில் ஆற வைக்கிறார்கள். பின் அதில் நல்லெண்ணெய் ,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கிறார்கள். பின் புளி, வெல்லத்தை கெட்டியாகக் கரைத்து பச்சைவாசனை போக கொதிக்க வைக்கிறார்கள். பின் அதில் வறுத்து அரைத்த பொடியை சேர்த்து கொதிக்க வைக்கிறார்கள். பின் உப்பைச் சேர்த்துக் கிளறுகிறார்கள். பின் தாளிக்க கொடுத்த பொருட்களை நெய்யில் வறுத்து அதில் கொட்டி சாதத்தில் கலக்கிறார்கள். கண்ணையும் நாவையும் கவரும் மண மணக்கும் புளியோதரை பிரசாதம் தயார்.
தொகுப்பு: ந.பரணிகுமார்
மேலும் செய்திகள்
கிருஷ்ண கலய பிரசாதம்
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி